இலங்கையில் சிறிலங்க இராணுவத்தின் தொடர் தாக்குதலால் பெரும் அவலத்திற்கு உள்ளாகிவரும் ஈழத் தமிழர்களைக் காக்க தமிழ்நாட்டில் இருந்து எழும் ‘போரை நிறுத்து’ என்று ஒலிக்கும் குரல், தனி ஈழ தனி அரசு அமைவதற்கான ஆதரவுக் குரலே என்று மார்க்கசிய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
தமிழரிடையே நீண்ட காலமாக மதித்துப் போற்றப்படும் ஒரு தமிழ் நாளிதழில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரை, ஈழத் தமிழர்களின் தொடர்ந்து அனுபவித்து வரும் இன்னல்களையோ, அதற்குக் காரணமான சிறிலங்க பேரினவாத அரசின் இராணுவ நடவடிக்கையையோ அல்லது சிங்கள அரசு தமிழர்கள் மீது திட்டமிட்டு தொடுத்துவரும் இன ஒடுக்கலையோ பேசவில்லை. மாறாக, தமிழ்நாட்டின் அரசியலையும், ஈழ மக்களின் விடுதலையை முன்னெடுத்துப் போராடிவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சிறுமைபடுத்துவதிலும் தீவிர கவனம் செலுத்தி எழுதப்பட்டுள்ளது.
இப்படி ஒரு கட்டுரை வேறு எந்த ஒரு அரசியல் கட்சியின் தலைமையின் குரலாக இருந்தாலும் அதற்கு எவ்வித மதிப்பும் அளிக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. ஆனால் ஒரு மார்க்சியவாதி, அதுவும் இந்திய அளவில் உள்ள ஒரு கட்சியின் தமிழகக் கிளையின் மூத்த தலைவர்களில் ஒருவர் கூறுகிறார் என்கின்றபோது, அதில் வாசகர்களுக்கு ஒரு அடிப்படை எதிர்பார்ப்பு இருக்கும். ஏனெனில் மார்க்சியவாதிகள் ஒரு பிரச்சனையை அலசும் போது அதில் மனிதாபிமானம் மட்டுமின்றி, யதார்தத்தின் பிரதிபலிப்பும், பிரச்சனையின் மீதான தெளிவான பார்வையும், அதற்கான தீர்வும் இருக்கும்.
ஆனால் இந்தக் கட்டுரையில் அப்படி எதுவும் இடம்பெறாதது மட்டுமின்றி, அதில் யதார்த்தை தங்கள் (அரசியல்) வசதிக்காக மறைக்கும் போக்குதான் துவக்கம் முதல் முடிவு வரை நிறைந்திருந்தது.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்த தமிழக அரசு அக்டோபர் 14ஆம் தேதி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டு, அந்தத் தீர்மானம் நிறைவேற சம்மதம் அளித்தது மார்க்ஸிஸ்ட் கட்சி. ஆனால் அப்படிப்பட்ட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் அது விடுதலைப் புலிகளுக்கே சாதமானதாக இருக்கும் என்ற வாதத்தை முன்வைத்து அதற்கு வலிமை சேர்க்க முற்பட்டு, அதற்காக ஈழத் தமிழர்களின் இரண்டு ‘மாபெரும் தலைவர்கள்’ கூறியதை மேற்கோள் காட்டியுள்ளார்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்வது புலிகளுக்குத்தான் வலிமை சேர்க்கும், ஏனென்றால் அவர்கள் போர் நிறுத்தத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் பலப்படுத்திக் கொள்வார்கள் என்று உணர்ந்துள்ள மார்க்ஸிஸ்ட் கட்சி, அந்தத் தீர்மானத்தை எதிர்த்திருக்கலாமே? எதற்கு மற்ற கட்சிகளோடு இணைந்து ‘ஒருமனதாக’ நிறைவேற ஒத்துழைத்தது? என்ற கேள்வி எழுகிறது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் தங்களை பலப்படுத்திக் கொள்வார்கள் என்பதே உண்மையானால், சிறிலங்க அரசும் அதைச் செய்யாதா? அவ்வாறு செய்வதற்கு அதற்கு ஏதேனும் தடை உள்ளதா? தங்களை நன்கு பலப்படுத்திக் கொண்ட பின்னரல்லவா தமிழர்கள் மீது இத்தனை பெரிய தாக்குதலை தொடர்ந்தார்போல் நடத்தி வருகிறது சிறிலங்க அரசு?என்றும் ஒரு கேள்வி எழுகிறது.
ஈழ மக்கள் விடுதலை போராட்டத்தில் நியாயம் உள்ளதா இல்லையா?
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் எழுந்த இந்த ஆதரவுக் குரலை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எவ்வாறு மதிப்பீடு செய்கிறார் என்று கேள்வி கேட்டு, மாவீரர் தினத்தன்று அவரது உரையில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சுட்டிக்காட்டியுள்ள கட்டுரையாளர், “இதே நேரம் எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் எழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்ற அவருடைய வேண்டுகோளை அடியொற்றி, அவர்களின் மீதான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கு எழும்பும் என்று கூறியுள்ளார்.
தமிழீழ தனியரசிற்கு ஆதரவாக இங்கு குரல் எழுவது, ஆதரவு பெருகுவது எல்லாம் இருக்கட்டும். ஈழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிலையென்ன? அதனை விளக்க வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சனைக்கு பிரிவினையல்ல, அரசியல் தீர்வுதான் சரி என்று அக்கட்சியின் மாநில செயலர் வரதராஜன் கூட சமீபத்தில் அறிக்கை விடுத்திருந்தார். அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சீத்தாராம் யச்சூரியும் அரசியல் தீர்வையே வலியுறுத்தி இருந்தார்.
அப்படியானால், அங்கு நடைபெறும் விடுதலைப் போராட்டம் நியாயமற்றது என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறதா? ஆம் என்றால் எப்படி? தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமைகளுக்காக துவக்கத்தில் சாத்வீக
வழியில் தானே போராடினார்கள், அது எந்தப் பலனும் அளிக்காத நிலையில்தானே ஆயுதப் போராட்டத்திற்கு வந்தார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறதா? அது தவறு என்று கூறட்டும். சிறிலங்க அதிபர் ராஜபக்சே தமிழர் பிரச்சனைக்கு நீடித்த தீர்வு காணும் நியாய உணர்வு படைத்தவர் என்று சொல்லட்டும். அவர் மேற்கொள்வது ஒரு இனவாத நடவடிக்கை இல்லை என்று கூறட்டுமே.
எல்லா அடிப்படை உரிமையும் பறிக்கப்பட்ட ஒரு இனம் தனது விடுதலையை நாடுவதில் என்ன தவறு உள்ளது. அவர்களை அரசியல் தீர்விற்கு கட்டுப்படு என்று சொல்வதற்கு நாம் யார்?
உண்மையை மறைப்பது ஏன்?
“ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் ஏற்பட்டதற்குப் பின்னர் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்த பிரபாகரன் அடுத்த மாதமே தனது நிலையை மாற்றிக்கொண்டு, இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக ஆயுத மோதலை தொடங்கினார்” என்று குறிப்பிடுகிறார். இடையில் நடந்த உறுதி மீறல்களை இந்திய இராணுவத்தின் தளபதியாக அப்பொழுது செயல்பட்ட மேஜர் ஜெனரல் ஹர்கிராத் சிங் ஒரு புத்தகமாகவே வெளியிட்டுள்ளாரே. யார் செய்தது தவறு? என்று அலசியிருக்க வேண்டாமா? ஒரு பிரச்சனையை பொதுவில் அலசும் போது உண்மையை வசதியாக மறைத்துவிட்டு வசைபாடுவது நேர்மையாகுமா?
தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க இலங்கைத் தமிழர்களைக் காக்க சென்ற இந்திய அமைதிப் படை, நமது தளபதிகளின் கட்டுப்பாட்டிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலோ செயல்படாமல், தமிழர்களை இனப் படுகொலை செய்வதில் முழுமூச்சாய் நின்ற சிறிலங்க அதிபர் ஜெயவர்த்தனேயின் அதிகாரத்திற்கு உட்பட்டு அல்லவா செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்த உண்மையை மறைப்பது ஏன்? அதன் காரணமாகத்தானே, புலிகளின் தளபதிகளை சிறிலங்க இராணுவத்திடம் ஒப்படைக்கும் பிரச்சனை ஏற்பட்டு, அதன் காரணமாக அவர்கள் சயனைட் விழுங்கி தற்கொலை செய்துகொள்ள, அதுவே இந்திய அமைதிப் படையுடன் விடுதலைப் புலிகள் மோதுவதற்கு வித்திட்டது? விவரமறிந்த ஒரு மார்க்சியவாதி ஊரறிந்த இந்த உண்மையை மறைக்கலாமா?
ஈழ விடுதலைப் போராட்டத்தை சிறுமைபடுத்த சிங்கள இனவாத அரசு தனது பிரச்சார பீரங்கிகளை முடுக்கிவிட்டு என்னென்ன சொன்னதோ, சொல்லி வருகிறதோ அதையெல்லாம் கட்டுரையில் வழங்கி சிறப்பித்திருக்கும் அந்த மார்க்சியவாதி, ராஜபக்ச அரசும் அதன் இராணுவமும், விமானப்படையும் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்களைப் பற்றி ஒன்றும் கூறவில்லை. சுத்தமான பெளத்த அரசு அங்கு நடைபெறுகிறது என்று நம்பவைக்க சொல்லாமல் விட்டுவிட்டார் போலும்.
தேசிய இனங்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டங்களை ஆதரித்து, உலகளாவிய மக்கள் சமூகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தும் மார்க்சிஸ்ட்டுகள், ஒரு பேரினவாத அரசின் 30 ஆண்டுக் காலத்திற்கும் மேற்பட்ட இன ஒழிப்பை, அடக்குமுறையை உறுதியாக கண்டிக்காமல், அந்த அரசின் அடியொற்றி அச்சு பிசகாமல் கட்டுரைகளைத் தீட்டிக்கொண்டிருப்பது மார்க்சியத்திற்கு ஏற்பட்ட சோதனையோ.
“தமிழ்நாட்டில் ஈழ மக்களுக்கு ஆதரவாக இன்று எழுப்பியுள்ள குரல், தனித்தமிழ் ஈழ ஆதரவுக் குரல், தமிழக மக்களின் மனித நேய உணர்வுகளை மடைதிருப்ப முயல்வதை அனுமதிக்க முடியாது” என்று கூறி முடித்துள்ளார்.
எதிர்ப்புக் குரலின் ஒரே ஒற்றுமை!
சொந்த மண்ணிலேயே வேட்டையாடப்பட்டு, வீடு, வாசலை இழந்து, குண்டு வீச்சில் சொந்த பந்தங்களைப் பறிகொடுத்துவிட்டு, கொட்டும் மழையில் காடுகளில் உறைவிடமின்றி, போதுமான உணவின்றி வாடிவரும் ஈழ மக்களுக்காக தமிழ்நாட்டு மக்கள் ஒன்றிணைந்து குரல் எழுப்புகிறார்கள். அவர்களின் துயரம் தீர போர் நிறுத்தம் மட்டுமே வழி என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதன் பிறகு இறுதித் தீர்வு என்பது அம்மக்களின் சுதந்திர முடிவிற்கு விடப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள். அந்தக் குரல் நாளையும் ஒலிக்கும். அது எப்படி ஒலிக்க வேண்டும் என்று அவர்களின் சிந்தனை நிர்ணயிக்கும், அதனை இட்டுக்கட்டிச் செய்யப்படும் பிரச்சாரத்தால் திசை மாற்றிவிட முடியாது.
தமிழக மக்களின் ஆதரவினால் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடியைக் குறைக்க, இது புலிகளின் ஆதரவு குரல் என்றும், பிரபாகரனை காப்பாற்றுவதற்கான குரல் என்றும், தமிழர் பயங்கரவாதம் என்றும், இன வெறி என்றும் பல்வேறு குரல்கள் ஊடகங்களிலும், அரசியலிலும் ஒலிக்கின்றன. அரசியலில் எதிரும் புதிருமாக இருக்கும் காங்கிரஸ், மார்க்சிஸ்ட்டுகள் உட்பட இவர்கள் அனைவரும் ஈழப் பிரச்சனையில் மட்டும் ஒரே குரலாய் ஒலிக்கின்றனர். இதனை தமிழகம் விழிப்புடன் பார்த்துக் கொண்டுதானிருக்கிறது. அந்தக் குரல்களின் சொந்தக்காரர்கள் அனைவருக்கும் இடையில் ஒரே ஒரு ஒற்றுமை நன்கு இழையோடுவதையும் அது கவனிக்கத்தவறவில்லை.