நான் படித்தது ஆங்கிலம் லிட்ரேச்சர் பி.ஏ. சிறு வயதில் எல்லோரையும் போல வானத்தை பார்த்து நட்சத்திரங்கள், சந்திரன் போன்றவைகளையெல்லாம் கண்டு வியந்திருக்கிறேன்.
யாராவது என்னை வீட்டிற்குத் தேடி வந்தால், "அவனை லைப்ரரியில் சென்றால் பார்க்கலாம்" என்று கூறுவார்கள். நான் டிராயர் போட்டிருந்த காரணத்தால் இவன் சிறுவன் என்று நூலகத்தில் உறுப்பினராக சேர்க்க மறுத்துவிட்டார்கள். நானும் விடவில்லை. ஒரு முக்கியமான நபரின் சிபாரிசுக் கடிதத்துடன் உறுப்பினராகச் சேர்ந்து விட்டேன்.
பகுத்தறிவு வளர வளர பல விஞ்ஞானப் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தேன். அப்போது சோவியத் யூனியன் (USSR) சிதறாமல் இருந்த நேரம். முன்னேற்றப் பதிப்பகம் (Progressive Publishers) என்ற சோவியத் பதிப்பகத்தார் மிகச் சிறந்த முறையில் விஞ்ஞானப் புத்தகங்களைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டனர். நியூ செஞ்சுரி புத்தக நிலையம் மூலமாக அது மக்களுக்குக் கிடைத்தது. அப்படிப்பட்ட புத்தகங்களில் ' பரீஸ் லே' என்பவர் எழுதிய 'பூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின?' என்ற புத்தகம் (1973 ல் வாங்கினேன்) என்னை மிகவும் ஈர்த்தது மட்டுமல்லாமல் தீவிரமாகச் சிந்திக்கவும் வைத்தது.
அதைத் தொடர்ந்து எனக்குத் தோன்றுகிற சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடைதேடி அதற்கான அறிவியல் புத்தகங்களைத் தேடி அலைந்து என் அறிவியல் அறிவை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொண்டேன்.
இப்படிப் பரந்து பட்ட அறிவு வளர வளர தேடுதலும், ஆராய்ச்சியும் தொடர்ந்தது. அது எப்படிப்பட்ட தேடுதல், ஆராய்ச்சி என்றால் இந்த உலகம், பிரபஞ்சம், நட்சத்திரங்கள் தோன்றியது எப்படி என்பதில் ஆரம்பித்து அவையெல்லாம் சின்னஞ்சிறு அணுக்களால் ஆக்கப்பட்டவை;
ஆகவே அந்தச் சின்னஞ்சிறு அணு எப்படித் தோன்றியது என்று மண்டையை உடைத்துக் கொண்டு கேட்கப் போய் அது ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கைக்கும், குவாண்டம் பிசிக்ஸ்சுக்கும் கொண்டு போய்விட்டது.
அதைத் தொடர்ந்து போகப் போக அது நிறை (mass) என்பது என்ன என்பதிலும், இருள் சக்தி (Dark Energy) என்றால் என்ன என்பதிலும் வந்து நின்றது. இவற்றைப் பற்றியும் இவையின் தோற்றம், இருப்பு பற்றியும் தெரிந்து கொண்டால் இது நாள் வரை தேடிய பல சங்கதிகளுக்கு நம்மால் விடை கண்டுவிட முடியும்; என்று விடாப்பிடியாக இரவு 12 மணிக்கு மேல் உட்கார்ந்து கொண்டு (அப்போதுதான் உலகமே அமைதியாய் இருக்கும்) ஏராளமான Reference Books, என்சைக்ளோபீடியா, பிரிடிஷ் லைப்ரரி, அமெரிக்கன் லைப்ரரி,இணையம் (internet) என்ற சமுத்திரம் இவற்றிலெல்லாம் புகுந்து, மூழ்கி நனைந்து எழுந்தேன்.
இவற்றில் ஆழமாகச் செல்லச் செல்ல புதுப்புது உண்மைகள் கிடைத்துக் கொண்டே இருந்தன. ஏதாவது ஒரு சந்தேகம் எழுந்துவிட்டால் அந்த சந்தேகத்தைப் போக்குவதற்குப் பல நூல்களைத் தேடி அதைத் தீர்த்துக் கொண்ட பின்புதான் வேறு வேலையைப் பார்ப்பேன்.
இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணமாக இப்போது சொல்லப்படுகிற பிக் பேங் தியரியில் எனக்குத் தோன்றிய சந்தேகங்களைத் தீர்ப்பதற்கான பதில் இல்லை.
அப்போதுதான் யூரோப்பியன் ஆர்கனிசேஷன் பார் நியூகிளியர் ரிசர்ச் (European Organisation for Neuclear Research - CERN) என்ற அமைப்பினரும் என்னைப் போன்று பொருட்கள் என்றால் என்ன என்பதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அவர்களைத் தொடர்ந்து நானும் ஓடினேன். அந்த மாபெரும் ஞானிகளின் வழிகாட்டலில் துரோணரின் சிலையை வைத்து ஏகலைவன் வழிபட்ட மாதிரி நானும் ஏராளமானவற்றைத் தெரிந்து கொண்டேன்.
இதன் விளைவுதான் மேலே உள்ள கட்டுரை.