1993
முதல் 2008ஆம் ஆண்டுவரை புவி மைய சுழற்சிப் பாதையில் 30 செயற்கைக்கோள்களை (14 இந்தியா, 16 சர்வதேச செயற்கைக்கோள்கள்) வெற்றிகரமாக செலுத்திய நம்பகத்தன்மைமிக்க துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனமான பி.எஸ்.எல்.வி. (Polar Satellite Launch Vehicle - PSLV), 1,380 கி.கி. எடைகொண்ட சந்திராயன்-1 விண் ஓடத்தை புவியில் இருந்து 255 கி.மீ. தூர நெருங்கிய (அபோஜி) புவி சுழற்சிப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.தற்பொழுது புவியை நீள் வட்டப்பாதையில் வலம் வந்துக்கொண்டிருக்கும் சந்திராயன்-1, அதன் சுழற்சிப் பாதையில் அதிகபட்ச தூரத்திற்கு (பெரிஜி) 22,800 கி.மீ. தூரம் வரை செல்லும். இந்த நிலையிலிருந்து அதனை நிலவை நோக்கி நகர்த்தும் முயற்சி துவக்கப்படும்.சந்திராயன் விண்கலத்திலுள்ள லாம் (Liquid Apogee Motor - LAM) என்றழைக்கப்படும் உந்து இயந்திரத்தை இயக்கி (இது மிகவும் நேர்த்தியாகச் செய்யப்படவேண்டிய சிக்கல் நிறைந்த பணியாகும்) அதன் சுழற்சிப் பாதையை பெரிதாக்கி, நிலவை நோக்கி நகர்த்துவார்கள். இதனை இந்திய வானியல் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டு நிலையம் (பெங்களூருவிற்கு அருகிலுள்ள பீனியாவில் உள்ளது) நிறைவேற்றும்.
புவியிலிருந்து சற்றேறக்குறைய 3,80,000 கி.மீ. தூரத்திலுள்ள நிலவிற்கு அருகில் சந்திராயன்-1 கொண்டு செல்லப்பட்டவுடன், உந்து இயந்திரத்தை இயக்கி அதன் வேகத்தை மட்டுப்படுத்தி, நிலவின் ஈர்ப்பு சக்தியால் சந்திராயன் நிலவின் சுழற்சிப் பாதைக்கு செல்லுமாறு தள்ளப்படும். அதன் பிறகே, நிலவின் பரப்பில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்தப்பட்டு, நிலவை ஆய்வு செய்யும் சோதனை வாகனம் சந்திராயனில் இருந்து நிலவில் தரையிரக்கப்படும். இதற்கு மூன் இம்பேக்ட் பிரோப் (எம்.ஐ.பி.) என்று பெயரிட்டுள்ளார்கள்.
இந்த சோதனை இயந்திரத்தில்தான் நிலவை சோதிப்பதற்கான 11 ஆய்வுக் கருவிகள் உள்ளன. இவற்றில் 5 இந்தியாவில் உருவாக்கப்பட்டவை, 3 ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்புடன் இஸ்ரோ இணைந்து உருவாக்கியது. ஒன்று பல்கேரிய நாட்டிலிருநதும், மற்ற இரண்டு அமெரிக்காவில் இருந்தும் தருவிக்கப்பட்டவை.
இந்தக் கருவிகளில் டி.எம்.சி. (Terrain Mapping Camera) என்பது நிலவின் மேல் பரப்பை முழுமையாக படமெடுத்து அனுப்பும். இந்த புகைப்படங்களைக்கொண்டு நிலவு உருவான பரிணாமத்தை கண்டறிய முடியும்.
அடுத்ததாக எச்.எஸ்.ஐ. (Hyperspectral Imager) என்றழைக்கப்படும் உபகரணம், நிலவின் புவியியல் அமைப்பையும் (Geological), அதன் கனிம வளங்கள் குறித்த மிக முக்கியத்துவம் வாய்ந்த விவரங்களைச் சேகரிக்கும். இத்துடன் ஒரு சிசிடி புகைப்படக் கருவியும் இணைக்கப்பட்டுள்ளதால் நிலவின் மேற்பரப்பு குறித்த கூடுதல் தகவல்களைப் பெறமுடியும். நிலவில் பிற்காலத்தில் மனிதனை இறக்குவது உள்ளிட்ட அதன் பரப்பில் நிலைப்படுத்தக்கூடிய விவரங்களை எம்.ஐ.பி. திரட்டும்.
சந்திராயனின் நோக்கமும், முக்கியத்துவமும்!
சந்திராயன்-1 விண்கலத்தை செலுத்தி ஆய்வு மேற்கொள்வதற்கான மூன்று முக்கியக் காரணங்களை இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1. ஆளில்லாத விண்கலம் கொண்டு நிலவை சுற்றிவரச் செய்வது
2. நிலவின் மேற்பரப்பில் கனிம, இரசாயன ஆய்வுகளை மேற்கொள்வது
3. இதன்மூலம் நமது நாட்டின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவது
என்று கூறியுள்ளது.
இதில் இஸ்ரோ தெரிவித்துள்ள இரண்டாவது காரணம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. நிலவின் மேற்பரப்பிலும், அதன் அடியிலும் உள்ள கனிம வளங்களை அறிவதே சந்திராயன்-1 விண்கலத் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமாகும்.
நிலவிலுள்ள கனிம வளங்கள் குறித்து நீண்ட காலமாகவே ஒரு அதீத ஆர்வம் ஆய்வு நாடுகளிடம் (அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை) இருந்தது. நிலவிற்கு ஆளை அனுப்பிய அமெரிக்காவின் நோக்கமும், சயூஸ் என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அனுப்பி நிலவில் ரஷ்யா இறக்கியதும் இந்த ‘வளமான’ நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவையே. அந்த வளங்களில் மிக முக்கியமானது ஹீலியம் -3 எனும் வேதியக் கனிமமாகும்.
எரிபொருள் தேவையை நிவர்த்தி செய்ய ஹீலியம்!
ஹீலியத்தின் இருப்பு குறித்து அறிவதும், அதனை புவிக்கு எப்படிக் கொண்டுவருவது எப்படி என்பது பற்றி ஆராய்வதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். இதனை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடமே விளக்கினார். “ஒரு டன் ஹீலியம்-3யைக் கொண்டு நமது நாட்டின் ஒராண்டிற்கான எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்துவிட முடியும்” என்று உற்சாகம் ததும்பக் கூறினார்.
இத்திட்டத்தில் தங்களை அமெரிக்காவும், ஐரோப்பாவும் (ஏற்கனவே ரஷ்யாவுடன் இணைந்தே நாம் இத்திட்டம் தொடர்பாக செயல்பட்டு வருகிறோம்) நம்மோடு இணைத்துக்கொள்வதற்கு ஹீலியமே முக்கிய காரணம் என்று கூடக் கூறப்படுவதுண்டு.
ஒரு டன் ஹீலியத்தால் நமது நாட்டின் ஒராண்டுக் கால எரிசக்தித் தேவையை நிவர்த்தி செய்ய முடியுமென்றால் அது எப்படி?
நாளை பார்ப்போம்.