தமிழர் பிரச்சனையும் மிரட்டல் அரசியலும்!
, வெள்ளி, 19 டிசம்பர் 2008 (18:11 IST)
“எப்போதெல்லாம் நாங்கள் அரசியலில் இறங்கும் நோக்குடன் வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு அடி வைக்கிறோமோ, அப்போதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் பீரங்கி பேர வழக்கைப் பற்றிப் பேசுவது வாடிக்கையாகிவிட்டது” என்று ராகுல் காந்தி ஒருமுறையல்ல பலமுறை கூறியுள்ளார்.அப்படி பாரதிய ஜனதா கட்சி போபர்ஸ் ஆயதத்தை எடுத்தபோதெல்லாம் அவர்களும் பின்வாங்கிக் கொண்டு, தீவிர அரசியலில் ஈடுபடும் திட்டத்தை பலமுறை தள்ளிப்போட்டார்கள் என்பதும், ஒரு வழியாக போபர்ஸ் ஒழிந்த பின்னரே அவர்கள் தீவிர அரசியலில் இறங்கினார்கள் என்பதும் இந்திய அரசியலை கூர்ந்து கவனித்து வரும் அனைவருக்கும் தெரியும். இதேபோன்று, எப்போதெல்லாம் ஈழத் தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டில் ஆதரவுக் குரல் எழுகிறதோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தலைவர்களுக்கு ராஜீவ் காந்தி படுகொலை நினைவிற்கு வந்துவிடும். ஈழத் தமிழரின் இன்னல் பற்றிப் பேசினால் இவர்கள் விடுதலைப் புலிகளைப் பற்றிப் பேசுவார்கள். தற்போது, இலங்கையில் தமிழர்கள் மீது ஒரு பெரும் போரைத் துவக்கி வேகமான இன ஒழிப்பில் சிறிலங்க அரசும், இராணுவமும் ஈடுபட்டுவரும் நிலையில், பாதிக்கப்பட்டத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைவரும் குரல் கொடுத்துவரும் நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மட்டும், ராஜீவ் காந்தி படுகொலையை மறக்காமல் பேசி வருகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஈழத் தமிழர்கள் பிரச்சனை என்றாலே விடுதலைப் புலிகள் பிரச்சனைதான். அதனால்தான் சிறிலங்க இராணுவம் சகட்டுமேனிக்கு குண்டு வீசி சொந்த நாட்டு மக்களையே கொன்று குவித்துவரும் போதும், அதனை கட்சிரீதியாக கண்டித்து ஒரு அறிக்கை கூட விடுக்காத காங்கிரஸ் கட்சி, அவர்களுக்காக குரல் எழுப்புபவர்கள் ஈழ விடுதலை பற்றியோ அல்லது அதற்காக போராடும் விடுதலைப் புலிகள் பற்றியோ பேசினால், உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டு, “எங்கள் தலைவரைக் கொன்ற விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் அந்த தேச விரோதிகளை கைது செய்” என்று குரல் எழுப்புகிறார்கள்.
இப்படி இலங்கைத் தமிழர்களுக்காக இராமேஸ்வரத்தில் குரல் கொடுத்த இயக்குனர்கள் சீமானும், அமீரும் கைது செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் சொல்ல அதனை சிரமேற்கொண்டு தமிழக முதலமைச்சரும் நிறைவேற்றி வைத்தார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், அக்கட்சியி்ன் அவைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு. கண்ணப்பனும் கூட கைது செய்யப்பட்டார்கள்.இன்றும் அதுதான் நடந்துள்ளது. “சீமானை கைது செய்” என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உத்தரவிட, திண்டுக்கல்லில் படப்பிடிப்பில் இருந்த சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.சீமானை கைது செய்வதற்கு காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் தங்கபாலு கூறியுள்ள காரணங்கள் விநோதமானவை. ”தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதும், ராஜீவ் காந்திப் படுகொலையில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பிரபாகரனை தமிழர் தலைவர் என்று புகழ் பாடுவதும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது” என்று கூறியுள்ளார். என்னே சட்ட ஞானம்!விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானதா? ஒரு கட்சியின் தலைவராக உள்ளவர் சட்ட மேதையாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், இவ்வளவு பாமரத்தனமாகவா இருப்பது? இதில் இந்திய அரசியல் சட்டப் பிரச்சனை எங்கே வருகிறது. ஜெயலலிதாவே தேவலாம் என்றெல்லவா காட்டியுள்ளார்.
அவர் வைகோவை கைது செய்து சிறையில் தள்ளியபோது கூட பொடா சட்டத்தின் கீழ்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறினார். தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படி குற்றமே என்று கூறி, அந்தச் சட்டமளிக்கும் அதிகாரத்தின்படி, ஒன்றரை ஆண்டுகளுக்கு வைகோ உள்ளிட்ட பலரை சிறையில் வைத்தார்.
தனது கைதை எதிர்த்து வைகோ உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை விசாரித்த நீதிபதிகள், தடை செய்யபட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது அதற்கு உதவுவதாக ஆகாது என்று கூறினர். பிறகு அச்சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழுவும் வைகோ ஆதரித்துப் பேசியதில் தவறில்லை என்றே கூறியது. இப்போது பொடா சட்டமும் இல்லை.
இந்த நிலையில், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவதும், அந்த இயக்கத்தின் தலைவர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்பதற்காக அவரைப் பற்றி புகழ்ந்து பேசக்கூடாது என்பதற்கும் எந்தச் சட்டத் தடை இருக்கிறது? தற்பொழுது பல திருத்தங்களுடன் பலப்படுத்தப்பட்டுள்ள சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் கூட, ஆதரித்துப் பேசுவதைப் பற்றி ஏதும் சொல்லவில்லையே. “இலங்கைத் தமிழர்களை அழிக்க அமைதிப் படையை ராஜீவ் காந்தி அனுப்பினார் என்று கூறி இந்திய நாட்டை கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது” என்று கூறி, தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமானை கைது செய்ய வேண்டும் என்றும் தனது அறிக்கையில் தங்கபாலு கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களைக் காக்க அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படை, தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டது என்ற குற்றச்சாற்று அப்போதே இருந்ததே. தமிழ்நாட்டுத் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க ஈழத் தமிழர்களை காப்பாற்ற இலங்கைச் சென்ற அமைதிப் படை, சிறிலங்க அதிபர் கட்டளைக்கு உட்பட்டுச் செயல்பட்டு தமிழர்களுக்கு எதிராகத் திரும்பித் தாக்கியதே. அதன் காரணமாக அப்போதே அது கடும் விமர்சனத்திற்கு உள்ளானதே.
தமிழர்களைக் கொன்று குவித்துவிட்டு, இரத்தக்கரையுடன் நாடு திரும்பும் அமைதிப் படையை வரவேற்கச் செல்ல மாட்டேன் என்று சட்டப்பேரவையிலேயே அன்றும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறினாரே. அது சட்டப்படித் தவறா என்ன? அது இந்தியாவை கொச்சைப்படுத்தும் அல்லது அவமதிக்கும் வார்த்தைகளோ அல்லது நடவடிக்கையோ அல்ல, மத்திய அரசின், அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் நடவடிக்கை மீதான விமர்சனம் அல்லது எதிர்ப்பு அவ்வளவே. இதையெல்லாம் காலம் கடந்து உணர்ந்த பின்னர்தானே அக்கட்சியுடன் தேர்தல் உறவு வைத்து மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ், மாநிலத்திலும் ஆட்சியில் பங்கு கேட்டும் வருகிறது.இன்று கூட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசின் நடவடிக்கைகள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகின்றதே. இலங்கை இனப் பிரச்சனையில் மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிப்பது, இந்திய நாட்டை விமர்சிப்பதாகவோ அல்லது அவமதிப்பதாகவோ ஆகாது. அப்படி எந்தச் சட்டமும் கூறவில்லை.அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையில் கூட மத்திய அரசின் நடவடிக்கைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது நாட்டை அவமதிக்கும் செயலா? இல்லை. அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அல்லது முறைபடுத்தக்கோரும் செயல்களே.இப்படித்தான், இலங்கைத் தமிழர் பிரச்சனையிலும் தமிழ் உணர்வாளர்கள் மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துப் பேசி வருகிறார்கள். அது ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாயினும், இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகளாயினும் அதன் மீது தங்களுடைய கருத்துக்களை எடுத்துக் கூறுகிறார்கள். இதற்கு பதிலளித்து தங்கள் தரப்பு கருத்துக்களை எடுத்துக் கூறுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு உரிமையும் உள்ளது. ஆனால், தங்கள் தலைவர்களைப் பற்றியும், அரசைப் பற்றியும் எதிர்த்து கருத்துக் கூறுபவர்களை தேச விரோதிகள் என்பதும், அவர்களை உடனே கைது செய்து உள்ளே வைக்க வேண்டும் என்று கூறுவதும் அரசியல் ரீதியான சரியான பார்வையல்ல.
இன்றைக்கு தி.மு.க. அரசு, அருதிப் பெரும்பான்மை இல்லாத அரசாக உள்ளதால், கூட்டணிக் கட்சியான காங்கிரஸை நம்பி காலம் தள்ளும் நிலை உள்ளது. எனவே காங்கிரஸ் கேட்கிறது, தி.மு.க. (கைது) செய்கிறது. தமிழர்களின் நிலையை விட பரிதாபகரமானதாக இருக்கிறது தி.மு.க. அரசின் நிலை!ஆனால் தமிழக மக்கள் இந்த அகில இந்தியக் கட்சியை கூர்ந்து கவனித்து வருகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மீது ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுள்ள சிறிலங்க அரசைக் கண்டித்து தமிழக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடவில்லை. சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டு ‘நிபந்தனையுடன் கூடிய ஆதரவு’ தெரிவிப்பதோடு நின்றுவிடுகிறது. மத்திய அரசோ ஆழ்ந்த நிதானம் காட்டி வருகிறது. அங்கு இனப் படுகொலை தடையற்றுத் தொடர்கிறது. நேற்றுக் கூட அங்கு சிறிலங்க விமானம் நடத்திய குண்டு வீச்சில் 6 மாதக் குழந்தை கொல்லப்பட்டுள்ளது. இப்படிபட்ட அத்துமீறல்களையெல்லாம் கண்டு கொள்ளாத ஒரே தமிழ்நாட்டுக் கட்சி காங்கிரஸ்தான்.இப்படிபட்ட போக்கு அக்கட்சியை மக்களிடமிருந்து மேலும் தனிமைப்படுத்திவிடும். அப்படி தனிமைபட்டதால்தான் காங்கிரஸ் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தனது வேர்களை இழந்துவிட்டது. மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க இனிமேலும் தவறினால், இந்திய அரசியலில் பல வரலாறுளைப் படைத்த காங்கிரஸ் கட்சி, வரலாற்றில் மட்டுமே காணப்படும் கட்சியாகிவிடும்.