Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலி விளம்பரங்களால் ஏமாறும் மக்கள்!

போலி விளம்பரங்களால் ஏமாறும் மக்கள்!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (18:09 IST)
கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னையில் பரவலாகப் பேசப்பட்டது தங்கக் காசு மோசடி. அந்த மோசடியில் ஏமாந்தவர்களின் சோகம் தீர்வதற்குள் மற்றொரு மோசடி அம்பலத்திற்கு வந்துள்ளது.

webdunia photoFILE
இதுதொடர்பாக திருச்சியைச் சொந்த ஊராகக் கொண்ட அனுராதா (வயது 29) என்ற பெண், அவரது கணவர் ரவிச்சந்திரன், பண மோசடிக்காக அனுராதாவின் கணவராக நடித்த முகமது அலி ஜின்னா (எ) ஸ்ரீராம், முஸ்தபா ஆகிய 4 பேர் தற்போது கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அனுராதா அண்ட் கோ மோசடி விவரம்:

நீங்கள் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், மாதத்திற்கு 7 ஆயிரம் ரூபாய் வீதம் 10 மாதத்தில் 70 ஆயிரம் ரூபாயாகத் திருப்பித் தரப்படும். இதையறிந்த பலர் தங்கள் நகைகளை எல்லாம் அடகு வைத்து, இருந்த சேமிப்புகளை எல்லாம் அனுராதா அன்கோ-விடம் கொடுத்துள்ளனர்.

துவக்கத்தில் 20-க்கு 70 ஆயிரம் ரூபாய் திருப்பிக் கொடுத்து ஆசை காட்டிய அந்த மோசடிக் கும்பல், அடுத்த முறை அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தைப் பெற்று கம்பியை நீட்டிவிட்டனர்.

தனது பேராசையால் மோசம்போன சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த கல்பனா என்பவர் காவல்நிலையத்தில் புகார் கூறியதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்தது.

57 லட்சம் ஏமாந்த கல்பனா!

கல்பனா தனது பணம் மற்றும் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் வசூலித்த பணம் என 57 லட்சம் ரூபாயை மோசடிக் கும்பலிடம் கொடுத்துள்ளார். தவிர மயிலாப்பூரில் மட்டும் சுமார் இரண்டரை கோடி ரூபாயை அனுராதா கோஷ்டியினர் சுருட்டியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

போரூர், மதுரவாயல் உள்ளிட்ட வேறு சில பகுதிகளிலும் அனுராதாவும், அவரது கும்பலைச் சேர்ந்தவர்களும் பல கோடி ரூபாய் மோசடி செய்திருக்கிறார்களாம்.

ஒரு பகுதியில் வாடகைக்குக் குடியேறி, தங்களது இலக்கு வசூலானதும் வீட்டைக் காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு ஜாகையை மாற்றி இந்த மோசடியை நிறைவேற்றி உள்ளனர். சென்னை தவிர வேறு நகரங்களிலும் இதேபோன்ற பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

மயிலாப்பூர் கல்பனா போன்று பணத்தாசையால் ஏமாந்தவர்களின் பட்டியல் நீளும் என்று கருதப்படுவதால், இந்த வழக்கை பொருளாதாரக் குற்றப்புலனாய்வுக்கு மாற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

அனுராதா உட்பட 4 பேரும் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சரி, ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.

எத்தனையோ மோசடிகளைப் பற்றி கேள்விப்பட்ட பிறகும், மக்கள் மீண்டும், மீண்டும் மோசடிக்காரர்களின் வலையில் விழுவது ஏன்?

சம்பாதிக்கும் பணத்தை எத்தனையோ மத்திய - மாநில அரசுகளின் சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து நியாயமான, உரிய வட்டியைப் பெறலாமே.

அதைவிடுத்து, இதுபோன்றவர்களின் ஆசைவார்த்தையில் மயங்கி, அதிக பணத்தை குறுகிய காலத்தில் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் மதியிழந்து முதலீடு என்ற பெயரில் மோசம் போவது ஏன்?

காலங்காலமாக இருந்து வரும் தபால்துறை வைப்பு நிதி, தேச சேமிப்பு சான்றிதழ், வங்கி தொடர் வைப்பு நிதி (Recurring Deposit), பரஸ்பர நிதி திட்டங்கள் (Mutual Fund Scheme), இந்திய ஆயுள் காபீடு கழகத்தின் பல்வேறுத் திட்டங்களஎன எத்தனையோ சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் முதலீடு செய்தால், தங்கள் பணம் இரட்டிப்பாக 4 - 5 ஆண்டுகள் வரை ஆகக்கூடும்.

ஆனால், ஒரு ஆண்டில் 3 மடங்கு பணம் கிடைக்கிறதே (!?), குறுகிய காலத்தில் நாம் பெரும் பணக்காரர்களாகி விடலாம். உழைப்பே இல்லாமல் கைமேல் பணம் கொட்டுகிறதே? என்றெல்லாம் எண்ணுவதன் விளைவே இதுபோன்ற மோசடிக்காரர்களுக்கு வெற்றியாக அமைந்து விடுகிறது.

மோசடியில் ஏமாறுபவர்கள் ஏதோ, படிக்காத, கூலி வேலை செய்பவர்களோ அல்லது வங்கி, அரசின் சேமிப்புத் திட்டங்கள் பற்றி அறியாதவர்களோ கிடையாது.

மெத்தப் படித்த மேதாவிகளுக்கு, பணத்தின் மீதான மோகம், பேராசையால் பெரும்பொருளை இழந்த பின்னர்தான் மதி வேலை செய்கிறது.

10 ரூபாய் நம்மிடம் இருந்து பெறுபவன் எப்படி, எந்த அடிப்படையில் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக திருப்பித் தர முடியும்? என்று யோசித்து முதலீடு செய்தால் நம்மை யாரும் ஏமாற்ற முடியாது.

ஏமாற்றுக்காரர்களை நாமே ஊக்கமளித்து (பேராசையால் ஏமாறுவதன் மூலம்) வளர்த்து விடுகிறோம் என்பதே நாம் இங்கு சொல்ல வருவது.

வாழ்க்கையில் சேமிப்பு என்பது பொக்கிஷம். அந்த பொக்கிஷத்தை இதுபோன்ற மோசடிக்காரர்களிடம் கொடுத்து ஏமாந்து, போலீஸ், வழக்கு, நீதிமன்றம் என அலைந்து இழக்காமம் இருக்க உறுதி எடுப்போம்.

எனவே போலியான, கவர்ச்சிகரமான விளம்பரங்களைக் கண்டு ஏமாறாமல், அரசு மற்றும் அரசு அங்கீகாரத்துடன் செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்களை ஆய்வு செய்து அவற்றில் முதலீடு செய்து, நியாயமான உரிய பலனைப் பெற்று எதிர்கால வாழ்க்கையை வளமாக்குவோம்.

Share this Story:

Follow Webdunia tamil