திரையுலகத்தினர் போராட்டம் தொடரவேண்டும்!
இலங்கையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்; மத்திய அரசு இப்பிரச்சினையில் தலையிட்டு சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். - இதுவே அண்மையில் தமிழ்த் திரையுலகினர் பாரதிராஜா தலைமையில் இராமேஸ்வரத்தில் குழுமி நடத்திய போராட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட விஷயங்கள்.
இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்ததைக் கண்டித்தும், மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பித்து கூட்டுக் குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற ஆவன செய்ய வேண்டும் என்றும் கூறி இதேபோன்றதொரு போராட்டத்தை சென்னையில் தமிழ்த் திரையுலகினர் நடத்திக் காண்பித்தனர்.சென்னையில் நடைபெற்றது உண்ணாவிரதப் போராட்டம். இராமேஸ்வரத்தில் நடைபெற்றிருப்பது பேரணி - பொதுக்கூட்டம். போராட்டத்தின் தன்மையில்தான் வேறுபாடே தவிர, முடிவு என்னவோ ஒகேனக்கல் பிரச்சினையைப் போன்றதுதான் எனலாம். உண்மையிலேயே தமிழர்களுக்கு ஏதாவது ஒரு நாட்டில் இன்னல் என்றால், ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் ஒன்று திரள்வார்கள் என்பதை மத்திய அரசுக்கும், மற்ற நாடுகளுக்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், சில நடிகர்களும் இராமேஸ்வரத்தில் கூடி உணர்த்தியிருப்பதை தமிழன் என்ற முறையில் வரவேற்காமல் இருக்க முடியாது.ஆனால் ஒகேனக்கல் உண்ணாவிரத மேடையில் மைக்கை ஆளாளுக்கும் தங்கள் சொந்த விருப்பு, வெறுப்புகளைத் தீர்ப்பதற்காக பயன்படுத்தியதை நாட்டு மக்கள் அறிவார்கள்.பேச வந்த பிரச்சினையை விட்டுவிட்டு, எதற்காக குழுமியிருக்கிறோம். யார்- யார் கவனத்தை ஈர்க்கப் போகிறோம் என்பதை மறந்து, போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மட்டுமே தமிழுணர்வு உள்ளவர்கள் போலவும், கலந்து கொள்ளாதவர்கள் தமிழ்த் திரையுலகில் மின்னிக் கொண்டிருந்தாலும், வேற்று மொழிக்காரர்கள் என்பதும் போலவும் சிலர் பேசி தங்களது வெறுப்புகளை வெளிக்கொட்டியதோடு, மேடையில் எந்த அளவுக்கு தங்களது அறியாமையை வெளிக்காட்ட முடியும் என்பதையும் உலகம் முழுவதும் தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த தமிழர்களுக்கு நிரூபித்தனர்.இராமேஸ்வரம் பொதுக்கூட்டத்தைப் பொருத்தவரை பல இயக்குனர்கள் ஆவேசமாகப் பேசிய போதிலும், சீமான், பாரதிராஜா ஆகியோர் இரத்தினச் சுருக்கமாகப் பேசி தாங்கள் சொல்ல வந்ததை விட்டு வெளியே செல்லாமல் கருத்துகளை மட்டும் பதிவு செய்தனர்.
கவிஞர் வைரமுத்து ஒருபடி மேலேபோய், `தற்போது இங்கே கூடியுள்ளோம். கரை கடந்து இலங்கைக்குச் செல்ல வெகுநேரமாகி விடாது' என்று மிரட்டல் தொனியில் கூறினார். சரி, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் கூடி தங்களது ஒற்றுமையை மத்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் நிரூபித்து விட்டாகிவிட்டது. இது மட்டுமே போதுமா? இந்தப் பேரணி மட்டுமே அந்த நோக்கத்தை நிறைவேற்றி விடுமா? நிச்சயம் இல்லை.
இராமேஸ்வரம் பேரணி - பொதுக்கூட்டத்தால் மத்திய அரசுதான் இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டதா? அல்லது இலங்கை அரசு தமிழ்த் திரையுலகினரின் மிரட்டலுக்குப் பணிந்து தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டதா? இரண்டுமே இல்லை. தொடர்ந்து கொண்டுதான் உள்ளன.
ஒரு பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டு, அவற்றின் சாதக பாதகங்களை மசாலா, பாடல்கள், இசை என தங்கள் ரசனைக்கேற்ப கலந்து, முடிவில் யாருமே எதிர்பாராத ஒரு தீர்வைச் சொல்லி முடிப்பதால் திரைப்படம் வேண்டுமானால்; மக்களுக்கு புதிதாக இருப்பதுடன் 100 நாட்களைக் கடந்து ஓடி வெற்றி பெறுவதுடன் தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள், இயக்குனர்களுக்கு காசு-பணத்தையும், புகழையும் பெற்றுத் தரும். ஆனால், அதுமாதிரியானதல்ல இலங்கைத் தமிழர் பிரச்சினை.
இலங்கை அரசுக்கு நேரடியாகவும், சில நேரங்களில் மறைமுகமாகவும் ஆயுதங்கள் உட்பட பல்வேறு உதவிகளை அளித்து வரும் மத்திய அரசை உறுதியுடன் எதிர்த்து, இலங்கைக்கான ஆதரவை உடனே நிறுத்த வலியுறுத்துவது ஒன்றே தமிழர்களைக் காப்பாற்ற உதவும். அதனை யாரால் செய்ய முடியும்?
அந்த இடத்தில் இருப்பவர்கள் அதனை உணர்ந்து, நாடு சுதந்திரம் அடைவதற்காக மகாத்மா மேற்கொண்ட சத்யாகிரக போராட்டம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற போராட்டங்களை மத்திய அரசைக் கண்டித்து மேற்கொள்ள வேண்டும். அதுபோன்ற போராட்டங்களில் மாநில அரசின் வேண்டுகோளுங்கிணங்க, நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகினர் தங்களுக்குள் உள்ள பாலிடிக்ஸை (அரசியல்) தூக்கி எறிந்து விட்டு கலந்து கொள்ள வேண்டும். (அரசியலில் சில நடிகர்கள் உள்ளனர் என்பது வேறு விஷயம்).
அதுபோன்றதொரு போராட்டம் நடத்தினால் மட்டுமே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்பதில் மாற்று கருத்து கிடையாது.
அதைவிடுத்து கோஷ்டிக்கு ஒரு கூட்டம் என்பது போன்று தமிழ்த் திரையுலகில் உள்ள ஒவ்வொரு குழுவினரும் தங்கள் பலத்தை நிரூபிக்க விளைவது எல்லாம் வீணான கூட்டமாகவே அமையும். தமிழர்களுக்கு விடிவு ஏற்படுத்தும் கூட்டமாக ஒருபோதும் இருக்காது.