Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீரா ராடியா டேப் உருவாக்கிய (அமைச்சரவை) மாற்றங்கள்?

நீரா ராடியா டேப் உருவாக்கிய (அமைச்சரவை) மாற்றங்கள்?
, புதன், 19 ஜனவரி 2011 (19:27 IST)
FILE
பிரதமர் மன்மோகன் சிங் மத்திய அமைச்சரவையில் இன்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை ஆழமாக உற்று நோக்கினால், அதில் தனது ஆளுமையை அவர் முழுமையாக பதித்துள்ளது நன்றாகவே தெரிகிறது.

2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிற்குப் பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்ற மன்மோனகன் சிங், அப்போது அமைத்த அமைச்சரவையில் காங்கிரஸ் தலைமையின் செல்வாக்கும், கூட்டணிக் கட்சிகளின் இழுப்பும் பெரிதாகவே இருந்தன. ஆனால் இன்று நடந்துள்ள அமைச்சரவை மாற்றம், முற்றிலுமாக மன்மோகன் சிங்கின் முத்திரையுடன் செய்யப்பட்டுள்ளது என்பதற்கு முக்கிய அத்தாட்சி, மத்திய அரசை பெரும் தலைகுனிவிற்கு ஆளாக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழலைத் தொடர்ந்து வெளியான அதிகார தரகர் நீரா ராடியா உரையாடல் பதிவில் (டேப்) அடிப்பட்ட அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளதாகும்.

1. இந்திய தொழிலக கூட்டமைப்பின் தலைவராக இருந்த தருன் தாஸ் இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைக்கப்பட்டபோது நீரா ராடியாவுடன் நடத்திய உரையாடலில் அமைச்சர் கமல் நாத் பற்றிப் பேசியிருந்தார். மன்மோகன் சிங் தலைமையிலான முதல் ஐ.மு.கூட்டணி அரசில் தொழில் வர்த்தக அமைச்சராக இருந்தபோது எல்லா ‘டீல’களுக்கும் 15% வைத்து நன்றாக சம்பாதித்தவர் என்று கமல் நாத் பற்றி பேசிய தருண் தாஸ், “இம்முறை அவருக்கு தரை வழி போக்குவரத்து கிடைத்திருப்பதால், தான் எதிர்பார்க்கும் 15 விழுக்காட்டையும் பெற்றுக்கொண்டு, அவர் தொடர்ந்து இந்த தேசத்திற்கும் சேவையாற்றலாம” என்றகூறியிருந்ததோடு, தனது பணத் தேவைக்காக ஏடிஎம் செல்ல வேண்டிய அவசியமே இல்லாதவர் என்றும் வர்ணித்திருந்தார். இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் தரை வழி போக்குவரத்து துறையில் இருந்து நகர்ப் புற மேம்பாட்டு அமைச்சராக கமல் நாத் மாற்றப்பட்டுள்ளார்.

2. மத்திய அமைச்சரவையில் வான் வழி (விமான) போக்குவரத்து அமைச்சராக தனி பொறுப்புடன் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றவர் பிரஃபுல் பட்டேல். இவரை அதே அமைச்சகத்தில் தொடர ஜெட் ஏர்வேஸ் எனும் தனியார் விமான நிறுவன அதிபர் முடிவு செய்து வெற்றியும் பெற்றுவிட்டார் என்ற தகவல் நீரா ராடியா உரையாடில் வெளிவந்தது. வான் வழி போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரஃபுல் பட்டேல், முக்கிய (காபினட்) அமைச்சராக ஆக்கப்பட்டு, அவருக்கு கனரகத் தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது. வான் வழி போக்குவரத்து அமைச்சர் பொறுப்பு, அயல்நாடு வாழ் இந்தியர் நல விவகார அமைச்சராக இருக்கும் வயலார் இரவிக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

3. நீரா ராடியா உரையாடலில் அடிபட்ட மற்றொரு பெயர் முரளி தியோரா. “எந்த வித திறனும் இன்றி அமைச்சராக இருப்பவர்” என்றும், அவர் தொடர்ந்து “பெட்ரோலியத் துறை அமைச்சராக நீடிக்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனம் விரும்பியதால், அவர் அத்துறையை மீண்டும் பெற்றுள்ளார” என்றஅந்த உரையாடலில் பேசப்பட்டவர். இன்று நடந்த அமைச்சரவை மாற்றத்தில் ‘சக்தி வாய்ந்’ இந்த அமைச்சக பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு, இதுவரை நகர்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது! முரளி தியோரா பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆக, நீரா ராடியா டேப்பில் வெளியாகிய அமைச்சர்களின் முக்கியத் துறைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது கண்கூடாகத் தெரிகிறது.

webdunia
FILE
அது மட்டுமின்றி, தான் தெரிவு செய்ய மூன்று அமைச்சர்களை முக்கிய அமைச்சர்களாக உயர்த்தியுள்ளார் மன்மோகன் சிங். சல்மான் குர்ஷித்திற்கு நீர்வளத் துறை அமைச்சக பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. இவரிடமிருந்த பெரு நிறுவனங்கள் விவகார பொறுப்பு முரளி தியோராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கமல் நாத் வசமிருந்த தரை வழிப் போக்குவரத்து அமைச்சக பொறுப்பு அளிக்கப்பட்டு முக்கிய அமைச்சராக்கப்பட்டுள்ளார் சி.பி.ஜோஷி.

மூன்றாவதாக நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சக பொறுப்பை வகித்துவந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை முக்கிய அமைச்சராக உயர்த்தியுள்ளார் மன்மோகன் சிங். சுரங்கத் துறை அமைச்சரை முக்கிய அமைச்சராக உயர்த்தியிருப்பது பெரு நிறுவனங்களுக்கு அளித்துள்ள ஒரு சாதகமான சமிக்ஞை என்றும் கூறப்படுகிறது.

தி.மு.க.விற்கு மூக்கறுப்பு?

இந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கியமாக எதிர்பார்க்கப்பட்டது பதவி விலகிய ஆ.இராசாவிற்கு பதிலாக தி.மு.க.விலிருந்து ஒருவர் முக்கிய அமைச்சராக பதவியேற்பார் என்பதே. ஆனால் அது நிகழவில்லை. தி.மு.க.வின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மீண்டும் அமைச்சராவார் என்றே பேசப்பட்டது. அவரும் முதலில் பிரதமரையும், பிறகு சோனியா காந்தியையும் பார்த்தார். ஆனால் பாலு மட்டுமல்ல, தி.மு.க.விலிருந்து ஒருவரும் புதிய அமைச்சர்கள் பட்டியலில் இல்லை.

webdunia
FILE
டி.ஆர். பாலுவை மத்திய அமைச்சராக ஏற்க முடியாது என்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றபோதே பிரதமர் கூறியதாக வந்த தகவல், இப்போது உறுதியாகியுள்ளது? டி.ஆர்.பாலுவை அமைச்சராக்க பிரதமர் மறுத்துவிட்டாரா? அப்படியாயினும் தி.மு.க.விலிருந்து வேறு ஒருவருக்கும் - இராசா வகித்த பதவிக்கு மாற்றாக - அளிக்கப்படாதது ஏன்? இதைப்பற்றிய பின்னணி விவகாரங்கள் நாளை முதல் வெளிவரலாம்.

பிரதமரின் தனித்த தேர்வுகள

புதுவையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வி.நாராயண சாமி, மராட்டிய முதல்வர் பொறுப்பேற்றுள்ள பிரிதிவி ராஜ் சவான் வகித்த சக்தி வாய்ந்த பிரதமர் அலுவலக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவர் வகித்த நாடாளுமன்ற விவகாரத் துறைக்கு புதிய அமைச்சராக மாநிலங்களவை உறுப்பினர் அஸ்வானி குமார் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு கபில் சிபல் வகித்த அறிவியல் தொழில்நுடபத் துறையும் வழங்கப்பட்டுள்ளது. இப்பொறுப்புகளை ஏற்கனவே வகித்த அஸ்வானி குமார் பஞ்சாபை சேர்ந்தவர். அங்கு அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதால் மீண்டும் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

அனுபவமிக்க பெனி பிரசாத் வர்மா (எஃகுத் துறை), கேரள மாநிலம் (இங்கும் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல்), ஆலப்புழா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கே.வி.வேணுகோபால் (எரிசக்தி), அஜய் மக்கான் (விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள்) ஆகியோர் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தத்தில் இன்று நடந்துள்ள அமைச்சரவை மாற்றம் மன்மோகன் சிங் நடத்திய அமைச்சரவை மாற்றம் என்பது நன்றாகவே தெரிகிறது. மத்திய அரசை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். இதன் எதிரொலிகள் விரைவில் டெல்லி அரசியலில் வெளிப்படலாம்.

Share this Story:

Follow Webdunia tamil