அது ஒரு நல்ல வசந்த காலம்... இந்தியாவின் எல்லா திசைகளிலிருந்தும் சந்தோச செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அந்த துறையில் எங்கும் மகிழ்ச்சியும், நல்ல வளர்ச்சியும், கேளிக்கைகளும், கொண்டாடங்களும் நிலைத்திருந்தன. மாணவர்கள் அந்தத் துறை பற்றிய படிப்புகளை நம்பிக்கையுடனும் ஆர்வத்துடன் படித்தனர். அந்த துறையில் வேலை பார்ப்பதையே பலர் பெருமையாக கருதினார்கள். பலர் தமது நல்ல அரசாங்க வேலையை உதறித் தள்ளி விட்டு அந்த துறையில் வேலை பார்க்க விரும்பினார்கள். கையளவு நிலமும் கோடி ரூபாக்கு மேல் விற்றது, ஒரு ரூபாய் பெறாத சோளப் பொறியும் விற்றது 50 ரூபாய்க்கு. காரணம் கேட்டால் அந்த துறையில் பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தை காரணமாகச் சொன்னார்கள். என்ன அந்த துறை எது என்பதைக் கூறாமல் சுற்றி வளைக்கின்றேனா? ஆம். சரியாகவே யூகித்திருப்பீர்கள்! அந்தத் துறை தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி.) தான். தற்போது உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளில் ஐ.டி. துறை ஊழியர்களின் நலன்களையும் அவர்களின் பணிப் பாதுகாப்பையும் பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்!
பொதுவாக 3 வகையான பணிகள் உலகெங்கிலும் நடைமுறையில் உள்ளன. அவை முழு நேர நிரந்தர பணி (Permanent Job), ஒப்பந்தப்பணி (Contract Job) மற்றும் பகுதி நேரப் பணி (Part time Job) என்பது. இந்தியாவில் இருப்பது முழு நேர நிரந்தர பணிகள் மட்டுமே! ஏனெனில் பெரும்பாலான இந்தியர்கள் பணிப் பாதுகாப்பை விரும்புபவர்கள். பணிப்பாதுகாப்பு என்பது அரசாங்கத்திலுள்ள நிரந்தர பணிகளுக்கு மட்டுமல்லாது தனியார் துறைகளிலும் நிரந்தர பணிகள் உண்டு. இதேபோல ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பு உண்டு.
அதாவது அவர்களின் ஒப்பந்த காலத்தை அதிகரிக்கவோ அல்லது நீக்க வேண்டுமெனில் அவர்களுக்கு போதிய அவகாசம் வழங்குதல் அல்லது அந்த பணியாளர்களை வேலையிலிருந்து ஒப்பந்த காலத்திற்கு முன் நிறுத்த வேண்டுமென்றால் அந்த நிறுவனங்கள் போதிய இழப்பீடுகள் வழங்குதல் எனப் பல பாதுகாப்பு கட்டுப்பாடுகள் உள்ளன. இவை அனைத்தும் மேலை நாடுகளில் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு நாடும் தனது நாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் நலன்களைக் கவனமாக பாதுகாப்பதற்கென அரசாங்கத்தில் தனித்துறைகள் இயங்குகின்றன. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் தமது நாட்டுப் பணியாளர்களை மிகச் சிறந்த முறையில் பேணுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு சீரிய பணிப் பாதுகாப்பையும் வழங்குகின்றன.
இந்தியாவின் ஐ.டி. வளர்ச்சியைப் பற்றி சொல்லத் தேவையில்லை. பல ஐ.டி. நிறுவனங்களின் வளர்ச்சி என்பது அபரிதமானது. அது கனவில் கூடக் கண்டிராத வியக்கத்தகு வளர்ச்சி. ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள் பல நகரங்களில் வியாபித்துள்ள அதன் பள பள கட்டிடங்களும், வானத்தைத் தொடும் அதன் பங்கு விலைகளுமே சான்று.
பெரிய ஐ.டி. கம்பெனிகளின் வளாகத்தை சுற்றிப் பார்க்கவே ஒரு நாள் போதாது. ஒரு துறையின் கட்டடத்திலிருந்து மற்ற துறைகளுக்கு செல்லவும், வளாகத்தை வாடிக்கையாளர்களுக்கு சுற்றிக்காட்டவும் தனி ஊர்திகள் பல நிறுவனங்களில் உள்ளன. ஐ.டி. நிறுவன வளாகத்தினுள்ளே பூங்காக்களும், நீருற்றுகளும், வணிக வளாகங்களும்,தியேட்டர்களும், உணவு கூடங்களும், 5 நட்சத்திர தங்கும் விடுதிகள்,அழகு நிலையங்கள் என பல வசதிகள் உள்ளன. எதற்கும் AVM, ஷங்கர் பட பாடல் செட்டிங்குளை நினைத்துக் கொள்ளவும்.
இந்தியாவிலுள்ள பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் தனது ஊழியர்களை மேலை நாடுகளிடமிருந்து பெறப்படும் திட்டங்களுக்குப் பணியமர்த்துவதோடு மட்டுமில்லாமல், அவர்களின் ஊதியத்தை வாடிக்கையாளர்களிடமிருந்து மணிக் கணக்கிலோ அல்லது நாள் கணக்கிலோ அல்லது திட்ட வளர்ச்சி விகித்தை (Progress) கணக்கில் கொண்டோ பணமாக வசூலிக்கின்றன. ஐ.டி. ஊழியர்களின் சம்பளத்திற்கே வாயை பிளக்கும் பொது மக்கள், ஐ.டி. நிறுவனங்கள் தனது வாடிக்கையாளர்களிடமிருந்து தனது ஊழியர்களுக்காக வசூலிக்கும் தொகையை கேட்டால் மயக்கம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஒரு ஆய்வின்படி, ஊழியர்களுக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் என்பது வாடிக்கையாளர்களிடமிருந்து நிறுவனங்கள் வசூலிக்கும் தொகையில் 10% லிருந்து 25% என்பதே! அப்படியென்றால் மிச்சத் தொகை? அந்த நிறுவன முதலாளிகளுக்கும் முதலீட்டாளர்களுக்குமே போகின்றது. இப்போது உங்களுக்கே புரியும் ஏன் ஐ.டி. நிறுவனங்கள் அசுர வளர்ச்சி பெறுகின்றன என்பது. இது தவிர அரசாங்கத்தின் மானியம் மற்றும் வரி விலக்குகள் வேறு அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கின்றன்!
ஐ.டி. ஊழியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்கள் ஊருக்கு வெளியே உள்ள IT Tech Parkகளில் அமைந்திருக்கின்றன. ஒரு ஐ.டி. நிறுவன ஊழியன் காலை 7 மணிக்கு புறப்பட்டால் இருக்க கூடிய போக்குவரத்து நெரிசலில் கம்பெனியை அடைய 8.30 மணி ஆகிவிடும். அதே போல இரவு 8.30 மணியளவிலே வீடு திரும்ப முடியும். அதன் பிறகு இருக்கும் குறைந்த மணித்துளிகளில் குழந்தைகளுக்கும், வாழ்க்கை துணைவருக்கும், வயதான பெற்றோர்களுக்கும் செலவிட வேண்டும். இது கண்டிப்பாக போதுமானதாக இல்லை.
சில நிறுவனங்கள், வீட்டிற்கு சென்ற பிறகும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளிலுள்ள அவற்றின் திட்டங்களை கவனிக்கச் சொல்லுவார்கள் (ஏனெனில் நமக்கு இரவு, அவர்களுக்கு பகல்). இந்த வேலை வாரக் கடைசியிலும் இப்படியே தொடரும். இப்படி ஒய்வே இல்லாமல் வேலை செய்வதனால், பல ஐ.டி. ஊழியர்கள் இளவயதிலே உடல் நிலை கெட்டு மிகுந்த மன அழுத்திற்கு ஆளாகின்றனர். இது சமீப காலமாக மிக அதிகரித்துள்ளதாக மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தெரிவிக்கின்றன.
அதே போல வாழ்க்கை துணைவருடன் நேரத்தைச் சரியாக செலவிட முடியாமல் இறுதியாக விவகாரத்தில் போய் முடிகிற விசயங்களும் உண்டு. சமீபத்தில் வெளிவந்த ஒரு ஆய்வின் படி, ஏறக்குறைய பதிவு செய்யப்படும் 10 விவகாரத்து வழக்குகளில் 5 வழக்குகள் ஐ.டி. ஊழியர்களுடையது என்பது மிகவும் அதிர்ச்சியடைக்கூடிய விசயம்.
டாட் காம் (Dot Com) மற்றும் Y2K தொழில் நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சியில், பல ஐ.டி. நிறுவனங்கள் 1998லிருந்து 2000 ஆம் ஆண்டு வரையுள்ள காலகட்டத்தில் அடைந்த லாபத்தின் அளவு கணக்கில் சொல்ல முடியாதவை. அதே போல 2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஏற்பட்ட தற்காலிக பொருளாதார சரிவுகளைச் சரியாக கையாளாமல் பல நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் பணியாளர்களை உடனடியாக எந்த முன்னறிவிப்பும் இன்றி பணியிலிருந்து துரத்தியது. காலையில் அலுவலகத்திற்கு வந்த பல ஊழியர்களின் அனுமதி மறுக்கப்பட்டு வாயிற்கதவிலேயே நிறுத்தி பணி நீக்கத்தை அறிவித்தார்கள்! இத்தனைக்கும் அந்த ஊழியர்கள் பல வருடங்களாக அந்த நிறுவனத்தில் வேலைப் பார்த்த நிரந்தர பணியாளர்கள்!
சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் முன்னனி நிறுவனம் ஒன்று இங்கிலாந்திலுள்ள கார் தயாரிக்கும் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இந்தியாவிலுள்ள அனைத்து செய்தித்தாள்களும் முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டு கொண்டாடின. இங்கிலாந்து நாட்டின் பணிப் பாதுகாப்பு மிக அதிகம் என்பதால், வாங்கிய இந்திய நிறுவனம் அந்த இங்கிலாந்து நாட்டின் நிறுவன ஊழியர்களிடம் யாரையும் பணி நீக்கம் செய்வதில்லை என உறுதியளித்தது. ஆனால், இந்தியாவிலுள்ள அந்த நிறுவனத்தின் ஐ.டி. பிரிவில் பணிபுரியும் அனுபவம் வாய்ந்த, பல ஆண்டுகளாக பணிபுரிந்த பல நிரந்தர பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கியது.
இதோடு மட்டுமில்லாமல் எல்லா ஊழியர்களின் சம்பளத்தின் ஒரு பகுதியையும் பிடித்தது. இத்தனைக்கும் அந்த நிறுவனம் பல ஆண்டுகளாக மிக அதிகப்படியான லாபத்தினை தொடர்ச்சியாக சம்பாதித்துக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் அந்த காலாண்டிலும் நஷ்டமில்லை, எதிர்பார்க்கப்பட்ட லாபத்தின் அளவில் சிறிது லாபம் குறைந்ததற்கே பணி நீக்கம், சம்பள பிடித்தம் என கொண்டாடிவிட்டது. பெரும்பாலான செய்தித்தாள்கள் இந்த செய்தியை வெளியிடவே இல்லை. வெளியிட்ட சில செய்தித்தாள்களும் 5வது பக்கத்தில் சிறிய செய்தியாகவே வெளியிட்டன.
தற்போது அமெரிக்காவிலும், உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவுகளினால், பல ஐ.டி. நிறுவனங்கள் தமது லாபத்தில் எந்த குறைவும் ஏற்படக்கூடாது என்பதற்காக தமது பணியாளர்களை நீக்க முடிவு செய்துள்ளதாக தெரிய வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஐ.டி. நிறுவனங்கள் கொழுத்த லாபங்களை சம்பாதித்தன என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால், லாபங்கள் பார்க்கும் போது பணியாளர்களை உபயோகித்துவிட்டு, அதன் அளவு குறையும் போது தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்குவதென்பது சரியானது அல்ல.
இந்தியாவின் சிறப்பான முன்னேற்றத்திற்கு காரணம் அதன் தகுதியும் திறமையும் வாய்ந்த மனித வளங்களே!. இந்தியா வல்லரசாக மாறிக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அதன் மனித வளங்களின் நலன்களை பேணிப் பாதுகாப்பதோடு அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்திய அரசாங்கம் முன்வர வேண்டும்.
செவி சாய்க்குமா அரசு?