இலங்கையில் தமிழர்கள் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்படுவதை தடுத்து நிறுத்த போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துமாறு தமிழ்நாடு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அளித்துள்ள விளக்கம் வினோதமாகவும், நம்மை திசை திருப்பி ஏமாற்ற அரசியல்வாதிகள் எதையும் காரணமாக்குவார்கள் என்பதையும் காட்டியுள்ளது. சென்னை மாநகரில் மயிலை மாங்கொல்லையில் காங்கிரஸ் கட்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடத்திய ‘காங்கிரஸின் நிலை விளக்கப் பொதுக் கூட்ட’த்தில், போர் நிறுத்தம் செய்யுமாறு சிறிலங்க அரசை இந்தியா வற்புறுத்த முடியாது என்று பேசிய சிதம்பரம், ஏன் வற்புறுத்த முடியாது என்பதற்கு அளித்த விளக்கம் ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்று கருதும் தமிழ்நாட்டு மக்களுக்கு கோபக் கொந்தளிப்பிலும் சிரிப்பை வரவழைத்திருக்கும்.“இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல, நம் காலனியாதிக்க நாடும் அல்ல, அது ஒரு இறையாண்மை மிக்க தனி சுதந்திர நாடு. எனவே ஆயுதம் ஏந்திய விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என இலங்கை அரசிடம் கூறும் தார்மீக உரிமை இந்தியாவிற்கு இல்லை” என்று அமைச்சர் சிதம்பரம் விளக்கமளித்துள்ளார்.தனது வாதத்திற்கு வலு சேர்க்க காஷ்மீர், அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர் மாநிலங்களில் பிரிவினை கோரி போராடும் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு மறுத்து வருவதாகவும் கூறியுள்ளார் (இதில் கூட ஒரு உண்மையை மறைத்துள்ளார் சிதம்பரம். நாகா தேசிய விடுதலை முன்னனியுடன் ஒரு போர் நிறுத்தம் செய்து கொண்டுதான் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது) அமைச்சர் சிதம்பரம் கூறியதில் உண்மையும், அடிப்படையும் எந்த அளவிற்கு உள்ளது என்பது விவரமறிந்த எவருக்கும் தெரியும். ஒரு பிரச்சனையில் கடைசி பத்தாண்டுகளில் ஏற்பட்ட நிகழ்வுகள் கூட மக்கள் மனதில் இருக்காது என்று உறுதியாக நினைத்தால் மட்டுமே ஒரு அமைச்சரால் இவ்வாறு பேச முடியும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே 2002ஆம் ஆண்டு பிப்ரவரியில் போர் நிறுத்தம் ஏற்பட்டதும், அதனைத் தொடர்ந்து நார்வே நாட்டின் அனுசரணையுடனும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஜப்பான் ஆகியன மட்டுமின்றி, இந்தியாவின் ஆதரவுடனும் அமைதி பேச்சு நடைபெற்றது அனைவருக்கும் நினைவிருக்கும்.முதலில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அந்தப் பேச்சுவார்த்தை துவங்கியது, அதன்பிறகு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றது, பிறகு சிங்கப்பூரிலும், கடைசியாக ஜெனீவா நகரிலும் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் முதிலில் இருந்து இறுதிவரை தான் ஒப்புக்கொண்ட எதையும் சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்பதும், அதன் காரணமாகவே எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லையென்பதும் தமிழர் இனப் பிரச்சனை குறித்து அறிந்த, ஆர்வத்துடன் அவதானித்தவர்கள் அனைவருக்கும் தெரியும்.
இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ‘ஆயுதத்தை கீழே போட்டுவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வா’ என்றா சிறிலங்க அரசு நிபந்தனை விதித்தது? இல்லையே. அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்த நார்வேயோ அல்லது ஆதரவளித்த (பேச்சுவார்த்தையை ஆதரித்த இந்தியா உட்பட) எந்த நாடாவது அப்படிப்பட்ட நிபந்தனையை விதித்தனவா? இல்லையே. பிறகு எந்த அடிப்படையில் அமைச்சர் சிதம்பரம், ‘புலிகள் ஆயுதத்தை கைவிடும்வரை' பேச்சுவார்த்தைக்கு வற்புறுத்த முடியாது என்று கூறுகிறார்? ஆக, தமிழக மக்களுக்கு இதெல்லாம் மறந்துவிட்டிருக்கும் என்றோ அல்லது அதைப்பற்றியெல்லாம் தான் மறந்த நிலையிலோதான் இவ்வாறு சிதம்பரம் பேசியிருக்க முடியும்.பேச்சுவார்த்தைக்கா தமிழகம் வற்புறுத்தியது?மத்திய அரசிற்கு தமிழக மக்களும், தமிழ்நாட்டு அரசும், எதிர்க்கட்சிகளும், மற்ற பொது அமைப்புகளும் விடுத்த கோரிக்கை என்ன? தமிழினப் படுகொலையை தனது முப்படைகளைக் கொண்டும் மேற்கொண்டுவரும் சிறிலங்க அரசை போர் நிறுத்தம் செய்யச் சொல் என்பதுதானே? பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியா தமிழக சட்டப்பேரவையிலும், வெளியிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதா? பேரணிகளும், பொதுக் கூட்டங்களும், கடையடைப்பும், மனித சங்கிலிப் போராட்டங்களும் நடத்தப்பட்டதா? கோரிக்கையை பேசாமல், கேட்காததை எதற்குப் பேசுகிறார் சிதம்பரம்?
போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் ஒருமுறையல்ல மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், தமிழக முதலமைச்சர் கருணாநிதி பேசியதென்ன? முதலில் அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். பிறகு அவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை (சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் - அதுவும் நார்வே என்று குறிப்பிட்டே) நடத்தப்பட வேண்டும், அதன்மூலம் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். இங்கிருந்து தீ்ர்வு என்று எதையும் (ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம் என்பதை நினைவில் கொள்க) திணிக்கக் கூடாது என்றுதானே கூறினார்?
உண்மை இப்படியிருக்க பேச்சுவார்த்தை நடத்து என்று வற்புறுத்த முடியாது என்று கூறுவது எதற்கு?
இறையாண்மை ஒரு தடையா?
“இலங்கை இந்தியாவின் அடிமை நாடல்ல, அது இறையாண்மைமிக்க தனி சுதந்திர நாடு” என்று கூறுகிற அமைச்சர் சிதம்பரம், ஒரு நாட்டின் இறையாண்மை என்பது, அந்நாடு உரிமை கேட்டுப் போராடும் தனது நாட்டு மக்களாக உள்ள ஒரு தேசிய இனத்தை முற்றிலுமாக அழிப்பதற்குக் கூட உரிமையளிப்பதா? என்பதற்கு பதிலளிக்க வேண்டும்.
ஒரு நாட்டின் இறையாண்மை என்பது என்ன? தனது சுதந்திரத்தை காத்துக்கொள்ளவும், தனது மக்களின் நலனை பேணவும், தனது எல்லைகளைக் காத்துக் கொள்ளவும் அதற்கு உள்ள உரிமைதானே இறையாண்மை என்பது. அந்த உறுதியான, அசைக்க முடியாத தன்னுரிமை அதற்கு எங்கிருந்து கிடைக்கிறது? அல்லது பெறுகிறது? எந்த மக்களைக் காக்கவும், அவர்களின் நலனைப் பேணவும், அந்நிய தாக்குதலில் இருந்த தன்னை காத்துக் கொள்ளவும் அரசமைப்பு ரீதியாக பெற்ற உரிமைதானே அது? அதனை உரிமை கேட்டு போராடிய - தனது நாட்டின் அங்கமாக, தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அழிப்பதற்கா? ஒரு பெரும்பான்மை இனத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்த, ஒரு சிறுபான்மை இனத்தை முற்றிலுமாக அழித்திடவா அதற்கு இறையாண்மை உதவும்? நமது நாட்டின் குறிப்பிடத்தக்க சட்ட நிபுணர்களில் ஒருவரான அமைச்சர் சிதம்பரம் கூறும் விளக்கம், ராஜபக்ச அரசு மேற்கொண்டுவரும் இன அழித்தலை இறையாண்மையின் பெயரில் நியாயப்படுத்துவதாக அல்லவா உள்ளது? இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என்று அமைச்சர் சிதம்பரமோ அல்லது காங்கிரஸ் கட்சியோ தமிழக மக்களிடம் கூறிடத் தயாரா?அதிபர் ராஜபக்சயின் சகோதரரும், சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலருமான கோத்தபய ராஜபக்ச, சிறிலங்க இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் இனப் படுகொலை குற்றம் சாற்றப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளதே? அறிவாரா சிதம்பரம்?
இந்தக் கட்டுரைகளுக்கிடையே பதிக்கப்பட்டுள்ள புகைப்படங்களை உலகத்தின் எந்த நாட்டவராவது பார்க்கட்டும். இதற்கெல்லாம் காரணமான அரசு தனது இறையாண்மைக்கு உட்பட்டுத்தான் செய்துள்ளது என்று கூறுவார்களா? சொந்த நாட்டு மக்கள் மீது வெள்ளை பார்பரஸ் குண்டுகளைத் தாக்கி எரித்துக் கொல்லும் அரக்க நெஞ்சு கொண்ட அதிபர் ராஜபக்சவுடன், நல்லுறவு பற்றிப் பேசியதாக அறிக்கைவிடும் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கும், உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் இறையாண்மை என்பதற்கு இதுதான் பொருளோ?
ராஜபக்ச, ஜெயவர்த்தனே உள்ளிட்ட சிறிலங்க தலைவர்கள் கொண்டுள்ள இனவெறி மனப்பாங்கை காங்கிரஸ் கட்சியும் பகிர்ந்து கொள்கிறதோ? அதனால்தான், அன்று பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையாரை சுட்டுக் கொன்றவர்கள் இரண்டு சீக்கியர்கள் என்பதற்காக, டெல்லிப் பட்டணத்தில் 3,000 அப்பாவி சீக்கியர்களைக் கொன்று குவித்தனரோ? அந்தச் செயல் இறையாண்மைக்கு கட்டியம் கூறுகின்றதோ? காங்கிரஸ் கட்சியும், அமைச்சர் சிதம்பரமும்தான் விளக்கிட வேண்டும்.
மீனவர் பிரச்சனையில் இறையாண்மை மீறப்படவில்லையா?
இறையாண்மை குறித்து இவ்வளவு ஆழமாக பேசிய அமைச்சர் சிதம்பரம், தமிழக மீனவர்கள் 400க்கும் அதிகமானவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சிறிலங்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனரே, அப்போது இந்தியாவின் இறையாண்மை என்ன செய்து கொண்டிருந்தது என்று விளக்கியிருக்கலாம்.
அதனைச் செய்யவில்லை. அப்படி ஒரு நிகழ்வு வேறு எந்த ஒரு மாநில மீனவருக்கும், ஏன் பாகிஸ்தான் மீனவருக்கும் கூட நேராதது ஏன் அமைச்சரே? நமது நாட்டின் மீனவர்கள் மீது, பலமுறை நமது கடற்பகுதிக்குள்ளேயே அத்துமீறி வந்து சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றனரே, அப்போதெல்லாம் இறையாண்மை ஏன் மத்திய அரசிற்கு நினைவிற்கு வரவில்லை? நமது கடற்படைக்கு ஏன் அந்த எண்ணம் பிறக்கவில்லை? நமது கடலோர காவற்படை நமது மீனவர்களைக் காப்பாற்ற ஏன் முன்வரவில்லை? இது தமிழ்நாட்டின் மீனவர்கள் மனதில் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் மக்கள் மனதிலும் ஏற்பட்டுள்ள கேள்வி என்பதை அமைச்சர் சிதம்பரம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு மிகப் பெரிய நாடான இந்தியா - அதுவும் அணு ஆயுதங்களைக் கொண்ட 6வது வல்லரசு, அதன் மீனவர்களை ஒரு சிறிய தீவின் கடற்படை எந்தத் துணிச்சலில் சுட்டது, சுட்டுக் கொண்டிருக்கிறது? மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று உத்தரவாதம் பெறப்பட்டதே, அதன் பிறகும் தாக்குதல் தொடர்கிறதே? சிறிலங்காவிற்கு யார் துணிச்சலைக் கொடுத்தது? இப்படிப்பட்ட துணிச்சல் பாகிஸ்தானிற்கு இல்லையே ஏன்?
நமது நாட்டின் மீனவனையே நடுக்கடலில் அத்துமீறிச் சுட்டு நாசம் செய்யும் ஒரு கடற்படையைக் கொண்ட அரசு, தன் நாட்டில் வாழும் தமிழர்களுக்கா சம உரிமை கொடுக்கப் போகிறது? யாரை ஏமாற்றப் பேசுகிறீர்கள்? தமிழர்க்கு சிந்திக்கத் தெரியாது என்று நினைக்கிறீர்களா?
தமிழக மீனவர்களின் உரிமை, ஈழத் தமிழர்களின் நலன் ஆகிய இரண்டையும் விட்டுத் தந்துவிட்டு, சிங்கள மேலாதிக்க அரசுடன் ஒரு நட்பை உறுதி செய்கிறது மத்திய அரசு என்பதை, கடந்த மாதம் இலங்கை சென்றுவந்த அமைச்சர் பிரணாப் முகர்ஜி விடுத்த அறிக்கையில் இருந்தே தெளிவாகத் தெரிந்ததே.
அந்த அறிக்கையில் போர் நிறுத்தம் பற்றியும் பேசவில்லை, தமிழர்களின் நலம், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை ஆகிய எதைப் பற்றியும் பேசவில்லை!
மத்திய அரசை, காங்கிரஸை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்துகொண்டு விட்டார்கள், அவர்களை இல்லாத காரணங்களைக் கூறி குழப்பிட முனைவது பயனைத் தராது. தமிழ்நாட்டு மக்களை விட்டு எங்கோ சென்றுவிட்டது காங்கிரஸ் கட்சி. அது எந்த இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை அவர்களின் வாக்குப் பலம் காட்டும், அதுவே அவர்களின் நலனையும், தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களின் நலனையும் காப்பாற்றும்.