Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜன் லோக்பால் என்றால் என்ன? ஏன் இதற்கு இந்த முக்கியத்துவம்?!

Advertiesment
ஜன் லோக்பால் என்றால் என்ன? ஏன் இதற்கு இந்த முக்கியத்துவம்?!
FILE
இன்று ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம், ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்திதான் என்பது தெரிந்த ஒன்றுதான் என்றாலும், ஜன் லோக்பால் மசோதா என்றால் என்ன என்பதை அறிந்துகொண்டால், அதற்கான முக்கியத்துவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.

ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும், அது பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்ட உயர்பதவி வகிப்பவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் விசாரிக்க வகை செய்யும், தேர்தல் ஆணையம் போன்ற ஒரு தன்னிச்சையான அமைப்பை ஏற்படுத்துவதற்கு அடித்தளமிடுவதுதான் ஜன் லோக்பால்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும்,எடியூரப்பாவை கதறடித்த கர்நாடக லோக்ஆயுக்தா நீதிபதியுமான சந்தோஷ் ஹெக்டே, பிரபல உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தகவல அறியும் உரிமை சட்ட ஆர்வலரான அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரால் வரைவு செய்யப்பட்டதுதான் இந்த ஜன் லோக்பால் மசோதா.

இதன் மூலம் ஊழல் செய்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், புகார் கூறப்பட்ட இரண்டாண்டு காலத்திற்குள் அந்த நபரை சிறைக்கு அனுப்ப முடிவதோடு, ஊழல் செய்து சேர்த்த அந்த நபரது சொத்துக்களையும் பறிமுதல் செய்யமுடியும்.மேலும் அரசிட முன் அனுமதி பெறாமல் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மீதும் வழக்கு தொடர்வதற்கான அதிகாரம் ஜன் லோக்பாலுக்கு உள்ளது.

ஊழலுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல் இல்லாத லோக்பால் மசோதாவை தூக்கி எறிந்துவிட்டு,ஊழல் செய்யும் நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகியோரையும் விசாரிக்க வகை செய்யும் வலிமையான ஜன் லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி உருவாகியுள்ள இந்த இயக்கத்தில் ஹசாரே, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மல்லிகா சாராபாய் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

"ஊழலுக்கு எதிரான இந்தியா" (India against corruption) என்ற இந்த இயக்கத்தின் இணையதளத்தில், இந்தியாவில் நிலவும் ஊழலுக்கு எதிரான மக்களின் கூட்டு கோபத்தின் வெளிப்பாடே இந்த இயக்கம் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம்/வேண்டுகோள்/அழுத்தம் கொடுக்கவே நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம்.இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழலை தடுத்து நிறுத்த ஒரு பயனுள்ள செயலாக இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

webdunia
FILE
குடிமக்கள் பிரதிநிதிகளால் தயாரிக்கப்பட்ட இந்த ஜன் லோக்பால் மசோதவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஹசாரே ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். நான்கு நாட்கள் அவரது உண்ணாவிரதம் தொடர்ந்த நிலையில், உண்ணாவிரத போராட்டத்திற்கு மக்களிடையே கிடைத்த ஆதரவை தொடர்ந்து மத்திய அரசு இறங்கி வந்தது.

லோக்பால் மசோதாவை உருவாக்குவதற்கு அரசு குழுவில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு ஈடாக சிவில் சமூகத்திலிருந்தும் ஒரு குழுவை அமைக்கவும், இந்த இரண்டு குழுக்களும் கலந்தாலோசோத்து லோக்பால் மசோதாவை உருவாக்க அரசு ஒப்புக்கொண்டது.

அதன் பின்னர் இரண்டு தரப்பும் பல முறை கூடி ஆலோசித்தும், ஹசாரே குழுவினர் வலியுறுத்தியபடி, நீதிபதிகள் மற்றும் பிரதமர் ஆகிய தரப்பினரை மசோதாவில் உள்ளடக்க மத்திய அரசு பிடிவாதமாக மறுத்துவிட்டது.

இதனையடுத்து இருதரப்புமே தனித்தனியாக தங்களது கண்ணோட்டத்தில் தனித் தனி மசோதாக்களை உருவாக்கின.

இதனைத் தொடர்ந்து அந்த பல் இல்லாத மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த நிலையில்தான், அந்த மசோதவை "ஜோக் பால் மசோதா" என்று ஹசாரே குழுவினர் விமர்சித்தனர்.

அதே சமயம் வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஆனால் ஹசாரே தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னரே, காவல்துறை விதித்த நிபந்தனைகளை ஏற்கமறுப்பதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றும் கூறி அவரது வீட்டிற்கு சென்று கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

ஆனால் ஹசாரேவுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த இந்தியாவும் திரண்டதை பார்த்து மிரண்டுபோன காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு,அவரை விடுதலை செய்வதாக அறிவித்தது.

ஆனாலும் உண்ணாவிரத போராட்டத்திற்கான நிபந்தனைகளை தளர்த்தாத வரை சிறையிலிருந்து வெளியே வர மறுத்து தமது உண்ணாவிரதத்தை தொடங்கிய ஹசாரே, டெல்லி காவல்துறை நிபந்தனைகளை தளர்த்திய பிறகே நேற்று சிறையிலிருந்து வெளியே வந்து,தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

ஒரு சிலர் ஹசாரேவின் இந்த உண்ணாவிரத போராட்டத்தை விமர்சிக்கிறார்கள்.உண்ணாவிரத போராட்டத்தினாலெல்லாம் நாட்டிலிருந்து ஊழலை ஒழித்துவிட முடியாது என்கிறார்கள்.ஆனால் இப்படியே சொல்லிக்கொண்டு எத்தனை நாட்களுக்குத்தான் இதனை அனுமதிப்பது? எதற்கும் ஒரு தொடக்கப் புள்ளி வேண்டாமா? அந்த தொடக்கப்புள்ளியாக ஏன் ஹசாரேவின் போராட்டத்தை பார்க்கக் கூடாது?

இந்த தொடக்கப் புள்ளியாக இருக்கும் ஜன் லோக்பால் மசோதாவில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

1) ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அளவில் "லோக்பால்" மற்றும் மாநில அளவில் "லோக்ஆயுக்தா" அமைக்கப்படும்.

2) உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் போன்று இவை முற்றிலும் அரசின் சுயேட்சை அமைப்பாக இயங்கும்.அவர்களது விசாரணையில் எந்த ஒரு அரசியல்வாதி அல்லது அதிகாரியும் தலையிட முடியாது.

3) ஊழல் புகாருக்கு ஆளாகும் நபர்களுக்கு எதிரான வழக்குகளை ஆண்டு கணக்கில் இழுத்தடிக்க முடியாது.வழக்கு குறித்த புலனாய்வு ஓராண்டு காலத்திற்குள்ளாகவும், வழக்கு விசாரணை ஓராண்டு காலத்திற்குள்ளாகவும் முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டு காலத்திற்குள் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.

4) ஊழல் மூலம் அரசாங்க கஜானாவுக்கு ஏற்படுத்தப்பட்ட இழப்பீடை, தண்டனை விதிக்கப்படும்போதே சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து பெறப்படும்.

5) இது சாமான்ய மக்களுக்கு எந்த வகையில் உதவும் என்றால், அரசாங்க அலுவலகங்களில் ஒரு பணிக்காக ஒருவர் சென்றால்- உதாரணமாக சாதிச் சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிமம் பெறுவது- அதனை குறிப்பிட்ட காலவரையறைக்குள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் செய்துகொடுக்க வேண்டும்.தவறும்பட்சத்தில் அந்த அலுவலருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, புகார் தாரருக்கு இழப்பீடும் வழங்கப்படும்.

6) எனவே பொதுமக்கள் அரசு அலுவலகங்களில் தங்களது ( வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு வேண்டி போன்ற )விண்ணப்ப மனு மீதான நடவடிக்கை உரிய காலத்திற்குள் எடுக்கப்படாமல் தாமதமானாலோ அல்லது காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்ய மறுத்தாலோ லோக்பாலை அணுகலாம்.லோக்பால் அமைப்பு ஒரு மாத காலத்திற்குள் அதனை செய்து தரும்.மேலும் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் எடை குறைத்து வழங்கப்பட்டாலோ அல்லது பஞ்சாயத்து அல்லது நகராட்சி அல்லது மாநகராட்சி நிதியை பயன்படுத்தி போடப்படும் சாலைகள் மோசமாக இருந்தாலோ அது குறித்து லோக்பாலிடம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

7) அதே சமயம் லோக்பால் அமைப்பில் ஊழல்வாதிகளையும், பலவீனமானவர்களையும் உறுப்பினர்களாக அரசாங்கம் நியமித்தால் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வியும் எழலாம்.ஆனால் அதற்கு வாய்ப்பில்லை.ஏனெனில் லோக்பால் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அரசியல்வாதிகளால் அல்லாமல் நீதிபதிகள், குடிமக்கள் மற்றும் அரசமைப்பு அதிகாரிகளால் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

8) லோக்பாலில் இடம்பெற்றுள்ள ஒரு உறுப்பினர் ஊழல் செய்தால் என்ன செய்யலாம்? லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்புகளின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் வெளிப்படையாக நடைபெறும் என்பதால், புகாருக்கு ஆளாகும் லோக்பால் அதிகாரி மீது விசாரணை நடத்தப்பட்டு, குற்றம் நிரூபணமானால் இரண்டு மாத காலத்திற்குள் அவர் டிஸ்மிஸ் செய்யப்படுவார்.

9) தற்போதுள்ள ஊழல் தடுப்பு ஏஜென்சிகள் என்னவாகும்? மதிய ஊழல் கண்காணிப்பு ஆணையம்(சிவிசி), சிபிஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவு ஆகியவை லோக்பாலுடன் இணைக்கப்படும்.எந்த ஒரு அதிகாரி, நீதிபதி அல்லது அரசியலாவாதியையும் தன்னிச்சையாக விசாரித்து வழக்கு தொடரும் அதிகாரமும், அரசு எந்திரமும் கொண்ட முழு அதிகாரமிக்க அமைப்பக லோக்பால் திகழும்.

10) ஊழலால் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக குரல் கொடுப்பவருக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் கடமை லோக்பாலுக்கு உண்டு.

Share this Story:

Follow Webdunia tamil