பயங்கரவாதம்: தனித்து சமாளிப்பது சாத்தியமா?
Publish Date: Mon, 15 Dec 2008 (17:55 IST)
Updated Date: Mon, 15 Dec 2008 (17:40 IST)
மும்பைத் தாக்குதல் மீது நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, பயங்கரவாத பிரச்சனையை ஐ.நா. அவைக்கு கொண்டு சென்றது உரிய பயனளிக்குமா என்பது சந்தேகத்திற்குரியது என்று கூறியுள்ளார்.அதுமட்டுமின்றி, பயங்கரவாதம் நமது தனித்த பிரச்சனையே என்றும், அதனை நமது பலத்தைக் கொண்டே சமாளிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.அத்வானி கூறியுள்ள இந்த இரண்டு கருத்துகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதிலும், அவைகள் ஆழமான விவாதத்திற்குரியது என்பதிலும் சந்தேமில்லை. பயங்கரவாதப் பிரச்சனையை ஏன் ஐ.நா.விற்கு கொண்டு செல்லக் கூடாது என்பதற்கு ஒரு ஒப்புமையையும் அத்வானி அளித்துள்ளார். காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.விற்கு கொண்டு சென்றதன் மூலம் அது சர்வதேச பிரச்சனை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் மூன்றாவது நாட்டின் அல்லது நாடுகளின் தலையீட்டிற்கு அது வழிகோலிவிட்டது என்றும், அதன் காரணமாகவே இன்று வரை அப்பிரச்சனைக்கு நம்மால் தீர்வு காண முடியவில்லை என்றும் பாரதிய ஜனதா கட்சி பலமுறை கூறிவந்துள்ளது. அதனால்தான் ஐ.நா.விற்கு பயங்கரவாதத்தைக் கொண்டு சென்று மீண்டும் ஒரு தவறைச் செய்யக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் பிரிவினையை அடுத்து இந்தியா, பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக பிரிக்கப்பட்ட நிலையில், ஜம்மு- காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கமாக பிரித்துவிடப்பட்டாலும், அதனை பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளாத ஒரு அரசியல் சூழலிலேயே 1948ஆம் ஆண்டு பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில் காஷ்மீருக்குள் புகுந்த பத்தானியர்களுடன் மறைமுகமாகப் புகுந்த பாகிஸ்தான் இராணுவம், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. பிரிவினையின்படி, இந்தியாவிற்குச் சொந்தமாகிவிட்ட அப்பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததால் அப்பிரச்சனையை (வெள்ளையரின் ‘ஆலோசனையின்படி’) ஐ.நா.விற்கு கொண்டு சென்று இந்தியா. காஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லா!அதாவது போர் தொடுப்பதன் மூலம் அன்னிய நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை மீட்காமல், ஐ.நா. எனும் உலக நாடுகளின் அவையை நியாயத்தின் பாற்பட்டு நாடியது இந்தியா. அது இன்றுவரை ஒரு பலவீனமான முடிவாக கருதப்பாட்டாலும், அப்படிப்பட்ட முடிவிற்கு ஒரு பலமான அடிப்படை இந்தியாவிற்குச் சாதமாக இருந்தது.
ஜம்மு-காஷ்மீர் பகுதி நம்மோடு இணைவதற்கு அப்பகுதியின் அரசராக இருந்த ஹரி சிங் கையெழுத்திட்டு சம்மதித்ததைவிட, காஷ்மீர் மக்களின் ஏகோபித்த தலைவராக இருந்த ஷேக் அப்துல்லா, இந்தியாவோடு இணைவதை ஆதரித்தது மட்டுமின்றி, அதற்கு அம்மக்களின் ஒருமித்த ஆதரவை உறுதி செய்தது இந்தியாவிற்கு ஒரு பலமான அடிப்படையானது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீ நகரை பாகிஸ்தானியப் படைகள் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் மாபெரும் மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஷேக் அப்துல்லா, ஏன் இந்தியாவுடன் நாம் இணைய வேண்டும் என்று பேசியது வரலாற்றுச் சிறப்புமிக்கப் பேருரையாகும். (
ஷேக் அப்துல்லாவின் உரை)
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மீது அதீத பற்றுக்கொண்ட, காஷ்மீர் சிங்கம் என்று பெருமையுடன் அழைக்கபட்ட, ஷேக் அப்துல்லாவின் முடிவே ஜம்மு-காஷ்மீர் இன்றுவரை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று நாம் மிகுந்த உரிமையுடன் கூறிக்கொள்வதற்கு அடிப்படையாகும்.
எனவே, போர் தொடுத்து மீட்பதைவிட (அப்பொழுது இந்திய இராணுவம் காஷ்மீருக்கு சென்று விட்டது), ஐ.நா.வை நாடுவது என்று முடிவெடுத்து, போர் நிறுத்தம் செய்து கொண்டதால், இன்றுவரை காஷ்மீரின் ஒரு பகுதி ‘ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீராக’ (Pakistan Occupied Kashmir - PoK) இருந்து வருகிறது. அதுவே இன்று இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதக் களமாகவும் இருந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, அமைதி வழியில் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண பிரதமர் நேரு எடுத்த முடிவு அது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அதற்கு தீர்வு காணத் தவறியதற்கு நேருவின் முடிவை தவறாக கூறுவதை விட, ஐ.நா. அவையின் பலவீனமே அதற்குக் காரணமாகத் தெரிகிறது... இன்றுவரை. காஷ்மீர் பிரச்சனை மட்டுமல்ல, இன்னும் உலக பிரச்சனைகள் பலவற்றில் அது ஒரு பலமிருந்தும், செயல் அதிகாரமற்ற அமைப்பாகவே திகழ்கிறது. ஆனாலும், காஷ்மீர் பிரச்சனை என்பது, நமது நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனை என்பதே சரி. காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானில் உள்ளதால் அது இரு தரப்புப் பிரச்சனையாக (டெல்லியால் கூட) பார்க்கப்படுகிறது. உண்மையில் காஷ்மீர் மக்களுடன்தான் நாம் அப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டும், அதுவே சரியானதும், நிலைத்த, நீடித்த அரசியல் தீர்வையும் தரும். இந்த அடிப்படையிலேயே காஷ்மீரின் அனைத்து அமைப்புகளும், கட்சிகளும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம் என்று அறிவித்து அதற்கான வட்ட மேசை சந்திப்புக்களை மன்மோகன் சிங் அரசு மேற்கொண்டு வருகிறது.உலக நாடுகளின் ஒத்துழைப்பு ஏன் தேவை?
ஆனால், பயங்கரவாதம் உள்நாட்டு அல்லது இருநாட்டு பிரச்சனை அல்ல. பாகிஸ்தானிலும், அதன் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியிலும் தளம் கொண்டு பயங்கரவாதம் இந்தியாவைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வந்தாலும், அதன் தொடர்புகளும், ஆதாரங்களும் பாகிஸ்தானையும் கடந்தவை. அல் கய்டாவில் இருந்து, ஜெய்ஷ் ஈ மொஹம்மது, லஸ்கர் ஈ தயீபா வரை, இந்த பயங்கரவாத இயக்கங்களின் கொள்கை அடித்தளம் ஒன்றே: அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, நெதர்லாந்து, ரஷ்யா, இந்தியா ஆகியன முஸ்லீம்களை வதைக்கின்றன, அவைகளை பழிவாங்க வேண்டும், இஸ்லாத்தை உலகளாவிய மதமாக்க வேண்டும் என்பதே. தற்கொலைத் தாக்குதல்களுக்கு தயாராக்கப்படும் நபர்களை, இதனைக் கூறித்தான் மூளை சலவை செய்கின்றன. அதுமட்டுமல்ல, மும்பை உள்ளிட்ட நமது நாட்டின் நகரங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் போல மற்ற பல நாடுகளிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களிலும் அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, மற்ற நாட்டவர்களையும் இந்த பயங்கரவாத இயக்கங்கள் ஈடுபடுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. காஷ்மீரில் முன்பு நடந்த பல தாக்குதல்களில் ஈடுபட்ட அல் பாதர் என்ற இயக்கம், ஆஃப்கானியர்களை அதிகம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி கூறியது போல, ‘பயங்கரவாதிகள் நாடற்றவர்கள்’ என்பதும் ஒரு விதத்தில் சரியே. மற்றொன்று, இப்படிப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஈடுபடுத்தப்படும் பயங்கரவாதிகளின் வாழ்க்கைப் பின்னனி வறுமையைத் தழுவியுள்ளதும் பல விசாரணைகளில் தெரியவந்துள்ளது கருத்தில் கொள்ளத்தக்கது. ஆகவே, எல்லைத் தாண்டியது என்பது மட்டுமின்றி, உலகம் தழுவிய ஒரு பதிலற்ற அச்சுறுத்தலே பயங்கரவாதம் என்பது. இதனை எவ்வாறு இந்தியா தனித்து நின்று தடுக்கவோ, ஒடுக்கவோ முடியும்?படையெடுத்தும் முடியவில்லையே!
2001
ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலிற்கு நம்மால் தனித்து பதிலடி கொடுக்க முடிந்ததா? படைகளைத் திரட்டி போர் முனைக்குச் சென்றும், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்தான் ஏற்பட்டதே தவிர, அத்தாக்குதலிற்குக் காரணமான - சதித் திட்டம் தீட்டிய -பயங்கரவாதிகளோ அல்லது இயக்கங்களோ தற்காலிக நடவடிக்கைகளுக்குத்தான் ஆட்படுத்தப்பட்டனரே தவிர, நிரந்தரமாக முடக்கப்படவில்லையே?
அதனால்தானே 5 ஆண்டுகளுக்குப் பிறகு அதே லஸ்கர் இயக்கம் மும்பை புறநகர் இரயில்களில் குண்டுகளை வைத்து 183 பேரைக் கொன்றது. இப்போது மும்பையின் மீது மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது. 2001ஆம் ஆண்டுத் தாக்குதலை அடுத்து தடை செய்யப்பட்டது லஸ்கர் இயக்கம், ஆனால் வேறு ஒரு பெயரில் - ஜமாத் உத் தாவா - அதே முகங்களுடன் தொடர்ந்து இயங்கி வந்திருக்கிறதே? இதைத்தானே அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஒரு பேட்டியிலும் சுட்டிக் காட்டியுள்ளார்.இப்போது மும்பைத் தாக்குதலிற்கு ஜமாத் உத் தாவா தான் காரணம் என்று இந்தியா மட்டுமல்ல, அமெரிக்கா உள்ளிட்ட மற்ற நாடுகளும் உறுதி செய்த காரணத்தினால்தானே ஐ.நா. பாதுகாப்புப் பேரவை அதனை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து தடை செய்தது? அதனால்தானே அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது? (ஐ.நா. தடை செய்திருக்காவிட்டால், ஆதாரம் கொடு கைது செய்கிறோம் என்றுதானே பாகிஸ்தான் கூறியிருக்கும்). இப்போது ஆதாரங்களை இந்தியா அளித்தால் மட்டுமே மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்ட ரீதியான நடவடிக்கை இல்லாமல் நீண்ட நாட்கள் அவர்களை சிறையில் வைத்திருக்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
இதற்கு மேல் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆதாரம் அளித்து, அதன் அடிப்படையில் அவர்கள் மீதான குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படுவதை உறுதி செய்யக்கூட சர்வதேச நெருக்குதல் அவசியமாகிறது. அதுவரை மட்டுமல்ல, அதற்குப் பிறகும் கூட பயங்கரவாதத்திற்கு எதிரான ஒன்றிணைந்த, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை. ஏனெனில், மும்பைத் தாக்குதல் முடிவல்ல... அவர்களின் தாக்குதல் திட்டத்தில் ஒன்று, அவ்வளவே. மும்பைத் தாக்குதலிற்கு வந்த பயங்கரவாதிகள் சிலர் தப்பிவிட்டதாகவும் செய்திகள் வருகின்றன. எனவே, இப்படிப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த இந்தியாவால் (அதுவும் நமது உளவுத் துறையால்) நிச்சயம் முடியாது. உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. அதே நேரத்தில் அப்படிப்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டில் பாகிஸ்தான் அரசும், அதன் உள்நாட்டுப் புலனாய்வு (ஐ.எஸ்.ஐ. அல்ல) மற்றும் காவல்துறையின் பங்கேற்பிற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். உலக நாடுகளின் நெருக்குதல் மட்டுமே போதாது, பாகிஸ்தானின் பங்கேற்பு மிக மிக அவசியம். அப்படிப்பட்ட நடவடிக்கையின் மூலம் மட்டுமே பயங்கரவாதத்தின் உண்மையான முகத்தை அந்நாட்டு மக்களுக்கும் வெளிப்படுத்த முடியும். எனவே, தனித்தல்ல...உலக நாடுகளின் முழு ஒத்துழைப்புடன்தான் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டும். அதுவும் உண்மையான நேர்மையுடன் செய்ய வேண்டும். ஈராக்கில் நுழைவதற்காக பேரழிவு ஆயுதங்கள் உள்ளன என்று பொய்யுரைத்து போர் தொடுத்தது போலெல்லாம், சுய நலனிற்காக, அரசியல்-பொருளாதார இலாபத்திற்காக போலி நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது.
அதே போல, நமது நாட்டில் மதவாத அரசியலிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பாபர் மசூதி இடிப்பிலிருந்து, குஜராத் கலவரம் வரை சிறிது பெரிதாக சங் பரிவாரங்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரங்கள் இதற்கு மேலும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கலவரங்களே பயங்கரவாத தாக்குதல்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கின்றன என்பதையும் மறந்துவிடக்கூடாது. அதற்கு எதிர்கட்சித் தலைவராகவும், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள லால் கிஷன் அத்வானி பெரிய அளவிற்கு உதவிட முடியும்.