மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: தமிழக அரசு நீதிமன்றத்தை நாடவேண்டும்!
, திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:03 IST)
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மேலும் ஒரு தமிழக மீனவர் சிறிலங்க கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகியுள்ளார். சிங்கள கடற்படையினரின் இந்த எல்லை மீறிய, அத்துமீறிய அராஜகம் இராமேஸ்வரம் மீனவர்களை கொதிப்படையச் செய்துள்ளது. தங்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கோரி இன்றைக்கு ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் இராமேஸ்வரம் மீனவர்கள், மத்திய மாநில அரசுகள் தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யத் தவறினால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.கடந்த ஜூலை மாதம் நாகப்பட்டிணம் மாவட்டம் ஆற்காட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, நமது கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள கடற்படை துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் (சனிக்கிழமை)
தனுஷ்கோடிக்கும், கச்சத்தீவிற்கும் இடைப்பட்ட இந்திய கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது சிறிலங்கக் கடற்படையினர் நமது கடல் எல்லைக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் முருகன் என்ற மீனவர் கொல்லப்பட்டுள்ளார். தங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது சிறிலங்க கடற்படைதான் என்று மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவிக்கின்றனர். ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள சென்னையில் உள்ள சிறிலங்க துணைத் தூதர், தான் சிறிலங்க கடற்படைத் துணைத் தளபதி வாசந்த கரணகோடாவுடன் பேசியதாகவும், இத்தாக்குதலுக்கும் சிறிலங்க கடற்படைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் ஆற்காட்டுத் துறை மீனவர்களை சுட்டுக்கொன்றபோது என்ன கூறியதோ, அதையேதான் இப்போதும் சிறிலங்க அரசு கூறுகிறது. சுட்டது சிறிலங்க கடற்படையல்ல என்று கூறி உண்மையை திசை திருப்பப் பார்க்கிறது. தங்கள் மீது தாக்குதல் நடத்துவது யார் என்பதை உணராதவர்கள் அல்ல தமிழக மீனவர்கள்.ஒரே ஒரு படகில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு, சுட்டது நாங்களல்ல என்று வசதியாக மறுத்துவிடலாம். ஆனால், 600க்கும் அதிகமான படகுகளில் சென்று மீன்
பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களுக்கு தங்கள் மீது தாக்குதல் நடத்துவது யார் என்றெல்லாம் தெரியாது என்பதுபோல சிறிலங்க தூதர் யாரை நம்ப வைக்க காது குத்துகிறார் என்று தெரியவில்லை.தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என்று சிறிலங்க அரசு இந்திய அரசிடம் உறுதிமொழி அளித்துள்ளது என்று தமிழக முதல்வரை சந்தித்துப் பேசிய தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூறினார். அதுமட்டுமல்ல, கச்சத்தீவு கடற்பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவது குறித்து பேசிவருவதாகவும் (செய்தியாளர்களிடம்) தெரிவித்த நாராயணன், அடுத்த சில வாரங்களில் அது குறித்து முடிவாகும் என்றும் கூறினார்.
ஆனால், கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் உரிமையை ஏற்க மறுத்துவிட்டது சிறிலங்க அரசு. சிறிலங்காவின் வடக்கு எல்லை கச்சத்தீவு, அப்பகுதியில் தங்கள் நாட்டின் உரிமை எந்தவிதத்திலும் விட்டுத் தரப்பட மாட்டாது என்று அந்நாட்டு அயலுறவு அமைச்சர் கேகலிய ராம்புக்வெல திட்டவட்டமாக அறிவித்தார். எனவே தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அளித்த உறுதிமொழி காப்பாற்றப்படவில்லை. கச்சத்தீவு கடற்பரப்பில் மீன் பிடிக்கும் பாரம்பரிய உரிமையும் மறுக்கப்பட்டுவிட்டது. இதற்கு மேலும் மத்திய அரசை நம்பிப் பயனில்லை. தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுடைய பாரம்பரிய உரிமையை நிலைநாட்டவும் சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.தமிழக அரசின் சம்மதமின்றி கச்சத்தீவை சிறிலங்காவிற்கு தாரை வார்த்த ஒப்பந்தத்தை ரத்துசெய்து, கச்சத்தீவை திரும்பப் பெறவும், தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசிற்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்குத் தொடர வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சனை இது. இதில் இதற்குமேலும் காலம் கடத்துவது தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகத்திற்கு துணைபோவதாகவும், அவர்களுடைய வாழ்வுரிமையை உதாசீனப்படுத்துவதாகவே ஆகும்.