தமிழக மீனவர்கள்: அரசின் நிலை மாறினால்தான் தீர்வு!
, செவ்வாய், 15 ஜூலை 2008 (21:18 IST)
தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் நடத்திவரும் அத்துமீறியத் தாக்குதல்கள் வரையறையற்று தொடர்வதும், அதனைத் தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகள் எந்தவித உறுதியான நடவடிக்கை எடுக்கப்படாததும் மீனவர்களிடையே மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.கடந்த 3ஆம் தேதி கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 1,000 ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்க கடற்படை சுற்றிவளைத்து மன்னாருக்கு கடத்திச் சென்று,
விசாரணை என்ற பெயரில் அவர்களை துன்புறத்தி பின்பு விடுதலை செய்தது தமிழக மீனவர்களை கொதித்தெழச் செய்ய அதன் காரணமாக அவர்கள் தங்கள் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணக்கோரி மீன் பிடிக்கச் செல்லாமல் வேலை நிறுத்தம் துவக்கிய நிலையில், நாகப்பட்டிணம் ஆறுகாட்டுத்துறையைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு அத்துமீறி வந்த சிறிலங்க கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் உயிரிழந்ததும், மேலும் ஒரு மீனவர் படுகாயமுற்றதும் தமிழக மீனவர்கள் மத்தியில் நிலவிவந்த கொந்தளிப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.1983
ஆம் ஆண்டு முதல் இப்படி அப்பாவி மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திய தாக்குதல்களுக்கு 300க்கும் அதிகமான மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
இப்படிபட்ட தாக்குதல்கள் நடைபெறும் ஒவ்வொரு முறையும் தமிழக தலைவர்கள் கண்டனக் குரல் எழுப்புவதும், மீனவர்களைக் காக்கும்படி மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதங்களை அனுப்புவதும், அது குறித்து சிறிலங்க அரசிடம் விளக்கம் கேட்டிருப்பதாக மத்திய அரசு பதில் தருவதும் வாடிக்கையாகிவிட்டது. தங்கள் மீது சிறிலங்க கடற்படை நடத்திவரும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல், தங்கள் உயிரைப் பறிக்கும் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், மீண்டும் கடலிற்குச் செல்ல மாட்டோம் என்று மீனவர்கள் உறுதியாகத் தெரிவித்துவிட்டதால், இப்பிரச்சனைக்கு கட்டாயம் தீர்வு காண வேண்டிய ஒரு நெருக்கடி தமிழக, மத்திய அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.பிரச்சனையின் வேர்!இந்தியாவிற்கும் (தமிழகத்திற்கும்) இலங்கைக்கும் இடையிலான கடற்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே கடல் எல்லை வரையறை செய்யப்பட்டதே இப்பிரச்சனைக்கு வித்திட்டது. 1974
ஆம் ஆண்டு அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி-
க்கும், சிறிலங்க பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டார நாயகாவிற்கும் இடையே கையெழுத்தான சர்வதேச கடல் எல்லை வரையறை ஒப்பந்தம் காரணமாக அதுவரை தமிழக மீனவர்கள் எவ்வித தடையுமின்றி மீன் பிடித்துக்கொண்டிருந்த கடற்பகுதி, எல்லை வரையறையினால் சுறுங்கியது.
அதுவரை இந்திய- இலங்கை இடைப்பட்ட கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்களுமே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக எந்த ஆதாரமும் வரலாற்றில் இல்லை.
வெள்ளையர் காலத்தில் மட்டும் எல்லை வரையறை தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இப்பகுதியில் மீன் வளம் மிக அதிகமாக இருந்ததால் தமிழக, ஈழ மீனவர்கள் சச்சரவின்றி மீன் பிடித்து வந்தனர்.ஆனால் 1974 ஒப்பநதம் காரணமாக இந்த நிலை மாறியது. குறிப்பாக தமிழக மீனவர்கள் தங்கள் கடற்கரையிலிருந்து 18 கி.மீ. தூரத்தில் - ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கில் யாழ்ப்பாண தீபகற்பத்தை ஒட்டியுள்ள கடற்பகுதியில் உள்ள நெடுந்தீவிற்கும் (Delft Island) இடையில் - உள்ள கச்சத்தீவு இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்டத் தீவானது. 1974
ஒப்பந்தத்திற்குப் பிறகு கச்சத்தீவு செல்வதற்கோ அல்லது அந்த கடற்பகுதியில் மீன் பிடிக்கவோ தமிழக மீனவர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமலிருந்தது. அந்த ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு
கடற்பகுதியில் மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு இருந்த பாரம்பரிய உரிமை மறுக்கப்படவில்லையென்பதால், கச்சத்தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்துக் கொடுத்ததற்கு பெரும் எதிர்ப்பு எழவில்லை.ஆனால், 1983இல் இலங்கையில் இன மோதல் வெடித்ததற்குப் பிறகு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் துவங்கியது. இலங்கைத் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவமும், காவல்துறையும் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறையின் தொடர்ச்சியாக தமிழக-இலங்கை கடற்பகுதியில் மீன் பிடித்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை தாக்குதல் நடத்தியதாகவே கூறப்பட்டது. சிறிலங்க அரசை எதிர்த்து போராடும் விடுதலைப் புலிகளுக்கு தமிழக மீனவர்கள் உதவுகிறார்கள் என்று கூறி சிறிலங்க கடற்படை தொடர்ந்து தாக்கியது. இதனைக் கண்டித்து தமிழக்கதிலிருந்து எழுந்த குரல்களுக்கு டெல்லி செவி சாய்க்கவில்லை.சிறிலங்க அரசிற்கும் - விடுதலைப் புலிகளுக்கும் இடையே அமைதி பேச்சு நடந்த காலகட்டங்களிலும் இத்தாக்குதல் தொடர்ந்தது. அதிலும் குறிப்பாக கச்சத்தீவு கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போதுதான் தமிழக மீனவர்கள் மீது மிக அதிகமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில்
பலமுறை கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால் சிறிலங்க கடற்படையின் அடாவடித்தனமான அத்துமீறிய நடவடிக்கைகளில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.
கச்சத் தீவை மீட்க வேண்டும்!
1974ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கும் உரிமை உள்ளது என்பது உண்மையானால் அப்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் தங்கள் மீது சிறிலங்க கடற்படை தாக்குதல் நடத்துவதேன் என்ற கேள்வியை தமிழக மீனவர்கள் எழுப்பினர்.
இது நமது நாட்டின் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.
தென்காசி மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். அப்பாதுரை, 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி ஒரு கேள்வியை எழுப்பினார் (கேள்வி எண் 377).கச்சத் தீவி கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படைத் தாக்குதல் நடத்தியதா? அது உண்மையெனில் அவர்களைக் காக்கவும், அவர்களின் மீன் பிடி உரிமையை நிலை நிறுத்தவும் (மத்திய) அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என்று தமிழக உறுப்பினர் அப்பாதுரை
எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அயலுறவு இணை அமைச்சர் ஈ. அகமது, அப்பிரச்சனையை சிறிலங்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றதாகவும், ஆனால் அந்த நாளில் அப்பகுதியில் சிறிலங்க கடற்படையின் எந்தக் கப்பலும் செல்லவில்லை (சிறிலங்க கடற்படை இப்படிப்பட்ட தயார் பதிலை பலமுறை கூறிவந்துள்ளது) என்று தங்களுக்கு பதிலளிக்கப்பட்டதாகவும், அது குறித்த விசாரிக்க தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சிறிலங்க அரசு கூறியதாக தெரிவித்தார்.கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடி உரிமை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அகமது
, 1974 ஒப்பந்தத்தின்படி இரு நாடுகளுக்கும் இடையே செய்யப்பட்ட சர்வதேச கடல் எல்லை வரையறைப்படியும், 1976இல் இருநாடுகளும் பரிமாறிக்கொண்ட கடிதங்களின் அடிப்படையிலும், இலங்கைக்குச் சொந்தமான கடற்பகுதியிலும், வரலாற்று ரீதியான மீன் பிடி உரிமையுள்ள பகுதிகளிலும் இந்திய மீனவர்களோ அல்லது மீன் பிடி கப்பல்களோ சென்று மீன் பிடிக்கக் கூடாது என்று ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலங்களவையில் அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் கே. மலைச்சாமி இதே பிரச்சனை மீது ஒரு கேள்வியை (கேள்வி எண்: 3294 நாள்: 24.04.2008) எழுப்பினார். கச்சத் தீவை சுற்றியுள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்கள் தடுக்கப்படுகின்றனரா? இந்தியாவிற்குச் சொந்தமாக இருந்த கச்சத் தீவுப் பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை அந்த ஒப்பந்தத்தினால் இழப்பது ஒரு மோசடியாகிவிடாதா? நமது உரிமையை மீண்டும் நிலைநாட்ட பழைய ஒப்பந்தத்தை புதுப்பிக்கலாமா? என்ற கேள்விகளுக்கு பதிலளித்த அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி
, 1974 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் செய்துகொண்ட ஒப்பந்தங்களின்படி, இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச கடல் எல்லைக்கோட்டில் இலங்கைப் பகுதியில் கச்சத் தீவு உள்ளது. இவ்விரு ஒப்பந்தங்களும் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டு ஏற்கப்பட்டுள்ளன. கச்சத் தீவிற்கு சென்று ஒய்வெடுக்கவும், அங்கு தங்களுடைய வலைகளை உலர்த்தவும், அங்குள்ள செயிண்ட் அந்தோணியார் கோயில் திருவிழாவில் கலந்துகொள்ளவும் நமது மீனவர்களுக்கு உரிமை உள்ளது, ஆனால் கச்சத் தீவிற்கு செல்லும் உரிமை என்பது அப்பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையுடன் கூடியதல்ல. சர்வதேச கடல் எல்லையை நமது மீனவர்கள் மதித்து நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் நமது மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுமாறு சிறிலங்க அரசையும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.
நமது மீனவர்கள் வரலாற்றுக் காலத்திலிருந்து அனுபவித்துவந்த மீன்பிடி உரிமையை மீண்டும் நிலைநிறுத்தும் பேச்சிற்கே இடமில்லை என்பதை நமது அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி மேற்கண்ட பதிலின் வாயிலாக நன்றாகவே தெளிவுபடுத்தியுள்ளார். மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டின் காரணமாகத்தான், நமது மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை
ஒவ்வொரு முறையும் அத்துமீறி தாக்குதல் நடத்தும்போதும், அவர்கள் எல்லை கடந்து சென்று மீன் பிடித்ததால்தான் பிரச்சனை ஏற்பட்டது என்று மத்திய அரசு அதிகாரிகளும், அவர்கள் தாக்கப்பட்ட இடம் இலங்கையின் கடல் எல்லைக்குள் உள்ளது என்றும் நொண்டிச் சமாதானம் சொல்லி வருகிறார்கள். இதையெல்லாம் நமது கடலோர காவற்படை கண்டுகொள்வதில்லை. பாக் நீரிணைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் கடலோர காவற்படையைச் சேர்ந்த 3 கப்பல்களும், இந்திய கப்பற்படையைச் சேர்ந்த ஒரு போர்க் கப்பலும் நிற்பதாக கடலோர காவற்படையின் தலைமை இயக்குனர் ஒருமுறை கூறினார். இவர்கள் ஏன் சிறிலங்க கடற்படையினரை தடுத்து நிறுத்தி நமது மீனவர்களைக் காப்பதில்லை? காரணம், அவர்களின் பணி தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுறுவாமல் தடுப்பதுதானே தவிர, தமிழக மீனவர்களைக் காப்பதோ அல்லது அத்துமீறி நமது கடற்பகுதிக்குள் ஊடுறுவும் சிறிலங்க கடற்படையினரை தடுப்பதோ அல்ல. (இது குறித்து ஏற்கனவே நாம் விரிவாக எழுதியுள்ளோம்)எனவே பிரச்சனைக்கு என்னதான் தீர்வு?இரண்டே இரண்டுதான். ஒன்று, தமிழர்களின் மீன் பிடி உரிமையைக் காக்க 1974, 1976 ஒப்பந்தங்களை ரத்து செய்து கச்சத்தீவை மீண்டும் நமது அதிகாரத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். இந்திய - இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லைக்கு நெருக்கமாக கச்சத்தீவு (வரைபடத்தைப் பார்கவும்)
அமைந்துள்ளதால், அதனை மீட்காமல் அப்பகுதியில் நமது மீன்பிடி உரிமையை நிலைநாட்ட முடியாது.
இதனை மத்திய அரசு - இன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு - நிச்சயம் செய்யாது. ஏனெனில், சிறிலங்காவுடனான உறவை இந்த அரசு மிகவும் மெச்சிக் காப்பாற்றி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவது குறித்தும், தமிழக மீனவர்கள் நமது கடற்பகுதியில் கொல்லப்படும்போதும், அது குறித்து சிறிலங்க அரசு என்ன கூறுகிறதோ (உதாரணத்திற்கு: தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது விடுதலைப் புலிகளே என்று சிறிலங்க அரசு கூறினால்) அதையே தனது பதிலாகவோ அல்லது மெளனமாகவோ வெளிப்படுத்துகிறது மத்திய அரசு.
எனவே, இந்திய அரசின் நிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே, தமிழக மீனவர்களின் அவலத்திற்கு முடிவு ஏற்படும்.
அதுவரை நமது மீனவர்களின் வாழ்வும் உரிமையும்....?