எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் மீது சிறிலங்க இராணுவம் தாக்குதல் நடத்தி, அதன் காரணமாக மிகப் பெரும் அளவிற்கு மனிதாபிமான, மனித உரிமை பிரச்சனை எழுகிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து அவர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசின், அந்நாட்டு இராணுவத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகவும் தமிழ்நாட்டில் இருந்து குரல் எழுவது இயல்பான, இயற்கையான எதிர் வினையாகும்.
ஆனால், அவ்வாறு சிறிலங்க அரசின் அடக்குமுறையையும், சொந்த நாட்டு மக்கள் மீது அவர்கள் கடந்த 30 ஆண்டுக்காலமாக கட்டவிழ்த்துவிட்டுவரும் காட்டுமிராண்டித்தனமான இன அழிப்பிற்கு எதிர்ப்புக் குரல் எழும்போதெல்லாம், இங்கிருந்து சில அரசியல் ‘தலைவர்களும்’, சில பத்திரிக்கைகளும் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவான குரலாக சித்தரித்து எதிர்க்குரல் கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அப்படிப்பட்ட குரல்கள் இப்பொழுதும் எழுந்துள்ளது தமிழர்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு நடத்திவரும் இன ஒடுக்கலுக்கு இந்தியா ஆயுதம் தந்து உதவுகிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ பேசினார். உடனே தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக அவர் பேசுகிறார் என்றும், ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயணசாமி கூக்குரலிட்டார்.
சிறிலங்க இராணுவத்தால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டும், அந்நாட்டு விமானப் படை தொடர்ந்து நடத்திவரும் குண்டு வீச்சால் வீடிழந்து தங்கள் மண்ணிலேயே இரண்டரை இலட்சம் பேர் அகதிகளாக சாலையோரங்களிலும், மரத்தடிகளிலும் தஞ்சமடைந்துள்ள அவல நிலையை அறிந்து, அவர்களைக் காப்பாற்ற தமிழ்நாட்டில் இருந்து அபயக்குரல் மீண்டும் எழும்பியுள்ளது. ஆனால் இதனை விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல் என்கிறது நமது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு நூற்றாண்டுக் கால ‘பாரம்பரியமிக்க’ ஆங்கில நாளிதழ் ஒன்று.
ஒன்றேகால் இலட்சம் ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ளனர், தங்கள் நாட்டிலேயே இரண்டரை இலட்சம் தமிழர்கள் அகதிகளாகி உணவு, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் ஏதும் கிட்டாமல் அல்லுறுகின்றனர். அவர்களுக்கு உதவிடும் நோக்கோடு செயல்பட்டுவந்த சர்வதேச தொண்டு நிறுவனங்கள் சிறிலங்க அரசால் வெளியேற்றப்பட்டுவிட்டன. இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல், தனது கருத்துப் பக்கத்தில் நீண்ட ‘தேசப்பற்று’ கட்டுரை தீட்டியுள்ளது அந்த நாளிதழ்.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக எழுப்படும் குரல்கள் யாவும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான குரல்களாம். இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள அந்த ‘பயங்கரவாத’ இயக்கத்தின் தூண்டுதலால்தான் ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் சிறிலங்காவிற்கு எதிராக குரலெழுப்புகின்றனவாம். அந்த தமிழ் வெறித்தனக் கூச்சலிற்கு ஆட்பட்டு ஆளும் கட்சியான தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் அதே குரலை (அதாவது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான) குரலை ஒலிக்கின்றனவாம். இப்படியெல்லாம் கூறிவிட்டு, அந்தக் கட்டுரையாளர், தனது மிதமிஞ்சிய தேசப்பற்றை ஒரு படி மேலே சென்று பறைசாற்றியுள்ளார்.
இதனைக் கண்டு மத்திய அரசு தனது நிலையை மாற்றிக்கொள்ளக்கூடாதாம். விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டுமாம். மிகுந்த விசனத்துடன் தனது ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்நாட்டின் கட்சிகளும் அமைப்புகளும் முன் வைத்த காரணங்களை மறுத்து ஏதாவது ஆதாரப்பூர்வமான தகவலைத் தந்திருந்தால் இந்தக் கட்டுக் கதையாளர் எழுதியதில் ஏதாவது உண்மை இருக்குமோ என்று கூட விவரமறியாதவர்கள் எண்ணிப் பார்த்திருப்பார்கள். அப்படி எதுவும் கூறாமல், ஒரே ஒரு காரணத்தை மட்டும் கூறியுள்ளார்.
அவர் கூறிய காரணம் இதுதான்: விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர் நடத்திவரும் சிறிலங்க இராணுவம், புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கியுள்ள இடத்தை நெருங்கிவிட்டது. அந்த ஆபத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள தமிழ்நாட்டிலுள்ள தனது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டுள்ளார் என்று எழுதியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும் தங்களைக் காத்துக் கொள்ளவது எப்படி என்று தெரிந்தவர்களா, தெரியாதவர்களா என்பது யாருக்குத் தெரியவில்லை என்றாலும், இதுநாள்வரை அவர்கள் கொடுத்துவந்த பதிலடியில் சிக்கி சின்னபின்னமான சிறிலங்க இராணுவத்திற்கு நன்றாகவே தெரியும். எனவே குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பது கட்டாயம் விடுதலைப் புலிகள் இல்லையென்பது விவரமிறிந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.
ஆனால் இந்தக் கட்டுரையாளரின் நோக்கம் அங்குள்ள உண்மையைக் கூறுவது அல்ல, மாறாக, இன்று தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கக்கூடிய முடிவு, சிறிலங்க அரசு மீது இந்திய அரசு அழுத்தம் தரக்கூடிய வகையில் இருக்கக் கூடாது என்பதை ‘ஒருவித மிரட்டல்’ மூலம் மிக ‘லாவகமாக’ எடுத்துரைத்துள்ளார். இது யாருடைய தூண்டுதலில் எழுதப்படுவது என்பதும் சிந்திக்கும் ஆற்றலுள்ள தமிழர்களுக்கு தெரியாதது அல்ல. அவர்களுக்குள்ள சிறிலங்கத் தொடர்புகள் அத்துணை ரகசியமானதுமல்ல.
இப்படிபட்ட அரசியல் சாணக்கியம் எல்லாம் இலங்கையில் தமிழர்கள் தங்களின் உரிமைப் போர் துவக்கியபோதே, இங்கு துவங்கிவிட்டதை தமிழர்கள் அறியாதவர்களல்லர். தமிழர் தலைவர் அமிர்தலிங்கத்திற்காக கண்ணீர் சிந்தும் கட்டுரையாளர் அவரும், அவர் சார்ந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னனியும் தமிழ் ஈழம்தான் தீர்வு என்று முடிவு செய்து போராட்டத்தைத் துவக்கியபோது ஆதரித்தவர்களா? அல்லது தமிழர்கள் சம உரிமை பெறுவதற்கு எதிராக ஒவ்வொரு முறையும் இணைந்து செயலாற்றும் சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளான ஜனதா விமுக்தி பெரமுணா, ஜாதிக ஹேல உருமயா போன்றவற்றை எப்பொழுதாவது கண்டித்தவர்களா? ஒருபோதும் இல்லை.
எப்போதெல்லாம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் குரல் எழுப்பப்படுகிறதோ அப்போதெல்லாம் இராஜீவ் காந்தி படுகொலையை நினைவூட்டி, அப்பிரச்சனையை திசை திருப்பி சிறிலங்க அரசின் இனப் படுகொலை திட்டத்திற்கு பலம் சேர்க்கும் தமிழர் எதிர்ப்பை பாரம்பரியமாகக் கொண்ட சக்திகளின் கரங்களே இப்படியெல்லாம் எழுதுகின்றன.
இல்லையென்றால், நேற்று இதே நாளிதழில் எழுதப்பட்ட தலையங்கம் ஒன்றில், ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் நாட்டிலேயே அராஜகத்தை கட்டவிழ்த்து மிகப்பெரிய படுகொலைகளை நடத்திவரும் அரசுகளுக்கு ஆயுதங்களை விற்பதில்லை என்பது தொடர்பாக ஐ.நா.வில் விவாதிக்கப்படவுள்ள தீர்மானம் குறித்து எழுதிய தலையங்கத்தில் கூட, கால் நூற்றாண்டிற்கும் மேலாக திட்டமிட்ட இன ஒழிப்பை மேற்கொண்டு, ஒரு இலட்சம் தமிழர்களை அழித்த சிறிலங்க அரசை அது குறிப்பிட்டிருக்குமே. ஏன் குறிப்பிடவில்லை?
சிறிலங்க அரசை மட்டுமல்ல, சீன அரசிற்கு எதிராக திபெத்திய மக்களின் எழுச்சியைக் கூட இந்த நாளிதழ் தொடர்ந்து கொச்சைபடுத்திதான் எழுதிவந்தது. சீன அரசிற்கு ஆதரவாகவே கட்டுரைகளை வெளியிட்டும் வந்தது. நமது நாட்டைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் பலர் சீன அரசு எப்படியெல்லாம் திபெத்தியர்களை ஒடுக்கியது என்பதை விவரித்து, அது தொடர்பான சில கேள்விகளையும் முன் வைத்தபோது அதற்கு எந்தப் பதிலும் கொடுக்க முடியாமல் தனது பொய்யாடலை நிறுத்திக்கொண்டது இந்த நாளிதழ்.
இலங்கைத் தமிழர்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் நிர்கதியற்று நிற்கும் இச்சூழலில் உண்மையை உலகிற்கு கூறி, சிறிலங்க அரசு மேற்கொண்டுவரும் இன ஒடுக்கலை தடுத்து நிறுத்த இந்திய அரசையும், மற்ற உலக நாடுகளையும் தட்டி எழுப்ப கட்டுரை எழுத வேண்டிய இந்த பாரம்பரிய நாளேடு, அவர்களை பூண்டோடு அழிக்கும் திட்டத்தை நிறைவேற்றிவரும் சிறிலங்க அரச பயங்கரவாதத்திற்கு வலிமை சேர்த்துக்கொண்டிருப்பது அதன் உள் நோக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
தமிழர்கள் சிந்திக்கத் திறானியற்றவர்கள் அல்லர். அவர்களை திசை திருப்ப முடியாது. இலங்கைத் தமிழர்களை இன்றல்ல, என்றைக்கும் தமிழ்நாட்டு தமிழர்கள் விட்டுத் தர மாட்டார்கள். ஏனெனில் அந்த உறவிற்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அது உலகிற்கு வழிகாட்டியாய் திகழும் பண்பாட்டின் பிரதிபலிப்பு.
“இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் கிளர்ந்தெழுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்” எனும் அதன் ஆவல் வெள்ளிடை மலையாகத் தெரிகிறது.
ஊடகத்தின் தலையாய பண்பு அது உண்மையைச் சார்ந்து நிற்க வேண்டும். அதுதான் அதன் தர்மம். அதுவே மக்களின் தகவலறிதல் எனும் கருத்துரிமைக்கு ஒரு பத்திரிக்கை அளிக்கும் உண்மையான மதிப்பு. அதைத் தவிர்த்துவிட்டு, எருதின் புண் காக்கை அறியாது என்பதுபோல், தமிழரின் துயரை மறைத்து, அந்த இனத்தை பூண்டோடு அழிப்பதற்கு துணைபோவதும், அந்த ஈன நடவடிக்கையில் ஈடுபடும் அரசிடமிருந்து விருதையும், பட்டத்தையும் பெறுவதும் மாண்புடைய பத்திரிக்கை தர்மத்தை மானபங்கம் செய்வதாகும்.