நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் நடத்திய அரசியல் போராட்டத்திற்கு எந்த பயனும் கிட்டவில்லை. மொழி ரிதீயாக, இன ரீதியாக தமிழர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. அரசியல் ரீதியான போராட்டங்கள் அனைத்தும் அடக்குமுறையால் ஒடுக்கப்பட்டது. தமிழர்களின் மீதான சிங்களத்தின் அரசியல் ஆதிக்கம் தங்கு தடையின்றி விரிவுபடுத்தியது. தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, தாங்கள் வாழ்ந்துவந்த வரலாற்று ரீதியான மண்ணில் இருந்து துரத்தப்பட்டு, பிறகு அந்த நாட்டை விட்டே வெளியேறி அகதிகளாக மற்ற நாடுகளில் வாழும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அதன் உச்சக்கட்டமே 1983ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை. தமிழர் பூமியிலேயே தமிழர்கள் கொல்லப்பட்டனர், சிங்களர் அதிகம் வாழும் பகுதிகளில் இருந்து அடித்து விரப்பட்டனர். இன ஒடுக்கல் அதிகரித்த நிலையில், தங்கள் உரிமையை நிலைநாட்ட அதுவரை அரசியல் ரீதியாக போராடிவந்த ஈழத் தமிழினம், சிங்கள அரசின் இராணுவ ஒடுக்குமுறையை அதே பாணியில் எதிர்த்து தங்களின் சுதந்திரப் போராட்டத்தைத் தொடர ஆயுதம் தரித்தது. அறப்போராட்டங்களினால் பயன் ஏதும் கிட்டாத நிலையில், 50,000திற்கும் அதிகமானோரை இழந்த நிலையிலேயே ஈழத்தில் ஆயுதப் போராட்டம் துவங்கியது.
தமிழர்களை ஒடுக்கி, சிங்கள ஆதிக்கத்தை பலப்படுத்துவதையே தங்கள் அரசியல் கொள்கையாகக் கொண்டு தேர்தலில் வென்று மாறி மாறி ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியும், சிறிலங்க சுதந்திரக் கட்சியும் தமிழர்கள் ஆயுதம் தரித்தப் பின்னர் கூட அரசியல் தீர்வைப் பற்றி சற்றும் சிந்திக்கவில்லை, மாறாக, அவர்களை மேலும் கடுமையாக ஒடுக்கத் தலைப்பட்டனர். மற்ற நாடுகளில் இருந்து ஆயுதங்களைப் பெற்று தமிழர்களை முற்றிலுமாக ஒழிக்கும் இனப் படுகொலை சொந்த நாட்டின் மக்களிம் மீதே ஈரமின்றி ஏவிவிட்டது சிங்கள பேரினவாத அரசு.
அந்த நிலையே இன்றும் தொடர்கிறது. பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண நார்வே நாட்டின் தலைமையில் நடந்த முயற்சிகளினால் ஒப்புக்கொள்ளப்பட்ட மிகச் சாதாரண விடயங்களைக் கூட சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தாதது மட்டுமின்றி, தனது இராணுவ பலத்தை உயர்த்திக்கொண்டு தமிழர் பிரச்சனைக்கு போரின் மூலம் தீர்வு காண முடிவெடுத்தது. அதுவே இன்றுவரையும் தொடர்கிறது. அதன் விளைவாகவே தங்கள் மண்ணிலேயே இரண்டரை இலட்சம் மக்கள் வீடிழந்து காட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்பிரச்சனையை வேறொரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாகவே மத்திய அரசு பார்க்கிறது. தனது நாட்டின் மக்களின் மீதே ஈவிரக்கமின்றி விமானத்தின் மூலம் குண்டு வீசிக் கொல்லும் அரசின் இறையாண்மையைப் பற்றி இந்தியா அக்கரையுடன் பேசுகிறது. அரை நூற்றாண்டுக் காலமாக சிங்கள இனவாத அரசியலால் அம்மக்கள் இன ரீதியாக மிதிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல், அதனை பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று அந்நாடு சொல்வதையே நியாயமாக எடுத்துக்கொண்டு அதற்கு ஆதரவும் அளிக்கிறது. அந்நாட்டின் பாதுகாப்பிற்கு உதவியும் செய்கிறது. அதில் நமது நாட்டின் பாதுகாப்பு உள்ளது என்றும் கூறுகிறார் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி!
இஸ்ரேலிற்கு எதிராக போராடிவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் பலவற்றை அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாத இயக்கங்கள் என்றே முத்திரை குத்தியுள்ளன. ஆயினும் அவற்றிற்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்களை இந்தியா கண்டிக்கிறது, கண்டித்து வந்துள்ளது. அதுமட்டுமின்றி, அம்மக்களின் நியாயமான உரிமைகள் பாலஸ்தீன விடுதலையின் மூலம் மட்டும்தான் நிலை நிறுத்தப்படும் என்பதை ஆணித்தரமாகவும் எடுத்துரைத்துள்ளது. அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேச்சு மிக வலிமையானது.
ஆனால், பாலஸ்தீன மக்களை விட கடுமையான ஒடுக்குதலிற்கு ஆளாகிவரும் ஈழத் தமிழர்களுக்கு அந்த வாழ்வுரிமையும் சுதந்திரமும் பெற்றுத்தர நடைபெறும் போராட்டத்தை ஏன் ஆதரிக்க மறுக்கிறது? என்பதே இவ்விரண்டு பிரச்சனைகளையும் ஒப்புட்டு நோக்கும் எவர் மனதிலும் எழக்கூடியவை. இஸ்ரேலிய அரசுகள் எவ்வாறு பாலஸ்தீனர்களுக்கு எதிரான ஒடுக்கலில் எவ்வித வேறுபாடுமின்றி செயல்பட்டு வருகின்றனவோ அதுபோலவே, இலங்கையில் ஆட்சிப் பொறுப்பேற்ற ஒவ்வொரு அரசும் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலையை மாறுதல் ஏதுமின்றி, மாற்றமின்றி தொடர்ந்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு நிலையில், இந்தியாவைப் போன்ற ஒரு ஜனநாயக அரசு அதனை உள்நாட்டுப் பிரச்சனை என்று கூறி பொறுப்பைத் தட்டிக்கழிப்பது, தமிழர்களுக்கு எதிரான இன படுகொலையில் உறுதியுடன் ஈடுபட்டுவரும் சிறிலங்க அரசிற்கு தூணடுதலாகவே அமையும். சிறிலங்க அரசு தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வுத் தரும் என்று நம்புவது அரசியல் முதிர்ச்சியற்ற சிந்தனையாகும். எனவே, இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்.
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடைபிடிக்கப்பட்ட துணிச்சலான, அதே நேரத்தில் பிரச்சனையின் அடிப்படையை உணர்ந்த தெளிவான அணுகுமுறை மட்டுமே பயனளிக்கும் என்பதை தமிழக அரசு மத்திய அரசிற்கு எடுத்துரைக்க வேண்டும்.ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்புக்களால் கடுமையாக குற்றம் சாற்றப்ட்ட ஒரு அரசிடம் இந்தியா நட்புறவு கொண்டாடுவதும், அதற்கு உதவுவதும் (அது எப்படிப்பட்ட உதவியாக இருந்தாலும்) பிரச்சனையை மேலும் சிக்கலாக்கவே உதவும்.