ஊரக வேலைத் திட்டமல்ல, ஊழல் திட்டமே
, வியாழன், 6 ஜனவரி 2011 (18:26 IST)
மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) கீழ் 2010ஆம் ஆண்டில் 3.9 கோடி குடும்பங்கள் பயனடைந்ததாக மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் பெருமையுடன் கூறியுள்ளது.‘வேலைக்கு உணவு’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டு, பிறகு மகாத்மா காந்தி தேச ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டமாக சட்டமாக்கப்பட்ட இத்திட்டம், கிராமப் புறங்களில் வேலையற்று இருக்கும் மக்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டது என்றாலும், அது கிராம வளர்ச்சியுடனோ அல்லது கிராமப் பொருளாதார வாழ்வுடனோ இணைக்கப்படாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதும், அதுவும் ஒரு ஊழல் திட்டமாக மிளர்ந்துகொண்டிருக்கிறது என்பதும்தான் கசப்பான உண்மையாகும்.
ஊரகப் பகுதிகளில் நிறைவேற்றிட வேண்டிய திட்டங்களோடு இணைத்து இந்த வேலை உறுதித் திட்டத்தை நிறைவேற்றினால், அது வேலை வாய்ப்பையும், அதே நேரத்தில் கிராமப் புற மேம்பாட்டையும் உறுதி செய்யும். மாறாக, எந்த திட்ட அடிப்படையும் இன்றி, வறட்சியினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ கிராமப் புறங்களில் வேலையற்ற நிலை ஏற்படும்போது இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை மாவட்ட வாரியாக அளித்து, ஒப்புக்கு ஒரு வேலை என்று செய்யச் சொல்லி அன்றாட கூலியை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இப்படித்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாதது அல்ல.
குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் ஒரு நாள் பணிக்கு ஒருவருக்கு - அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் ரூ.100 அன்றாட கூலியாக தர வேண்டும். இது முன்பு நாள் ஒன்றிற்கு ரூ.80 ஆக இருந்தது, பிறகு ரூ.100 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தின் கீழ் வேலை பெற்ற எவருக்கும் ரூ.100 வழங்கப்பட்டதாக ஒரு இடத்திலும் கூற முடியாது. அரை நாள் வேலை செய்யச் சொல்லிவிட்டு ரூ.40 கொடுத்து அனுப்புவது, அதற்கு முழு நாள் கணக்கு எழுதுவது. முழுநாள் வேலை செய்வோருக்கும் ரூ.60 அல்லது ரூ.70 கொடுத்துவிட்டு, ‘அவ்வளவுதான் போ’ என்று சொல்வது என்பதெல்லாம் மிகக் கண்கூடாக நடந்துகொண்டிருக்கிறது.