ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்: உண்மையான தேச பற்றாளர்!
, வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (20:26 IST)
“இந்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், பாரதிய ஜனதாவையும் அதன் தோழமைக் கட்சிகளையும் தோற்கடிப்பதே இடதுசாரிகள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் முக்கிய பணியாகும். இந்தத் தேர்தல் முடிந்து 14வது மக்களவை அமைக்கப்படும்போது இந்நாட்டில் ஒரு மதச் சார்பற்ற அரசு அமைவதை மார்க்ஸிஸ்ட் கட்சி உறுதி செய்ய வேண்டும்” என்று 2004ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-31 தேதிகளில் ஹைதராபாத்தில் நடந்த மார்க்ஸிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் முழங்கினார், அன்று அக்கட்சியின் பொதுச் செயலராக இருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜீத்.
சுர்ஜீத் சிங் என்ன கூறினாரோ அதுவே 4 மாதங்களுக்குப் பிறகு நடந்தது. பாரதிய ஜனதா கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் தோற்கடிக்கப்பட்டு, இடதுசாரிகளின் ஆதரவுடன் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைந்தது.மதவாத சக்திகளை ஆட்சி பீடமேற அனுமதிக்கக் கூடாது அல்லது அதனை ஆட்சியிலிருந்து இறக்கவேண்டும் என்பதற்காக, காங்கிரஸிற்கு எதிரான தனது கடுமையான நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொண்டு ஒரு ஜனநாயக + இடதுசாரி கூட்டணியை உருவாக்குவதில் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மேற்கொண்ட முயற்சிகளும், நாட்டின் அரசியல் நிலைத்தன்மையை இடதுசாரிகளின் ஒற்றுமையின் மூலம் உறுதிபடுத்தியதும் அவரின் ஈடிணையற்ற, தொலை நோக்குகொண்ட சீரிய பார்வையாகவும், அரசியல் வழியாகவும் இருந்துள்ளது.1990
ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் ஜனதா தளம் போட்டியிட்டு வெற்றிபெற்ற போதும், வி.பி. சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவளிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத். இதேபோல, 1996ஆம் ஆண்டுத் தேர்தலிற்குப் பிறகு காங்கிரஸ் ஆதரவுடன் தேவே கவுடா தலைமையில் மத்தியில் மூன்றாவது கூட்டணி ஆட்சி ஏற்படவும், அதன்பிறகு ஐ.கே. குஜ்ரால் தலைமையில் அந்த அரசு நீடிக்கவும் தொடர்ந்து இடதுசாரிகள் ஆதரவு நல்கி நாட்டின் அரசியல் நிலைத்தனமையை காப்பாற்றப் பாடுபட்டவர் ஹர்கிஷன்.இப்படிப்பட்ட நிலைப்பாடுகளால் மார்க்ஸிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரிக் கட்சிகள் சில அடிப்படைகளில் விமர்சனத்திற்கு உள்ளானாலும், நாட்டின் நலனை சிரமேற்கொண்டு, ஊசலாட்டமின்றி நாட்டை வழிநடத்த ஹர்கிஷன் உதவினார்.இந்த நாட்டின் முக்கியத் தலைவர்கள் அனைவருடனும் நெருங்கியத் தொடர்பும், தோழமையும் வைத்திருந்த ஹர்கிஷன் சிங் சுர்ஜீத், இந்தியாவின் நலனிற்கு ஒவ்வாத எந்த முடிவையும் கடுமையாக எதிர்த்தவர். இடதுசாரிகளின் நிலைப்பாட்டை செய்தியாளர்கள் கூட்டங்களில் தெளிவாக எடுத்துவைத்தவர்.நாட்டிற்காகவே அரசியல் இயக்கம் என்பதை மார்க்ஸிஸ்ட் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்று சிறப்பாக நிரூபித்த ஹர்கிஷனின் மறைவினால், இந்த நாடு சீரிய, உண்மையான நாட்டுப் பற்றாளரை இழந்துவிட்டது. ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் வாழ்க்கை குறிப்பு!