ஏழை, எளிய மக்களின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் மேம்பாட்டிற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் தங்கள் ஆட்சியின் செயல்பாடு இருக்கும் என்று தேர்தல் அறிக்கையில் ‘ஆம் ஆத்மி’ (பொது மக்கள்) யைப் பற்றி கூறிவிட்டு, பட்ஜெட்டை பொருளாதார சீர்திருத்தக் கண்ணோட்டத்தோடு போடுவது காங்கிரஸ் கட்சிக்கு ஒன்றும் புதியதல்ல.
அதைத்தான் 2009-10ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையிலும் செய்துள்ளது. வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும், விவசாயம் சார்ந்த கிராம மற்றும் நகர்ப்புற நடுத்தர மக்களுக்கு 3 ரூபாய்க்கு கிலோ அரிசி, கோதுமை, வருமான வரி உச்சவரம்பு உயர்த்தல், பொருளாதார ரீதியாக பிற்பட்ட குடும்ப மாணாக்கர்களுக்கு உயர் கல்விக் கடன் மீதான வட்டிக்கு மானியம், விவசாய கடன்களுக்கான இலக்கு ரூ.3,25,000 கோடியாக நிர்ணயிப்பு, கிராமப்புற குடியிருப்பு கட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு என்ற பல அறிவிப்புகளை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.
இவைகள் மட்டுமின்றி, உலகளாவிய பொருளாதார பின்னடைவு காரணமாக நமது நாட்டிலும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க புதிதாக சாலைகள் அமைத்தல், விரிவு படுத்துதல், இரயில், விமான நிலையங்கள், துறைமுகங்கள் விரிவாக்கம் ஆகிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு 2014ஆம் ஆண்டிற்குள் நமது நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 விழுக்காடு செலவிடப்படும் (இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.54 இலட்சம் கோடி) என்ற அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 1.2 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதி, நமது நாட்டில் தற்போது வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்கள் எண்ணிக்கையை 2014ஆம் ஆண்டிற்குள் பாதியாக குறைப்பது என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் அமைச்சர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ளார்.
இதையெல்லாம் பார்க்கும் போது மக்கள் நலனை முன்னிறுத்தி தயாரிக்கப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையாகவே நம்மை ஒப்புக் கொள்ள வைக்கும் வகையில் உள்ளது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்று இந்த நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வாசிக்கத் துவங்கிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி நமது பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களையும் பட்டியலிட்டார்.
உலகப் பொருளாதாரப் பின்னடைவின் தாக்கம்!
உலகளாவிய பொருளாதாரப் பின்னடைவு நமது நாட்டின் பொருளாதாரத்திலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், நமது பொருளாதாரத்தை எதிர்நோக்கியுள்ள 3 சவால்களை (உரையின் பகுதிகள் 7, 8, 9) அமைச்சர் பிரணாப் பட்டியலிட்டுள்ளார்.
1) நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை (ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியை) 9 விழுக்காடு அளவிற்கு வெகு விரைவில் எட்டுவது. வருவாய் வளர்ச்சி முக்கியம், அதே நேரத்தில் அது கொண்டு வரும் வள ஆதாரங்களும் முக்கியமானவை. இந்த வள ஆதாரங்களே நமது நாட்டின் மேம்பாட்டிற்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள இடைவெளியை நிரப்புவதற்கு - உதாரணமாக நமது மக்களின் பலவீனமான பகுதியினரின் நலன்களைப் பேணும் திட்டங்களை நிறைவேற்ற அவசியமாகும்.
2) இரண்டாவதாக ஒட்டு மொத்த, விரிவான வளர்ச்சி எனும் இலக்கை எட்டுவதற்கும், நமது நாட்டின் முன்னேற்றத்தின் பலன் எந்த ஒரு தனி மனிதனையோ அல்லது சமூகத்தையோ அல்லது பகுதியையோ சென்றடைவதை உறுதி செய்வது.
3) மூன்றாவதாக அரசு நிர்வாகத்திற்கு சக்தியூட்டி அதன் மூலம் திட்டங்களின் பலன்களை உரியவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வது (இதுவரை சென்றடையவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறது அரசு). நமது அரசு நிறுவனங்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த சேவைகளை அளிப்பதையும், பாதுகாப்பும், சட்டத்தின் ஆட்சியும் வெளிப்படையாக அனைவரையும் சென்று சேருவதை உறுதிப்படுத்த வேண்டும்.
என்று மூன்று சவால்களையும், அதனை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் அளித்துள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்த இலக்குகளை எட்டுவதற்கான அடிப்படையை (பகுதி 10) அடுத்துப் பேசினார்.
“கடந்த 5 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வழிவகுத்த வளர்ச்சிப் பாதையின் வெற்றிக்கு பொருளாதார வளர்ச்சி விகிதமும், வருவாய் அதிகரிப்பும்தான் காரணம். இந்த காலகட்டத்தில் நமது வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றது தனியார் முதலீடே. இதில் உள்நாட்டு முதலீடே பெரும் பங்கு வகித்தது” என்று கூறிய பிரணாப் முகர்ஜி, அந்நிய முதலீட்டின் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்:
“அந்நிய முதலீடு வரவு குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்தது மிக முக்கியமானது, ஆயினும் அது நமது நாட்டின் சேமிப்பிற்கும், முதலீட்டிற்கும் இடையிலான இடைவெளியை நிரப்புவதாக இல்லை என்றாலும், அது நமது பொருளாதாரத்தின் வளர்ச்சி தேவைகளுக்கான நிதி வளத்தை அளிப்பதாக இருந்தது” என்று கூறியுள்ளார்.
அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் மேற்கண்ட வலியுறுத்தல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடைபிடித்துவரும் திறந்த பொருளாதாரக் கொள்கை, அரசின் பல்வேறு திட்டங்களில் தனியார் முதலீட்டிற்கும், அந்நிய நேரடி முதலீட்டிற்கு தற்பொழுதுள்ள தடைகளை முழுமையாக நீக்கி, அதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் அந்நிய நிறுவனங்கள் எவ்வித தடையுமின்றி ‘முழுச் சுதந்திரத்துடன்’ பங்கேற்க வழிவகை செய்யப்போகிறது என்பதையே சுட்டிக்காட்டுகிறது.
நமது நாட்டின் உள்கட்டமைப்பு (Infrastructure) மேம்பாட்டிற்கு தேவையான நிதியை திரட்டி நீண்ட கால அடிப்படையில் அப்படிப்பட்ட திட்டங்களுக்கு நிதி உதவி செய்ய இந்திய உள்கட்டமைப்பு நிதியுதவி நிறுவனம் (India Infrastructure Finance Company Limited - IIFCL) உருவாக்கப்படும் என்பதையும், அதற்கு (நிதி தொடர்பான விதிமுறைகளில்) இருந்து அதிகபட்ச இணக்கம் காட்டப்படும் என்றும் (பகுதி 17) கூறியுள்ளார்.
இதுபற்றிக் குறிப்பிடும் போது அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு சொற்றொடரை பயன்படுத்தியுள்ளார். அது ‘Takeout Financing’ என்பது. தொலைபேசி சேவை விரிவாக்கம், மின் உற்பத்தி, விமான நிலையங்கள், துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், இரயில்வே கட்டமைப்பு போன்ற நிறைவேற்ற நீண்ட காலமாகும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நீண்ட கால (உதாரணம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான) கடன்களை வழங்குவதில் வங்கிகளுக்கு நிதிச் சிக்கல் (asset - liability mismatch) ஏற்படும் அபாயம் உள்ளது. அவைகள் குறைந்த கால அடிப்படையில்தான் அதிகமான வைப்பு நிதிகளை (6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை) பெறுகின்றன. அப்படிப்பட்ட நிலையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்குத் தேவையான நீண்ட கால கடன்களை பெறுவதற்கே இந்த ‘Takeout Financing’ முறை கடைபிடிக்கப்படுகிறது.
இதன்படி, ஒரு நீ்ண்ட காலத் திட்டத்திற்கு ஒரு குறிப்பிட்ட காலவரையறைக் கடன்களை வங்கிகள் அளிக்க முன்வரும். உதாரணமாக 10 ஆண்டுக்காலத் திட்டத்திற்கு முதல் 3.3 ஆண்டுகளுக்கு ஒரு வங்கியும், அடுத்த 3.3 ஆண்டுகளுக்கு மற்றொரு வங்கியும், இறுதி 3.4 ஆண்டுகளுக்கு மூன்றாவது வங்கியும் கடன் அளிக்கும். அப்படி கடனளிக்கும் வங்கிகளுக்கு நிதிச் சிக்கல் ஏற்படும் நிலையில், அரசு உருவாக்கும் இந்திய உள்கட்டமைப்பு நிதியுதவி நிறுவனம் அந்த வங்கிகளுக்கு 60 விழுக்காடு வரை நிதியுதவி செய்யும்.
இதன் மூலம் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் பொது - தனியார் கூட்டாண்மையில் (Public - Private Partnership - PPP) நிறைவேற்றப்படும் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நீண்ட காலக் கடன் அளிக்க வழிசெய்யப்படும் என்று கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு மட்டும் 1 இலட்சம் கோடி நிதியுதவியை இந்திய வங்கிகளும் இந்திய உள்கட்டமைப்பு நிதியுதவி நிறுவனமும் அளிக்கக் கூடிய நிலையில் உள்ளதாகக் கூறியுள்ளார்.
இதற்கான நிதி முதலீட்டைப் பெருக்க உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று கூறியுள்ள பிரணாப் முகர்ஜி, இப்படிப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் ‘தடையாக’ உள்ள கொள்கைகள், கட்டுப்பாடுகள், நிர்வாக ரீதியிலான நெருக்குதல்கள் ஆகியவற்றை ‘நீக்குமாறு’ மத்திய அரசு அமைச்சகங்களையும், மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதாவது தனியார் மற்றும் அந்நிய முதலீட்டு வரத்திற்கு தடையாக உள்ள கொள்கைகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும் என்றும், முதலீட்டாளர்களுக்கு கட்டுப்பாடு என்ற எதுவும் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை நிர்ணய கொள்கையில் மாற்றம்!
இதுவரை பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் மீதான விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையை கைவிடுவது எனவும் அரசு முடிவு செய்துள்ளது இந்த நிதி நிலை அறிக்கையின் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா விலையேற்றத்திற்கும், இறக்கத்திற்கும் தக்கவாறு பெட்ரோல், டீசல் விலைகளை கூட்டுவதோ குறைப்பதோ அரசின் முடிவாக இருந்த நிலை மாறி, இதற்குமேல் விலை நிர்ணய பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடமே விட்டுவிட அரசு முடிவு செய்திருப்பதையே பிரணாப்பின் நிதி நிலை அறிக்கை உரை (பகுதி 35) தெளிவாக்குகிறது.
“கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் உள்ளதற்கு தக்கவாறே உள்ளூர் விலைகளை நிர்ணயிக்கும் வழிமுறை நமது அண்டை நாடுகளில் கூட நடைமுறையில் உள்ளது. நமது தேவைக்கான எரிபொருள் அளவில் முக்கால் மடங்கு இறக்குமதி செய்யும் நமது நாடும் இந்த வழிமுறையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பெட்ரோல், டீசல் விலைகளை சர்வதேச விலையேற்றத்திற்கும், இறக்கத்திற்கும் ஏற்றவாறு நிர்ணயிக்கும் ஒரு வழிமுறை குறித்து ஆலோசனை அளிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும்” என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலையில் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் தீர்வைகளும், வரிகளுமே பெரும் பங்கு என்றாலும், அது குறித்து எந்த பரிசீலனையும் செய்வது பற்றி உறுதியளிக்காமல் - அதாவது அரசு வருவாய் குறையாமல் - மொத்த சுமையையும் மக்கள் மீது ஏற்றுவதற்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப்போகிறது அரசு!
நவரத்தினங்களும் தனியார் மயமாகும்!
பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை தனியார்களுக்கு விற்று அதன் மூலம் அந்நிறுவனங்களை தனியார் கையில் முழுமையாக தாரை வார்க்கும் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த இந்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை தனது உரையில் (பகுதி 37) பிரணாப் முகர்ஜி ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்தியுள்ளார்.
முந்தைய ஆட்சிக் காலத்தில் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் மத்திய அரசு செயல்பட வேண்டியிருந்ததால் மூலதன விலக்கலில் இருந்து தப்பித்த நவரத்தினங்கள் என்றைக்கப்படும் பாரத் மிகு மின் நிறுவனம் (Bharath Heavy Electricals limited _BHEL), இந்திய நிலக்கரி நிறுவனம் (Coal India Limited), இந்திய கப்பல் நிறுவனம் (Shipping Corporation of India), ஊரக மின்மயமாக்கு நிறுவனம் (Rural Electrification Corporation Limited), இந்திய எரிசக்தித் தொகுப்பு நிறுவனம் (Power Grid Corporation of India Limited), தேச அலுமினிய நிறுவனம் (National Aluminium corporation Limited), தேச மின்னனு நிறுவனம் (Bharath Electronics Limited), ஹிந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனம் (Hindustan Aeronautical Limited), தேச கனிம மேம்பாட்டு நிறுவனம் (NMDC Limited) ஆகிய மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் திறம்படவும், இலாபகரமாகவும் இயங்குவதனால் ‘நவரத்தினா’ நிறுவனங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிறப்பாக இயங்கும் மத்திய அரசின் மற்ற பொதுத் துறை நிறுவனங்களும் இப்படியலில் சேர்க்கப்படுகின்றன (உதாரணம்: எரிசக்தி நிதியுதவிக் கழகம் - Power Finance corporation). இந்த நவரத்னா நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க மாட்டோம் என்று மத்திய அரசு (நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மூலம்) உறுதியளித்தது. ஆனால் நேற்று நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்த பிரணாப் முகர்ஜி, வங்கிகளும், காப்பீடு நிறுவனங்களும் மட்டுமே (எதிர்காலத்தில் இவைகளும் மூலதன விலக்கலுக்கு உட்படுத்தப்படலாம்) பொதுத் துறையில் இருக்கும் என்றும், இவற்றின் வளர்ச்சிக்கு மூலதனம் அளிப்பது உள்ளிட்ட அனைத்து ஆதரவுகளையும் அரசு அளிக்கும் என்று கூறியுள்ளார்.
ஆனால் நவரத்தினா உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்கள் கதி? அதனை இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார் பிரணாப் முகர்ஜி: “பொதுத் துறை நிறுவனங்கள் தேசத்தின் சொத்துக்களாகும். நமது (பொதுத் துறை) நிறுவனங்களில் உள்ள அரசின் மொத்த மூலதனத்தில் 51 விழுக்காடு அளவிற்கு அரசிடம் வைத்துக் கொண்டு, மீதமுள்ள பங்குகளை விற்கும் திட்டத்தின் கீழ் பொது மக்களின் பங்கேற்பிற்கு ஊக்கமளிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.
ஆக நவரத்தினா, சிறு நவரத்தினா ஆகிய அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை பொது மக்கள் பங்கேற்பிற்கு என்று கூறி தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளதை பிரணாப் மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளார். தனியார் முதலீட்டின் காரணமாகவே 2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.5 விழுக்காடு என்ற அளவிற்கு இருந்தது என்று ‘முதலீட்டிற்க்கான சூழல்’ என்ற தலைப்பில் (பகுதி 44) மீண்டும் வலியுறுத்தியுள்ள பிரணாப் முகர்ஜி, தொழில் நிறுவனங்களின் குறைபாடுகளைத் தீர்க்க அவர்களோடு அரசு நெருங்கிச் செயல்படும் என்று கூறியுள்ளார்.ஆக, தனியார் பங்கேற்பிற்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களை திறந்து விடுவது மட்டுமின்றி, தனியார் முதலீட்டிற்கும், பங்கேற்பிற்கும் எந்த அளவிற்கு முன்னுரிமை அளிக்கப்படுமோ அதே அளவிற்கு அந்நிய நேரடி முதலீடுகளுக்கும் முழு அளவிற்கு கதவு திறந்துவிடப்படும் என்பதே நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள இந்த நிதி நிலை அறிக்கையின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
தேச ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் நாள் கூலி ரூ.20 உயர்த்தப்பட்டிருப்பது, பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்து மாணவர்களுக்கு உயர் கல்விக் கடன்களின் மீதான வட்டிக்கு மானியம், விவசாயிகளுக்கு கடன் வழங்க ரூ.3,25,000 கோடி இலக்கு, கல்விக்கான ஒதுக்கீட்டை மேலும் ரூ.2,000 கோடி அதிகரித்திருப்பது என்பது போன்ற அனைத்தும் எந்த விதத்திலும் மக்களை முழுமையாக சென்றடையாத அறிவிப்புக்களே.
மாணவர்கள் வங்கிகளில் கடன் பெறச் சென்றால் அதற்கு பல காரணங்களைக் கூறித் தட்டிக் கழிக்கும் வங்கிக் கிளைகள், ஏற்கனவே அளிக்கப்பட்ட கடனில் ஒரு பகுதியாவது திருப்பிச் செலுத்தினால்தான் மறு கடன் வழங்க முடியும் என்று விவசாயிகளிடம் வங்கிகள் போடும் நிபந்தனைகள், தேச ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாளுக்கு ரூ.80 பெற்ற கிராம மக்கள் மிகக் குறைவானவர்களே என்பதும், அதில் நடந்துள்ள ஊழலும், சராசரி பொருளாதார நிலையில் உள்ள குடும்பங்களில் இருந்து வரும் மாணாக்கர்களுக்கு எட்டாத உயர் கல்விக்கும், ஐஐடி போன்ற உயர் தொழில் கல்விக்கும் மட்டுமே அதிகமான நிதி ஒதுக்கீடு என்பதும் நடைமுறையில் முழுமையான பலன் தேவைப்படும் மக்களுக்குச் சென்றடையாத திட்ட அறிவிப்புக்களே.
ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டன என்பது குறித்த அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்று முன்பு நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உறுதியளித்தார். ஆனால், அப்படி எந்த அறிக்கையையும் அவர் வைக்கவில்லை. இந்த நிலையில் மக்கள் நலத் திட்டங்களின் அறிவிப்புகள் ஒவ்வொன்றும் யாருக்கும் பலனளிக்க வேண்டுமோ அவர்களைச் சென்றடைந்ததா என்பதை அறியும் வாய்ப்பற்ற நிலையில்தான் ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்படும் அறிவிப்புகள் அந்த நிதியாண்டில் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டன என்பதை, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஒவ்வொரு துறையின் நிலைக் குழுக்களாவது ஒரு அறிக்கையை தயாரித்து, அதனை நாடாளுமன்றத்தில் வைத்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கடந்து நிதியாண்டில் விவசாயக் கடன்களுக்காக ரூ.2,87,000 இலட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதில் எந்த அளவிற்கு விவசாயிகளுக்கு கடனாக அளிக்கப்பட்டது என்பது குறித்து அறிந்து கொள்வதற்கு வழியில்லை.
இந்த நிலையில், பொருளாதார சீர்த்திருத்தம் என்ற பெயரில் முழுமையாள தாராளமயமாக்கல் கொள்கையை நடைமுறைப்படுத்தி அதன் மூலம் தனியார் முதலீட்டிற்கும், ஆளுமைக்கும் வழியேற்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இதுதான் வழி என்று கூறுகிறது மத்திய அரசு.
1992ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசு கடைபிடித்து வரும் புதிய பொருளாதாரக் கொள்கையால் நமது நாட்டின் முன்னேற்றம் எந்தெந்த வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஒரு விவரமான ஆய்வறிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் நாட்டின் முன்னேற்றத்திற்கு தாராளமயமாக்கலும், தனியார் மயப்படுத்தலும்தான் வழி என்கிறது அரசு!அதன் இந்த இலட்சியத்தை இந்த நிதி நிலை அறிக்கையும் பிரதிபலிக்கிறது.
இந்தியாவின் பொருளாதார வாழ்வு இப்படிப்பட்ட ‘சீர்த்திருத்தங்களால்’ வணிகமயமாகிறது என்பது அன்றி, பரவலான வளர்ச்சிக்கு வழியேற்படப்போவதில்லை.