காமராஜர்!தமிழகம் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் புகழ்பெற்றவர்.காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பொறுப்பை வகித்ததோடு, புகழ்பெற்ற தலைவராகவும் விளங்கினார்.
தமிழ்நாட்டிற்குக் கல்விக் கண்ணைத் திறந்த, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற, நாட்டு நலனை மட்டுமே தனது இறுதி மூச்சு உள்ளவரை சிந்தித்து செயல்பட்ட ஒரு மாபெரும் தலைவர் காமராஜர்.
அப்பேர்பட்ட காமராஜரின் 32-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தவேண்டும் என்பதை தமிழக முதல்வராய் 9 ஆண்டு காலம் பதவியில் இருந்து பறைசாற்றிய தலைவர்களின் தலைவர் காமராஜர்.
1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற காமராஜர், 1963 ஆம் ஆண்டுவரை தொடர்ந்து தமிழக முதல்வராக இருந்தார். இந்த 9 ஆண்டுகாலத்தில் தனக்காக ஒரு சொந்த வீடு கூட வாங்கவில்லை. ஊட்டியில் எஸ்டேட் வாங்கவில்லை. விருதுநகரில் வாடிய தனது தாயாரை அழைத்துக் கொண்டுவந்து, தனது அரசு வீட்டில் தங்க வைத்து அவருக்கு சுகபோகங்களை காட்டவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மக்களின் நலனை மட்டுமே தன் நலமாக சிந்தித்து செயலாற்றியதன் விளைவாக, தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முன்னேறியது.
சென்னையைச் சுற்றி இன்றுள்ள தொழிற்பேட்டைகளுக்கு முதன்முதலில் வித்திட்டவர் பெருந்தலைவர் காமராஜர். தொழில் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழ்வது மின்சாரம். மின் உற்பத்திக்கு பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். அந்நிய ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்ற அடிப்படை கட்டுமான வசதிகளைக் கொண்டே ஒப்பேற்றி விடலாம் என்று அவர் கணக்குப் போடவில்லை. மேலும் மேலும் திட்டங்களைத் தீட்டினார். திட்டங்களுக்கு நிஜ வடிவம் கண்டார். மற்ற மாநிலங்கள் வியக்கும் வண்ணம் தமிழ்நாடு முன்னேறியது.
தமிழ்நாட்டில் பாசன பரப்புநிலப் பெருக்கியதிலும், பாசனத்திற்கு உரிய தண்ணீர் கிடைப்பதற்கும் பல வழிமுறைகளைக் கண்டவர் காமராஜர். அவர் ஆட்சியில் இருந்து இறங்கிய பின்னர் நிறைவேறிய திட்டங்கள் பலவற்றிற்கு வித்திட்டவரும் அவரே.
கல்விக்கண் திறந்த வள்ளல்!நாட்டு மக்கள் நலிவு நீங்க, சமூக முன்னேற்றம் காண, கல்வியின் அவசியத்தை காமராஜர் நன்கு உணர்ந்திருந்தார். பள்ளிப்படிப்பை தாண்டாத காமராஜர், தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் ஊரெங்கும் கல்விக்கூடங்களை, குறிப்பாக ஆரம்பப் பள்ளிகளை திறந்து வைத்தார். பள்ளிகளை திறந்து வைத்தால் மட்டும் போதுமா? பிள்ளைகள் படிக்க வரவேண்டாமா? என யோசித்தவர், நாட்டிலேயே முதன்முதலாக மதிய உணவுத் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தியவர். அதுவே பின்னாளில் சத்துணவுத் திட்டமாக உருமாறி இன்றும் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.மாடு மேய்த்தாலாவது சோறு உண்டு. பள்ளிக்கு வந்தால் யார் சோறு போடுவது? என்ற கேள்விக்கு விடை கண்டவர் காமராஜர்தமிழ்நாட்டில் கல்வி கற்றோர் தொகை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே வந்தது. இன்றைக்கு இவ்வளவு பேர் படித்து முன்னேறி உள்ளோம் என்றால் அதற்கு வித்திட்டவர் காமராஜர் என்றால் அது மிகையில்லை. எதிர்த்தார் எமர்ஜென்ஸியை! 1963
ஆம் ஆண்டு மூத்த தலைவர்கள் பதவியை விட்டு விலகி, கட்சி வளர்ச்சியில் ஈடுபடுவது என்ற கொள்கைக்காக பதவியை தூக்கி எறிந்தார் காமராஜர். அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவரானார். ஆனால் காங்கிரஸில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்கள், ஜவஹர்லால் நேருவின் மறைவு, நேருவின் மறைவைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் சிக்கல் ஆகியவற்றை தனது அரசியல் சாதுர்யத்தினால் அழகாக சமாளித்தார் காமராஜர். லால் பஹதூர் சாஸ்திரியை பிரதமராக ஆக்கினார். ஆனால் குறைந்த காலத்திலேயே லால் பஹதூர் சாஸ்திரியும் மறைந்தார். இந்திய நாடு மீண்டும் ஒரு அரசியல் சுழலில் சிக்கயது. இம்முறை காங்கிரஸ் கட்சிக்குள் எழுந்த சீனியாரிட்டி பிரச்சனையை சமாளித்து நேருவின் மகள் இந்திராவை பிரதமராக்கினார் காமராஜர். பாரத தேசமே காமராஜரை கிங் மேக்கர் என்று புகழ்ந்தது.
ஆனால் சில ஆண்டுகளிலேயே, தன்னை பிரதமர் பதவிக்கு உயர்த்திய பெரும் தலைவர்களை இந்திரா காந்தி புறக்கணித்தார். தனது வசதியான கருவியாக காங்கிரஸ் கட்சியை மாற்ற முனைந்தார். விளைவு 1969 ஆம் ஆண்டு காங்கிரஸ் உடைந்தது.
பாரம்பரியமிக்க காங்கிரஸ் கட்சி இந்திரா காங்கிரஸ் என்றும், பழைய காங்கிரஸ் என்றும் இரண்டானது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் தமிழ்நாட்டு அரசியலில் தீவிர கவனம் செலுத்தினார். தொடர்ந்து ஏற்பட்ட தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் தொடர்ந்து மக்களிடமே வலம் வந்தார்.
மற்றொரு பக்கம் இந்திராவின் சுயநல அரசியல் வேகம் அதன் உச்சியைத் தொட்டது. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இந்திய நாட்டின் மீது அவசர நிலை (எமர்ஜென்சி)யைத் திணித்தார் இந்திரா.
இதனைக் கடுமையாக எதிர்த்தார் காமராஜர். தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பயணம் செய்து தமிழக மக்களிடையே பேசினார். ஆனால் இந்திரா அசைந்து கொடுக்கவில்லை.
இந்தியாவின் பெரும் தலைவர்கள் அனைவரையும் பிடித்து சிறையில் தள்ளினார். எமர்ஜென்சியை எதிர்த்து வந்த காமராஜரின் பிரச்சார வேகம், மேலும் சூடுபிடித்தது. இந்த நிலையில் தான் 1976 ம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாளும் வந்தது. சிறைப்படுத்திய தலைவர்களை இந்திரா விடுவிப்பார் என்று காமராஜர் எதிர்பார்த்தார் என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் மதியம் வரை நடைபெறவில்லை.
மதிய உணவிற்குப் பின் ஓய்வுகொள்ள தனது அறைக்குச் சென்றார். படுக்கையில் சாய்ந்த பிறகு தனது பணியாளன் வைரவனை கூப்பிட்டு விளக்கை அணைத்துவிட்டு போகச் சொன்னார்.
விளக்கு அணைந்தது. பெருந்தலைவர் காமராஜர் அமரத்துயில் கொண்டார். தேச சுதந்திரத்தை மதித்துப் போற்றிய ஓர் உன்னத மனம், சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தேசத் தந்தை பிறந்த நாளில் அமைதியுற்றது.