மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகள், அவர்களின் பின்னணி தொடர்பான புலனாய்வு சரியான திசையில் செல்லுமா என்ற கவலை எழுந்துள்ளது.
நமது நாட்டின் நாளிதழ்களிலும், (தனியார்) தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்களிலும் ஒவ்வொரு கணமும் வெளியாகி வரும் செய்திகளில் பல பிரச்சனையை திசை திருப்பும் நோக்கம் கொண்டவையாகவே தெரிகிறது. பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகளிலும் இதே நிலைதான் உள்ளது.
மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து கடல் வழியாக வந்து மும்பைக்குள் ஊடுறுவி தாக்குதல் நடத்திய ஒரே காரணத்திற்காக, அவர்களுக்கு பாகிஸ்தான் அரசு உதவியது போலவும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா அந்நாட்டின் மீது போர் தொடுக்கும் என்பது போலவும் இரு நாடுகளிலுமே செய்திகள் வருகின்றன.
இந்தியாவி்ற்கு எதிராக நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் பலவற்றின் பின்னணியில் பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இருந்துள்ளதையும், காஷ்மீரில் இருந்து மும்பை வரை நடைபெற்ற தாக்குதல்கள் பலவற்றில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் (அதுவும் அந்நாட்டின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில்) தான் பயிற்சியளிக்கப்பட்டது என்பதையும், அதற்கான ஏற்பாடுகளை முகாம் அமைத்து செயல்படுத்தி வருவதும், வந்ததும் ஐ.எஸ்.ஐ. தான் என்பதையும் மறுக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, இன்றைக்கு பாகிஸ்தான் மீது அழுத்தம் தரும் வகையில் பேசிவரும் அமெரிக்காவிற்கும், அதன் நேச நாட்டு கூட்டாளிக்கும் தெரியாததும் அல்ல.
ஆனால் பாகிஸ்தானின் அதிபராக ஜென்ரல் பர்வேஷ் முஷாரஃப் இருந்த வரையில், இந்தியா எடுத்து வைத்த ஆதாரங்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அந்நாட்டு அரசை அமெரிக்கா வலியுறுத்தவில்லை.
2001ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில், பாகிஸ்தானில் ஐ.எஸ்.ஐ.யின் ‘அன்புக் கர’த்திற்குள் பாதுகாப்பாக இருந்த லஸ்கர் ஈ தயீபா, ஜெய்ஸ் ஈ மொஹம்மது ஆகிய இரண்டு பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்களை கைது செய்து ஒப்படைக்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்தது. அதற்கு உடன்படாத முஷாரஃப், ஆதாரத்தை தாருங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது இந்தியாவில், அதுவும் நாடாளுமன்றத்தின் மீது, ஆனால் பாகிஸ்தானில் விசாரிக்கிறேன் என்று முஷாரஃப் முறையற்றுப் பேசினார். அமெரிக்க அதிபர் புஷ் நமது பிரதமர் வாஜ்பாயை அழைத்து துக்கம் விசாரித்ததுடன் முடித்துக் கொண்டார்.
நாடாளுமன்ற பயங்கரவாத தாக்குதலிற்குக் காரணமான பயங்கரவாதிகளை கையளிக்க பாகிஸ்தான் மறுத்ததையடுத்து, போர் தொடுக்கத் தயாரானது இந்தியா. படைகள் எல்லைகளுக்கு நகர்த்தப்பட்டன. பாகிஸ்தானும் தனது படைகளை எல்லைகளுக்கு நகர்த்தியது. போர் நிச்சயம் என்றான சூழ்நிலையில்
அமெரிக்க அயலுறவு அமைச்சர் காலின் பாவல் இந்தியா வந்தார், பிரதமரைச் சந்தித்தார், பிறகு பாகிஸ்தான் சென்றார், பர்வேஷ் முஷாரஃபைச் சந்தித்தார். போர் தவிர்க்கப்பட்டது. இந்தியாவிற்கு படைகளை எல்லைகளுக்கு நகர்த்தியதற்கு மட்டும் ரூ.2,000 கோடி செலவானது.
ஆனால், நாடாளுமன்றத் தாக்குதலை சதித் திட்டம் தீட்டி நிறைவேற்றிய மொஹம்மது அசார் உள்ளிட்ட பயங்கரவாதிகள் சில நாட்களுக்கு சிறையில் வைக்கப்பட்டதோடு சரி, பிறகு விடுதலையானார்கள். நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு சாதாரண வழக்காகி, அதில் பயங்கரவாதிகளுக்கு உதவியதாக குற்றம்சாற்றப்பட்ட ஒருவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதுடன் முடிவடைந்துவிட்டது.
நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது நமது நாட்டின் ஜனநாயகத்தின் மீதும், இறையாண்மையின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் இது என்று முழங்கிய ஆளும் பா.ஜ.க.வும், எதிர்க் கட்சியான காங்கிரஸூம் அதன் பிறகு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவரை ஏன் தூக்கில் போடவில்லை என்று வாதிட்டு அரசியல் செய்தன. இதுதான் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலிற்கு நாம் மேற்கொண்ட மாபெரும் நடவடிக்கை!
இன்றைக்கு வரக்கூடிய செய்திகளும் இப்படித்தான் ஏதோ இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளப்போகிறது என்பதைப் போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.
பாகிஸ்தானுடன் நடத்திவரும் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகள் நிறுத்தி வைக்கப்படும் என்றும்; இப்பிரச்சனையை இந்தியா கடுமையாக கையாளப் போகிறது என்றும்; பாகிஸ்தான் அதன் படைகளை எல்லைக்கு கொண்டு வந்துவிட்டது என்றும்; இந்தியாவும் நகர்த்தத் தொடங்கி விட்டது என்றும் மிரட்டலான செய்திகள் வருகின்றன. இப்படி வரக்கூடிய செய்திகள் ஒன்று கூட அதிகாரப் பூர்வமானதல்ல என்றாலும், பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன என்று இங்கேயும், பாகிஸ்தான் தளபதி கூறினார் என்று அங்கிருந்தும் வரக்கூடிய செய்திகள் ஒரு பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன.
2003ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இரு நாடுகளும் மேற்கொண்ட அமைதி முயற்சிகளின் பலனாக இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகமும், மக்களுக்கிடையிலான மற்ற பரிவர்த்தனைகளும் பெரும் அளவிற்கு மேம்பட்டுள்ளது. இதனை பயங்கரவாதம் சிதைத்துவிட அனுமதிக்கக் கூடாது.
இந்த நிலையில், லண்டனில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அயலுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான புலனாய்வில் இந்தியாவி்ற்கு பாகிஸ்தான் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியுள்ளதைக் கூட, “பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கெடு” (US ultimatum to Pakistan) என்றே தொலைக்காட்சிகள் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தன!
பாகிஸ்தானில் ஜெனரல் பர்வேஷ் முஷாரஃப் தலைமையிலான இராணுவ - சர்வாதிகார அரசு தூக்கியெறிப்பட்டு, அங்கு தற்பொழுது மக்களால் (பெருமளவிற்கு வாக்காளர் பங்கேற்புடன் நடந்த தேர்தலில்) தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு பதவியேற்று ஜனநாயகம் மீண்டும் காலூன்றியுள்ளது. இந்த அரசிற்கும், அதன்
அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிஃப் அலி சர்தாரிக்கும் அந்நாட்டு இராணுவமும், அதனோடு பிரிக்க முடியாத உறவு கொண்டுள்ள ஐ.எஸ்.ஐ.யும் ஒத்துழைப்பு அளிக்காத நிலையே இன்றுவரை நிலவி வருகிறது.
இந்த நிலையிலும், ஐ.எஸ்.ஐ.யின் செயற்பாட்டை கட்டுப்படுத்தும் முகமாக அதன் அரசியல் பிரிவை பாகிஸ்தான் அரசு கலைத்துள்ளது.
தேர்தலின் மூலம் அந்நாட்டு அரசும், நிர்வாகமும் மீண்டும் ஜனநாயக சக்திகளின் கைகளுக்கு வந்தாலும் கூட, இராணுவம், உளவு அமைப்புகள் ஆகியன இதுநாள்வரை மேற்கொண்டுவரும் பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அதன் வெளிப்பாடே, இந்த அளவிற்கு பெரிய சதித் திட்டம் தீட்டப்பட்டு நடத்தப்பட்ட மும்பை பயங்கரவாதத் தாக்குதல் ஆகும்.
இத்தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ள அந்நாட்டு அதிபர் சர்தாரி, இது தொடர்பான புலனாய்விற்கு பாகிஸ்தான் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று அறிக்கையிலும், சி.என்.என்.- ஐ.பி.என். தொலைக்காட்சியில் கரன் தாப்பர் நடத்திய நிகழ்ச்சியிலும் ஆணித்தரமாகக் கூறினார்.
இப்படி முஷாரஃப் கூறவில்லை. இது கவனத்தில் கொள்ளத்தக்கது. இன்று கூட, அந்நாட்டின் ஃபினான்சியல் டைம்ஸ் இதழிற்கு அளித்துள்ள பேட்டியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஒன்றிணைந்து போராடுவோம் என்று அதிபர் சர்தாரி கூறியுள்ளார்.
மும்பை பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக உயிரோடு சிக்கிய ஒரு பயங்கரவாதியிடமிருந்து நடத்திய விசாரணையிலும், புலனாய்வில் திரட்டிய மற்ற விவரங்களையும் பாகிஸ்தான் தூதரிடம் அயலுறவு அமைச்சகம் வழங்கியுள்ளது.
இதற்கு பாகிஸ்தான் எந்த அளவிற்கு ஒத்துழைப்பு அளிக்கிறது என்பதை நிதானத்துடன் பார்க்க வேண்டும். பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக ஆதாரங்களெல்லாம் மிக மிக குறைவாகவே கிடைக்கும். ஆனால், அவர்களுக்குள் நடந்த உரையாடல் பதிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் கொண்டு பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் கண்டு வெளிக்கொணர முடியும்.
இதனை இரண்டு நாடுகளும் இணைந்தே செய்ய வேண்டும். உண்மையான குற்றவாளிகளை அடையாளம் கண்டு, அவர்களின் அமைப்பை அழிக்க அதுவே சிறந்த, ஒரே வழி.
ஆஸ்ட்ரேலிய பிரதமர் கெவின் ரூட் கூறியதைப் போல, இந்த கடுமையான சூழலில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றிட வேண்டும். பயங்கரவாதத்தை ஒடுக்க இரு நாட்டு அரசுகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதே ஒரே வழி.
இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலிற்கு உரிய பதிலை தேட மறந்தோம்... விளைவு: மும்பை பயங்கரவாத தாக்குதல். இம்முறை இலக்கை நோக்கியதாக இருக்கட்டும் புலனாய்வு.