Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'2ஜி ஊழலுக்கு பிரதமர் மறைமுக உடந்தை!'

Advertiesment
'2ஜி ஊழலுக்கு பிரதமர் மறைமுக உடந்தை!'
, புதன், 27 ஏப்ரல் 2011 (18:25 IST)
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு, பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மறைமுக ஆதரவாக அமைந்து என்று தனது அறிக்கையில் விமர்சித்திருப்பது டெல்லி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2ஜி ஊழல் ஆகட்டும், காமன்வெல்த் ஊழல் ஆகட்டும் எதுவுமே தனக்கு தெரியாது என்ற பல்லவியையே பிரதமர் மன்மோகன் சிங் பாடி வருகிறார்.

2ஜி ஊழல் விஸ்வரூபம் எடுத்தபோது, வேண்டுமானால் நான் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு முன் விசாரணைக்கு ஆஜராக தயார் என்றும் கூறியிருந்தார் மன்மோகன்.

இந்நிலையில் பிரதமரின் இந்த நழுவல் பேச்சு, பொறுப்பற்றத்தனம் என்று எதிர்கட்சிகள் மட்டுமல்லாது, நடுநிலையான அரசியல் நோக்கர்கள் கூட கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் அரசு கஜானாவுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்திய 2ஜி ஊழல் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு( பிஏசி), பிரதமர் அலுவலகம் மீது (PMO) மீது பல்வேறு சந்தேக கேள்விகளை எழுப்பி உள்ளது.

பா.ஜனதா தலைவர் முரளிமனோகர் ஜோஷி தலைமையிலான இந்தகுழு தயாரித்துள்ள அறிக்கையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடு வழங்குவதில் அப்போதைய தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா செய்த முறைகேடுகளை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்ல தவறிவிட்டதாக பிரதமர் அலுவலகம் மீது குற்றம் சாட்டியுள்ளது.

மேலும் 2ஜி விவகாரத்தில் நடந்த பல உண்மைகளை, குறிப்பாக முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்ற சந்தேகத்திற்குரிய முறை குறித்து பிரதமருக்கு தகவல் தெரிவிக்காமல் போனதால், அது ராசா பயனடைய சாதமானதாக அமைந்ததாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

2ஜி உரிமம் ஒதுக்கீடு குறித்து தமது அமைச்சகம் பின்பற்றும் முறையை பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி இருந்தும், பிரதமர் அலுவலகம் அதனை பிரதமரின் பார்வைக்கு உடனடியாக கொண்டு செல்லாமல் செய்த தாமதம்தான் ராசாவை முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்று செயல்பட வைத்து, அவர் ஆதாயம் பெற வழிவகுத்துவிட்டது என்றும் பிஏசி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் 2ஜி உரிமம் வழங்குவதில் நடந்த முறைகேடு காரணமாக அரசு கஜனாவுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) கூறியதாக தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உரிமம் வழங்கும் அதிகாரத்தை தொலை தொடர்பு துறை அமைச்சகத்திற்கு வழங்கியதும், ராசா வழங்கிய ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவதும் தவறானது என்று தாங்கள் கருதுவதாகவும் அதில் பிஏசி தெரிவித்துள்ளது.

மேலும் ராசா லஞ்சம் பெற்றுக்கொண்டு, விதிமுறைகளை வளைத்து தொலைபேசி உரிமங்களையும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டையும் செய்ததாக அந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதே சமயம் இவ்வளவு தூரம் நடந்த முறைகேடுகள், விதிமுறை மீறல்கள் எதுவும் பிரதமருக்கு தெரியாது ( அவர் பாடும் அதே பலவியை போன்றே) என்று கூறும் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு, பிரதமர் அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மட்டுமே தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

பிஏசி தயாரித்துள்ள இந்த அறிக்கை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

2ஜி விவகாரத்தில், ஆரம்பத்திலேயே ஊழலை கண்டுபிடித்து தடுக்க தவறியதாக பிரதமர் மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில் நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவின் இந்த அறிக்கை மன்மோகன் சிங்கை நேரடியாக சாடவில்லை என்றாலும், பிரதமர் அலுவலகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகள்தான் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு மறைமுக ஆதரவாக அமைந்து என்று குற்றம்சாட்டியுள்ளது.

தார்மீக அடிப்படையில் பிரதமர் அலுவலகம் வேறு; பிரதமர் வேறு என்று பிரித்து பார்க்க முடியாது. அப்படி பார்க்கையில் பிஏசி அறிக்கை ,நடந்த ஊழலுக்கு பிரதமரும் ஒருவிதத்தில் உடந்தை என்றே குற்றம்சாட்டுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil