“ஒரு இலட்சத்து எழுப்பத்தாராயிரத்து முன்னூற்றி ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால் அது எவவளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? “ என்று திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.தான் கதை வசனம் எழுதிய ‘இளைஞன்’ என்ற படத்தின் பாடல் குறுவெட்டு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வரின் பேச்சு முழுவதும், ஊழலிற்கு நெருப்பாக வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழக முதல்வரை, 2ஜி ஊழல் எந்த அளவிற்கு நெருப்பாக அனத்துகிறது என்பதையே அவருடைய பேச்சு காட்டுகிறது. 1,73,352
இலட்சம் கோடி ஊழல் என்று சொன்னால் ஏன் நம்புகிறீர்கள்? என்று மக்களைப் பார்த்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முக்கால் நூற்றாண்டாக அரசியலில் உள்ள தன்னை நம்பாமல், செய்திகளை நம்புகிறீர்களா என்று மிகுந்த ஆதங்கத்துடன் அவர் கேட்டுள்ளார்.அதுமட்டுமல்ல, இவ்வளவு பெரிய ஊழலை ஒருவர் மட்டும் செய்துவிட முடியுமா? என்று கேட்டுள்ளார். எவ்வளவு பெரிய உண்மை? நெருப்புக்குத் தெரியாதா புகையைப் பற்றி? தானில்லாமல் புகையில்லை என்பது நெருப்பு அறியாததா? எனவே முக்கால் நூற்றாண்டுக் காலம் தமிழக அரசியலில் இருந்துவரும் தமிழக முதல்வருக்கு நிச்சயம் தெரியுமல்லவா? இவ்வளவு பெரிய ஊழலை ஒருவர் செய்திருக்க முடியாது என்பது? முதல்வரை அறிந்த தமிழக மக்கள் எவரும் அவர் இவ்வாறு கூறியிருப்பதை நிச்சயம் நம்புவார்கள் என்பதில் ஐயமில்லை. ஆக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் ஊழல் நடந்துள்ளது என்பதை ஒருவழியாக முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார். அது வரவேற்கத்தக்கதே. அதே நேரத்தில் தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த ஆ.இராசா மட்டுமே அந்த ஊழலை செய்தார் என்று எவருமே குற்றம்சாற்றாத நிலையில், தமிழக முதல்வர் ஏன் இப்படி ஒரு கேள்வியைப் போட வேண்டும் என்பது கவனிக்கத்தக்கதாகும்.இந்த ஊழல் ஆ.இராசா மட்டுமே இல்லை. மற்றவர்களுக்கும் தொடர்பும் பங்கும் உள்ளது என்று சொல்லாமல் சொல்கிறாரா தமிழக முதல்வர்? ஏனென்றால், உச்ச நீதிமன்றத்தில் இதுவரை நடந்துள்ள விசாரணையில் வெளிவந்த உண்மைகளின்படி பார்த்தால், அது தொலைத் தொடர்புத் துறையும், அதன் அமைச்சராக இருந்த ஆ.இராசாவும் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்பட்டதன் விளைவு என்றே கூறப்பட்டுள்ளது.2
ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் விடுதல் மூலமாகவும், வெளிப்படையான வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகம் (முன்னாள்) அமைச்சர் ஆ.இராசாவிற்கு கடிதம் எழுதியிருந்தது என்பதும், அதனைப் புறக்கணித்தே இராசா முடிவெடுத்து செயல்பட்டார் என்பதும் தெளிவாகியுள்ளது.பிரதமரின் ஆலோசனையை புறக்கணித்து இராசா எழுதிய கடிதத்தையே உச்ச நீதிமன்றம் கண்டித்தது. எனவே அந்த துறையும், அதன் அமைச்சராக இருந்த இராசாவுமே இந்த முறைகேடுகளுக்குக் காரணம் என்பது உச்ச நீதிமன்ற விசாரணையில் தெளிவாகியுள்ளது.
அதுமட்டுமல்ல, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது என்கிற குற்றச்சாற்று வந்துவுடன், எல்லாம் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடன்தான் செய்துள்ளேன் என்று பல முறை இராசா கூறியிருந்தார். அவை தொலைக்காட்சி செய்திகளில் அவர் கூறியபடியே வெளியானது. ஆனால் இப்போதெல்லாம் அப்படி அவர் கூறவில்லை. ஏன் என்றும் தெரியவில்லை.அதுமட்டுமின்றி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்காகவே ஆ.இராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக்கப்பட்டார் என்பது அதிகாரத் தரகர் நீரா ராடியா செல்பேசியில் நடத்திய உரையாடல் பதிவுகளில் தெளிவாகவே தெரிகிறது. எனவே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பயன்பெற்றது பெரு நிறுவனங்கள் என்பது எவருக்கும் புரியாததல்ல. எனவே இராசா ‘மட்டுமே’ ஊழல் செய்தார் என்று கூற முடியாது. இப்படிப்பட்ட நாட்டுப் பணிக்காக நீரா ராடியா ரூ.60 கோடி ஆலோசனைக் கட்டணம் பெற்றார் என்றால், அதனால் பயன்பெற்றோருக்கு எவ்வளவு கிடைத்திருக்கும்? அந்த தொகை எவ்வளவு இருக்கும் என்பது இதுவரை மதிப்பிடப்படவில்லை. அது மதிப்பிடப்படும்போதுதான் ‘இவ்வளவா?’ என்று நாம் உண்மையிலேயே வாய் பிளக்கப்போகிறோம்.
இங்கே மற்றொன்றையும் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது. ரூ.1,73,352 இலட்சம் கோடி ஊழல் நடந்துவிட்டது என்று, இந்த மதிப்பை தெரிவித்த இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் கூறவில்லை. அவர் கூறியது, 3ஜி அலைக்கற்றை ஏலம் விட்டதில் கிடைத்த தொகையை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும்போது, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தொலைத் தொடர்புத் துறைக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1,73,352 இலட்சம் கோடி என்றே தனது அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளார்.
இது முதிர்ந்த அரசியல்வாதியான தமிழக முதல்வருக்கு தெரியாததல்ல. பிறகு அவர் இராசா மட்டுமே அல்ல என்று கூறுவதம் பொருள் என்ன? என்பதை யோசிக்க வேண்டியுள்ளது.
இராசா மீது மட்டுமே ஊழல் குற்றம் சாற்றுகிறீர்களே? அவர் மட்டுமே அவ்வளவு பெரிய ஊழல் செய்திருக்க முடியுமா? அவரோடு மேலும் பலர் அதில் ஈடுபட்டிருப்பார்களே, அவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லையே ஏன்? என்றே அவர் கேட்பதாக புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியானால் அவர்கள் யார்?
இந்த இடத்தில்தான், சில நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் குறிப்பிடும் எதிரிக்கட்சி தொலைக்காட்சியில் ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி அளித்த பேட்டி ஒளிப்பரப்பட்டது. அந்தப் பேட்டியில் 2ஜி அலைக்கற்றை ஊழலின் மொத்த தொகை ரூ.60,000 கோடி என்றும், அதில் 60 விழுக்காடு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் இரண்டு தங்கைகளுக்கும் தலா ரூ.18,000 கோடி கொடுக்கப்பட்டுவிட்டது என்றும், தமிழக முதல்வருக்கு 30 விழுக்காடு, அதாவது ரூ.18,000 கோடி என்றும், ஆ.இராசாவி்ற்கு வெறும் 10 விழுக்காடு. அதாவது ரூ.6,000 கோடி மட்டுமே என்று கூறியிருந்தார். இந்தப் பேட்டி வந்த பிறகும் இந்தியாவின் ஊடகங்கள் எதுவும் சோனியாவிற்கு கொடுக்கப்பட்ட பங்கு பற்றி பேசவில்லை. இது தமிழக முதல்வரின் ஆதங்கத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்றே அவர் பேச்சிலிருந்து தெரிகிறது. சுப்ரமணியம் சுவாமி கூறியது உண்மையாக இருந்தாலும் (அவரைத் தவிர, வேறு யாருக்கு இப்படிப்பட்ட விடயங்களில் உண்மைத் தெரியும்? அதனால்தானோ என்னவோ, அவரை சமீபத்தில் நேருக்கு நேர் சந்தித்தபோது கூட, பிரதமர் மன்மோகன் சிங் கை குலுக்கி, சிரித்து பேசியுள்ளார். அந்தக் காட்சிகள் பல பத்திரிக்கைகளில் வந்துள்ளது) ஊடகங்கள் அவரை நம்பத்தக்கவராக கருதாத காரணத்தினால் அவர் கூறிய ‘உண்மைகள்’ பெரிதாக்கப்படவில்லை. “ஆ.இராசாவிற்கு பல உண்மைகள் தெரியும், அவர் அந்த உண்மைகளை பேசினால் பலர் மாட்டிக்கொள்வார்கள். எனவே அவரை தீர்த்துக் கட்ட முயற்சி நடக்கிறது. அவரை முடித்துவிட செக் நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்கள் துபாயில் கொலையாளியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். எனவே இராசாவிற்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அதுவும் ஊடகங்களில் வந்தது. இதையெல்லாம் ஏன் ஊடகங்கள் பெரிதுபடுத்தாமல், இராசா மட்டுமே அவ்வளவு தொகையையும் தூக்கிக் கொண்டு போய்விட்டதாக கூறுகிறார்களே, அது சாத்தியமா என்பதே, ஊழலிற்கு நெருப்பாக வாழ்ந்துவரும் தமிழக முதல்வரின் ஆதங்கமாகும். ஏனெனில், அந்த விழாவில் அவரே கூறியபடி, அவர் மட்டும் பெரியாரையும், அண்ணாவையும் சந்திக்காமல் இருந்திருந்தால் ஒரு பொதுவுடைமைவாதியாக இருந்திருப்பார் அல்லவா?