Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனிமொழியை காப்பாற்ற சதிகாரர் ஆனாரா தகத் தகாய கதிரவன்?

கனிமொழியை காப்பாற்ற சதிகாரர் ஆனாரா தகத் தகாய கதிரவன்?
, சனி, 7 மே 2011 (13:18 IST)
இன்றைய அரசியலில் காலை வாருவதும், குழி பறிப்பதும் மிகவும் சகஜமான ஒன்றாகிவிட்ட நிலையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாவை சதிகாரர் என்று காட்டிக்கொடுத்து திமுக தலைமை இப்படி துரோகம் இழைக்கும் என்று அவரே நிச்சயம் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

2ஜி ஊழல் வழக்கு விஸ்வரூபம் எடுத்து,அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது," குற்றச்சாட்டு கூறுவதினாலேயே ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது; ராசா தகத் தகாய கதிரவன்..." என்றெல்லாம் கூறிய திமுக தலைவர் கருணாநிதி, 2ஜி வழக்கில் சிபிஐ-யின் கரம் மெல்ல தனது மகள் கனிமொழியை நோக்கி வளைக்க நெருங்குகிறது என்பதை அறிந்ததும், சுருதியை குறைத்துக் கொள்ள தொடங்கினார்.

அதிலும் தமிழக சட்டசபை தேர்தலில்,திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்டு பெறுவதற்காக காங்கிரஸ் பேரம் நடத்திக் கொண்டிருந்தபோதே, மறுபுறம் அண்ண அறிவாலயத்திற்குள் இருந்த கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் சிபிஐ-யை அனுப்பி மகள் கனிமொழி மற்றும் மனைவி தயாளு அம்மாளிடம் விசாரணை நடத்தியதை பார்த்து கருணாநிதி அரண்டே போனார் என்று சொல்லலாம்.

அப்போதே ராசாவை பற்றி பேசுவதை கைவிட்ட அவர்,இன்று முழு பழியையும் ராசா மீது சுமத்தி, அவரை பலிகடாவாக்கி மகள் கனிமொழியை காப்பாற்ற எடுத்துள்ள முடிவை பார்த்து திமுகவினரே அதிர்ந்துபோய்தான் பார்க்கின்றனர்.

அதிலும் கனிமொழியை மே 6 ஆம் தேதி(இன்று) நேரில் ஆஜராகுமாறு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பிய உடனேயே ஏகமாக அதிர்ச்சியடைந்து போனார் கருணாநிதி.

மகளை கைது செய்யவிடாமல் தடுக்க வேண்டும் என்று திமுக தூதர்களை விட்டு டெல்லி காங்கிரஸ் கதவை தட்டியும், எங்களால் ஒன்றும் செய்ய முடியாது கையை விரித்துவிட்டது அக்கட்சி.

" 2ஜி ஊழல் பணத்தை சுவைத்தது திமுக மட்டுமா...? காங்கிரஸ் கட்சியும்தானே...?" என்று கருணாநிதியின் மனதுக்குள் ஓராயிரம் கோபக் கணைகள் உருவெடுத்த போதிலும் அதனை வெளிப்படையாக சொல்ல முடியாத தேள் கொட்டிய நிலை.

2ஜி ஊழலில் ஆதாயம் பார்த்தவர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும்தானே என்று கேள்வி எழுப்பினால், முறைகேடு நடந்தது உண்மைதானே என்பதை ஒப்புக்கொண்டது போலாகிவிடும்.

ஒரு மாநிலத்தின் முதல்வர்;60 ஆண்டு காலத்திற்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட மூத்த அரசியல் தலைவர் என்று தம்மை சொல்லிக் கொண்டிருக்கும் நாம், நமது மகளை நீதிமன்றம் மற்றும் சிபிஐ-யின் கிடுக்கு பிடியிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் அவரை வெகுவாகவே வாட்டியது.

இந்நிலையில்தான் நீதிமன்ற உத்தரவின்படி டெல்லி நீதிமன்றத்தில் இன்று ஆஜரவாதற்காக நேற்றே டெல்லி புறப்பட்டு வந்தார் கனிமொழி.அங்கு பல்வேறு தொலைக்காட்சி நிருபர்களிடம் பேசிய அவர், தாம் முன் பிணை கோரப்போவதில்லை என்றும், சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன் என்றெல்லாம் வீராவேசம் காட்டினார்.

ஆனால் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானபோது நிலைமை தலை கீழ்.அவரது சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான பல லட்சங்கள் 'பீஸ்' வாங்கும் இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி,கனிமொழிக்கு பிணை கோரும் மனுவை தாக்கல் செய்து வாதிட்டார்.

2ஜி ஊழலில் கனிமொழிக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், ஊழல் சதி திட்டத்திற்கு அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசாதான் முழு காரணம் என்றும் அப்போது ஒரு குண்டை தூக்கி வீசினார்.

அதாவது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழலோ அல்லது சதித் திட்டமோ இல்லை என்று நேற்று வரை கூறிக் கொண்டிருந்த திமுக தலைமை, இன்று மகளை காப்பாற்றுவதற்காக 2ஜி ஊழல் சதி திட்டத்திற்கு ராசாதான் காரணம் என்று வாதாட ஒப்புக்கொண்டுவிட்டது.

தொடர்ந்து அம்மனு மீது வாதிட்ட ஜெத்மலானி, 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான முழு சதி திட்டத்திற்கும் அப்போதைய அமைச்சர் ஆ.ராசாதான் காரணம் என்றும், கனிமொழிக்கு எவ்வித தொடர்பு இல்லை என்றும், அவர் கலைஞர் தொலைக்காட்சியில் வெறும் 20 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர் மட்டுமே என்றும் கூறியதோடு, கனிமொழிக்கு முன் பிணை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கலைஞர் டிவியில் கனிமொழி வெறும் பங்குதாரர்தான்.தினசரி செயல்பாடுகளில் அவருக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை.

திமுக தலைவர் கருணாநிதியின் மகள் என்பதாலேயே கனிமொழி குறிவைக்கப்படுகிறார் .கருணாநிதியின் மகளாகப் பிறந்தது அவர் செய்த தவறா? 2ஜி வழக்கில் கனிமொழியை குற்றம்சாட்ட எந்த ஆதாரமும் இல்லை. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவர் எதுவும் செய்யவில்லை.

சதிச்செயலை ராசாதான் செய்திருக்க முடியும்.கனிமொழி அல்ல.17-வது குற்றவாளியான கனிமொழி எந்த ஆவணங்களிலும் கையெழுத்திடவில்லை.அவருக்கு கையெழுத்திடும் அதிகாரம் இல்லை.

பணப் பரிமாற்றம் தொடர்பாக அவரால் எந்த ஆவணமும் மேற்பார்வையிடப்படவில்லை. எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என்று அவர் தனது வாதத்தில் மேலும் குறிப்பிட்டார்.

கன்மொழி சார்பில் ராம்ஜெத்மலானி இப்படி அடுக்கடுக்காக வார்த்தைகளை பொழிந்து வாதிட்டபோது, ஆ.ராசாவும் நீதிமன்றத்தில்தான் அமர்ந்திருந்தார். சதி திட்டத்திற்கு ராசாதான் காரணம் என்று ஜெத்மலானி வாதிட்டபோது அவர் முகம் அதிர்ச்சியில் இருண்டுபோனது.

2ஜி விவகாரத்தை பொறுத்தவரை நடந்தது கூட்டுக்கொள்ளை.தம்மை அமைச்சராக நியமித்து, தம்மை ஒரு கருவியாக பயன்படுத்தியதற்கு என்ன பங்கோ அதனை பெற்றுக்கொண்டதற்கான பலனை திகார் சிறைக்கம்பிகளில் தற்போது அனுபவித்துக்கொண்டிருக்கிறார் ராசா.

ஆனால் நடந்த கொள்ளையில் பெரும் பகுதியை சுருட்டியவர்களோ, உச்ச நீதிமன்றத்தின் கிடுக்கு பிடி காரணமாக யாரையாவது ஒருவரை பலி கொடுத்து வழக்கை முடித்து வெளியில் வர துடிக்கிறார்கள்.

இன்று கனிமொழியை காப்பாற்ற ராசாவை சதிகாரர் என்று சொல்லத் துணிந்த திமுக, நெருக்கடி மேலும் அதிகமானால் 2ஜி ஊழலில் பயனடைந்த காங்கிரஸ் புள்ளியை நோக்கியும் கையை நீட்ட தயங்காது.

கனிமொழி உள்ளே போனால் அப்போது காங்கிரஸை காட்டிக்கொடுக்கும் திமுக!

Share this Story:

Follow Webdunia tamil