பயங்கரவாதத்தை ஒழிக்க சீரிய, விரிவான அணுகுமுறை தேவை!
திங்கள், 11 செப்டம்பர் 2006
மும்பை ரயில்களில் குண்டுகள் வைத்து 200 பேரை கொன்று விழுங்கிய பயங்கரவாதம், மலீகானில் 38 பேரை கொன்று தள்ளியுள்ளது. தொடரும் இந்த வெறியாட்டத்திற்கு முடிவு எப்போது? அப்பாவி மக்களை இப்படி கொத்துக் கொத்தாக கொன்று தள்ளும் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அதிகபட்ச கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் நிற்கின்றன!
காஷ்மீர் பிரச்சனையின் அடிப்படையில்தான் ஒரு ஆயுதப் போராட்டமாக உருவானது என்று கூறப்பட்ட பயங்கரவாதம், இன்று ஜம்மு-காஷ்மீரைத் தாண்டி இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் தனது கோர வடிவத்தை வெளிப்படுத்தக்கூடும் என்கின்ற அச்ச உணர்வு நமது நாட்டு மக்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
உலக அளவில் மிரட்டிவரும் பயங்கரவாத சக்திகளுடன் முழுமையான தொடர்புடனும், ஆதரவுடனும், சில நாடுகளின் மறைமுகத் தூண்டுதலுடனும் கோரத் தாண்டவமாடிவரும் பயங்கரவாதத்தை, பாதுகாப்புப் படைகளை பலப்படுத்துவதனாலும், உளவுத் தகவல்களை அளித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதையே ஸ்ரீநகர், மும்பை, மலீகான் தாக்குதல்கள் நிரூபிக்கின்றன.
பயங்கரவாதத்தின் வேராக உள்ள காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டும் அதே நேரத்தில், பயங்கரவாத சக்திகளின் மூல பலத்தை நொறுக்குவதிலும் அதிகபட்ச அக்கறையும், சிரத்தையும் காட்ட வேண்டியது அவசியமாகிறது.
உதாரணத்திற்கு, காஷ்மீரில் எல்லைத் தாண்டிய ஊடுருவலைத் தடுக்க வேலி அமைக்கும் பணி துவக்கப்பட்டது. இந்திய - பாகிஸ்தான் இடையிலான சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியிலும் பெருமளவிற்கு வேலியிடப்பட்டதால் ஊடுருவல் குறைந்தது. ஆனால், தற்பொழுது பாகிஸ்தானின் உளவு அமைப்பாக ஐ.எஸ்.ஐ.யால் பயிற்றுவிக்கப்படும் பயங்கரவாதிகள் நேபாளத்தில் இருந்தும், வங்க தேசத்தில் இருந்தும் ஊடுருவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைப் பகுதிகளிலும் வேலியிடப்பட்டு, ஊடுருவலிற்கான மற்ற சாத்தியக்கூறுகள் ஏதுமின்றி கண்காணிக்கப்பட வேண்டும்.
மத அறக்கட்டளைகளை கண்காணிக்க வேண்டும்!
பயங்கரவாதிகள் பயன்படுத்தும் ஆர்.டி.எக்ஸ். உள்ளிட்ட வெடிபொருட்களுக்கும், நடத்தும் தாக்குதல்களுக்கும் மிக அவசியமானது நிதி ஆதாரமாகும். பிடிபட்ட பயங்கரவாதிகள், அவர்களுக்கு உதவியதாக கூறப்பட்ட உள்ளூர் தொடர்புகள் ஆகியோரிடம் இருந்து ஆயிரக்கணக்கில் இந்திய, அயல்நாடு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. எனவே, பயங்கரவாதத்திற்கு உதவிடும் அமைப்புகளும், ஹவாலா போன்ற நிதி வரும் வழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட வேண்டும்.
உலக அளவில் பயங்கரவாதத்திற்கு நிதி முதுகெலும்பாக இருந்தது மத அறக்கட்டளைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட மத ரீதியான அறக்கட்டளைகள் பல்லாயிரக்கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வருமான வரி ஏய்ப்பிற்காக பதிவு செய்யப்படும் அறக்கட்டளைகளில் இருந்து மத தீவிரவாதத்திற்கும், மதப் பிரச்சாரத்திற்கும், மத மாற்றத்திற்கும், மற்ற ரகசியத் திட்டங்களுக்கும் உதவிட பல மத அறக்கட்டளைகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட அறக்கட்டளைகளை அடையாளம் கண்டு முடக்க வேண்டும். இதில் இந்து, முஸ்லிம், கிறித்தவ பாகுபாடுகளை கிஞ்சித்தும் பார்க்காமல், அவைகளின் செயற்பாடு, அவைகள் துவக்கப்பட்டதற்கான நோக்கத்தோடு ஒத்துப் போகின்றதா என்பதை துல்லியமாக ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும்.
ஏனெனில், இப்படிப்பட்ட அறக்கட்டளைகளுத்தான் அயல்நாட்டில் இருந்து பல லட்சக்கணக்கில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பணம் குவிகிறது. இவைகளில் இருந்துதான் மத பாடத்தைப் படிப்பதற்கு என்று கூறி அயல்நாட்டிற்கு அனுப்பப்பட்டு அங்கு தீவிரவாத பயிற்சி எடுப்பதற்கு உதவப்படுகிறது. எனவே, அறக்கட்டளைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
தேச அடையாள அட்டை அவசியம்!
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இரண்டு முக்கிய அம்சங்களை குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வலியுறுத்தினார்.
ஒன்று, நமது நாட்டு மக்கள் அனைவருக்கும் குடிமக்கள் அட்டையை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.
இரண்டு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மக்களையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்று அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அது குறித்து அரசு இன்று வரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூறவில்லை. தலைநகர் டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன் சிங், பொதுமக்களையும் பங்கேற்கச் செய்வது குறித்து பேசினார். ஆனால், தேச அடையாள அட்டை குறித்து மத்திய அரசு இன்று வரை வாய் திறக்கவில்லை.
இப்படிப்பட்ட அடையாள அட்டை குடிமக்கள் அனைவருக்கும் வழங்குவதன் மூலம் அவர்களைப் பற்றிய முழுமையான விவரங்கள் அரசின் வசம் இருப்பது மட்டுமின்றி, போலி கடவுச் சீட்டுடன் ஊடுருவும் பொது விரோதிகளை அடையாளம் காணவும் வழியேற்படும்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் ரோந்து காவலருக்கு உள்ள பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்திப் பேசினார். நமது உள் நாட்டு, அயல் நாட்டு உளவு அமைப்புகளை விட முக்கியத்துவம் வாய்ந்தது காவல் துறையின் உளவுப் பிரிவுகளாகும்.
எனவே, ஒவ்வொரு மாநில காவல் துறையின் முக்கிய அங்கமாக உள்ள உளவுப் பிரிவின் பலத்தைக் கூட்ட வேண்டும். அயல்நாடுகளின் பிளைன் கிளாத் போலிஸ்மேன் என்று அழைக்கப்படும் சீருடைய அணியாத (உளவு) காவலர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். உளவுப் பலம் இல்லாமல் பயங்கரவாதத்தின் திட்டங்களை அறிவது இயலாததாகும்.
பயங்கரவாதத்தை ஒடுக்கும் போரில் ஒன்றுபட்டு நிற்போம், ஒற்றுமையாக இருப்போம், சேர்ந்து முறியடிப்போம் என்றெல்லாம் முழக்கங்கள் விடுப்பதை தவிர்த்துவிட்டு ஆழமான, விரிவான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் துரிதமாக மேற்கொண்டு பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் உறுதியுடனும், சிரத்தையுடனும் செயல்பட வேண்டும்.