திறமையல்ல... அனுபவமும், வசதியின்மையுமே!
, புதன், 27 ஆகஸ்ட் 2008 (11:12 IST)
சீனத் தலைநகர் பீஜிங்கில் நடந்த முடிந்த 29வது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் வெளிப்படுத்திய திறன் பாராட்டிற்குரியதாக இருந்தது.
10
மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் அனுபவ் பிந்த்ரா வென்ற தங்கம், ஒலிம்பிக் தனி நபர் போட்டிகளில் தங்கம் வெல்லவில்லையே என்ற இந்தியாவின் நீண்ட கால ஏக்கத்திற்கு விடையளித்தது என்பது மட்டுமின்றி, இறுதிப் போட்டியில் கடும் போட்டிக்கு இடையே கடைசி வாய்ப்பில் அவர் மிகத் துல்லியமாக சுட்டு 10.8 புள்ளிகளை (அதிகபட்சம் 10.9 புள்ளிகள்) வென்றது, அவரின் திறமையை மட்டுமின்றி, அதற்காக அவர் மேற்கொண்ட பயிற்சி எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதையும் உணர்த்தியது.சிட்னி ஒலிம்பிக் போட்டியில் முதன் முதலாக பங்கேற்றது முதல் பல்வேறு சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு பெற்ற அனுபவத்தை, ஐரோப்பா சென்று கடும் பயிற்சியில் ஈடுபட்டு (பெரும் சொந்த செலவில்) திறனை மேம்படுத்திக் கொண்டு தனது தாய் நாட்டிற்கு இப்பெருமையை பிந்த்ரா சேர்த்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரரும், வீராங்கனையும் இப்படிப்பட்ட கடுமையான பயிற்சிகளின் வாயிலாகவே பதக்கம் வெல்லும் அந்த அசாதாரண பெருமையைப் பெறுகின்றனர்.
இந்தியாவிற்காக மேலும் 2 பதக்கங்களை வென்ற வீரர்களான குத்துச் சண்டை வீரர் விஜேந்தரும், மல்யுத்த வீரர் சுசீல்குமாரும் இப்படி கடுமையான பயிற்சியையும், பல சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட அனுபவத்தினாலும் வென்றுள்ளனர்.
அருமையாக சண்டையிட்டுத் தோற்ற அகில், ஜித்தேந்தர்!
இவர்களுக்கும் சிறப்பான பயிற்சி வாய்ப்புகளும், ஆதரவும் கிடைத்திருந்தால் தங்கம் அல்லது வெள்ளியை வென்றிருப்பார்கள். இதனைக் கூறுவதற்குக் காரணம், மற்ற போட்டிகளில் கலந்து கொண்ட நமது வீரர்களும், வீராங்கனைகளும் மிகக் குறைந்தகால பயிற்சியுடன் ஒலிம்பிக் போட்டிகளில் - சர்வதேச போட்டி அனுபவங்களை அதிகம் பெறாத நிலையில் - கலந்து கொண்டதனால் பதக்கம் வெல்லும் வாய்ப்பை பெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதற்கே.
உதாரணத்திற்கு, குத்துச்சண்டை காலிறுதிக்குத் தகுதி பெற்ற ஜித்தேந்தரும், அகில்குமாரும் மிகச் சிறப்பாக சண்டையிட்டே தோற்றனர்.
இவர்கள் இருவரும் தோற்றதற்கான காரணத்தை நன்கு பகுப்பாய்வு செய்து பார்த்தால், அவர்கள் சந்தித்த போட்டியாளர்களை விட, இவர்கள் அதிகம் திறன் படைத்தவர்களே என்பதும், அன்றையப் போட்டியில் கடைபிடித்திருக்க வேண்டிய நுணுக்கமான அணுகுமுறையை அவர்கள் அறியாதிருந்ததே தோல்விக்கு காரணமாகும் என்பதையும் உணரலாம். இதெல்லாம் அனுபவக் குறைவின் காரணமாக ஏற்படும் தோல்விகளே. பாட்மின்டனில் ஏற்பட்ட சரிவு!ஒலிம்பிக் பாட்மின்டன் போட்டிகளில் மகளிர் பிரிவில் போட்டியிட்ட இந்திய வீராங்கனை சாய்னா நேவால், சர்வதேசப் போட்டிகளில் மிகக் குறைந்த அனுபவம் பெற்றவராக இருந்தும், தன்னை விட தர வரிசையிலும், உலகளவில் அனுபவம் பெற்ற வீராங்கனைகளையும் வென்று காலிறுதிக்கு வந்தவர், வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் இறுதி செட்டில் அடுத்தடுத்து தவறுகள் செய்ததால் ஹாங்காங் வீராங்கனையிடம் தோற்க நேர்ந்தது.ஆடவர் பிரிவில் களமிறங்கிய சரத் கமல், முதல் சுற்றிலேயே கடுமையான போட்டியைச் சந்தித்து வெற்றி கண்டார். ஆனால் 2வது சுற்றில் அவர் ஆடித் தோற்ற விதம், அனுபவமின்மையையே காட்டியது. ஆக, திறமையிருந்தும் போதுமான அனுபவம் இல்லாதது நமது நாட்டவரின் தோல்விக்கு காரணமானது.ஏமாற்றமளித்த மனாவ்ஜித், டோலா பானர்ஜி!
ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன் நடைபெற்ற உலக சாம்பியன் போட்டிகளில் மிகச் சிறப்பாக தங்கள் திறமையை நிரூபித்து சாம்பியன் பட்டங்களைப் பெற்ற மனாவ்ஜித் சிங் சாந்துவும், டோலா பானர்ஜியும் இறுதிக்கே தகுதி பெறாதது ஆழ்ந்த பரிசீலனைக்குறியதாகும்.
சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் தகுதிச் சுற்றுகள் முடிந்த பிறகு துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் கடுமையாக மோதி ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்ற டோலா பானர்ஜி, பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் தனி நபர் பிரிவில் அதிர்ஷ்டம் ஆதரவு அளிக்காததால் தோற்றார் என்று கூறலாம்.
கனடா நாட்டு வீராங்கனை மேரி பியருடன் மோதிய டோலா மிகச் சிறப்பாக அம்பெய்து 109 புள்ளிகளைப் பெற்று சம நிலையை எட்டினார். ஆனால், வெற்றியாளரை முடிவு செய்யும் Shoot out-இல் 10க்கு 8 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றார். இப்படி முக்கியமான கட்டங்களில் இந்தியர்கள் வெற்றி பெற இயலாமல் போவது எதனால் என்பதை உளவியல் ரீதியாகவும் ஆராய வேண்டும்.
வில் வித்தை அணிப் போட்டியில் டோலா, பம்பைலா ஆகியோருடன் களமிறங்கிய அனுபவமற்ற இளம் வீராங்கனை பிரீனீதா குறைவான புள்ளிகளைப் பெற்றதால் சீன அணியிடம் இந்திய அணி 5 புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்றது. இறுதியில் சீன அணியே வெள்ளிப் பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படிப்பட்ட சிறு சிறு வழுக்கல்களால் பல பதக்கங்களை இந்தியா பறிகொடுத்தது. இந்த நிலையை தொடர் பயிற்சியின் மூலமாகவும், சர்வதேசப் போட்டிகளில் அதிகம் பங்கேற்பதனாலும் மிகச் சுலபமாக மாற்றிவிடலாம்.மற்ற நாட்டு - குறிப்பாக முன்னேறிய நாடுகளின் வீரர், வீராங்கனைகளுடன் ஒப்பிடுகையில் நமது நாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திறமை குறைவு என்பதெல்லாம் அடிப்படையற்றது என்பது மிக உன்னிப்பாக கவனிக்கப்பட்ட இப்போட்டியில் தெரிந்துவிட்டது. இதற்கு உதாரணம் கூற வேண்டுமானால், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 50 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை நடந்த Free Style, Butter Fly நீச்சல் போட்டிகளில் இந்தியாவின் இளம் வீரர்
விருந்தாவன் கடே மிக நன்றாக நீந்தி தகுதிச் சுற்றுப் போட்டிகளில் வெற்றி பெற்றார். ஆனால் அவர் இறுதிக்குத் தகுதி பெற முடியவில்லையே தவிர, பந்தய தூரத்தை கடக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் சர்வதேச அளவில் பார்க்கும்போது மிகச் சிறப்பானது. இந்த இளம் வீரர் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் நீச்சலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார் என்பதில் சந்தேகமில்லை.
எனவே திறமையல்ல பிரச்சனை, சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுப் பெறும் அனுபவமும், பயிற்சி பெறத் தேவையான அடிப்படை வசதிகளுமே நமது நாட்டினருக்குத் தேவை. இதனைச் செய்து கொடுக்கட்டும் அரசுகளும், விளையாட்டு கூட்டமைப்புகளும்... பிறகு பாருங்கள் இந்தியா எத்தனை பதக்கங்களை வெல்கிறது என்பதை.
பதக்கம் வென்றுத் திரும்பிய வீரர்களுக்கு வாழ்த்துகள்.