அணு சக்தி ஒப்பந்தம்: அரசின் விளம்பரமும், அது மறைக்கும் விவரங்களும்!
, திங்கள், 21 ஜூலை 2008 (14:01 IST)
அமெரிக்காவுடன் தான் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அசுர கதியில் நிறைவேற்றி நடைமுறைப்படுத்த துடித்துக்கொண்டிருக்கும் மத்திய அரசு, அதற்கு ஆதரவு கோரி பத்திரிக்கைகளில் ஒரு விளம்பரத்தை அளித்துள்ளது.
ஆங்கிலம் அறிந்த நமது நாட்டு மக்களுக்கு மட்டும் சொன்னால் போதும் என்று நினைத்து ஆங்கில நாளேடுகளில் மட்டுமே வெளிவந்துள்ள இந்த விளம்பரத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகம் வியாழன் அன்று வெளியிட்டுள்ளது.நமது நாட்டின் நாளைய நலனைக் கருத்தில் கொண்டு இன்று அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஆதரியுங்கள் என்ற முழக்கத்துடன் உள்ள அந்த விளம்பரம், அணு சக்தி ஒப்பந்தம் 1 - 2- 3 என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.நமது நாட்டின் தேசியக் கொடியிலுள்ள மூன்று வண்ணங்களில் பெட்டிகளிட்டு 1 2 3 என்று மூன்று பத்திகளில் அணு சக்தி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான தனது நியாயத்தை மத்திய அரசு விளக்கியுள்ளது.இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் குறித்தும், அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் செய்துகொள்ளப்போகும் கண்காணிப்பு ஒப்பந்த வரைவு குறித்தும் வெளிப்படையாக மக்களுக்கு விளக்கிட வேண்டும் என்று நமது நாட்டின் பெருமையை உயர்த்திய அணு விஞ்ஞானிகளும் மற்ற எரிசக்தி நிபுணர்களும், இடதுசாரிகளும் வாய் கிழிய கத்தியபோதும், பத்திப் பத்தியாக எழுதியபோதும் அவைகளை கண்டுகொள்ளாமல், “எல்லாவற்றையும் கடைசியாக நாடாளுமன்றத்தில் வைப்போம்” என்று மட்டுமே கூறி ஒப்பேற்றிக்கொண்டிருந்த
மன்மோகன் அரசு, தனது ஆட்சிக்கு ஆபத்து வந்த நாள் முதல் ஒப்பந்த விவரங்களை (அவைகள் இணையத் தளங்களில் விரிவாக வெளிவந்தவுடன்) வெளியிடத் துவங்கியது, செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி விளக்கியது.இதன் அடுத்த கட்டமாக இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் உள்ள விவரங்களைக் காட்டிலும் மறைக்கப்பட்டுள்ள விவரங்களே அதிகம் என்பது இப்பிரச்சனையை உற்றுக் கவனித்து வருபவர்கள் நிச்சயம் அறிவார்கள்.அரசு விளம்பரத்தில் அளித்துள்ள விளக்கம் இதுதான்:1.
எரிசக்தி பற்றாக்குறையால் நமது நாடு தத்தளித்துக்கொண்டிருக்கும் நிலையிலும், நமது அணு மின் உலைகளுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் போதுமான அளவிற்கு இல்லாத நிலையிலும், எதிர்காலத்தை நோக்கி நாம் செல்வதற்கான சக்தியை அணு சக்தி ஒப்பந்தம் உறுதிசெய்துள்ளது. இதனை இப்பொழுது நிறைவேற்றாவிட்டால், நமது நாட்டின் எதிர்கால எரிசக்திச் சுதந்திரம் பாதிக்கப்படும்.2.
போக்ரான்
அணு ஆயுத சோதனைகளுக்குப் பின் சர்வதேச அளவில் தொழில்நுட்பத் தேவையில் நாம் தனிமைபடுத்தப்பட்டிருந்த நிலைக்கு இந்த ஒப்பந்தம் முற்றுப்புள்ளி வைக்கிறது. நமக்கு எதிரான தடைகளை இந்த ஒப்பந்தம் நீக்குவது மட்டுமின்றி, சர்வதேச சமூகத்தில் நமது விஞ்ஞானிகளுக்கு உரிய கெளரமான இடத்தை பெற்றுத்தருகிறது. இதுமட்டுமின்றி, அணு ஆயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்திடாத நிலையிலும், இந்த ஒப்பந்தம் நமது நாட்டை ஒரு அணு சக்தி நாடாக அங்கீகரிக்கிறது. நமது இறையாண்மையை இந்த ஒப்பந்தம் ஏற்கிறது.
3.
கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 140 டாலராக உயர்ந்து, அது மேலும் உயரும் என்ற நிலையில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் மீதான நமது சார்பை இந்த ஒப்பந்தம் குறைக்கிறது. நிலக்கரி, எண்ணெய், காற்று, நீர், சூரிய ஒளி, உயிரி எரிபொருள் ஆகிய எரிசக்தி ஆதாரங்களுடன், நமது நாட்டின் 21ஆம் நூற்றாண்டு வளர்ச்சிக்குத் தேவையான தூய்மையான, பாதுகாப்பான அணு மின்சக்தியை
இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது.சில வார்த்தைகளில் கூறுவதென்றால், “இந்த ஒப்பந்தம் இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தையும், தன்னாட்சியையும், இறையாண்மையையும் பலப்படுத்துகிறது. நமது அணு சக்தி தொடர்பான முயற்சிகளை முடக்கிய தடைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது. நமது நாட்டின் எதிர்காலத்திற்கு முதலீடாகிறது” என்று கூறிவிட்டு, “நாளைய நலனைச் சிந்தியுங்கள் - இன்று ஒப்பந்தத்தை ஆதரியுங்கள்” என்று அந்த விளம்பரம் முடிகிறது.அன்றைக்கு ஆதரிக்காதது ஏன்?நமது அடிப்படைக் கேள்விகள் இவைதான்: இவ்வளவு பெருமைமிக்க ஒரு ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவரத் துடிக்கும் மத்திய அரசு அது தொடர்பான விவரங்களை நாட்டு மக்களுக்கு மறைப்பது ஏன்? பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (IAEA) செய்துகொள்ளப்போகும் கண்காணிப்பு ஒப்பந்த வரைவின் விவரங்கள் ரகசியமானவை,
அதனை பொதுவில் வெளியிட முடியாது என்று கூறியது ஏன்? அந்த ஒப்பந்த வரைவு இணையத் தளங்களில் வெளியான பிறகு அதனை எவ்வித விளக்கமுமின்றி அயலுறவு அமைச்சகத்தின் இணையத் தளத்தில் வெளியிட்டீர்களே... எதற்கு இந்த முன்னிற்குப் பின் முரண்பட்ட நடவடிக்கை?இந்த விளம்பரத்தின் இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். நமது விஞ்ஞானிகளுக்கு சர்வதேச அளவில் அவர்களுக்குரிய கெளரமான இடத்தை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்று கூறப்பட்டுள்ளது. நமது நாட்டு அணு விஞ்ஞானிகளுக்கு எப்படிப்பட்ட மரியாதையை இந்த அரசு வழங்கியது என்பதை நாடு மறந்துவிட்டதாக கருதுகிறது. நமது அணு சக்தித் திட்டத்தை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு ஆற்றிய மூன்று விஞ்ஞானிகள் இந்த ஒப்பந்தம் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு ஒரு பதிலும் அளிக்காத இந்த அரசு, சர்வதேச சமூகத்தில் அவர்களுக்கு கெளரமான இடம் கிடைப்பதைப் பற்றி பெருமை பேசுவது ஏமாற்றுச் செயலாகும். இந்த அரசு நமது விஞ்ஞானிகளின் கருத்துக்களை ஒருபோதும் மதிக்கவில்லை என்பதற்கு ஏராளமான நடவடிக்கைகளைச் சான்றாகக் கூறலாம்.நமது விஞ்ஞானிகளுக்கு சர்வதேச அளவில்
உள்ள மதிப்பும், மரியாதையும் அவர்களுடைய சீரிய உழைப்பாலும், இந்த நாட்டின் அணுத் திட்டத்தின் மீது அவர்கள் கொண்ட தேசப்பற்று மிகுந்த சிரத்தையாலும் கிடைத்தது. அவர்களுக்கு கெளரமான இடத்தைப் பெற்றுத்தர எந்த ஒப்பந்தமும் தேவையில்லை. அறிவியல் உலகில் பெருமைமிக்கவர்களாகத்தான் அவர்கள் இன்றைக்கும் உலா வருகின்றனர்.
ஐ.ஏ.இ.ஏ.வுடனான ஒப்பந்த வரைவு வெளியாகும் வரை ஒரு விவரத்தையும் தெரிவிக்காமல் அது முழுமையாக வெளியான பிறகு, அது குறித்த சந்தேகங்களுக்கு இந்திய அணு சக்தி ஆணையத்தின் தலைவரைக் கொண்டு பதிலளிக்க முன்வந்த அரசு, நமது விஞ்ஞானிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்திருந்தால் இவர்களின் நேர்மையை மெச்சலாம்.
அணு சக்தி முயற்சிகளுக்கு ஆதரவளிக்காத மன்மோகன்!நமது நாட்டின் எதிர்கால எரிசக்தி தன்னிறைவிற்கு அணு சக்தி இன்றியமையாதது என்று இன்றைக்கு கூறும் பிரதமர் மன்மோகன் சிங், 1991 முதல் 1996வரை பிரதமராக நரசிம்மராவ்
இருந்தபோது நமது நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். அப்பொழுதுதான் தடையற்ற பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்தியவர். இவர் நிதியமைச்சராக இருந்தபோது, நமது நாட்டின் அணு சக்தி திட்டத்திற்குத் தேவையான நிதியை ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாற்று பலமாக கூறப்பட்டு வருகிறது. ஊடகங்களில் வந்த செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இதனைக் கூறவில்லை. நாடாளுமன்ற மாநிலங்களவையில் அணு சக்தி ஒப்பந்தம் மீது நடந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் நிதியமைச்சரும், பா.ஜ.க. உறுப்பினருமான யஷ்வந்த் சின்ஹா, பிரதமர் மன்மோகன் சிங்கைப் பார்த்து நேரிடையாகவே இந்தக் கேள்வியை எழுப்பினார். அணு சோதனை நடத்த நரசிம்மராவ் அரசு முன்வந்தபோது அது தேவையற்றது என்று அமைச்சரவைக் கூட்டத்திலேயே இவர் பேசியதையும் சின்ஹா
சுட்டிக்காட்டினார். ஆனால் விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய மன்மோகன் சிங், அந்தக் கேளவிக்கு பதிலளிக்காமல் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.நமது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அணு சக்தி அவசியம் என்றும், அது தேச நலன் என்றும் கூறிவரும் பிரதமர், தான் நிதியமைச்சராக இருந்தபோது நமது அணு சக்தி திட்டத்திற்கு எந்த அளவிற்கு நிதி ஒதுக்கப்பட்டது என்பதை ஆணித் தரமாக எடுத்துரைத்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?இதை இப்பொழுது குறிப்பிடுவதற்குக் காரணம், நமது அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய இருப்பு நமது நாட்டில் போதுமான அளவிற்கு உள்ளது. 90,000 டன்கள் யுரேனியம் இருப்பு உள்ளதென இந்திய அணு சக்தி கழகத்தின் தலைவர் எஸ்.கே. ஜெயின் கூறியுள்ளார். ஆனால் அந்த இருப்பை சுரங்கம் அமைத்து தோண்டியெடுத்து சுத்தகரித்து யுரேனியத்தை தேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் மத்திய அரசின் யுரேனியம் கார்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு, மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது ஒதுக்கப்பட்ட நிதி மிக மிக சொற்பமே. அன்றைக்கு போதுமான நிதி ஒதுக்கியிருந்தால் இன்று போதுமான இருப்பு இருந்திருக்கும், யுரேனியத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது.அணு சக்தி நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளதா?இந்த ஒப்பந்தம் நமது நாட்டை ஒரு அணு சக்தி நாடாக அங்கீகரித்துள்ளது என்கிறது மத்திய அரசு விளம்பரம். இது உண்மையல்ல, நிச்சயமாக இல்லை. இந்தியாவை ஒரு அணு ஆயுத நாடாக இந்த ஒப்பந்தம் அங்கீகரித்துள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். இப்பொழுது அணு சக்தி நாடாக (Nuclear Power) அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இந்த விளம்பரம் கூறுகிறது. இதையெல்லாம் இந்திய அரசுதான் கூறிக்கொண்டிருக்கிறதே தவிர, அணு சக்தி (123) ஒப்பந்தத்திலோ அல்லது பன்னாட்டு அணு சக்தி முகமை
யின் கண்காணிப்பு வரைவிலோ ஏதும் குறிப்பிடவில்லை. அதற்காக எந்தக் கூடுதல் உரிமைகளோ அல்லது சலுகைகளோ இந்தியாவிற்கு வழங்கப்படவில்லை.
பன்னாட்டு முகமையுடனான ஒப்பந்தத்தை இந்தியாவிற்கென தனித்த (India specific Safeguard agreement) என்று மத்திய அரசுதான் கூறிக்கொண்டிருக்கிறதே தவிர, அப்படி எந்த ஒரு சிறப்புச் சலுகையும் இந்தியாவிற்கு அளிக்கப்படவில்லை என்பதே உண்மை.
இதனை பன்னாட்டு அணு சக்தி முகமையின் ஆளுநர்களில் ஒருவரும், அணு சக்தி தொழில்நுட்ப வணிக்க் குழுவின் (Nuclear Supplier’s Group -NSG) தலைவராக இருந்தவருமான தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த அப்துல் எஸ். மிண்டி
கூறியிருந்தார். இந்த கண்காணிப்பு ஒப்பந்தம் எந்த விதத்திலும் இந்தியாவிற்கென்று சிறப்பு நிலை அளிப்பதாக இருக்காது என்று அவர் கூறியுள்ளார்.பன்னாட்டு அணு சக்தி முகமையைப் பொறுத்தவரை இரண்டே பிரிவுகள் தான் உண்டு. ஒன்று, அமெரிக்க, இங்கிலாந்து உள்ளிட்ட அணு ஆயுத வல்லரசுகளான 5 நாடுகள், மற்றவை அவ்வாறு அங்கீகரிக்கப்படாதவை. இந்த இரு பிரிவுகளைப் பொறுத்தே உரிமைகளும், நிபந்தனைகளும் (Rights and Obligations) முடிவு செய்யப்படுகின்றன. அதனால்தான், அமெரிக்காவிற்கு ஒரு நியாயம், அதை ஈரான் செய்தால் மீறல் என்று கத்துவது எல்லாம்.மற்றொரு தவறான தகவலையும் பிரதமர் அளித்தார். அதாவது, இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலே சம அந்தஸ்துடன்
செய்துகொள்ளப்படுகிறது என்றார். இது எவ்வளவு பெரிய பொய் என்பது யுரேனியத்திற்காக தன்னிடம் வந்துள்ள இந்தியா மீது அமெரிக்க விதித்துள்ள நிபந்தனைகளே (ஹைட் சட்டம் மற்றும் 123 ஒப்பந்தம்) அத்தாட்சி. எப்படியெல்லாம் பேசுகிறது மத்திய அரசு!எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஒப்பந்தம் நமது நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தை, தன்னாட்சியை, இறையாண்மையை உறுதி செய்கிறது என்று கூறியிருப்பதுதான் மயக்கத்தின் உச்சக்கட்டம். நமது நாட்டின் பாதுகாப்புக் கருதி அணு ஆயுத சோதனை நடத்தினாலே இந்த ஒப்பந்தம் ரத்தாகிவிடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், எங்கு இருக்கிறது இறையாண்மையும், சுதந்திரமும், தன்னாட்சியும்? அமெரிக்காவுடனான நமது உறவில் சிறிய பின்னடைவு ஏற்பட்டாலும் இந்த ஒப்பந்தத்தின் மூலம் மற்ற நாடுகளுடனும் நாம் மேற்கொள்ளும் அணு சக்தி ஒத்துழைப்பு முடிவிற்கு வந்துவிடும் என்பதுதானே உண்மை? இதனை இல்லையென்று மறுக்கட்டுமே மத்திய அரசு.எரிசக்தி சுதந்திரமும், தன்னாட்சியும் இன்னொரு நாடு
கொடுத்து வருவது அல்ல, அதனை நாம் நமது திறனைக் கொண்டு சாதித்தால்தான் (பசுமை புரட்சி மூலம் உணவுத் தன்னிறைவை எட்டியதுபோல) அந்த சுதந்திரத்தை பெற்றுள்ளதாகக் கூறிக்கொள்ள முடியும்.
நமது எதிர்காலம் நம்மிடம்தான் உள்ளது!
நமது நாட்டின் எதிர்கால எரிசக்திப் பாதுகாப்பை இந்த ஒப்பந்தம் உறுதி செய்கிறது என்பதெல்லாம் உண்மையை மறைக்கும் திட்டமிட்டப் பிரச்சாரமே.
நமது நாடு மேற்கொண்டுவரும் 3 கட்ட அணு சக்தித் திட்டம் நமது எதிர்கால எரிசக்தித் தேவையை முழுமையாக நிறைவுசெய்யக்கூடிய திறனும், பலமும் அதற்கான வலிமையான அடிப்படையும், அறிவு - தொழில்நுட்பத் திறனும் கொண்டது. இதில் மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். நமது விஞ்ஞானிகள் மீதும், நமது அணு சக்தி அமைப்பின் மீது இந்திய மக்களுக்கு முழு நம்பிக்கை உண்டு.
நமக்குத் தேவை நமது நலனிலும், திறனிலும் உண்மையான பற்றும், நம்பிக்கையையும் கொள்கையாகக் கொண்ட ஒரு அரசுதான்.