வி.பி. சிங்: ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பம்!
, சனி, 29 நவம்பர் 2008 (16:41 IST)
இந்தியாவின் பிரதமராக 11 மாதங்கள் மட்டுமே இருந்து, தான் நடைமுறைப்படுத்திய ஒரு கொள்கைக்காக பதவி இழந்த பின்னரும், ஒரு பெரும் அரசியல் சக்தியாகவும், மக்கள் தலைவராகவும் திகழ்ந்த ஒரே இந்திய அரசியல் தலைவர் விஸ்வநாத் பிரதாப் சிங்.சுதந்திர இந்தியாவில் காங்கிரஸிற்கு எதிராக ஒரு ஜனநாயக - அரசியல் இயக்கத்தை உருவாக்கி, அதன் மூலம் மத்தியிலும், பல மாநிலங்களிலும் ஒரு பெரும் ஆட்சி மாற்றத்தை உருவாக்கினார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். ஆனால் காங்கிரஸிற்கு எதிரான அந்த அரசியல் இயக்கம் நீடிக்கவில்லை, ஆட்சியை கைப்பற்றியதும் அது திசைமாறி, அதிகாரப் போட்டியாகி அரசை மட்டுமின்றி, மக்கள் மனதில் இருந்தும் வேரின்றி அகன்றது.1977
ஆம் ஆண்டு இந்திய ஜனநாயகத்தில் நடந்த அந்த மாபெரும் அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, காங்கிரஸிற்கு எதிராக இந்திய நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கியவர் விஸ்வநாத் பிரதாப் சிங். 1989
ஆம் ஆண்டு அவர் உருவாக்கிய ஜனதா தளம் கட்சி, ஒரே நேரத்தில் பாரதீய ஜனதா கட்சியுடனும், இடதுசாரிகளுடனும் கூட்டணி அமைத்தது மட்டுமின்றி, தி.மு.க., தெலுங்கு தேசம், அசாம் கன பரிஷத், சிரோமணி அகாலி தள், காஷ்மீரின் தேசிய மாநாடு, தேவிலாலின் இராஷ்ட்ரிய லோக் தளம் ஆகிய மாநில கட்சிகளுடனும் இணைந்து வலிமையான ஒரு அரசியல் அமைப்பை (தேசிய முன்னணி) உருவாக்கி காங்கிரஸை தோற்கடித்தது. வி.பி. சிங் தலைமையில் அமைந்த தேசிய முன்னணி அரசிற்கு பா.ஜ.க.வும், இடதுசாரிகளும் வெளியில் இருந்து ஆதரவளித்தன.
ஆனால் அது சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. பிரதமர் தேர்விலேயே சிக்கல் எழுந்தது. வி.பி. சிங் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதை சந்திரசேகர் எதிர்த்தார். தேவிலாலின் ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமரானார். வி.பி. சிங்கின் அரசு சீரிய நிர்வாகத்துடன் கூடிய சிறந்த ஆட்சியாக அமைந்தது. மக்கள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுத்து பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டார் வி.பி.சிங். தமிழ்நாடு-கர்நாடக அரசுகளுக்கு இடையிலான காவிரி நதி நீர்ப் பகிர்வு பிரச்சனைக்கு நடுவர் மன்றம் அமைக்க ஒப்புதல் தந்தார். இப்பிரச்சனையை பேசித்தான் தீர்க்க வேண்டும் என்று கூறி கர்நாடக அரசுகள் பிரச்சனையை இழுத்தடித்துக் கொண்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்தினார்!நமது நாட்டின் மக்கள் தொகையில் 55 விழுக்காடு உள்ள இதர பிற்படுத்தப்டடோருக்கு மத்திய அரசு, அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் உரிய வேலை வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்று அவர்களின் நிலை குறித்து ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்ட நீதிபதி பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையிலான குழு மத்திய அரசிற்கு பரிந்துரை செய்திருந்தது.1977
ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸை வீழ்த்திவிட்டு மத்தியில் ஆட்சியமைத்த ஜனதா அரசால் அமைக்கப்பட்டது மண்டல் ஆணையம். 3 ஆண்டுக் காலம் தீவிரமாக ஆய்வு செய்து மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் எந்த அளவிற்கு உள்ளார்கள் என்பதை கண்டறிந்த நீதிபதி மண்டல், 1980ஆம் ஆண்டு அந்த அறிக்கையை மத்திய அரசிடம் (அப்போது ஜனதா அரசு கவிழ்ந்து தேர்தல் நடந்து மீண்டும் காங்கிரஸ் அரசு இந்திரா காந்தி தலைமையில் அமைந்திருந்தது) அளித்தது.அந்த அறிக்கையை நடைமுறைபடுத்தப்படாமல் கிடப்பில் போட்டது இந்திரா அரசு. மண்டல் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் மற்ற மாநிலங்களிலும் மண்டல் அறிக்கை மாநாடுகள் நடத்தப்பட்டன. ஆனால் பயனில்லை.வி.பி.சிங் அரசு - தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் வற்புறுத்தலால் - மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த முன் வந்தது. அதன் முதல் கட்டமாக, மத்திய அரசின் வேலை வாய்ப்புக்களில் இதர பிற்படுத்தப்பட்டவருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க அரசு உத்தரவைப் பிறப்பித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. டெல்லியில் மேல் தட்டு மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்களின் போராட்டத்திற்கு ஆட்சிக்கு ஆதரவளித்துவந்த பா.ஜ.க. ஆதரவு அளித்தது. முன்னேறிய சமூகத்தினரின் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பளித்தால் தகுதி, திறமை போய்விடும் என்று கூக்குரலிட்டார்கள். காங்கிரஸ் கட்சியும் மண்டல்
அறிக்கை நடைமுறைப்படுத்துவதை மிகக் கடுமையாக எதிர்த்தது. ஆனால், வி.பி. சிங் அரசு அசைந்து கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் மண்டல் அறிக்கையால் ஏற்பட்ட எழுச்சியை திசை திருப்ப இராமர் கோயில் விவகாரத்தை கையில் எடுத்தது பா.ஜ.க. அயோத்தியில் (பாபர் மசூதி இருக்கும் - அன்று இருந்த - இடத்தில்) இராமர் கோயில் கட்டுவோம் என்று முழக்கத்துடன் எல்.கே. அத்வானி இரத யாத்திரை புறப்பட்டார். குஜராத்திலுள்ள சோமநாதர் ஆலயத்திலிருந்து தனது இரத யாத்திரையை அத்வானி துவக்கினார். இரத யாத்திரை சென்ற இடமெல்லாம் மதக் கலவரம் வெடித்தது. நாட்டில் அமைதியற்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அப்பொழுது பிரதமர் வி.பி.சிங்கை சந்தித்த பா.ஜ.க. தலைவர் வாஜ்பாய், மண்டல் அறிக்கையை நடைமுறைப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற்றால், அத்வானியின் ரத யாத்திரையை நிறுத்தச் சொல்கிறேன் என்று கூறினார். வி.பி. சிங் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்தார். அத்வானியின் யாத்திரை பீகாருக்குள் நுழைந்தால் அதனை தடுத்து நிறுத்தி, அவரை கைது செய்வேன் என்று அன்று பீகார் மாநில முதல்வராக இருந்த லாலு பிரசாத் அறிவித்தார். இரத யாத்திரை நிறுத்தப்பட்டால், அத்வானி கைது செய்யப்பட்டால் ஆட்சிக்கு அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெறுவோம் என்று பா.ஜ.க. அறிவித்தது.
பீகாரில் இரத யாத்திரை நுழைந்ததும் அது நிறுத்தப்பட்டது, அத்வானி கைது செய்யப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. ஆட்சிக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்குமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக்கொள்ள நாடாளுமன்றத்தை எதிர்கொண்டார் வி.பி. சிங்.வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற உரை!மண்டல் அறிக்கையை 195 உறுப்பினர்களைக் கொண்ட முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸூம், 89 உறுப்பினர்களைக் கொண்ட பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்ததோடு மட்டுமல்லாமால், ஜனதா தளத்திலேயே ஒரு அணி எதிர்த்தது. சந்திரசேகர் (ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் ஒரு 4 மாத காலத்திற்கு பிரதமராக இருந்தார்) தலைமையிலான 38 உறுப்பினர்கள் வி.பி. சிங்கை எதிர்த்தனர். இந்திய நாட்டின் மக்கட்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு வேலை வாய்ப்பில் கால் பங்கு இட ஒதுக்கீடு அளித்ததை அன்றைக்கு, இந்திய நாடாளுமன்றத்தில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எதிர்த்தனர். ஆட்சி கவிழ்வது நிச்சயம் என்ற நிலையிலும், அரசு உத்தரவை திரும்பப் பெறுவதில்லை என்ற முடிவுடன் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார் வி.பி.சிங்.
நம்பிக்கைத் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் இராஜீவ் காந்தி - இடையிடையே தண்ணிரை குடித்துக் கொண்டு - 10 மணி நேரம் பேசினார். அதற்கு முன்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் மூத்த உறுப்பினர் வசந்த் சாத்தே, இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கும் அரசின் உத்தரவு, தகுதியின்மைக்கும், திறமையின்மைக்கும் வழிவகுக்கும் என்று காட்டாமாகப் பேசினார். “இது இந்திய மக்களை சாதி வாரியாக பிளவு படுத்தும் நடவடிக்கை” என்று பாரதிய ஜனதா கட்சி கூறியது. இடதுசாரிகளும், தேசிய முன்னணியில் இடம்பெற்ற தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் ஆணித்தரமாக வாதங்களை முன்வைத்து பேசினர்.நவம்பர் 9ஆம் தேதி இரவு. இந்திய மக்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த அந்த வேளையில் விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் வி.பி.சிங் பதிலுரையாற்றினார்.அரசியல் ரீதியாக தன்னை நிலைப்படுத்திக் கொள்ள மக்களைப் பிரிக்கிறார் என்ற குற்றச்சாற்றிற்கு பதிலளித்த வி.பி.சிங், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் உழைப்பை, பங்களிப்பை பெற்றுக் கொண்ட இந்திய சமூகம் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை அளிக்க மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
அவர் கூறிய பசு மாட்டுக் கதை நாட்டு மக்களின் கருத்தைக் கவர்ந்தது. அண்ணன், தம்பி இருவருக்கும் இருந்த ஒரே சொத்தாக ஒரு பசு மாடு இருந்தது. அதனை இருவரும் பிரித்துகொண்டு பராமரிப்போம் என்று அண்ணன் கூற அதனை தம்பி ஏற்க, மாட்டின் முற்பகுதி உனக்கு, மாட்டின் பின்பகுதி எனக்கு என்று அண்ணன் கூற தம்பியும் ஏற்கிறான்.முன்பகுதியில் தானே வாய் இருக்கிறது, எனவே நீதான் மாட்டிற்கு இரை போட வேண்டும் என்று கூறி, பின்னால் இருந்த மடியில் இருந்து பால் கறந்து அண்ணன் நன்றாக சம்பாதித்து வந்தான். தனக்கு அண்ணன் அநீதி செய்துவிட்டான் என்று உணர்ந்தாலும், ஒப்புக்கொண்டுவிட்டோமே என்று வருத்தப்பட்ட தம்பி, அதற்கு ஒரு தீர்வு காண ஊர்ப் பெரியவர் ஒருவரிடம் சென்றான்.
அவர் ஒரு உபயாத்தைக் கூறி, அவ்வாறு செய்யுமாறு சொல்ல தம்பி வீடு திரும்பினான். மறுநாள் காலை அண்ணன் எப்போதும் போல பால் கரக்க பசுவிடம் வந்து அமர்ந்தபோது, பசுவின் தாடையில் தம்பி பலமாக அடிக்க, கரக்க வந்த அண்ணனை பசு உதைத்துவிட்டது. ஏன் பசுவை அடிக்கிறாய் என்று அண்ணன் கேட்க, முன்பகுதி என்னுடையது நான் அடிக்கிறேன், உனக்கென்ன? என்று கேள்வி எழுப்ப, தனது தம்பி விவரம் தெரிந்துகொண்டான் என்று உணர்ந்த அண்ணன் அன்று முதல் கரந்த பாலில் பாதியை தம்பிக்கும் அளித்தான் என்று கதை கூறி முடித்த வி.பி. சிங், தம்பிதான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று கூற மக்களவைக்கு உள்ளேயும். வெளியேயும் பலத்த கரகோஷம் எழுந்தது. மாட்டை அடிக்கும் நிலை (கலவரம்) வரவேண்டாம் என்பதற்காகவே அவர்களுக்கு உரிய பங்கை (அரசுப் பணியில் இட ஒதுக்கீட்டை) வழங்க முன்வந்ததாக வி.பி. சிங் கூறினார்.எந்த மக்களிடமிருந்து இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை செலுத்த வாக்குகள் பெற்று வந்தோமோ அவர்களுக்கு அதிகாரத்தை திரும்ப வழங்கவே மண்டல் அறிக்கையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்ததாக கூறிய வி.பி. சிங், தனது நடவடிக்கை சரியா இல்லையா என்பதை நாட்டு மக்களின் முடிவிற்கு விட்டுவிடுவதாகக் கூறினார்.90
நாட்களில் கவிழ்க்கப்பட்ட அரசு!வி.பி.சிங் அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அரசிற்கு ஆதரவாக 142 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. அரசை எதிர்த்து - இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து- 346 வாக்குகள் பதிவானது. வி.பி. சிங் அரசு பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டது.வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்ட பிரதமர் வி.பி.சிங், நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அவரிடம், “நீங்கள் பிரதமராக இருக்கும் கடைசி நாள் இது, அதுபற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “எனது அருமை நண்பரே அரசியல் நாட்காட்டியில் கடைசி நாள் என்று ஏதுமில்லை” என்று வி.பி.சிங் நறுக்கென்று பதிலளித்தார்.இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் சமூகத்திற்காக அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்து ஒரு உத்தரவைப் பிறப்பித்த (ஆகஸ்ட் 09, 1990) ஒரு அரசு 90 நாட்களில் (நவம்பர் 09, 1990) கவிழ்க்கப்பட்டது.இதர பிற்படுத்தப்பட்டோருக்காக இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி வி.பி.சிங் அரசு வெளியிட்ட அரசாணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு அதனை விசாரித்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பளித்தது.
மண்டல் அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசாணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்பு இந்திய அரசியல் போக்கில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை அதுவரை எதிர்த்துவந்த காங்கிரஸூம், பாரதிய ஜனதா கட்சியும் தங்களை நிலைகளை தலைகீழாக மாற்றிக்கொண்டு ஆதரிக்கத் துவங்கின.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு உயர் கல்வியில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்த எதிர்ப்புமின்றி நிறைவேற்றி நடைமுறைபடுத்தி வருகிறது. இன்றைக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதுக்கீடு இல்லாத மாநிலமே இல்லை என்று கூறுமளவிற்கு வி.பி. சிங் முன்னெடுத்த சமூக நீதிப் போர் வெற்றி பெற்றுள்ளது.1931
இல் பிறந்து 2008ஆம் ஆண்டு வரை 77 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த வி.பி.சிங், உ.பி. முதலமைச்சராக, மத்திய நிதி அமைச்சராக, பிறகு பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தபோதெல்லாம் மிகச் சிறந்த நிர்வாகி என்பதை பறைசாற்றினார்.
இந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் கட்சிகளாகத் திகழ்ந்த காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் உண்மையாக அவைகள் யாருடைய நலனிற்காக இருக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டினார். இவ்விரு கட்சிகளுக்கு மாற்றாக நாடு தழுவிய பலமான மூன்றாவது அணியை உருவாக்கியது மட்டுமின்றி, தாழ்த்தப்ப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தலைவர்களை நாட்டிற்கு அடையாளம் காட்டினார். லாலு பிரசாத்தும், ராம் விலாஸ் பாஸ்வானும், மாயாவதியும் பலமான அரசியல் சக்திகளாக உருவெடுக்க காரணமானார்.அதுவரை சிதறிக்கிடந்த இதர பிற்படுத்தப்பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை அவர்களின் கட்சிகளை, சிறுபான்மையினரை ஒன்றிணைத்து ஒரு வாக்குச் சக்தியாக வி.பி.சிங் மாற்றியதன் காரணமாக பல மாநிலங்களில் அதிகார மாற்றம் மேல் தட்டு தலைவர்களிடமிருந்து உழைக்கும் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாக வளர்ந்தவர்கள் கைக்கு வந்தது. இந்தத் தாக்கம் காங்கிரஸிலும், பா.ஜ.க.விலும் கூட எதிரொலித்தது.இந்தியாவின் சட்ட அரங்கில் பாபா சாஹேப் அம்பேத்கரும், சமூக அரங்கில் ஜோதி பாபூலே, நாராயண குரு, தந்தை பெரியார் ஆகியோர் சாதித்ததை அரசியல் அரங்கில் கடும் எதிர்ப்பிற்கிடையே சாதித்தார் வி.பி.சிங்.தந்தை பெரியாரின் வாழ்வை, பணியை, சாதனையை குறிப்பிட்டு புகழ்மாலை சூட்டிய அறிஞர் அண்ணா, அவர் ஒரு காலகட்டம், ஒரு சகாப்தம், ஒரு திருப்பு முனை என்று குறிப்பிட்டார்.தமிழ்நாட்டின் சமூக தளத்தில் பெரியார் சாதித்ததை வி.பி.சிங் இந்திய அரசியல் அரங்கில் சாதித்தார்.அவருடைய 11 மாத காலம் இந்தியாவின் பிரதமராக அவர் ஆட்சி செய்தது குறிப்பிடத்தக்க ஒரு காலகட்டம்.பன்னெடுங் காலமாக உழைக்கும் சமூகமாக, உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கும் சமூகமாக, தங்களது வீரத்தால் சமூகத்தைக் காத்த தோள்களாகத் திகழந்த சமூகத்திற்கு சமூக நீதி வழங்கியதால் வி.பி.சிங், இந்நாட்டில் நடந்து ஒரு சமூக போராட்டத்தின் சகாப்தம் ஆனார்.
இந்திய அரசியலில் ஜனதா தளத்தை உருவாக்கியது மட்டுமின்றி, மாநில கட்சிகளாக திகழ்ந்த மத்திய ஜனநாயக அரசியல் சக்திகளை ஒரு தேச அமைப்பாக உருவாக்கியதோடு மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களை ஒட்டுமொத்த வாக்கு வங்கியாக மாற்றி அதிகார அரசியல் மாற்றங்களைக் கொண்டுவந்த நிலை நிறுத்தியது மட்டுமின்றி, தேச அளவிலான இரண்டு கட்சிகளின் அடித்தளங்களைத் தகர்த்து அவைகளை பலவீனப்படுத்தி இந்திய அரசியல் போக்கில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியவர் வி.பி.சிங்.வி.பி.சிங்கின் சமூக, நிர்வாக, அரசியல் வாழ்க்கை ஒரு பாடம், ஒரு படிப்பினை, ஒரு நிச்சயமான வழிகாட்டி.