மதராஸ் தினம் : அந்தக் கால காட்சிகள்!
, சனி, 23 ஆகஸ்ட் 2008 (19:37 IST)
1639
ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதிதான் இன்று சென்னை என்று அழைக்கப்படும் இம்மாநகருக்கு வித்திடப்பட்டது. அன்றுதான் மதராஸ் பட்டணம் என்றழைக்கப்பட்ட சென்னை கடற்கரையை ஒட்டிய 5 சதுர மைல் நிலப்பரப்பை விஜய நகர பேரரசிடமிருந்து பெற்ற வெள்ளையரின் கிழக்கிந்திய கம்பெனி ஒரு கோட்டையைக் கட்டி இந்நகருக்கு வித்திட்டது.
அந்த நாளே இன்றுவரை சென்னை மாநகரின் பிறந்த தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மதராஸ் பட்டணத்தின், அதாவது சென்னை மாநகரத்தின் 369வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி அரங்கில் ஒரு சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சுற்றலாத் துறையின் ஆதரவுடன் டி.ஹேம்சந்திர ராவ், ராஜா சீத்தாராமன் ஆகியோர் ஒரு கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இக்கண்காட்சியில் சென்னை நகரம் எப்படி இருந்தது என்பதை பல அரிய புகைப்படக் காட்சிகளைத் தொகுத்து நம் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளனர்.சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகே ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயில் படகுகள் செல்லும் காட்சி ஏதோ ஒரு அற்புத ஓவியத்தை பார்ப்பதுபோல் உள்ளது. 1960
ஆம் ஆண்டுவரை பக்கிங்ஹாம் கால்வாயில் படகு போக்குவரத்து நடந்துவந்ததாகக் கூறுகிறார் டி. ஹேம்சந்திர ராவ்.ஒரு நூற்றாண்டிற்கு முன்னர்வரை கூவம் நதி குளித்து நீராடும் நதியாக இருந்தது என்று கூறிய ராவ், அந்ந்தியில் அரை நூற்றாண்டிற்கு முன்பு வரை மீன் பிடிக்கப்பட்டுவந்ததாகவும் கூறி நம்மை அதிரச் செய்தார். நம்மை வாழவைக்கும் இந்நகரை நாம் வாழ வைக்கவேண்டும், அதற்கு இந்நகரை சுத்தமாக்கி நாம் காப்பாற்ற வேண்டும் என்பதே இக்கண்காட்சி நடத்தும் நோக்கம் என்று ராவ் கூறியபோது, அது எவ்வளவு சாத்தியமற்றது என்று நினைக்துப் பார்க்க... நெஞ்சம் கணத்தது.சென்னை மாநகரின் அந்தக் கால காட்சிகள். வீடியோ: சீனி.