மீனவர்கள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு: என்ன ஆனது உறுதிமொழி!
, சனி, 8 நவம்பர் 2008 (13:28 IST)
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர், கோடியக்கரையை அடுத்த கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு அத்துமீறி நுழைந்த சிறிலங்க கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் பாபு என்ற மீனவர் குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.மருத்துவமனையில் செய்தியாளர்களின் வற்புறுத்தலால் மிகவும் சிரம்ப்பட்டுப் பேசிய மீனவர் பாபு, தாங்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தப் பகுதிக்கு வேகமாக வந்த சிறிலங்க கடற்படையினர் எவ்வித எச்சரிக்கையும் செய்யாமல் தங்களை நோக்கி சரமாரியாக சுட்டனர் என்று கூறியுள்ளார். “ஒரு 20 மீட்டர் தொலைவிற்கு அருகில் வந்து எங்களை நோக்கி சுட்டனர்” என்றும் குண்டடிபட்ட வேதனைக்கு இடையே விளக்கியுள்ளார்.சிறிலங்க கடற்படையினரின் இந்த அத்துமீறிய நடவடிக்கை நாகை, இராமேஸ்வரம் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டறிக்கை உறுதிமொழி என்ன ஆனது?
இரண்டு வாரங்கள் கூட ஆகவில்லை, டெல்லி வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும், அவருடைய சகோதருமான ஃபசில் ராஜபக்சவுடன் நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் அளிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதியே மீனவர்கள் மீது இதற்கு மேல் சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தாது என்பதே. சிறிலங்க அரசின் இந்த வாக்குறுதி - இதுவரை அளிக்கப்பட்ட பல வாக்குறுதிகளைப் போலவே - அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. அதுவும் அக்கரைப்பேட்டைக்கு தென் கிழக்கில், நாகை மீனவர்கள் எப்போதும் மீன் பிடிக்கும் கடற்பகுதியில் அத்துமீறி வந்த துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது சிறிலங்க கடற்படை.தமிழக மீனவர்கள் மீது இதுநாள்வரை நடத்தப்பட்டுவந்த தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டதுபோல செய்திகள் வெளியிடப்பட்டன. சிறிலங்க அரசிற்கும், அதன் இராணுவத்திற்கும் ஒப்பந்தங்களையும், உறுதிமொழிகளையும், மரபுகளையும் மீறுவது புதிதல்ல என்பதை காலம் காலமாக உணர்ந்தவர்களுக்கு இந்தச் சம்பவம் அதிர்ச்சியளித்திருக்காது.
நமது கேள்வியெல்லாம், இதற்கு மத்திய அரசு என்ன பதில் தரப் போகிறது என்பதே. நாங்கள் சிறிலங்க அரசுடன் பேசுவோம், எங்களது கவலைகளை தெரிவிப்போம் என்றெல்லாம் கூறிமேயானால், அப்படிப்பட்ட பயன்றற சொற்கள் இதற்கு மேலும் தமிழக மீனவர்களை ஏமாற்றப் பயன்படாது என்பதை அது உணர வேண்டும்.
தமிழக அரசியல் கட்சிகளும், மீனவர் அமைப்புகளும் தொடர்ந்து வலியுறுத்துவதற்கிணங்க கச்சத் தீவை சிறிலங்காவிற்கு அளித்த ஒப்பந்தத்தை இரத்து செய்ய வேண்டும். கச்சத் தீவை மீட்டு, அந்தக் கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீ்ன்பிடி உரிமையை நிலைநாட்டினால் மட்டுமே இப்படிப்பட்ட தாக்குதல்களை நிறுத்த முடியும்.கடலோர காவற்படை வளையத்தையும் தாண்டி...!இத்தாக்குதல் எப்படிப்பட்ட சூழ்நிலையில் நடைபெற்றுள்ளது என்பதையும் சற்று ஆழ்ந்து கவனிக்க வேண்டும். இலங்கையில் சிறிலங்க முப்படைகளும் தொடுத்துவரும் தாக்குதலின் காரணமாக விடுதலைப் புலிகள் அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டிற்கு வந்துவிடாமல் தடுக்க கடலோர காவற்படையின் பல கப்பல்கள் கண்காணிப்பு பகுதியில் ஈடுபட்டு வருவதாகவும், கப்பற்படை ஹெலிகாப்டர்களும், டார்னியர் விமானங்களும் இந்த கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும் இரண்டு நாட்களுக்கு முன்பு செய்திகள் வந்த நிலையிலேயே இத்தாக்குதல் நடந்துள்ளது.விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டிற்குள் ஊடுவதைக் தடுப்பதற்காக பாக் வளைகுடா, பாக் நீரிணை, மன்னார் வளைகுடா பகுதிகளிலும், இரு நாடுகளின் சர்வதேச கடல் எல்லையிலும் தீவிர கண்காணிப்பில் இந்திய கடலோர காவற்படை ஈடுபட்டுள்ளதாகவும், கடலோர காவற்படையின் விக்ரம், இராமதேவி, அருணா ஆசஃப் அலி ஆகிய கப்பல்கள் முக்கியமான இடங்களை மையங்கொண்டு கண்காணிப்பதாகவும் அச்செய்தி கூறியிருந்தது. அந்த பாதுகாப்பு வளையத்தையும் மீறி வந்து நமது மீனவர்களின் மீது சிறிலங்க கடற்படை எப்படித் தாக்குதல் நடத்த முடிந்தது?
விடுதலைப் புலிகளின் ஊடுறுவலைக் கண்காணிக்கத்தான் நமது கடலோர காவற்படையா? அது நமது மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாதா? என்ற கேள்வியும் எழுகிறது.மன்மோகன் சிங் அரசை மிகவும் நம்பி இலங்கைத் தமிழர்களையும், தமிழ்நாட்டின் மீனவர்களையும் காப்பாற்ற முடியும் என்று நம்பும் தமிழக முதல்வர்தான் மத்திய அரசிடம் பேசி இதற்கு பதிலைப் பெறவேண்டும்.