இக்கல்லூரி மாணவர்கள் சிலர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தியை கொண்டாடுவதற்கு அச்சடித்த அழைப்பிதழில், தாங்கள் படிக்கும் கல்லூரியின் பெயரில் உள்ள ‘டாக்டர் அம்பேத்கர்’ பெயரை தவிர்த்திருத்தனராம். அவரது பெயரை ஏன் தவிர்த்தீர்கள் என்று மற்ற சில மாணவர்கள் கேட்க, சாதி ரீதியாக அவர்களுக்குள் புகைச்சல் ஏற்ப்பட்டதாம். அதுவே இந்த அளவிற்கு ஒரு காட்டுமிராண்டித்தனத்திற்கு வித்திட்டுள்ளது என்று கூறுகின்றனர்.இது ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டின் பல கிராமங்களில் இன்று நேற்றல்ல, அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் மோதல் நாம் அறியாததல்ல. கிராமத்தில் வாழும் மக்களுக்கு படிப்பறிவிருக்காது, சிந்திக்கவும் தெரியாது, சிந்திக்க நேரமும் இருக்காது. ஆனால் மாணவர்களுக்கு? அதுவும் சட்டம் படிக்கவந்த மாணவர்களுக்கு தெரியாதா இவ்விரு தலைவர்களும் யாரென்று? இதுதான் வருத்தமளிக்கும் ஆச்சரியம்.நமது நாட்டின் சட்ட மேதை, நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்தவர், இன்றளவும் இந்த அளவிற்கு நாம் ஒரு ஜனநாயகத்தைப் பெற்று, கருத்துரிமை சுதந்திரம் பெற்று உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக திகழ்கிறோம் என்றால் அதற்கு காரணமானவர் பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்பது கூட புரியாதா? தெரியாதா?
தான் சார்ந்த சமூகம், உடலுழைப்பின் மூலம் சமூக வாழ்விற்கு தனது பங்களிப்பை முழுமையாக செலுத்திய பின்பும் உரிமை மறுக்கப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஒடுக்கப்படுவது ஏன் என்று குரல் எழுப்பி, அதற்காக தன் வாழ் நாள் முழுவதும் போராடி, அவர்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பு அளிக்க வேண்டியதன் அவசியத்தை மற்றத் தலைவர்களுக்கும் புரியவைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே அவர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் ஜனநாயகத்தை அவர்களும் நுகரச் செய்ய வழி செய்தவரல்லவா அம்பேத்கர்? அவருடைய பெயரை தவிர்ப்பதற்கு சட்டம் பயிலும் மாணவர்களுக்கு எப்படி மனம் வருகிறது?
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஆழமான கருத்தாடல்களை படித்தவர்களா இவர்கள்? அப்படித் தெரியவில்லை. சாதியத்தின் பிடி அந்த அளவி்ற்கு இவர்களுடைய சிந்தனையை கட்டிப்போட்டிருக்கிறது என்றால், இப்படிப்பட்ட மாணவர்கள் எப்படி நாளை நீதிமன்றங்களில் நியாயத்தைப் பெற்றுத் தருவார்கள்? அம்பேத்கரைத் தவிர்த்துவிட்டு இந்த நாட்டில் சட்டம் ஏது? சட்டத்தின் ஆட்சி ஏது?
இந்த இரண்டு தலைவர்களும் ஏதோ சாதியத்திற்காகப் போராடி உயிரைத் துறந்தவர்கள் போலல்வா இருக்கிறது இவர்களின் வெறியும் செயலும். சரி அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.
விலகுமா இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?