“தமிழன் என்று சொல்லடா தழை இலைகளை மெல்லடா என்றல்லவா பாட விரும்புகிறான் துரோகத் தமிழன்” என்று கடிதம் எழுதி, இலங்கை தமிழர்களைக் காக்க குரல் கொடுப்போரை வசைபாடி கடிதம் எழுதி, இன்று நடக்கும் மனித சங்கிலி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழக முதலமைச்சர், ஈழத் தமிழர்களின் துயர் துடைக்கத் தவறிவிட்டது மத்திய அரசு என்று குற்றம்சாற்றிப் பேசிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலரையும், அக்கட்சியின் அவைத் தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான மு. கண்ணப்பனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார்.
“சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது” என்று கூறியுள்ள முதலமைச்சர், அந்தக் கடமை மேலும் தொடருமா? என்று கேட்டதற்கு, “தெரியாது” என்று பதிலளித்து, சட்டத்திற்கு தான் அளித்துள்ள சுதந்திரத்தைப் பறை சாற்றியுள்ளார்.
அரசிற்கு எதிராக வெறுப்புணர்ச்சியையும், அதிருப்தியையும் தூண்ட முயற்சித்தனர் (இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 124 (ஏ)) என்றும், சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளைத் தூண்டுதல், ஆதரவளித்தல், ஆலோசனை கூறல் ஆகியவற்றைச் செய்தனர் (சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 13 (1) (பி)) என்றும் குற்றம்சாற்றப்பட்டு வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மிகச் சாதாரண புரிதலுடன் கூறுவதெனில் இவர்கள் பேசியது ‘தேசத் துரோகம்’ என்று குற்றம்சாற்றப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் தேதி சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்த அரங்குக் கூட்டத்தில் ஈழப் பிரச்சனை குறித்துப் பேசிய வைகோ, மத்திய அரசிற்கு எதிராக சில குற்றச்சாற்றுகளைக் கூறினார். இலங்கைத் தமிழர்களை கொன்று குவித்துவரும் சிறிலங்க அரசிற்கு ஆயுத உதவிகளைச் செய்ததன் மூலம், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு இந்தியா துணை உதவி புரிந்துள்ளது என்பது வைகோவின் குற்றச்சாற்று.
இந்தக் குற்றச்சாற்றுக்கு மத்திய அரசு பதிலளித்து மறுத்திருக்க வேண்டும் அல்லது வைகோவின் குற்றச்சாற்று தவறானது என்று இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசிவோரை ‘பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்’ என்று பேசிவரும் தமிழ்நாட்டு காங்கிரஸ்காரர்கள் பதிலளித்து நாட்டு மக்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.
அதைச் செய்யாமல் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரித்துப் பேசுவோர், பிரிவினையை தூண்டும் வகையில் பேசியிருப்போர் மீது தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்க, வைகோவும், கண்ணப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை செய்வது தேசத் துரோகமாகுமா?
வைகோவின் பேச்சு நமது நாட்டிற்கு எதிரான அதிருப்தியை, வெறுப்புணர்வை தூண்டிவிடும் செயல் என்று எவ்வாறு கூற முடியும்?
வைகோவை கைது செய்வதற்கு காரணமான அவருடைய பேச்சின் ஒரு பகுதியை காவல் துறை வெளியிட்டுள்ளது. அதில், “நாங்களும் எங்கள் தமிழர்களுக்கு ஆயுதம் கொடுப்போம், ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டால், வைகோ முதல் ஆளாக ஆயுதம் ஏந்திச் செல்வான் (கூட்டத்தினரைப் பார்த்து நீங்கள் ஆயுதம் ஏந்தத் தயாரா என்று வைகோ கேட்டார். அதற்கு கூட்டத்தினர் தயார் தயார் என்று பதில் அளித்தனர்). ஆயுதம் ஏந்திப் போராடுவதற்காக இளைஞர்களை திரட்ட முடியும் என்று மத்திய அரசை எச்சரிக்கிறேன். அங்கேயுள்ள ஒருமைப்பாட்டை காப்பாற்ற இங்கேயுள்ள ஒருமைப்பாட்டை இழக்கவேண்டாம் என்று எச்சரிக்கிறேன். டெல்லியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எதிராக நடந்தால் அந்த ஆட்சியை நாங்கள் எதிர்ப்போம்” என்று வைகோ பேசியுள்ளார் என காவல் துறை வழக்கிற்கும், கைதிற்கும் காரணம் காட்டியுள்ளது.
வைகோ இவ்வாறு பேசியதற்குக் காரணம் என்ன?
வைகோ இவ்வாறு பேசியதற்கு பல நாட்களுக்கு முன்னரே பிரதமர் தனக்கு எழுதிய கடிதத்தை அடிப்படையாக்கி இந்தக் குற்றச்சாற்றைக் கூறியுள்ளாரே. சிறிலங்க அரசிற்கு மறைமுகமாக இராணுவ உதவி செய்வதாக கூறப்படுகிறதே அது உண்மையா? என்று கேட்டு பிரதமருக்கு தான் எழுதிய கடிதத்திற்கு பதிலளித்து பிரதமர் அலுவலகம் அனுப்பிய பதில் கடிதத்தில், “சிறிலங்காவின் இறையாண்மையைக் காக்க இந்தியா உதவி வருகிறது” என்று கூறப்பட்டிருந்தது என்று வைகோ கூறினார். எனவே அவர் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்துத்தான் பேசியுள்ளாரே தவிர, அதனை நாட்டிற்கு எதிரான வெறுப்புணர்ச்சியை தூண்டும் நடவடிக்கையாக கருதுவதற்கு இடமில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கையை எதிர்த்து சொல்லப்படும் கருத்து, எப்படி இந்தியாவின் நலனிற்கும், ஒற்றுமைக்கும் எதிரான கருத்தாக முடியும்?
நீங்கள் (மத்திய அரசு) இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்க அரசிற்கு தொடர்ந்து ஆயுதம் வழங்கினால்... நாங்களும் தமிழர்களுக்கு ஆயுதம் வழங்குவோம், அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் போராடத் துணிவோம் என்பதும், சிறிலங்க இறையாண்மையைக் காக்க நீங்கள் ஆயுத உதவி செய்தால் அது தமிழ் மக்களிடையே மத்திய அரசின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்திவிடும், அவர்களுடைய மனதில் பிரிவினை எண்ணம் ஏற்பட்டு அதன் காரணமாக இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்ற பொருளில் ஒரு எச்சரிக்கையைத்தான் வைகோ செய்துள்ளாரே தவிர, அது எந்த விதத்திலும் தேச விரோத பேச்சாக கருதுவதற்கு இடமில்லை.
ஆயுதம் ஏந்தி இங்கே போராடுவோம் என்றா கூறினார். சிறிலங்க அரசிற்கு எதிராகத்தான் (அங்கு சென்று) போராடுவோம் என்றுதான் பேசியுள்ளார். இது எதிர்ப்பைக் காட்டி, மத்திய அரசின் நடவடிக்கைகளை தமிழர்களுக்கு சாதமாக திருப்ப அழுத்தம் கொடுக்கும் பேச்சுதானே தவிர, பிரிவினையைத் தூண்டும் பேச்சாக கருதுவதற்கே இடமில்லை.
எப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார் என்பதையும் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் தொடர்ந்துக்கொண்டிருக்கும் நிலையில், அதனை இந்திய அரசு தலையிட்டு நிறுத்தவேண்டும் என்று தமிழகத்தில் அரசியல் ரீதியாக ஒரு அழுத்தம் கொடுக்கப்படும் நிலையில் வைகோ பேசியிருப்பது ஒரு உணர்வுப்பூர்வமான பேச்சே தவிர, அது இந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதான பேச்சாக கருதுவதற்கு இடமில்லை.
அண்ணாமலை மன்றத்திலும் சரி, அதற்கு முன்பு பல்வேறு கூட்டங்களில் பேசியபோதும் சரி, தமிழர்கள் மீது இனப் படுகொலையை கட்டவிழ்த்துவிட்டுவரும் சிறிலங்க அரசிற்கு எந்த உதவியும் மத்திய அரசு செய்யபக்கூடாது என்றுதான் வைகோ பேசிவருகிறார். அதன்பிறகு, சிறிலங்க அரசிற்கு மத்திய அரசு ராடார் உள்ளிட்ட இராணுவ உதவிகளை செயது வருகிறது என்பது உறுதியானப் பிறகே, சிறிலங்க அரசின் தமிழினப் படுகொலைக்கு மத்திய அரசு துணை போகிறது என்று அவர் பேச தலைப்பட்டார். இதில் தேசத் துரோகக் குற்றச்சாற்றிற்கு என்ன அடிப்படை உள்ளது?
கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் ஏற்றப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூட, இந்தியாவின் இறையாண்மையைக் காப்பதில் நாங்கள் எவருக்கும் பின்தங்கியவர்கள் அல்ல என்றுதான் வைகோ கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி என்று தமிழகக் கட்சிகள் அனைத்தும் மத்திய அரசு செய்துவரும் இராணுவ உதவிக்கு எதிராகத் தான் குரல் கொடுத்து வருகின்றன.
மன்மோகன் சிங் அரசின் நடவடிக்கைகளை எதிர்த்தாலே தேசத் துரோகமா?
இரட்டை நிலைக்கு எதிர்ப்பு!
தமிழர்களை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவத்தைக் கொண்டு இன அழிப்பு செய்துவரும் சிறிலங்க அரசிற்கு இராணுவ உதவி செய்வதையும், அது உண்மையா என்று கேட்டால் அந்த நாட்டின் இறையாண்மையைக் காக்க உதவி செய்கிறோம் என்று மத்திய அரசு பதில் கூறுமென்றால், அதற்கு என்ன பொருள்? தமிழர்களின் நலனை விட, சிறிலங்காவின் இறையாண்மை எங்களுக்கு முக்கியம் என்று மத்திய அரசு கருதுகிறது என்பதுதானே பொருள்?
இலங்கை இனப்பிரச்சனைக்கு இராணுவ நடவடிக்கையின் மூலம் தீர்வு காண முடியாது, பேச்சுவார்த்தையின் மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு என்று கூறும் மத்திய அரசு, இராணுவ நடவடிக்கையின் மூலம் அரசியல் தீர்விற்கு வழி பிறந்துள்ளது என்று கூறும் சிறிலங்க அரசிற்கு இராணுவ உதவியும் செய்கிறதென்றால் அது முன்னுக்குப் பின் முரண்பாடான இரட்டை நிலை அல்லவா?
தமிழர்களுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த சிறிலங்க அரசை வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்ட பின்னும் அவ்வாறு மத்திய அரசு சிறிலங்காவை வலியுறுத்தவில்லையே. “நடக்கும் போரில் அப்பாவித் தமிழர்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மேம்போக்காகத்தானே ராஜபக்சாவிடன் பிரதமர் கேட்டுக்கொண்டார்?
இப்படிப்பட்ட முரண்பட்ட வெளிப்பாடான, ரகசிய நடவடிக்கைகள் தமிழ்நாட்டுத் தமிழர்களை கோபப்படுத்தாதா? அதன் வெளிப்பாடுதானே மத்திய அரசின் நடவடிக்கையை கண்டிக்கும் குரல்கள். இதை எப்படி தேசத் துரோகம் என்று கூற முடியும்?
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தலைவர்களின் பேச்சையெல்லாம் இந்த நாட்டிற்கு எதிரானது என்றுதான் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எப்போதும் கூறிவந்துள்ளனர். ராஜீங் காந்தி படுகொலைக்குக் கூட தி.மு.க.தான் காரணம் என்று கூட பேசியிருக்கிறார்கள். அதையே காரணம் காட்டி மத்திய அரசைக் கூட ஒருமுறை கவிழ்த்துள்ளார்கள். இப்போது அவர்களோடு கூட்டணி அமைத்து மத்தியில் ஆட்சியில் உள்ளார்கள். அவர்களைப் பொறுத்தவரை இதெல்லாம் மிக சகஜமான நிலைமாற்றமே. இப்போதும் அப்படித்தான் கூறிவருகிறார்கள்.
உள்ளபடியே காங்கிரஸ் கட்சியினருக்கு தேச ஒற்றுமையில் உறுதியிருக்குமானால், மராட்டியத்தில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டும்தான் வேலை அளிக்க வேண்டும் என்று கூறி, மற்ற மாநிலத்தவர்களை அடித்து துரத்திக்கொண்டிருக்கும் மஹாராஷ்டிர நவ நிர்மான் கட்சியின் தலைவரான ராஜ் தாக்ரே மீதல்லவா தேச துரோக வழக்குத் தொடர்ந்திருக்க வேண்டும்? அவருடைய நடவடிக்கைகள் இந்திய ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரானது என்று கூறி அவர் மீதல்லவா சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்? ஆனால் என்ன பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார்கள்? வன்முறையைத் தூண்டுவது, பொதுச் சொத்திற்கு சேதம் விளைவித்தது ஆகிய இரண்டு குற்றங்களுக்குத்தான் அவர் மீது வழக்கு, கைது செய்து உடனே பிணையில் விடுதலை. ஏன்? தேசத் துரோக வழக்கு தொடர வேண்டியதுதானே அங்குள்ள காங்கிரஸ் ஆட்சியினர்? ஏன் செய்யவில்லை? ஏனென்றால் தமிழர்கள் அல்ல மராட்டியர்கள், அவர்களின் இன, மொழி உணர்வு வலிமையானது.
இதெல்லாம் புரிந்தவர்தான் தமிழக முதலமைச்சர். அவருக்கு கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நெருக்கடி அளித்தது. கூட்டணி தர்மத்தைக் காக்க, தனது ஆட்சிக்கு சிக்கல் வராமல் தடுக்க, அவர்களின் கோரிக்கையை ஏற்று வைகோவை கைது செய்துள்ளார். எனவே இது அரசியல்தானே தவிர, தேசப்பற்றுச் சார்ந்த நடவடிக்கை அல்ல.