பயங்கரவாதத்தை ஒடுக்க முடியுமா?
, வியாழன், 18 செப்டம்பர் 2008 (16:08 IST)
தலைநகர் டெல்லியில் கடந்த சனிக்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதல்களை அடுத்து, பயங்கரவாதத்தை ஒடுக்க பிரதமர் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவது தொடர்பாக உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல் முன்மொழிந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் நகரங்களைக் குறிவைத்து நடத்தப்படும் ‘மெட்ரோ டெர்ரரிசத்தை’ எவ்வாறு கட்டுப்படுத்துவது, உள்நாட்டுப் பாதுகாப்பை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து தனது திட்டத்தை சிவ்ராஜ் பட்டீல் விளக்கியதாக பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவர் முன்மொழிந்த திட்டம் குறித்து வேறு எதையும் விளக்கவில்லை. நமது நாட்டின் உள்நாட்டு, அயல் உளவு அமைப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்துவது, மத்திய- மாநில பாதுகாப்பு அமைப்புக்களுக்கிடையே மேம்பட்ட ஒருங்கிணைப்பு, காவல் துறையை பலப்படுத்த அதிக நிதி ஒதுக்கீடு ஆகியன சிவ்ராஜ் பட்டீல் முன்வைத்த திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சங்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்திகள் கூறியுள்ளன. இந்தக்கூட்டத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காக கடுமையான சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாகவும், அது குறித்து ஆலோசிப்பதாக பிரதமர் ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் கூறுகின்றன. பயங்கரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் இயற்றுவது, கூடுதலாக மேற்கூறப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாலேயே நமது நாட்டை அச்சுறுத்திவரும் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டிவிட முடியும் என்று அரசு உறுதியாக நினைக்குமானால் அது கனவுலகில் மிதந்துக் கொண்டிருக்கிறது என்றே கருதவேண்டும். சட்டத்தினால் பயங்கரவாத நடவடிக்கைகள் தடுக்கப்பட்டதா?பயங்கரவாதத்தை ஒடுக்க மத்திய அரசு கடுமையான தடுப்புச் சட்டம் இயற்றினால் அதற்கு ஆதரவு அளிப்போம் என்று எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சியும் கூறியுள்ளது. இவர்கள் எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறார்கள் என்று புரியவில்லை.2001
வது ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நியூ யார்க், பென்சில்வனியா ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து, உலகளாவிய அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவது பற்றி ஆலோசித்த ஐ.நா.வின்
பாதுகாப்புப் பேரவை, மிக முக்கியமாக இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றியது. ஒன்று, தீ்ர்மானம் எண்: 1369; மற்றொன்று தீர்மானம் எண்: 1373 (28.09.2001). இதில் முதல் தீர்மானம், பயங்கரவாதம் உலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தல் என்பது ஒருமனதாக ஒப்புக்கொண்டு, பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்க சர்வதேச அளவில் ஒத்துழைப்பை வலியுறுத்தியது.இரண்டாவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண்: 1373, பயங்கரவாதத்தை ஒடுக்க ஒவ்வொரு நாடும் தனிப்பட்ட முறையிலும், மற்ற நாடுகளுடன் ஒன்று சேர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பட்டியலிட்டு, அதற்கு ஒருமனதாக ஒப்புதல் பெற்று நிறைவேற்றியது.
எடுத்துக்காட்டாக, 1. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வரும் நிதிகளை முடக்குவது;2.
பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கிடைப்பதைத் தடுப்பது;3.
பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான (உளவு) விவரங்களை மற்ற நாடுகளுக்கு உடனடியாக அளித்து எச்சரிக்கை செய்வது;4.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவிடும் நபர்களை கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்துவது மட்டுமின்றி, அப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிதீவிரமான குற்றச்செயல்களாக உள்நாட்டுச் சட்டங்களில் (திருத்தம் செய்து) சேர்த்து, அதற்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வகை செய்வது (Ensure that any person who participates in the financing, planning, preparation or perpetration of terrorist acts or in supporting terrorist acts is brought to justice and ensure that, in addition to any other measures against them, such terrorist acts are established as serious criminal offences in domestic laws and regulations and that the punishment duly reflects the seriousness of such terrorist acts); 5.
பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் நாடுவிட்டு நாடு செல்வதை முழுமையாக தடுக்கும் விதத்தில் பயண விதிமுறைகளை கடுமையாக்குவது, பயண ஆவணங்கள், அடையாளங்கள் ஆகியன தவறாக பயன்படுத்தப்படாத அளவிற்கு முறைப்படுத்துதல் ஆகியன போன்ற பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பல்வேறு நாடுகளில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தேசத்திற்கு விடுக்கப்பட்ட சவாலாக எடுத்துக்கொள்ளப்பட்டு அதிதீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் Federal Bureau of investigation (FBI) போன்ற அமைப்புகள் பயங்கரவாதத்தை ஒடுக்குவதை உடனடியான தலையாய குறிக்கோளாக எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதம் தொடர்பான மின்- அஞ்சல் உள்ளிட்ட எல்லா வகையான தகவல் பரிமாற்றங்களும் இந்த அமைப்புகளின் கடுமையான கண்காணிப்பிற்கும் தணிக்கைக்கும் உட்படுத்தப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பயங்கரவாத அச்சுறுத்தல்களை முறியடிக்கும் நடவடிக்கைகள், உளவு அமைப்புகளின் மூலம் மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்படுவதோடு நின்று விடுகிறது. பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான உளவு விவரங்களைப் பரிமாறிக்கொள்வதில் கூட நமது உளவு அமைப்புக்களுக்கு இடையே பெரிய இடைவெளி உள்ளதாக ஆளுநர்கள் மாநாட்டில் பிரதமர் பேசும் அளவி்ற்கு நிலைமை உள்ளது.தடுத்ததா பொடா சட்டம்?ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையிலயே பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (Prevention of Terrorism Act - POTA) பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான தேச ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் நிறைவேற்றியது.
பொடா சட்டத்தை நிறைவேற்றியது. அத்தோடு அமைதி காத்தது. அந்தச் சட்டம் தமிழ்நாடு (வைகோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது), உத்திரப்பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டது. எந்த பயங்கரவாதியும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. அதனால் எந்த ஒரு பயங்கரவாத தாக்குதலும் தடுக்கப்படவில்லை. தங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க மாநில அரசுகளுக்கு ஒரு சட்டக்கருவி கிடைத்தது அவ்வளவே.
இதனைத் தவிர ஐ.நா. பாதுகாப்புப் பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் எந்தவித தொடர் நடவடிக்கைகளையும் அந்த அரசு மேற்கொள்ளவில்லை.
அதனால்தான் அடுத்த சில மாதங்களிலேயே, 2001ஆம் ஆண்டு, டிசம்பர் 13ஆம் தேதி இந்தியாவின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இந்தச் சட்டமோ அல்லது அது சார்ந்து நடவடிக்கைகளோ இப்படிப்பட்ட தாக்குதல்களைத் தடுக்க முடியாது என்பதையே நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் உணர்த்தியது. அத்தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள், அவர்கள் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தூண்டுதலின் பேரிலேயே தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறி, போர் தொடுக்கும் முடிவுடன் படைகளை நகர்த்தியது வாஜ்பாய் அரசு. ஆனால், அது இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை அதிகரிக்கத்தான் பயன்பட்டதே தவிர, எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
இன்றளவும் எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல, பயங்கரவாத தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. பொடா சட்டத்தை வைத்துக்கொண்டு 2004ஆம் ஆண்டுவரை ஆட்சியிலிருந்த வாஜ்பாய் அரசு எந்த அளவிற்கு பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்தியது?எனவே, கடுமையான சட்டத்தை இயற்றிவிடுவதாலேயே பயங்கரவாதத்தை ஒடுக்கிவிட முடியும் என்று பா.ஜ.க. கூறுவதும், அதையே ஒரு தடுப்பு நடவடிக்கையாக இப்போதுள்ள அரசு கருவதுவதும் அர்த்தமற்றதாகும்.பயங்கரவாதத்தை ஒடுக்க நாடு தழுவிய அளவில், முழு அதிகாரத்துடன் செயல்படக்கூடிய புலனாய்வு அமைப்பு (பயங்கரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதே அதன் ஒரு நோக்கம்) ஒன்றை ஏற்படுத்த வேண்டியது (அமெரிக்காவின் FBI போல) மிக அவசியம் என்று பல ஆண்டுக் காலமாக கூறப்பட்டு வருகிறது. உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படக்கூடிய அப்படிப்பட்ட அமைப்பு தேவை என்று 8வது நிர்வாக சீர்திருத்த ஆணையம் (Administrative Reforms commission - ARC) நேற்று மத்திய அரசிற்கு அளித்த பரிந்துரையில் கூட தெரிவித்திருந்தது. இதைத்தான் மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்.
இந்தப் பரிந்துரையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங், "தற்போதுள்ள உளவு அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் ஆகியவற்றின் இடையில் உள்ள ஒருங்கிணைப்பை அதிகரித்தாலே பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.தற்போதுள்ள உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாததால்தான் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்கின்றன என்பதே உண்மை. மற்ற நாடுகளிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்தது. ஒருமுறைதான் நடந்தது. அடுத்த முறை நடக்கவில்லை, நடக்க விடாமல் தடுக்கப்பட்டது.இந்தியாவில் மட்டும் தொடருவதேன்?2001
செப்டம்பர் தாக்குதலிற்குப் பிறகு அதிதீவிரமாகச் செயல்படத் துவங்கிய அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. (Federal Bureau of Investigation - FBI) அப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஒன்றுகூட மீண்டும் அமெரிக்க மண்ணில் ஏற்படாமல்
தடுத்துவிட்டதே? உலகளாவிய அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்க உள்ளிட்ட நேச நாடுகள் தோற்றிருக்கலாம், ஆனால் ஒரு முறை தாக்குதல் நடந்த பிறகு மீண்டும் அப்படியொரு தாக்குதல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியுள்ளன இந்நாடுகள்.
நியூ யார்க் தாக்குதல்களுக்குப் பிறகு வேறெந்த ஒரு தாக்குதலும் இந்த 7 ஆண்டுகளில் அமெரிக்காவில் நடைபெறவில்லை.லண்டன் மெட்ரோ இரயில் நிலையங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலிற்குப் பிறகு மீண்டும் அப்படியொரு தாக்குதல் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இரயில் நிலையங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதன் பிறகு எந்தத் தாக்குதலும் அங்கு நடைபெறவில்லை. ரஷ்யாவிற்குள் ஒரு முறை தாக்குதல் நடந்தது. அதன்பிறகு அடுத்த தாக்குதல் நடைபெறவில்லை.ஆனால் நமது நாட்டில்...? வீர வசனங்களோடு எல்லாமே முடிந்து விடுகிறது. எனவே தாக்குதல்கள் தொடர்கிறது. அப்பாவிகள் சாகின்றனர், வீர வசனம் பேசுவோர் மட்டுமே பாதுகாப்பாக இருக்கின்றனர். பயங்கரவாதத்தை ஒடுக்க தேச அடையாள அட்டை வழங்கல், அயல்நாட்டிலிருந்து வரும் பயணிகள் மீது கண்காணிப்பு, எல்லைப் பாதுகாப்பு, தனித்த புலனாய்வு அமைப்பு, அயல் நாடுகளில் இருந்துவரும் நிதிகளின் மீதாக கண்காணிப்பு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களின் ஒத்துழைப்பைப் பெறல் என்று எண்ணற்ற ஆலோசனைகள் கூறப்பட்டன. ஆனால் அதில் எதுவும் ஏற்கப்படவில்லை.
நமது நாட்டின் எல்லைக்கு அப்பால் இருந்து வரும் அச்சுறுத்தல்களை முறியடிக்க பலமான இராணுவம் உள்ளது. உள்நாட்டில் உருவாகும் சட்டம் - ஒழுங்கு, குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மாநில காவல்துறை உள்ளது. நிலைமை கைமீறும் நிலையில் கூடுதல் பாதுகாப்புப் படைகள் உள்ளன. ஆனால் பயங்கரவாதம்? இது மேற்கூறப்பட்ட அச்சுறுத்தல்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மிக நவீனமானது, அதி பயங்கர ஆயுதங்களுடன் தாக்கவல்லது, தொழில்நுட்ப பலம் பெற்றது, சர்வதேச அளவில் ஒரு அடிப்படை கொள்கையுடன் பலமான செயல்பட்டு வருவது. இதனைத் தடுக்க தற்போதுள்ள நமது பாதுகாப்பு - உளவு அமைப்புக்கள் போதுமானவையல்ல. ஒரு புதிய, தனித்த, தனி அதிகார பலம் கொண்ட, ஒரே பணி இலக்கு கொண்ட தேச அளவிலான புலனாய்வு அமைப்பு அவசியம். இதைப்புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க முடியும், இதற்குமேலும் பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க முடியும். இந்த அரசிற்கு இதையெல்லாம் ஆழமாக ஆலோசித்து நடைமுறைப்படுத்த நேரம்தான் இல்லை.அதனால் காயத்திற்கு முதலுதவி செய்வதுபோல சில நடவடிக்கை அறிவிப்புக்களை வெளியிடுகிறது, அவ்வளவுதான்...