2ஜி குற்றத்தை மறைக்க நடந்த அமளி
, வெள்ளி, 29 ஏப்ரல் 2011 (18:55 IST)
2
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரணை நடத்திவந்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு, தனது அறிக்கையை இறுதி செய்ய கூடிய கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க.கட்சிகள் நடத்திய அமளி, தாங்கள் செய்த குற்றத்தை மறைக்க திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட நாடகமாகும்.கடந்த 27ஆம் தேதி கூடிய பொதுக் கணக்குக் குழுவில், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் ஆதாரப்பூர்வமாக தாங்கள் கண்டறிந்தது என்ன என்பதை வைத்து வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கை குறிப்பிடப்பட்டிருந்த சில விடயங்கள் மறுநாள் காலையில் சில பத்திரிக்கைகளில் வெளியானது. வெளியான அந்த சில பகுதிகள்தான் காங்கிரஸ் கட்சியினரின் சினத்திற்குக் காரணம் என்று கூறப்பட்டது. பொதுக் கணக்குக் குழு தயாரித்திருந்த அந்த வரைவு அறிக்கையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் வெளிப்படையான அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசாவிற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதினாலும், அதற்கு இராசா எழுதியிருந்த பதிலை அப்படியே ஏற்றுக்கொண்டதன் மூலம், தொலைத் தொடர்பு அமைச்சகம் கடைபிடித்த வழிமுறைகளுக்கு பிரதமர் மறைமுக அனுமதி அளித்துள்ளதாகவே தெரிகிறது என்று கூறப்பட்டிருந்தது.ஊடகங்களில் வெளியான மற்றொரு கசிவு, ஆ.இராசாவின் தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கும், ப.சிதம்பரத்தின் நிதியமைச்சகத்திற்கும் நடந்த கடித போக்குவரத்தாகும். அதில், 2ஜி அலைக்கற்றை மிக அரிதாக உள்ள அரசின் சொத்தென்றும், அதற்கு உரிய விலை நிர்ணயித்து ஒதுக்கீடு செய்யுமாறும் ‘ஆலோசனை’ கூறிவிட்டு, அத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டதாக நிதியமைச்சகம் கூறியது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை என்று கூறப்பட்டிருந்த பகுதியாகும்.இந்த இரண்டு பகுதிகளும் பிரதமரையும், அன்றையை உள்துறை அமைச்சரையும் ந்ன்றாக வெளிப்படுத்துவதாக இருந்தது. ஏனெனில், “வெளிப்படையாக நடக்க வேண்டும்” என்று மட்டும் கூறிவிட்டு, அத்தோடு பிரதமர் நின்றுவிட்டது ஏன்? என்ற வினா எழுவது இயல்புதானே? வெளிப்படையான ஒதுக்கீடு தேவை என்று கூறிய பிரதமர், அதை எவ்வாறு செய்யப்போகிறீர்கள் என்ற வினாவை தொடுத்திருந்தால், தான் கடைபிடிக்கப்போகும் வழி முறை இதுவென்று ஆ.இராசா கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கும். அப்படி அவர் கூறும் நிலையி்ல், இந்திய வரலாறு காணா ஊழல் நடக்கக் காரணமான ‘முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் வழங்கப்படும்’ என்கிற மகா யோக்கியமான முறை கடைபிடிக்கப்பட்டிருக்குமா? எனவே, தெரிந்தே ஆ.இராசாவிற்கு பிரதமர் ‘சுதந்திரம்’ அளித்துள்ளது தெரிகிறது. அது மட்டுமல்ல, இப்பிரச்சனையில் தனது அலுவலத்தையே தொலைவில் வைத்திருந்தார் பிரதமர் என்றும் பொதுக் கணக்குக் குழு வரைவு அறிக்கை தெரிவிக்கிறது.பிரதமர் எவ்வாறு பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் ஆ.இராசாவிற்கு அறிவுரை வழங்கினாரோ,
அதே மென்மையுடன்தான் நிதியமைச்சகம் நடந்துகொண்டிருக்கிறது என்பதும் புலனாகியுள்ளதே. அரிதான நாட்டின் சொத்து என்றும், அதற்கு உரிய விலை நிர்ணயித்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறிய அறிவார்ந்த அமைச்சரான ப.சிதம்பரம், அதற்கு என்ன விலை நிர்ணயிக்க போகிறீர்கள் என்ற வினா எழுப்பியிருந்தால், வெறும் ரூ.1,650 கோடிக்கு நாடு முழுவதும் செல்பேசி சேவை நடத்தும் உரிமத்தை - இரட்டை தொழில்நுட்பத்துடன் ஆ.இராசாவால் வழங்கியிருக்க முடியுமா? ஆக நடக்கப்போகும் ஊழலில் எங்களுக்குப் பங்கில்லை என்று காட்டிக்கொள்ள ஒரு ஆலோசனையை வழங்கிவிட்டு அமைதி காத்துவிட்டது சிதம்பரத்தின் நிதியமைச்சகம். இந்த சிதம்பர இரகசியத்தை வெளிக்கொணர்ந்துவிட்டது பொதுக் கணக்குக் குழு.அதனால்தான் இறுதி அறிக்கை தயாரிக்க விடாமல் அமளி ஏற்படுத்தி, அந்த அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியது மட்டுமின்றி, குழுவில் இருந்த சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்கள் இருவரை - முன்னாள் இரவே பார்த்து சரிகட்டி, அவர்களின் ஆதரவையும் பெற்று, வரைவு அறிக்கையை நிராகரிப்பதற்கு ஆதரவு பெற்றுள்ளனர்.நேற்று மாலை அறிக்கையை இறுதி செய்ய பொதுக் கணக்குக் குழு கூடியபோது, திட்டமிட்டபடி, அமளியை உருவாக்கி, பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி வெளியேறியதும், அவரோடு மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளியேறிவிட்ட நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் சைபுதீன் சோஸ்-ஐ தலைவராக ‘தேர்வு’ செய்ய, அவர் வாக்கெடுப்பு நடத்தி, வரைவு அறிக்கை நிராகரிக்கப்பட்டதாக அறிவித்துள்ளார்.தாங்கள் செய்த குற்றம் நிரூபணமாகிறது என்று தெரிந்தால், எல்லா ஜனநாயக முறைகளையும் குழிதோண்டிப் புதைக்க காங்கிரஸ் கட்சி தயங்காது என்பது நேற்றைய நாடகத்தில் மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. 2ஜி ஊழலின் நாயகனாகத் திகழும் தி.மு.க. இதற்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது.பொதுக் கணக்குக் குழுவில் தயாரிக்கப்பட்ட வரைவு அறிக்கையை அமளி செய்து முடக்கிவிட்டது காங்கிரஸ். ஆனால் அந்த அறிக்கை கசிந்ததனால் வெளிவந்த உண்மை அவர்களின் ஊழல் முகத்தை அப்பட்டமாகக் காட்டிக்கொடுத்துவிட்டது.