இலங்கைத் தமிழர்: பிரச்சனையும் தீர்வும் – 1
, செவ்வாய், 7 அக்டோபர் 2008 (20:39 IST)
இலங்கைத் தமிழர்கள் மீது சிறிலங்க அரசு திட்டமிட்டு நடத்திவரும் தொடர் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்த தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி, இராணுவ நடவடிக்கையை நிறுத்திவிட்டு, அமைதி பேச்சுவார்த்தையைத் துவக்குமாறு சிறிலங்க அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சிறிலங்க இராணுவத்தின் தாக்குதலால் தங்கள் நாட்டிலேயே வீடிழந்து அகதியாய் பல லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் பரிதவிப்பில் உள்ள நிலையில், தி.மு.க.வின் நிலையை விளக்கி பேசிய முதல்வர் கருணாநிதி, மத்திய அரசின் வலியுறுத்தலுக்கு இணங்காமல் தனது இனப் படுகொலை நடவடிக்கையை சிறிலங்க அரசு தொடருமானால், ஈழத் தமிழர்களைக் காக்க தங்களுக்கு (தமிழர்களுக்கு) மத்திய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுமட்டுமின்றி, மற்றொரு முக்கிய கருத்தையும் சென்னை மயிலையில் நடந்த அக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின் பிரச்சனைக்குத் தீர்வு, “முழு விடுதலைதான் வேண்டுமா? இலங்கையில் இருந்து தனி ஈழம் பிரிந்துதான் தீரவேண்டுமா? இது விவாதத்திற்குரிய விடயம்” என்று கூறியுள்ளார். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை! இன்று நேற்றல்ல, 1983ஆம் ஆண்டு முதல் கால் நூற்றாண்டுக் காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையை (சிறிலங்க விடுதலை கட்சி ஆட்சியாக இருந்தாலும், இன்று எதிர்க் கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியாக இருந்தாலும்) சிறிலங்க அரசுகள் நடத்தி வருகின்றன. ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் சிறிலங்க இராணுவம் நடத்திவரும் இன அழிப்பிற்கு இரையாகியுள்ளனர்.
பல லடசக்கணக்கான தமிழர்கள் வீடின்றி அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். ஒன்றேகால் லட்சத்திற்கும் மேலான ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர். அங்குள்ள மக்களின் அடிப்படை வாழ்க்கை கால் நூற்றாண்டுக் காலமாக கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முதலில் அந்நாட்டு இராணுவம் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையே சரியானது. ஆனால் ஈழத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும்
என்று கோருவது எந்த அளவிற்கு பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையை நன்கு அறிந்தவர் அனைவருக்கும் நன்கு தெரியும், இதுநாள்வரை நடத்தப்பட்ட எந்தப் பேச்சுவார்த்தையும் எந்தப் பலனையும் பெற்றுத்தரவில்லை என்பது. 1980 வரை பல்வேறு அரசுகளுடன் அன்று தமிழ் மக்களின் ஏகோபித்தப் பிரதிநிதிகளாக இருந்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி நடத்திய பேச்சிலும் சரி, அதன்பிறகு இலங்கையில் அரசிற்கு எதிரான ஆயுதப் போராட்டம் துவங்கியதற்குப் பிறகும் சரி, நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்தியாவின் வற்புறுத்தலால் திம்புவில் பேச்சுவார்த்தை நடந்தது. எந்தப் பயனும் ஏற்படவில்லை. அது இலங்கையில் மோதல் மேலும் பலமடையவே வழிவகுத்தது.1983
ஆம் ஆண்டிற்குப் பிறகு சிறிலங்க இராணுவத்தின் இன ஒடுக்கல் நடவடிக்கை உச்சக் கட்டத்தை எட்டியதையடுத்து, பல்லாயிரக்கணக்கில் ஈழத் தமிழர்கள் அகதிகளாய் தமிழகத்திற்கு வந்தனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் இன ஒடுக்கல் அதிகரித்த அதே வேளையில் போராளிகளின் பலமும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம், அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் அதுவரை தடையற்று நடந்த இராணுவ தாக்குதலுக்கு பதிலடி விழத் தொடங்கியதும், தனது தாக்குதலை கண்மூடித்தனமாக தீவிரப்படுத்தியது சிறிலங்க இராணுவம். யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள வடமராட்சி, தென்மராட்சி ஆகிய பகுதிகளின் மீது கார்பெட் பாம்பிங் (Carpet Bombing) என்று இராணுவ மொழியில் கூறப்படும் குண்டு மழைத் தாக்குதலை நடத்தியது சிறிலங்க இராணுவம். இதனைத் தொடர்ந்து ஈழத்திலேயே அந்நாட்டு மக்கள் அகதிகளாயினர்.
பிரச்சனையை மனித நேயக் கண்ணோட்டத்தோடு அணுகிய இராஜீவ் காந்தி அரசு, யாழ்ப்பாண மக்களுக்கு போர் விமானங்களின் வாயிலாக உணவுப் பொருட்களை அளித்து சிறிலங்க அரசிற்கு நெருக்கடியைத் தந்தது. இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட இந்திய - சிறிலங்க (இராஜீ்வ் காந்தி - ஜெயவர்த்தனே) ஒப்பந்தம், இலங்கையில் தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைத்து ஒரு நிர்வாக அமைப்பாக ஏற்படுத்த வழிவகுத்தது. ஆனால் தமிழர்களின் ஒப்புதலைப் பெறாத அந்த ஒப்பந்தம் சிறிலங்க அரசினால் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது மட்டுமின்றி, வடக்கு-கிழக்கு மாகாண இணைப்பு சிறிலங்க அரசமைப்பிற்கு
எதிரானது என்று கூறி அந்நாட்டு உச்ச நீதிமன்றம் செல்லாததாக்கிவிட்டது.
இதன்பிறகு 6 ஆண்டுக் காலம் தமிழர்களின் காவல் அரணாக நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்க அரசிற்கும் இடையே உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடந்தது. 2002ஆம் ஆண்டு, ஐரோப்பிய நாடுகளின் தலையீட்டினால் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 2002
இல் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோது நார்வே நாட்டின் அணுசரனையுடன் சிறிலங்க அரசிற்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தை நடந்தது. தாய்லாந்தில் இருந்து டோக்கியோ பிறகு ஜெனிவா என்று பல இடங்களில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட எதையும் சிறிலங்க அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று புலிகள் குற்றம்சாற்றினர். யாழ்ப்பாணத்திலும், மற்ற இடங்கிளிலும் பொதுக் கட்டடங்களில் நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தை விலக்கிக்கொள்ள ஒப்புக்கொண்டும் அதனை சிறிலங்க அரசு நிறைவேற்றவில்லை என்று புலிகள் கூறினர். போர் நிறுத்தத்தை மீறுவதாக இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம்சாற்றினர்.
போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதே, இலங்கை அதிபராக இராஜபக்சே பதவியேற்றப் பிறகு, இருதரப்பினருக்கும் இடையே போர் வெடித்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக 2007ஆம் ஆண்டு அதிபர் இராஜபக்சே அறிவித்தப் பிறகு முழு அளவிலான ஒரு போரை விடுதலைப் புலிகள் மீது இராணுவம் கட்டவிழ்த்துவிட, அதில் தமிழ் மக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளானார்கள். அது தீவிரமடைந்துவிட்ட நிலையில்தான் இன்று ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக, வாழ்வுரிமை பறிக்கப்பட்டவர்களாக பரிதவித்து வருகின்றனர்.எனவே, இலங்கை இனப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் இதற்கு மேலும் தீர்வு காணும் சாத்தியமில்லை என்பது இந்த வரலாற்றையும், அதன் தொடர்ச்சியாக தற்பொழுது ஏற்பட்டுவரும் நிகழ்வுகளை கண்டவர்களும் ஒப்புக்கொள்வார்கள். பிறகு இலங்கை இனப் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? ஒரு நீடித்த தீ்ர்வு எந்த வகையில் சாத்தியம்?
ஈழத்திற்கு வெளியில் இருந்துகொண்டு அவர்கள் படும் துயரங்களுக்கு முடிவு கட்டக்கூடியதாக அந்தத் தீர்வு இருப்பதே அந்த மக்களுக்கு உலக சமூகம் செய்யக்கூடிய சரியான நியாயமாக இருக்கக்கூடும்.அதனை நாளை பார்ப்போம்.