அமர்நாத்: மதவாதத்தால் பற்றி எரியும் ஜம்மு-காஷ்மீர்!
, செவ்வாய், 12 ஆகஸ்ட் 2008 (21:01 IST)
புனித அமர்நாத் குகைக் கோயிலிற்குச் சென்று பனியால் ஆன சிவ லிங்கத்தை தரிசிக்கச் செல்லும் யாத்ரிகர்களுக்கு தங்குமிட வசதி செய்து கொடுக்க ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளிக்கப்பட்ட விவகாரம், மதவாதிகளால் பெரும் பிரச்சனையாக்கப்பட்டதன் விளைவாக இன்று ஜம்முவும், காஷ்மீரும் பற்றி எரிகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளையெல்லாம் விட, மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகத் திகழ்ந்துவந்த காஷ்மீரில், இப்படியொரு பிரச்சனை எப்படி வெடித்தது என்பதை உற்று நோக்கிவரும் எவரும், இந்த நில ஒதுக்கீடு விவகாரம் பிரச்சனையை கிளப்ப வேண்டும் என்ற நோக்கோடு துவக்கப்பட்டதை மறுக்க மாட்டார்கள்.புனித அமர்நாத் கோயிலிற்கு செல்லும் மலைப்பாதையில், கடுமையான தடப் வெப்ப நிலை நிலவிவரும் சூழலில், யாத்ரிகர்கள் தங்கிச் செல்ல தற்காலிக தங்குமிடங்களை அமைப்பதற்காக வனப்பகுதியில் 39.88 ஹெக்டேர் நிலத்தை அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு (Sri Amarnathji Shrine Board - SASB) ஜம்மு-காஷ்மீர் அரசு ஒதுக்கீடு செய்தது.
இந்த ஒதுக்கீடு செய்வதற்கு முன்னரே அதற்கான ஒப்புதலை முதலமைச்சராக இருந்து குலாம் நபி ஆசாத் அமைச்சரவையை கூட்டி முறைப்படி பெற்றார். அதற்கு எந்த எதிர்ப்பும் எழவில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடனேயே இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது. அமைச்சரவையின் ஒப்புதல் அடிப்படையில் அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.வனப்பகுதி நிலத்தை தற்காலிக தங்குமிடங்கள் அமைக்க அளிப்பதால் சுற்றுச் சூழலிற்கு பாதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை சில அமைப்புகள் முன்வைத்து எதிர்ப்பு காட்டத் தொடங்கின. அதற்கு ஹூரியாத்தின் பிரிவினைவாத கட்சிகளும் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. ஆயினும் இந்த எதிர்ப்பு பெரிதாக எடுபடவில்லை.இந்த நிலையில்தான், ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகத்தின் சட்டபூர்வமான தலைவராக உள்ள ஜம்மு-காஷ்மீர் ஆளுநரின் செயலர் அருண் குமார் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, யாத்ரிகர்கள் தங்கிச் செல்வதற்காக தற்காலிக தங்குமிடங்களை
உருவாக்கித் தர அளிக்கப்பட்ட நில ஒதுக்கீடு நிரந்தரமானதே என்று கூறி தேவையற்ற ஒரு பிரச்சனையை எழுப்பினார். இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்த பிறகுதான் நில ஒதுக்கீடு விவகாரம் பெரும் பிரச்சனையானது.
நில ஒதுக்கீடு பிரச்சனையாவதைத் தடுக்க முயன்ற அம்மாநில முதலமைச்சர் குலாம் நபி ஆசாத், நில ஒதுக்கீடு நிரந்தரமானதல்ல, தற்காலிகமானதே என்று அந்த உத்தரவைக் காட்டி தெளிவுபடுத்தினார். ஆனால், நிரந்தரமாக நிலத்தை அளிப்பதற்கான முதல் நடவடிக்கையே இது என்று கூறி ஹூரியாத் உள்ளிட்ட அமைப்புகள்
பிரச்சனையாக்க, அதில் அரசியல் ஆதாயம் தேட முற்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சி, மதவாத பிரிவினை சக்திகளுடன் இணைந்து ‘நில ஒதுக்கீடு ஆணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று குரலெழுப்பியது. அதுவரை ஒரிரு இடங்களில் மட்டுமே நடந்த சிறிய ஆர்ப்பாட்டங்கள், தேசிய மாநாட்டுக் கட்சியும் போராட்டத்தில் குதித்ததால் பெரிதானது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் நடந்த மோதலையடுத்து துப்பாக்கிச் சூடு நடந்து அதில் பலர் கொல்லப்பட்டனர்.விவகாரம் விசுவரூபமெடுப்பதைக் கண்ட மக்கள் ஜனநாயகக் கட்சி திடீர் பல்டியடித்தது. நில ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கத் துவங்கியது. ஆளும் கூட்டணியில் இருந்துகொண்டு நில ஒதுக்கீட்டிற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு, அது பிரச்சனையானவுடன் கூட்டணி அரசில் இருந்து வெளியேறுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்தது.அதுமட்டுமல்ல, அரசு உத்தரவை ரத்து செய்வதற்கு கெடு
விதித்துவிட்டு, அரசிற்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக்கொள்வதாக அக்கட்சித் தலைவர் மெஹ்பூபா முஃப்தி அறிவித்தார். முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தனிமைபடுத்தப்பட்டார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னரே பதவி விலகினார் ஆசாத். இதற்கிடையே, இந்தப் பிரச்சனைக்கு வித்திட்ட ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் எஸ். கே. சின்ஹா பதவி விலக, புதிய ஆளுநராக பொறுப்பேற்ற வோரா, அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் ஒதுக்கி அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார். இதனைப் பெரிய வெற்றியாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் செல்வாக்குப் பெற்ற கட்சிகள் கொண்டாட, அதற்கு எதிர் வினையாக ஜம்முவில் போராட்டம் துவங்கியது. பா.ஜ.க., விஸ்வ இந்து பரிஷத் ஆதரவுடன் துவங்கிய அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க ஸ்ரீ அமர்நாத் சங்கார்ஷ் சமிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு அளித்து,
பிறகு ரத்து செய்யப்பட்ட நிலத்தை மீண்டும் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர்ந்த இவ்வமைப்பின் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற, அங்கேயும் கலவரம், துப்பாக்கிச் சூடு என்று பல உயிர்கள் பலியாகின.
காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் செல்லும் சாலைகள் மறிக்கப்பட்டன. பாரமுல்லாவரை செல்லும் ரயில் பாதை நாசமாக்கப்பட்டது.
இதனால் காஷ்மீரில் அத்யாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஜம்மு போராட்டத்தினால் தங்களுடைய வணிகம் பாதிக்கப்பட்டதால் கொதிப்படைந்த அப்பகுதி வணிகர்கள் தங்களுடைய பொருட்களை விற்கவும், தேவையான பொருட்களை வாங்கவும் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியின் தலைநகரான முசாஃபராபாத்திற்கு செல்வோம் என்று கூறி நேற்று பேரணி நடத்த, அதனால் ஏற்பட்ட மோதலையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட, ஹூரியாத் மாநாட்டு அமைப்பிலுள்ள கட்சிகளில் ஒன்றின் தலைவரான ஷேக் அப்துல் அஜீஸ் உட்பட 5 பேர் உயிரிழக்க, தற்பொழுது ஜம்மு-காஷ்மீர் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பிரச்சனைக்குத் தீர்வு காண உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டீல்
தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்துவிட்டது.காரணம்: அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளிக்கக் கூடாது என்று காஷ்மீரின் அனைத்துக் கட்சிகளும், மத அமைப்புக்களும் ஒன்றுபட்டுக் கூறுகின்றன. அங்கு அதற்கு எதிர்ப்பில்லை.அரசு முதலில் பிறப்பித்த உத்தரவின்படி, அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலம் அளித்தால் மட்டுமே போராட்டத்தைக் கைவிடுவோம் என்று ஜம்மு பகுதி அரசியல், மத அமைப்புக்களும், அமர்நாத் சங்கார்ஷ் சமிதியும் உறுதியாகக் கூறிவிட்டன. இதற்கு ஜம்முவில் ஒருமித்த ஆதரவு உள்ளதுஇந்த நிலையில்தான் கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரிந்துவரும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில், இன்று 3வது நாளாக காஷ்மீர் பகுதியில் நடந்த போராட்டத்தினால் பரவிய வன்முறையை அடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்தப் பிரச்சனையை ஒவ்வொரு கட்சியும், அமைப்புகளும் எப்படியெல்லாம் தங்கள் வசதிக்கு பயன்படுத்திக்கொண்டன என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், இத்தனை உயிர்களை பலி கொள்ளக்கூடிய அளவிற்கு இது பிரச்சனையா என்று பாருங்கள்.
1.கடுமையான குளிர் நிலவும் இமலாயப் பனி மலைப் பகுதியில் அமைந்துள்ள புனித அமர்நாத் கோயிலிற்குச் செல்லும் யாத்ரிகர்களுக்கு தற்காலிகத் தங்குமிடம் அமைத்துத் தரவும், மற்ற அடிப்படை வசதிகளைச் செய்து தரவும் ஸ்ரீ அமர்நாத் கோயில் நிர்வாகம் அமைக்கப்பட்டதில் என்ன தவறு?
2.அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு தற்காலிக அடிப்படையிலேயே நிலம் அளிக்கப்பட்ட நிலையில், அது நிரந்தரமாக அளிக்கப்பட்டது என்று நிர்வாக வாரியத்தின் தலைவராக உள்ள ஆளுநரின் தனிச் செயலர் ஊடகங்களிடம் கூறி பிரச்சனையை உருவாக்கியது ஏன்?
3.
யாத்ரிகர்களுக்கு தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்துதர வனத்துறையின் நிலம் (40 ஹெக்டேர்) ஒதுக்கித் தரப்பட்டதில் தவறில்லை என்று ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டுவிட்டு (அல்லது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்துவிட்டு) பிறகு, அதனால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்று காஷ்மீர் அமைப்புகள் கூறியதற்கு காரணம் பொது நலனா அல்லது மதவாதமா?4.
அமர்நாத் யாத்ரிகர்களுக்கு தற்காலிக தங்கமிட வசதி செய்து
கொடுக்க வனத்துறைக்குச் சொந்தமான அந்த நிலத்தை அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் 2 மாத காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் 2005இல் உத்தரவிட்டதன் அடிப்படையில்தானே இந்த நில மாற்றம் செய்யப்பட்டது? அதனை அப்பொழுது ஏற்றுக் கொண்ட தேசிய மாநாட்டுக் கட்சி, இப்பொழுது எதிர்ப்பது (மதவாத) அரசியல் லாபத்திற்கன்றி வேறெதற்கு?5.
அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலமளிக்கும் முடிவை அமைச்சரவைக் கூட்டத்தில் மக்கள் ஜனநாயக கட்சியின் அமைச்சரின் வாயால் முன்மொழிந்துவிட்டு, பிறகு அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டவுடன் அமைச்சரவையிலிருந்தே வெளியேறி, ஆட்சியைக் கவிழ்த்தது மதவாத அரசியல் அல்லாமல் வேறென்ன?6.
இந்த சாதாரண பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவதைத் தவிர்த்துவிட்டு, அதற்கு நாடளவில் முழு அடைப்பு நடத்த பா.ஜ.க. அறைகூவல் விடுத்தது மதவாத அரசியல் அல்லாமல் வேறென்ன.7.
அமர்நாத் கோயில் நிர்வாகத்திற்கு நிலமளிக்கும் விவகாரத்தில்
ஜம்மு-காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கூறிய பா.ஜ.க., முழு அடைப்பு நடத்த அறைகூவல் விடுப்பதற்கு முன்னர், இதனை நாட்டிற்கோ அல்லது அரசிற்கோ தெரிவிக்காத்து ஏன்?
8.காஷ்மீரத்து அமைப்புக்களும், கட்சிகளும் எதிர்த்த காரணத்திற்காகவே எவ்வித வலிமையாக காரணமும் இல்லாத நிலையில், அமர்நாத் கோயிலிற்கு நிலமளித்த உத்தரவை ரத்து செய்ய மத்திய அரசு சம்மதித்து ஏன்?
இப்படி எண்ணற்ற கேள்விகள் உள்ளன. அதனால்தான் இது திட்டமிட்டு, பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்று உள்திட்டத்துடனேயே ஒவ்வொரு அமைப்பும், கட்சியும் உருவாக்கிய பிரச்சனையாகத் தெரிகிறது.
இப்படிப்பட்ட பின்னணியில், அமர்நாத் கோயில் நிலமளிப்பு விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்வு எப்படியிருக்க முடியும்?
மத்திய அரசு முயற்சிக்கட்டும்.