மாணவர்கள் தாங்கள் விரும்பும் படிப்பில் சேர்ந்து படிக்க கல்விக் கடன் வழங்குமாறு மத்திய அரசும், நிதி அமைச்சரும் பலமுறை அறிவுறுத்தியும்கூட, கல்விக் கடன் பெறுவது இன்றுவரை மாணவர்களுக்கு குதிரைக் கொம்பாகவே இருந்து வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்ற ஒரு மாணவர், பொறியியல் டிப்ளமோ படிப்பில் சேர இடம் கிடைத்தும், அவர் 3 முறை தேர்வு எழுதியே வெற்றி பெற்றுள்ளார் என்று கூறி, அவருடைய கல்விக் கடன் விண்ணப்பத்தை பாரத அரசு வங்கி நிராகரித்துள்ளது.
அந்த மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றுள்ளார். இவ்வழக்கில் நேற்று தீர்ப்பளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், “கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவர் பெற்ற குறைந்த மதிப்பெண்ணை காரணம் காட்டி கடனை மறுக்கக்கூடாது" என்று கூறியுள்ளது.
அதுமட்டுமின்றி, சாதாரண, ஏழை எளிய மாணவர்களுக்கு வங்கிகள் கடன் கொடுத்து ஆதரிக்க வேண்டும் என்று நீதிபதி ஏ. குலசேகரன் கூறியுள்ளதை வங்கி மேலாளர்கள் மறக்காமல் நினைவில் கொள்ளவேண்டும்.
அலையவிடும் வங்கி மேலாளர்கள்!
2008-09 நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் கல்வி மேம்பாட்டிற்காக ரூ.34,400 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி எனும் திட்டத்திறகாக ஒதுக்கீடு செய்யப்ட்டது ரூ.13,100 கோடி, அது இல்லாமல் கல்வி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டதுதான் 34,400 கோடி ரூபாய். இது இதற்கு முந்தைய நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட 20 விழுக்காடு அதிகமாகும்.
அனைவரும் கல்வி கற்கவும், உயர் மற்றும் தொழில் நுட்பக் கல்விகள் அனைவருக்கும் கிடைக்கவும் மத்திய அரசு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துவரும் நிலையில், அதனைப் பயன்படுத்தி கல்வி பெற முன்வரும் மாணவர்களுக்கு கடன் வழங்குவதில் இன்னமும் வங்கிகள் உதாசீனப் போக்கைத்தான் கடைபிடித்து வருகின்றன.
தனியார்மயமாக்கப்பட்டு, இந்தியாவில் கல்வி பெரும் வணிகமாகிவரும் நிலையில், கல்வி கற்க விரும்பும் சராசரியான குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வங்கிக் கடனை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை உள்ளது.
ஆனால் வங்கிகளோ, கடன் இல்லை என்று நேரடியாக மறுக்க முடியாத காரணத்தால், மாணவர்களை மாடாக அலைய விடுகின்றனர். கல்வி கற்க, தங்கிப் படிக்க, கல்விச் சாலைக்குச் சென்றுவர, புத்தகங்களை வாங்க என்று அனைத்திற்கும் சேர்த்தே கடன் வழங்கவேண்டும் என்று வங்கிகளின் தலைமையகங்கள் சுற்றறிக்கை விடுத்துள்ளன.
அவ்வாறு இருந்தும் கல்விக் கட்டணத்திற்கு மட்டுமே கடன் வழங்குவோம் என்றும், மொத்த செலவில் பாதிதான் கடனாக வழங்குவோம் என்று பல வங்கிக் கிளைகள் மாணவர்களை நிர்ப்பந்தம் செய்து வருகின்றன.
கல்வி கற்பதற்கான அனைத்துச் செலவுகளின் விவரத்தை அவர்கள் படிக்கும் கல்வி நிலையத்திலிருந்து, அதற்குரிய படிவத்தில் பெற்றுவந்து தரும் நிலையில், முழு அளவிற்கு கடன் வழங்குமாறு வங்கிகளுக்கு அதன் தலைமை நிர்வாக அலுவலகங்கள் சுற்றறிக்கை அனுப்பிய பின்னரும் முழு அளவிற்கு கடன் வழங்கப்படாதது ஏன் என்று மாணவர்கள் குமுறுகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகரங்களுக்கு வந்து தங்கள் மேல் படிப்பைத் தொடரும் மாணவர்கள் இங்குள்ள வங்கிகளில் கடன் கேட்டால், உங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று உங்கள் தந்தை கணக்கு வைத்துள்ள அதே வங்கியில் சென்று கடன் கேளுங்கள் என்று அனுப்பப்படுகின்றனர். அவர்கள் அங்கு சென்று கடன் கேட்கும்போது, விவசாயத்திற்காக உங்கள் தந்தைக்கும் கடன் தரவேண்டும், கல்விக்காக உங்களுக்கும் கடன் தரவேண்டும் என்று கேட்கிறீர்களே, உங்களுக்காக மட்டுமே இங்கு வங்கி இயங்கி வருகிறதா? என்றெல்லாம் ஒரு கிளையின் மேலாளர் பேசியுள்ளார். இறுதியில் கல்விச் செலவில் பாதிதான் கடனாகக் கிடைக்கும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தங்களின் விவசாயத் தேவைக்காக வங்கியை நம்பியிருக்கும் அந்தக் குடும்பம் பதில் பேசாமல் ஒப்புக்கொண்டு கடனிற்காக காத்து நிற்கிறது. இது நமக்கு (ஆதாரம் உள்ளது) தெரிந்த ஒரு மாணவரின் நிலை. இப்படிப் பல இடங்களில் நடக்கிறது.
பொது மக்கள் துவங்கும் வைப்புக் கணக்குகளினால் பெருகும் தொகையை தொழிலிற்கும், கல்விக்கும் கடனாக அளிப்பதில் வங்கிகள் ஏன் இப்படி பாராமுகம் காட்டுகின்றன என்று தெரியவில்லை. இப்படிப்பட்ட கடன்கள் கொடுப்பதனால் தங்களுக்கு எந்த ‘பயனும்’ கிட்டாததால் இப்படி நடந்துகொள்கின்றனரோ?
பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளித்த கடன்கள் பல லட்சம் கோடி ரூபாய் வராக் கடனாக (Non Performing Assets - NPA) வங்கிகளில் உள்ள நிலையில், தங்களால் இயன்றவரை கடனைத் திருப்பிக்கட்டும் விவசாயிகளையும், படித்து முடித்தப் பிறகு கடனைக் கட்டும் தகுதியைப் பெரும் மாணவர்களுக்கும் கடன் வழங்க வங்கிக் கிளைகள் செத்த முகம் காட்டுவதுதான் புரியாத புதிராக உள்ளது.
இப்பிரச்சனையில் மத்திய நிதி அமைச்சகம் உடனடியாகத் தலையிட்டு, மாணாக்கர் கடன் வழங்கலை முறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் இதுவே ஒரு பெரும் பிரச்சனைக்கு வித்திட்டுவிடும்.