“இலங்கைத் தமிழர் பாதுகாப்புத்தான் தி.மு.க.வின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரைத் தி.மு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்துப் பேசினாலும், செயல்பட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட மாநில அரசு தயங்காது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும்” என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள ‘தமிழீழ அங்கீகார மாநாட்டை’ கருத்தில் கொண்டுதான் கேள்வி-பதிலாக தமிழக முதல்வர் ஒரு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்பட்டாலும், இதற்கு ஒரு பின்னனி உள்ளதை மறுப்பதற்கில்லை.சமீப காலங்களில் இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவம் தொடுத்துவரும் தாக்குதலால் அவர்கள் பட்டுவரும் துயரத்தையும், ஈழ விடுதலையில்தான் அவர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும் என்றும் பேசும் தலைவர்கள், தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று குரல் கொடுக்கையில், சிறிலங்க இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா மறைமுகமாக உதவி செய்து வருகிறது என்றும், அப்படிபட்ட உதவி தமிழர்களுக்கு எதிரான சிறிலங்க அரசின் நடவடிக்கைக்கு வலு சேர்க்கிறது என்றும் கண்டித்துப் பேசி வருகின்றனர். இப்படிப்பட்ட பேச்சிற்கிடையே, ஈழப் பிரச்சனையில் இந்தியாவின் தலையீட்டையும், அதன் காரணமாக ஈழ மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பையும், விடுதலைப் புலிகளின் போராட்டத்தையும் நியாயப்படுத்திப் பேசுவது இயல்பானதாகிவிடுகிறது. அப்படிப்பட்ட பேச்சுக்களை கண்டிக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், அதனை தங்கள் தலைவர் ராஜீவ் காந்தியை கொன்ற இயக்கத்திற்கு ஆதரவான பேச்சு என்று கூறி, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவது தேசத் துரோகம் என்றும், அவவாறு பேசியவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர்.காங்கிரஸ் கட்சியினரின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, திரைப்பட இயக்குனர்கள் சீமான், அமீர், ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, அக்கட்சியின் அவைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு இவர்கள் அனைவரும் பிணையில் விடுதலையானார்கள்.
ஒரு வாரத்திற்கு முன்னர், ஈரோட்டில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய பொதுவுடமை கட்சியின் தலைவர் மணியரசன் ஆகியோரும் இதே காரணத்திற்காக, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு வலியுறுத்தியதன் அடிப்படையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பெரியார் தி.க.வினர் காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் செய்யச் சென்றபோது காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்த, அவர்கள் காங்கிரஸ் தலைவர்களின் உருவ பொம்மைகளைக் கொளுத்த, அங்கு வந்த காங்கிரஸார் அதனைக் கண்டிக்க சென்னை இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே பெரும் பதற்றமேற்பட்டது.
இதே நேரத்தில் சத்தியமூர்த்தி பவன் எதிரே காங்கிரஸாருக்கும், விடுதலைச் சிறுத்தை கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட, அதனைக் கண்டித்து அண்ணா சாலையில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட, அது தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்தது. காங்கிரஸாரும் ஆங்காங்கு மற்ற தலைவர்களின் கொடும்பாவிகளைக் கொளுத்தினர். அவர்கள் யாவரும் கைது செய்யப்பட்டு உடனடியாக விடுவிக்கப்பட்டனர்.
இந்தப் பின்னனியில்தான், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு, ‘காங்கிரஸின் தயவில்தான் தமிழக அரசு உள்ளது’ என்பதை நேரடியாக சுட்டிக்காட்டி ஒரு அறிக்கை விடுத்தவர், விடுதலை சிறுத்தைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தமாகவே வலியுறுத்தினார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் வீரப்ப மொய்லி, காங்கிரஸ் தலைவர்களை இகழ்ந்து பேசுவோர் மீதும், தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவார் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழுத்தமாகக் கூறினார். இதனை ஒரு எச்சரிக்கை என்றே கூறி செய்திகள் வெளிவந்தன.
ஆனால் தமிழக அரசிற்கு அப்படி எச்சரிக்கை என்று எதையும் வீரப்ப மொய்லி பேசவில்லை என்று மறுத்த காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அதற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதான் காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது என்று கூறினார்.காங்கிரஸ் ‘மேலிடம்’ கொடுத்த அழுத்தமே தமிழக முதல்வரின் இந்த கேள்வி பதில் எச்சரிக்கையாகும். தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க.விற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ம.க., இரண்டு கம்யூனி்ஸ்ட்டுகள் ஆகியவற்றின் ஆதரவும் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்தான் ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலையில், தனது அரசை காப்பாற்றிக் கொள்ளவே, அக்கட்சியினர் விடுக்கும் ‘கைது கோரிக்கைகளை’ அவசர அரசு நடவடிக்கைபோல தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது.எனவே தி.மு.க. அரசின் உயிர் காங்கிரஸ் கட்சியின் ஆதரவை நம்பியே இருப்பதால் அவர்கள் சொல்வதையெல்லாம் (ஆட்சியில் பங்கு தருவது தவிர) தமிழக முதல்வர் செய்து வருகிறார் என்பது அரசியல் அறிந்தவர்களுக்குப் புரியாதது அல்ல.ஆனால், “இலங்கைத் தமிழர்களைப் பாதுகாப்பதுதான் தி.மு.க.வின் குறிக்கோள்” என்று கூறும் தமிழக முதலமைச்சர், அதே குறிக்கோளை எட்டவே அங்கு ஒரு விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பதை மறுக்க முடியுமா? தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு சட்ட ரீதியான நிலை. அந்த இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு உதவக் கூடாது என்பது சட்ட ரீதியாக ஒவ்வொரு இந்தியன் மீதும் விதிக்கப்பட்டுள்ள தடை. அது சரியா தவறா என்பது விவாதத்திற்குரியது என்று தமிழக முதல்வரே சட்டப்பேரவையில் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு நடைபெறப்போகும் தமிழீழ ஆதரவு மாநாட்டைப் போல 2007ஆம் ஆண்டு நடந்த மாநாட்டில் திருமாவளவன் உள்ளிட்டவர்கள் பேசியதை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியினர் பேசியபோது, அவர்களுக்கு பதிலளித்த தமிழக முதல்வர், தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக பேசுவதே அந்த இயக்கத்திற்கு உதவுவதாக ஆகாது என்று பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியதை தமிழக சட்டப் பேரவையிலேயே சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்றைக்கு அவர் சரியாகப் பேசியதற்குக் காரணம், காங்கிரஸை தவிர்த்தாலும், பா.ம.க., இரண்டு கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவு தி.மு.க. அரசிற்கு இருந்தது. ஆனால் இன்று அந்த நிலையில்லை. எனவே முதல்வரின் இன்றைய நிலைக்குக் காரணம், அவரது ஆட்சியின் நிலையற்ற நிலையே தவிர, சட்ட நிலையிலோ அல்லது கருத்துச் சுதந்திரம் தொடர்பாக அவருக்கு திடீரென்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாலோ அல்ல என்பது தெளிவு.
மத்திய, மாநில அரசுகளின் நிலை காலத்தி்ற்கு காலம் மாறுபடலாம், அது அரசியல் ரீதியான, சட்ட ரீதியான நிலைபாட்டை பொறுத்தது. இன்றைக்கு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கம் அப்படியேதான் இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கூட ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. பிறகு விலக்கிக் கொள்ளப்படவில்லையா. அது வேறு.
ஆனால், இலங்கைத் தமிழர்களின் துயரம் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகவே தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசும், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தாலும், நிரந்தரத் தீர்வையும் நோக்கி பேச வேண்டிய, விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், அக்டோபர் 6ஆம் தேதி மயிலை மாங்கொல்லை பொதுக் கூட்டத்தில் முதல்வர் பேசியதுபோல, அது மத்திய அரசை மனிதாபிமான அடிப்படையில் செயல்படவேண்டும் என்று நாம் கேட்டுக் கொண்டாலும், நமக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அவர்கள் என்று நிம்மதியாக வாழ்வார்களோ அன்றுதான் நாமும் நிம்மதியாக இருக்க முடியும் என்பதே.
அப்படிப்பட்ட நிலையில், ஈழத் தமிழர்களின் பாதுகாப்பான எதிர்காலம் எப்படிப்பட்ட தீ்ர்வைச் சார்ந்துள்ளது என்பது தமிழகத்தில், பொது மேடைகளில் விவாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டம் பற்றி பேசாமல் இருக்க முடியாது. சிங்கள அரசு மேற்கொண்டுவரும் இன ஒடுக்கலை வன்மையான வார்த்தைகளால் கண்டிக்காமல் இருக்க முடியாது. அவர்களின் காட்டுமிராண்டித் தாக்குதல்களை தடுத்து நிறுத்தி காத்துவரும் தமீழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தைப் பற்றியும் பேசாமல் இருக்க முடியாது. இவ்வாறு கூறுவது அரசமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள சிந்தனை, கருத்துச் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் ஆகாது.
இங்குள்ள சில ஊடகங்களும் பத்திரிக்கைகளும், ‘சிறிலங்க இராணுவத்தின் தாக்குதல் வளையத்திற்குள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன்’ என்றும், ‘கிளிநொச்சியை பிடிக்கிறது சிறிலங்க இராணுவம்’ என்றும் செய்தி வெளியிடுவதும், சிங்கள அரசு விடும் கதைகளையெல்லாம் அப்படியே வெளியிட்டு பிரசாரம் செய்வதும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக இங்கே குரல் எழுப்பினால் அதனை ‘தமிழின வெறி’ என்று கட்டுரை எழுதுவதும், வாராவாரம் கொழும்புவிற்கு ஓடிச்சென்று அந்நாட்டு அதிபர் ராஜபக்சவிடம் பேட்டி எடுத்துக்கொண்டுவந்து வெளியிடுவதும் கருத்துச் சுதந்திரம், பத்திரிக்கைச் சுதந்திரம் என்றாகும் போது, சிங்கள இராணுவத்தின் தாக்குதலில் தமிழர்கள் படும் இன்னல்களை செய்தியாகவும், படங்களாகவும் வெளியிடுவதும், இராணவத்திற்கு பதிலடி கொடுத்து விடுதலைப் புலிகள் நடத்தும் தாக்குதலை செய்தியாக்குவதும், விடுதலைப் புலிகளை கொச்சைபடுத்தி எழுதி, அதன்மூலம் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தையே களங்கப்படுத்தும் கட்டுரைகளுக்கு பதிலடி கொடுப்பதும் கருத்து, பத்திரிக்கைச் சுதந்திரமே. எனவே இதில் ‘தடை செய்யப்பட்ட’, ‘தடை செய்யப்படாத’ என்று பிரச்சனையே இல்லை. அதில் எந்தச் சட்டச் சிக்கலும் கிடையாது. ஈழ மக்களின் வாழ்வையும், அவர்களின் உரிமைப் போராட்டத்தையும் ராஜீவ் காந்தியில் ஆரம்பித்து, அவருடனேயே முடித்துவிடும் காங்கிரஸ் கட்சியினரின் பார்வையும் போக்கும் தமிழர் எவருக்கும் ஏற்புடையதல்ல.இன்று கூட, விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவோரை கைது செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ள, தமிழக மக்களின் ‘பேராதரவு’ பெற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே உடன்பாட்டின்படி, “இந்தியாவில் இருப்பதுபோல் இலங்கையிலும் தமிழர்களுக்கு தனி மாநிலம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான் 1987ஆம் ஆண்டு எட்டப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் நோக்கமாக இருந்தது” என்று கூறுகிறார். அது தனி மாநிலமல்ல எனும் உண்மையை எடுத்து கூறி விமர்சனம் செய்யும் போது, விடுதலைப் புலிகள் பற்றியும், ராஜீவ் காந்தி பற்றியும் பேசுவது தவிர்க்க இயலாதது. அவ்வாறு பேசும்போது, அதனை இராஜீவிற்கு எதிராகவும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசுகின்றனர் என்று காங்கிரஸார் குற்றம் சாற்றுகின்றனர். எனவே, ஈழத் தமிழர் பிரச்சனை குறித்த கருத்துகள் காங்கிரஸாருக்கு ஏற்பற்றதாக இருக்கலாம். ஆனால், அம்மக்கள் எது தங்களுக்கு சரி என்று நினைக்கின்றார்களோ அதனை ஆதரிக்கவும், அதற்காக போராடும் அந்த இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது என்பதும் எந்த விதத்திலும் இந்திய நாட்டின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று கருதுவதற்கு இடமில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையிலேயே சிந்தனைச் சுதந்திரத்திலிருந்து கருத்துச் சுதந்திரத்திற்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதனை தங்கள் அரசியல் வசதிக்காக காங்கிரஸார் வளைக்க முற்படுவதும், அவர்கள் உருவாக்கும் அரசியல் நெருக்கடியைத் சமாளிக்க தமிழக முதல்வரைப் போன்ற ஒரு அனுபவமிக்க மூத்த அரசியல் தலைவர் வளைந்து கொடுப்பதும் சட்டத்தின் ஆட்சியை சரியாக நிலைப்படுத்துவது ஆகாது.
இந்தியாவின் இரும்பு பெண்மணியாக திகழ்ந்த இந்திரா காந்தி, அலகாபாத் தேர்தல் தீர்ப்பையடுத்து ஏற்பட்ட அரசியல் நெருக்கடியில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள, தனது ஆட்சியைக் காத்துக்கொள்ள இந்திய திருநாட்டின் மீது அவசர நிலையைத் திணித்தார். அது அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்குத்தான் அடிகோலியது. அன்றைக்கு அதனை எதிர்த்து தனது ஆட்சியை இழந்தவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அதற்காக இந்தியத் தலைவர்களிடம் தி.மு.க. தலைவரின் புகழ் உயர்ந்தது.
இன்று காங்கிரஸார் கொடுக்கும் நெருக்கடிக்காக, தமிழ்நாட்டில் கருத்துரிமையை பறிக்க தமிழக அரசு முற்பட்டால் அதன் எதிர்வினை மக்கள் மன்றத்தில் - எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் - கடுமையாக எதிரொலிக்கலாம். அதற்கு கடந்த மக்களவைத் தேர்தலே சாட்சி. தேர்தலில் தி.மு.க.வை காப்பாற்றும் சக்தி காங்கிரஸ் கட்சிக்கு இல்லை.