கச்சா விலை: வெடித்த நீர்க் குமிழி!
, வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (18:24 IST)
மூன்று மாதங்களுக்கு முன்னர் வரலாறு காணாத அளவிற்கு பீப்பாய் ஒன்றிற்கு 146 டாலர்களை எட்டிய கச்சா எண்ணெயின் விலை, தொடர்ந்து குறைந்துவந்து தற்பொழுது 100 டாலர்களுக்கு சரிந்துள்ளது.
அமெரிக்காவின் நைமக்ஸ் சந்தையில் ஒயிட் குரூட் என்றழைக்கப்படும் கச்சா எண்ணெயின் விலை செப்டம்பர் 11ஆம் தேதி நிலவரப்படி 100.10 டாலர்களாகக் குறைந்துள்ளது. லண்டன் பிரெண்ட் குரூட் விலை பீப்பாய்க்கு 96.99 டாலராகக் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தியில் 40 விழுக்காடு அளவிற்கு பங்களிக்கும் ஓபெக் (Oil Producing and Exporting Countries - OPEC) நாடுகள் உற்பத்தி செய்திடும் கச்சா விலை நேற்றைய நிலவரப்படி 95.26 டாலர்களாக குறைந்துள்ளது.இதன் காரணமாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் விலைகள் சர்வதேச அளவில் பெரும் அளவிற்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டைப் பொறுத்தவரை கச்சா விலையேற்றத்திற்கு நிகராக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்படாததால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பு இந்த விலைக் குறைவால் குறைந்துள்ளதே தவிர, இன்னமும் இழப்பு தொடர்வதால் விலைகளைக் குறைக்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது.கச்சா விலை மேலும் உயரும், எனவே வரும் செப்டம்பரில் மீண்டும் விலை உயர்த்தப்படலாம் என்று பெட்ரோலியத் துறை செயலர் கூறியிருந்தார். அந்த நிலை இந்த விலைச் சரிவால் தவிர்க்கப்பட்டுள்ளது நமக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.கச்சா விலை குறையாது, தொடர்ந்து உயர்ந்துகொண்டுதானிருக்கும், பீப்பாய்க்கு 160 டாலர்கள் வரை உயரும், கச்சா உற்பத்தி நாடுகள் தங்களுடைய உற்பத்தியை அதிகப்படுத்தினாலும் அதன் விலை 150 டாலருக்குக் கீழ் குறையவே குறையாது என்று சர்வதேச எரிசக்தி அமைப்பு உட்பட எண்ணெய் வர்த்தக அமைப்புகளும், ஊக வணிகர்களும் செய்திகளைப் பரப்பி வந்தனர்.
உலக அளவில் பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது, அதிலும் குறிப்பாக சீனா, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் இந்தத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கச்சா விலை குறையும் வாய்ப்பு இல்லை என்று கூறினர்.இதுவெல்லாம் வணிக நலனைக் கருத்தில் கொண்டு திட்டமிட்டு பரப்பப்படும் செய்திகள் என்பதை ஊடகங்களும் கூறிக்கொண்டுதானிருந்தன. ஆனால் அதனை ஊக வணிகர்களும், இதனால் பெரும் இலாபம் கண்டுவந்த அமெரிக்க, ஐரோப்பிய எண்ணெய் நிறுவனங்களும் மறுத்துவந்தன. தேவை அதிகரிப்பதும், அதற்கேற்ற அளவிற்கு உற்பத்தி அதிகரிக்காததும், எண்ணெய் சுத்தரிப்பு அளவு குறைந்துவருவதும்தான் என்று விலை உயர்விற்கு நியாயம் கூறி வந்தன.ஊக வணிகர்களும், எண்ணெய் நிறுவனங்களும், சில நாடுகளும் உருவாக்கிய அந்த நீர்க்குமிழி ஒரே மாதத்தில் உடைந்துவிட்டது. தேவை அதிகரிக்கிறது, உற்பத்தி குறைகிறது என்றெல்லாம் இவர்கள் கிளப்பி விட்ட கதைகள் ஒரு மாதத்திற்குக் கூட நிற்கவில்லை. ஓபெக் நாடுகளோ, அமெரிக்காவோ அல்லது மற்றொரு பெரும் உற்பத்தியாளரான ரஷ்யாவோ தங்களது உற்பத்தியைப் பெருக்கவில்லை, ஆயினும் கச்சா விலை இரண்டு மாதத்தில் 40 முதல் 45 டாலர்கள் அளவிற்கு குறைந்துவிட்டது.கடந்த 6 மாதத்தில் கண்டிராத விலை இறக்கத்தை லண்டன் குரூட் சந்தித்துள்ளது.
கச்சா எண்ணெயின் விலையேற்றம் ஊக வணிகர்களின் திட்டமிட்ட வணிகச் சதியே என்பதை நேற்று முன்தினம் கூடிய ஓபெக் நாடுகளின் 149வது கூட்டதில் உரையாற்றிய அதன் தலைவர் சக்கீப் கலீல், “இந்த விலையேற்றம் உற்பத்தியோடு சம்மந்தப்படாத காரணிகளாலும், ஊக வணிகத்தாலும், டாலர் டாலரின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியாலும், சர்வதேச அளவில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளாலும், சந்தையில் நிலவிய எதிர்பாராத நெருக்கத்தினாலும் தான் ஏற்பட்டது என்பதை நாம் தொடர்ந்து கூறிவந்துள்ளோம்.
தற்பொழுது மேற்கூறப்பட்ட காரணிகள் சிலவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் - டாலரின் மதிப்பு உயர்வு, சர்வதேச அரசியல் நெருக்கடிகளில் தளர்வு, உலகளாவிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் பின்னடைவு, அதன் காரணமாக எண்ணெய் தேவையில் ஏற்பட்டுள்ள இறக்கம் ஆகியன மட்டுமின்றி, நியூ யார்க் கச்சா சந்தையில் செய்திருந்த முதலீட்டை ஊக வணிகர்கள் பெருமளவிற்கு விற்றுவிட்டதன் காரணமாக கச்சா விலை குறைந்து வருகிறது” என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவை சமிபத்தில் மிரட்டிய ஐக்கி என்று பெயரிடப்பட்ட சூறாவளி எச்சரிக்கையை காரணமாக்கி மீண்டும் கச்சா விலையை உயர்த்த ஊக வணிகர்கள் முயன்றனர். அப்பொழுது அமெரிக்க சுத்தகரிப்பு ஆலைகளின் உற்பத்தியும் 20 விழுக்காடு அளவிற்கு குறைந்தது. ஆயினும், விலை சற்றே உயர்ந்து மீண்டும் சரிவுப் பாதையில் பயணிக்கத் துவங்கியது.இரண்டே மாதத்தில் பீப்பாய்க்கு 40 முதல் 45 டாலர்கள் வரை இழந்த எண்ணெய் உற்பத்தி நாடுகளும், நிறுவனங்களும், கச்சா விலையை எப்படியாவது 100 டாலருக்குக் கீ்ழ் குறைந்துவிடாமல் தடுத்து நிறுத்திட பெரும் முயற்சி மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.ஓபெக் அமைப்பு கூட தனது உற்பத்தியை குறைப்பது குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 5 லட்சம் பீப்பாய் அளவிற்கு கச்சா உற்பத்தியை குறைக்க அது முடிவு செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஓபெக் உற்பத்தி செய்யும் கச்சா விலை 68.71 டாலராக இருந்தது. அந்த நிலைக்கு விலை இறங்க அனுமதிக்க வேண்டும். கச்சா விலையேற்றத்தினால் ஒரே ஆண்டில் பல லட்சக் கணக்கான கோடி டாலர்களைச் சம்பாதித்த எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு - அது அமெரிக்கா, ரஷ்யாவாக இருந்தாலும், ஓபெக் நாடுகளாயினும் விலை குறைவதை சகித்துக் கொள்ளத் தயாராக இல்லை.எனவே எண்ணெய் உற்பத்தி நாடுகள் அனைத்தும் கூட்டு சேர்ந்து (ரகசியமாகத்தான்) உற்பத்தியைக் குறைத்து பூச்சாண்டிக் காட்டி மீண்டும் கச்சா விலையை உயர்த்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.புதியதொரு நீர்க் குமிழி உருவாகலாம்!