Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயங்கரவாதத்தை ஒடுக்க முடியுமா?

காவல் அதிகாரி பெ.காளிமுத்துவுடன் நேர்காணல்

பயங்கரவாதத்தை ஒடுக்க முடியுமா?

அ‌ய்யநாத‌ன்

1998ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் ஆணையராக பெ.காளிமுத்து இருந்தபோதுதான் கோவை குண்டு வெடிப்பைத் தொடர்ந்து சென்னையிலும் தாக்குதல் நடத்த இருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது.

பல இடங்களில் ஆர்.டி.எக்ஸ். என்ற சக்திவாயந்த வெடிபொருள் கைப்பற்றப்பட்டது. குண்டுகளை வெடிக்கச் செய்யும் டெட்டனேட்டர்களும், மற்ற ஆயுதங்களும் காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கையினால் கைப்பற்றப்பட்டது. மறைந்திருந்த தீவிரவாதிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.காளிமுத்துவின் பணி மிகவும் பாராட்டப்பட்டது. சென்னை காப்பாற்றப்பட்டது. அதன் பிறகு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனராக பதவி உயர்வு பெற்று ஒய்வு பெற்றார் பெ. காளிமுத்து.

பயங்கரவாதம் நமது நாட்டை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் டெல்லியிலும் மற்ற இடங்களிலும் நடந்தது போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தடுக்க முடியுமா? எந்த அளவிற்கு நம்மால் அதனை சாதிக்க முடியும்? அந்தத் திறன் நமது காவல் துறைக்கு உள்ளதா? நமது உளவு அமைப்பிற்கு அந்தப் பலம் உள்ளதா? என்பதையெல்லாம் கேட்டறிய அவரிடம் தமிழ்.வெப்துனியா.காம் பேட்டி கண்டது.

23.09.2008 செவ்வாய்கிழமையன்று மாலை இந்த நேர்காணல் நடந்தது.

WD
பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க எந்த முறையிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?

கடந்த காலங்களில் பாகிஸ்தான் எல்லையில், கிழக்கு பிராந்திய எல்லைகளில் பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் நடந்தது நினைவிருக்கும்.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், ஈராக், ஆப்கானிஸ்தான், சீனாவில் கூட பயங்கரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டது. உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவியிருக்கும் பயங்கரவாதத்தை முழுமையாக தடுக்க வேண்டும் என்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்காது.

இதனை அரசு, பொருளாதார, சமூக ரீதியாக, அங்காங்கு வாழும் மக்கள் சாதி, மத, இன, வட்டாரம் போன்ற எவ்வித வேறுபாடும் இன்றி, அனைவரும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தை அழிக்க வேண்டும்.

இதற்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சட்டத்தை அமல்படுத்தும் அரசு நிறுவனங்கள், காவல்துறை மற்றும் பொதுத் தொண்டு புரியும் அனைத்து தொண்டு நிறுவனங்களும், பொதுமக்களும் ஒன்றுபட்டு, பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுபவர்கள் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ அவர்களை முன்கூட்டியே கண்டு, கவனித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஓரிடத்தில் தீவிரவாதிகள் வந்து தங்கியிருந்து, சதி திட்டங்களைத் தீட்டி, பொது மக்களை கொன்றுவிட்டு, பெரும் தீங்கிழைத்த பிறகே, அவர்களைப் பற்றிய தகவல்களை பொதுமக்கள் கொடுக்கின்றார்களே ஒழிய, தங்கள் தெருவில் தங்கள் பகுதியில் வசிக்கும், வந்து செல்லும் சந்தேகிக்கப்படுபவர்களைப் பற்றிய விவரத்தை ஆங்காங்கு உள்ள காவல்நிலையத்தில் தெரியப்படுத்துவதில்லை. அதனைச் செய்ய வேண்டியது அவசியம்.

அப்படி தகவல் கொடுக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அவர்களை ரகசியமாகக் கண்காணித்து, சதி திட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே அவர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தவும். பெரும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கவும் முடியும்.

மக்களின் ஒத்துழைப்புதான் முக்கியம் என்று கூறுகிறீர்கள். அப்படியென்றால், காவல்துறையில் இருக்கும் உளவு துறையை விட, மக்கள் கொடுக்கும் விவரம்தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்கிறீர்களா?

அதாவது காவல்துறைக்கு மக்கள் கொடுக்கும் தகவல் ஒரு பெரும் உதவியாக இருக்கும். அது மட்டும் அல்லாமல், உளவு அமைப்புகளில் இருப்பவர்கள் இன்னும் சிறப்பாக தங்களது பணியை ஆற்றிட வேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது கடந்த காலங்களில் நிகழ்ந்த அசம்பாவிதங்களைப் பார்க்கையில், இந்த தனிப்பிரிவினர் தங்களது உளவுப் பணியை இன்னும் அதிகப்படுத்திட வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறலாம்.

அவர்கள் அவ்வாறு சிறப்பாக செயல்பட்டு தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை சேகரித்து அனுப்பியிருந்தால் பல்வேறு அசம்பாவிதங்களை தவிர்த்திருக்கலாம்.

பயங்கரவாத நடவடிக்கைகளைத் தவிர்ப்பதில் பொதுமக்களின் பங்கும் முக்கியமானது. அதில் காவல்துறை மற்றும் உளவுப் பிரிவினரின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இதுபோன்ற பயங்கரவாத வன்முறைகளை தடுக்க முடியும்.

ஒவ்வொரு மாநில காவல்துறைக்கும் பயங்கரவாதம் மட்டுமே இலக்கு அல்ல. ஒரு பக்கம் நக்சலைசம் வருகிறது. மற்ற மற்ற பிரச்சினைகள் வருகின்றன. சென்னை மாநகராட்சியின் சிறந்த ஆணையராக இருந்தவர் என்ற முறையிலும், கோவை குண்டு வெடிப்பிற்கு பிறகு சென்னையில் நடத்தப்பட இருந்த தொடர் குண்டு வெடிப்பு சதியை முறியடித்து பல்வேறு இடங்களில் குண்டுகளைக் கைப்பற்றியவர் என்ற முறையிலும் உங்களிடம் ஒரு கேள்வி. அதாவது, பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே உளவுத் துறை பயங்கரவாதத்தை வேறருக்கும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுத்தப்படவில்லை என்பது உண்மைதானே?

தமிழகத்தைப் பொறுத்த அளவில் இங்கிருக்கும் உளவுத் துறை சிறப்பாகவே பணியாற்றி வருகிறது. கோவையில் நடந்த அந்த கோர தொடர் குண்டு வெடிப்பு யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அதே கோவை மாநகரத்தில் 1988 முதல் 1991 வரை நான் மண்டல காவல்துறை தலைவராக (டி.ஐ.ஜி.) பணியாற்றினேன். அந்த காலக்கட்டத்தில் கூட தீவிரவாதத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

எங்களது செயல்பாடு பொதுமக்களோடு நெருங்கியபடி இருந்ததாலும், ஒரு சிலர் அடிக்கடி எங்களைத் தொடர்பு கொண்டு தகவல்கள் கொடுத்ததாலும், நாங்கள் சிறப்பாக பணியாற்றிய காரணத்தினால் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடக்காமல் பார்த்துக் கொண்டோம்.

அந்தப் பின்னணியைத்தான் சென்னையில் ஆணையராக பணியாற்றியக் காலத்திலும் நாங்கள் பின்பற்றியதால் பல்வேறு அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடிந்தது.

ஓரளவிற்கு தகவல் கொடுத்தார்கள். ஆனால் அதற்கு மேலாக பொதுவாக காவல்துறையினரே, அந்தந்த பகுதிகளில் நிலவும் சூழ்நிலைகளைக் கண்காணித்து வந்தனர்.

கர்நாடகாவில், ஒரிசாவில், குஜராத்தில், டெல்லியில் நடந்த அசம்பாவித சம்பவங்களைப் பார்க்கும்போது, உளவுத் துறையினர் முன்கூட்டியே சரியான தகவல்களை சேகரிக்கத் தவறிவிட்டனரோ என்ற எண்ணம்தான் தலைதூக்குகிறது.

ஒரு நாட்டில் நடக்கிற மிகப்பெரிய வன்முறைச் சம்வங்களைத் தடுக்க வேண்டும் என்றால் அப்பகுதிகளில் செயல்படும் உளவுத் துறையினர், இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

கர்நாடகத் தலைநகர் பெங்களூரு, அஹமதாபாத், அதற்குமுன் ஜெய்ப்பூரில் குண்டுகள் வெடித்தன. சூரத்தில் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பிறகுதான் டெல்லியில் குண்டு வெடித்தது. இந்த விசாரணையில் தெரிய வந்த விஷயம் என்னவென்றால், இவை அனைத்தையும் செய்தது ஒரே அமைப்புதான் என்பது. ஓரிடத்தில் குண்டுகள் வெடித்ததில், அதில் தொடர்புடைய அமைப்பு பற்றியும், அதன் அடுத்த குறி என்ன என்பதையும் அணுமானிக்க தவறியதில் உளவுத் துறையும், காவல்துறைக்கும் பங்கு உள்ளது அல்லவா?

குண்டுகளை வெடிக்கச் செய்து அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் அந்த கல் நெஞ்சக்காரர்கள் அடுத்து எங்கு, எப்படி பயங்கரவாதச் செயலை செய்யப் போகிறார்கள் என்பதை யாராலும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. இது உளவுப் பிரிவாக இருந்தாலும், காவல்துறையாக இருந்தாலும் சரி.

ஆனால் எப்படி செயல்பட்டிருக்க வேண்டும் என்றால், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைக் கோர்வையாக கலந்து ஆராய்ந்து பார்த்திருந்தால், இந்தந்த அமைப்புகளால் இந்த இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கலாம் என்று தீர்மானிக்க முடியும். அதன் அடிப்படையில் உளவுப் பிரிவினர் அந்தந்த பகுதிகளுக்கு தகவல் கொடுக்க முடியும்.

இது ஒருபுறமிருக்க, உளவுப் பிரிவு அதிகாரிகள், இந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நாடு தழுவிய அளவில் விவரங்களைச் சேகரித்து, தீவிரவாத செயல்களில் முன்பு ஈடுபட்டவர்கள் யார், தற்போது யாரெல்லாம் ஈடுபாட்டில் இருக்கிறார்கள் என்பதை முன்கூட்டியே கண்டறிந்து, இவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்ற தகவலை கட்டாயம் கொடுத்திருக்க வேண்டும்.

மூன்றாவதாக, திடீரென்று ஒரு தீவிரவாதி எங்கோ இருந்து வந்து குண்டு வைப்பது கிடையாது. ஒரு பகுதிக்கு வந்து அங்கு ஒரு வீட்டைப் பிடித்து ஒரு சில மாதங்கள் தங்கியிருந்து உளவு பார்த்துவிட்டு பின்னர்தான் அங்கு குண்டு வெடிப்புகளை நிகழ்த்துகின்றனர்.

அப்போதே அவர்களைப் பற்றிய சந்தேகம் அருகில் இருப்பவர்களுக்கு எழும். நள்ளிரவுகளில் வெளியில் செல்வது, வருவது போன்ற சந்தேகம் எழும்போதே காவல்துறைக்குத் தெரிவித்து காவல்துறையை உஷார்படுத்த வேண்டும்.

ஏனோத் தெரியவில்லை. பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தங்களது சந்தேகத்தை காவல்துறையிடம் தெரியப்படுத்த இதுவரை முன்வரவில்லை. அது பொதுமக்களின் தவறு.

இந்த சூழ்நிலையில் தேசிய அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்க தனியாக புலனாய்வு அமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியம் அல்லவா?

உளவு அமைப்புகளில் பணியாற்றும் காவலர்களும் பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மாநில அளவில் உள்ள உளவு அமைப்புகளும் சிறப்பாக பணியாற்றுகிறார்கள். அங்கு சில குறைபாடுகள் உள்ளனதான். ஆனால் அதனைக் களைய உளவு வேலையில் ஈடுபட்டு தகவல்கள் அளிக்க இன்னும் கூடுதல் காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். பெருவாரியான நவீன கருவிகள் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும்.

மற்ற மாநில காவல்துறையினருடன் கலந்து கருத்து பரிமாற்றம் செய்கின்ற ஒரு நிலை உருவாக வேண்டும்.

கடந்த பல ஆண்டு காலமாக நடத்தப்பட்ட அசம்பாவிதங்களைக் கோர்வையாக ஆய்ந்து அதுபற்றி கலந்து பேசி, இதில் ஈடுபட்டவர்கள், காரணமான அமைப்பு, உதவி செய்யும் நாடுகளைக் கண்டறிந்து அந்நாட்டுடன் தொடர்பு கொண்டு குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் வகையில் பல அதிகாரம் மற்றும் வசதி வாய்ப்புகள் உளவுப் பிரிவினருக்கு அளிக்கப்பட வேண்டும்.

அவர்களுக்கு இதுபோன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டால் இருக்கின்ற இந்த அமைப்பே போதுமானதாகும். இதற்கென்று ஒரு தனி அமைப்பை உருவாக்குவதற்கு அதிகமான காலமும், பொருளாதார செலவும் ஆகும். அதற்கான அதிகாரிகளையும் இந்த உளவு அமைப்பில் இருந்தே அளிக்க வேண்டும். அதற்கு பதிலாக இந்த அமைப்பினை இன்னும் பலப்படுத்தினால் அதுவே போதுமானதாகும்.

அரசும் இதுபோன்ற உளவு அமைப்புகளுக்கு அதிகமான அதிகாரங்களையும் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒடுக்க தனியாக சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. காவல்துறை அதிகாரி என்ற அடிப்படையில் இதனை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

பொடா சட்டம் இருந்தபோது ஒரு சில மாநிலங்களில் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக சிலர் மீது தவறாகப் பயன்படுத்தப்பட்டது என்பது உண்மை.

என்னைப் பொருத்தவரை பொடா சட்டம் போன்ற கடுமையான சட்டத்தைக் கொண்டு வருவதை விட, இருக்கிற சட்டத்தின் சரத்துக்களை கடுமையாக்கி, அதனை சரியான முறையில் காவல்துறையினர் நடைமுறைப்படுத்தும் வகையில் சட்டத்தை திருத்தினாலே போதும் என்பது எனது கருத்து.

கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடந்த பின்னர் சென்னையிலும் அதுபோன்ற சதிதிட்டம் தீட்டப்பட்டது. அப்போது காவல்துறை ஆணையராக இருந்த நீங்கள் அந்த சதிதிட்டத்தை முறியடித்தீர்கள். அப்போது எந்த விதமான யுக்தியை கடைபிடித்தீர்கள்?

கோவை தொடர் குண்டு வெடிப்பு மிகப்பெரிய கோரச்சம்பவம் ஆகும். அதன்பிறகு அவர்கள் சென்னையைத் தாக்குவார்கள் என்று ஒரு தகவல் எங்களுக்குக் கிடைத்தது. அதன் அடிப்படையில் ஏறத்தாழ 90 நாட்கள் சென்னை மாநகரில் பணியாற்றிய அனைத்து காவல்துறையினரும், இரவு பகலாக பாடுபட்டு சென்னையில் அதுபோன்ற அசம்பாவிதம் நிகழ விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற சபதம் எடுத்தோம்.

கோவையில் வெடித்ததை விட அதிகமான ஆயிரக்கணக்கான குண்டுகளை (ஆர்டிஎக்ஸ்) வெடிக்காமல் கண்டெடுத்து அப்புறப்படுத்தினோம்.

இதற்குக் காரணம், பணியாற்றிய அன்றைய சென்னை மாநகர காவல்துறையினரின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு. அன்று இருந்த கலைஞரின் அரசு எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்து. பல நேரங்களில் கலைஞர் என்னுடன் தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு, கோவையில் நடந்தது போன்ற ஒரு சம்பவம் சென்னையில் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.

இதையெல்லாம் நாங்கள் ஒரு சவாலாக எடுத்து செய்துள்ளோம். அனைத்து காவல்துறையின் கூட்டு முயற்சியின் பலன். அதுமட்டும் அல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அப்போதைக்கு அப்போது தகவல்களைக் கொடுத்து வந்தனர்.

அதிலும் முக்கியமான விஷயம், எங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தகவல்களும் நூற்றுக்கு நூறு உண்மையான தகவல்களாகவே இருந்தது. அதனால்தான் சென்னை மாநகரத்தில் எவ்வித குண்டு வெடிப்பு சம்பவங்களும் நிகழாமல் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.

அக்கம் பக்கத்து வீடுகளில் யார் வசிக்கிறார்கள் என்பதே தெரியாத நிலையில், காவல்துறைக்கு பொதுமக்கள் எந்த வகையில் ஒத்துழைக்க முடியும் என்று நினைக்கின்றீர்கள்?

மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் தமிழகத்தில் தீவிரவாதம் குறைவுதான். அதுதான் உண்மை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் மட்டும்தான். அதற்குப் பிறகு வந்த அரசுகளும், காவல்துறையும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காரணத்தால் தீவிரவாதம் தலைதூக்காமல் உள்ளது.

ஆனால், அண்டை மாநிலங்களில் நடந்த அசம்பாவிதங்களைப் பார்க்கும்போது இதுபோன்ற பயங்கரவாதம் எப்போதும் எங்கு வேண்டுமானாலும் நுழைய முடியும் என்று தோன்றுகிறது. மக்களிடம் ஒரு அச்ச உணர்வும் உள்ளது. எனவே காவல்துறையும், உளவு அமைப்புகளும், குறிப்பாக பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும். காவல்துறையினர் திறமையாக செயலாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மக்கள் ஏனோ தானோ வென்று இல்லாமல், நமக்கு ஒரு பிரச்சினை வரும் வரை நாம் ஏன் தலையிட வேண்டும், நமக்கென்ன என்ற எண்ணம் மாற வேண்டும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். அவர்களது பகுதிகளில் சந்தேகப்படும் படியான நபர்களோ, செயல்களோ நடந்தால் உடனடியாக அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்க முன் வர வேண்டும். அந்த அளவிற்கு பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும் என்று இந்த வாய்ப்பின் மூலமாக வேண்டுகோளாக வைக்கிறேன்.

நே‌ர்காண‌ல்: கா. அ‌ய்யநாத‌ன்

வீடியோ: ‌‌சீ‌னி

Share this Story:

Follow Webdunia tamil