போர் நிறுத்தம்: முதல்வரின் விளக்கமும் கேள்வியும்!
, சனி, 8 நவம்பர் 2008 (15:01 IST)
இலங்கையில் சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திவரும் தாக்குதல்களால் தமிழர்கள் சந்தித்துவரும் துயரத்திற்கு முடிவுகட்ட உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தமிழக முதலமைச்சர் கருணாநிதி கொடுத்துள்ள ஒரு விளக்கம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.கேள்வி பதிலாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அந்த விளக்கத்தில், “போர் நிறுத்தம் என்பதிலே கூட - போர் நிறுத்தம் என்பது போரிலே ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் ஒப்புக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றாகும். தமிழ்நாட்டிலே உள்ள அனைவரும் போர் நிறுத்தம் செய்யக்கோரி அதைச் செய்யச் சொல்லி இந்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்பினரின் (விடுதலைப் புலிகள், சிறிலங்க அரசு) நிலை தெரியாமல், ஒரு தரப்பை மட்டும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று கேட்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று தெரியவில்லை. அதனால்தான் இங்ங்கைப் பிரச்சினை பற்றி பேசும்போதோ, நிலை எடுக்கும்போதோ முரண்பட்ட கருத்துகள் எதிரொலிக்கின்றன. எனவே இரு தரப்பினரும் இன்று ஈடுபட்டுள்ள சண்டை ஒத்திவைக்கப்பட்டு - நடுநிலை நாடுகளுடன் இந்தியாவும் ஒப்புக்கொள்ளக்கூடியதான சமரசப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு - அதன் இறுதிக் கட்டமாக நிரந்தரப் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பது என் கருத்து” என்று கூறியுள்ளார்.முதல்வரின் விளக்கதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிவது இதுதான்: மத்திய அரசின் அழுத்தத்திற்கு இணங்க சிறிலங்க அரசு போரை நிறுத்துவதாக அறிவித்தால், அதற்கிணங்க விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் கடைபிடிப்பார்களா? அதனை உறுதி செய்ய முடியாத நிலை உள்ளது என்று கூறியுள்ளார். தமிழகமே ஒன்றிணைந்து வலியுறுத்தியும் அங்கு தாக்குதல் நிறுத்தப்படாதது ஏன்? என்று எழும் கேள்விக்கு இந்த விளக்கத்தை முதல்வர் அளித்துள்ளார்.
கடந்த மாதம் 26ஆம் தேதி டெல்லி வந்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் ஆலோசகரும், அவருடைய சகோதரும் ஆன ஃபசில் ராஜபக்சவுடன் தமிழக அரசின் கோரிக்கைகள் (அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்) மீது பேச்சுவார்த்தை நடத்தியபிறகு, அன்று மாலையே சென்னைக்கு வந்து முதலமைச்சரை சந்தித்தார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி. அந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, போர் நிறுத்தம் தொடர்பான வழிமுறைகளை வகுக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடும் என்றும், நார்வே போன்ற ஒரு மூன்றாம் நாட்டின் அனுசரணையுடன் போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறினார். முதல்வரின் இந்த அறிவிப்பு தமிழக மக்களுக்கும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிகளுக்கும் மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஏனென்றால் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதே அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானம் ஆகும். ஆனால் அந்த கோரிக்கையை மிகுந்த இராஜ தந்திரத்துடன் தவிர்த்துவிட்டது மத்திய அரசு என்று குற்றம்சாற்றப்பட்டது.அன்று தமிழக முதல்வருக்கும், அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இடையே நடந்த பேச்சில், “நாங்கள் (மத்திய அரசு) கேட்டுக்கொண்டால் சிறிலங்க அரசு போரை நிறுத்துவிடும், ஆனால் விடுதலைப் புலிகள் தாக்குதலை நிறுத்துவார்கள் என்று உங்களால் உத்தரவாதம் தர முடியுமா?” என்று பிரணாப் கேட்டதாகவும்,
அதற்கு முதல்வர் தரப்பு அமைதி காத்ததாகவும், அதன் பிறகே, போர் நிறுத்தத்தை நேரடியாக நிறுத்தும் திட்டம் கைவிடப்பட்டு, முறையாக ஒப்பந்தம் ஏற்படுத்தி நிறுத்துவது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் அப்பொழுதே உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவித்தன. தமிழக முதல்வர் அளித்த விளக்கத்தையும், உறுதிசெய்யப்படாத அந்தத் தகவல்களையும் இணைத்துப் பார்க்கும் போது, தாக்குதலைத் தவிர்க்க ஒரு அருமையான இராஜ தந்திரத்தை மத்திய அரசு கையாண்டுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.எப்படியென்றால், தமிழர்கள் மீது சிறிலங்க இராணுவமும், விமானப் படையும் நடத்திவரும் தாக்குதல்களை நிறுத்தினாலே, அவர்களுக்கு எதிராக போர் புரிந்துவரும் விடுதலைப் புலிகள் தங்கள் தாக்குதலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மத்திய அரசின் மொழியில் கூறுவதென்றால், விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க இராணுவத்திற்கும் நடைபெறும் இந்தப் போரில் அப்பாவித் தமிழ்மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, ஒரு தரப்பு (சிறிலங்க இராணுவமும், விமானப் படையும்) தாக்குதலை நிறுத்தினாலே, எந்த மக்களுக்காக போராடி வருகிறார்களோ அந்த மக்களின் நலன் கருதி விடுதலைப் புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறதல்லவா? எனவே, “இரு தரப்பின் நிலை என்னவென்று அறியாமல் போர் நிறுத்தம் செய்வது சாத்தியமில்லை” என்று கூறுவதற்கு எந்த அடிப்படையும் இல்லையென்பது தெளிவாகிறது. இரண்டாவது, தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை. அதனை போர் நிறுத்தம் என்று மிக சாதுரியமாக திருத்தி, அதற்கு ஒப்பந்தமெல்லாம் தேவை என்று பேசி, தனது பொறுப்பை சிங்கள அரசிற்கு சாதமாக திருப்பிவிட்டுள்ளது மத்திய அரசு என்றும் தோன்றுகிறது.முதலில் தாக்குதலை நிறுத்திவிட்டு, பிறகு போர் நிறுத்தம் பற்றியெல்லாம் வழிமுறை வகுத்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாதா?
ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசிற்கும் இடையிலான போர் நிறுத்தத்தை சிறிலங்க அதிபர் ராஜபக்சதானே முறி்ந்துவிட்டது என்று தன்னிச்சையாக அறிவித்தார்? அது மத்திய அரசு அறியாததா? போர் நிறுத்தம் முறிந்துவிட்டது என்று விடுதலைப் புலிகள் அறிவிக்கவில்லையே.எனவே, மிக டெக்னிக்கலாக, இராஜ தந்திரத்துடன் மத்திய அரசு தமிழர்களின் சார்பாக எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கையை தவிர்த்துவிட்டது என்றே கருதவேண்டியுள்ளது.தமிழ்நாட்டு மக்களின், தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையை உண்மையான மனிதாபிமான கண்ணோட்டத்தோடு மத்திய அரசு பார்த்திருக்குமானால் ‘தாக்குதலை நிறுத்து’ என்று சிறிலங்க அரசிற்கு கடுமையான அழுத்தம் தந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் கோரிக்கையை விட சிறிலங்க அரசுடன் அது கொண்டிருக்கும் உறவை பெரிதாக மதிக்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தமிழ்நாட்டையும், அதன் முதலமைச்சரையும் மிகுந்த இராஜ தந்திரத்துடன் ஏமாற்றிவிட்டது.