அணு சக்தி ஒப்பந்தம்: அவசியமும் சர்ச்சையும் – 2
, செவ்வாய், 1 ஜூலை 2008 (15:45 IST)
நமது நாட்டின் அதிகரித்துவரும் எரி சக்தித் தேவையை ஈடுசெய்ய நீர் மின், அனல் மின் சக்தி உற்பத்தியைப் பெருக்குவதைப் போல, அணு மின் சக்தி உற்பத்தியைப் பெருக்கவேண்டியது அவசியமாகிறது என்பதைப் பார்த்தோம்.அதற்கு, நமது அணு உலைகளுக்குத் தேவையான அளவிற்கு நம்மிடம் யுரேனியம் எரிபொருள் இருப்பு
இல்லாமையும், இதனை அயல் நாடுகளிடமிருந்துப் பெற இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் அவசியம் என்பதையும் பார்த்தோம்.ஆனால், இதற்கு இடதுசாரிகள் எதிர்ப்பு காட்டி வருவது ஏன்? என்பதைப் பார்ப்பதற்கு முன்னர், நமது மூத்த அணு விஞ்ஞானிகள் சிலர் காட்டிவரும் எதிர்ப்பை புரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகள்!இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்த சர்வதேச அணு சக்தி முகமையுடன் (International Atomic Energy Agency - IAEA) இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு ஒப்பந்தத்தை (India specific agreement) இறுதிசெய்ய இடதுசாரிகளின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு முயற்சித்துக் கொண்டிருந்த (அது நிறைவேறாத) நிலையில், நமது நாட்டின் மூன்று மூத்த அணு விஞ்ஞானிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.கடந்த செவ்வாய்க் கிழமையன்று, இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐய்யங்கர்,
அணு சக்தி ஒழுங்குமுறை வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபால கிருஷ்ணன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் தலைவர் ஏ.என். ஆனந்த் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அந்த அறிக்கையில், சர்வதேச அணு சக்தி முகமையுடன் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் அவசர கதியில் நிறைவேற்றிட வேண்டாம் என்று மத்திய அரசிற்கு அறைகூவல் விடுத்திருந்தனர்.இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் ஹென்றி ஹைட் சட்டத்தை நிறைவேற்றிய போதே அதில் நமது அடிப்படை உரிமைகளில் தலையிடுமாறு இருந்த விதிமுறைகளை எதிர்த்து அப்போதே குரல் கொடுத்தவர்களில் இந்த மூன்று விஞ்ஞானிகள் முக்கியமானவர்கள் என்பது கவனத்தில் கொள்ளத் தக்கதாகும். இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவருவதில் அடிப்படையானது சர்வதேச அணு சக்தி முகமையுடன் நாம் செய்து கொள்ள வேண்டிய கண்காணிப்பு ஒப்பந்தமாகும். இந்த
ஒப்பந்தத்தை உருவாக்குவது தொடர்பாக இந்திய அணு சக்திக் குழு வியன்னாவில் அணு சக்தி முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தியா எதிர்பார்த்த பல அம்சங்களை ஒப்பந்தத்தில் சேர்க்க அணு சக்தி முகமைக் குழு மறுத்ததாகவும், அதனால் பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அதன்பிறகு பேச்சுத் தொடர்ந்து, தற்பொழுது அணு சக்தி முகமையின் ஆளுநர்களிடம் ஒப்பந்தத்தை இறுதி செய்யும் நிலைக்கு சென்றுள்ளது.
இந்த நிலையில்தான் மத்திய அரசின் கோரிக்கையை இடதுசாரிகள் மறுத்துவிட, அதே நேரத்தில் அணு விஞ்ஞானிகளின் எதிர்ப்பும் வெளியாகியுள்ளது.”சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்திவரும் பேச்சு வார்த்தைத் தொடர்பாக நிலவிவரும் ரகசியமும், இந்த ஒப்பந்தம் குறித்து ஊடகங்கில் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும்
செய்திகளும், சில அமைப்புக்களின் குறுகிய நோக்கங்களும், இப்பிரச்சனை பற்றிய பொது மக்களின் அறியாமையும் நமது நாட்டை ஆபத்தான பாதையில் கொண்டு செல்வதாக” இம்மூன்று விஞ்ஞானிகளும் தாங்கள் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பது கவனிக்கத்தக்கதாகும். சர்வதேச அணு சக்தி முகமையுடனான ஒப்பந்தத்தை மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி, ஐ.மு. கூட்டணி - இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும், சுதந்திரமான அணு சக்தி நிபுணர்களிடமும் விவாதித்தப் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இம்மூன்று விஞ்ஞானிகளும் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.அணு சக்தி முகமையை மத்திய அரசு அணுகிவரும் விடயத்தில் நமது விஞ்ஞானிகளிடையே ஒரு அமைதியற்ற தன்மை நிலவி வருகிறது என்று கூறியுள்ள இவர்கள், சர்வதேச அணு சக்தி முகமையுடன் நடத்திய பேச்சுவார்த்தைத் தொடர்பாக எழுப்பியுள்ள கேள்விகள் இதுதான்:1.
இந்தியாவுடன் அணு சக்தி ஒத்துழைப்பை மேற்கொள்ள ஒப்பதல் அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட்
சட்டமும், அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட 123 ஒப்பந்தமும், சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட ஒப்புக்கொள்ளப்பட்ட நமது அணு மின் உலைகளுக்குத் தேவையான எரிபொருளை தொடர்ச்சியாகப் பெறுவதற்கு வழிவகுக்கவில்லை. அந்த உறுதியை பன்னாட்டு அணு சக்தி முகமையுடன் (ஐ.ஏ.இ.ஏ.) நடத்திய பேச்சுவார்த்தையில் இந்தியா பெற்றுள்ளதா? நமது அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளைப் பெற அணு சக்தி முகமை உறுதியளித்துள்ளதா?2.
அணு உலைகள் கண்காணிப்பில் ஈடுபடும் அணு சக்தி முகமை, சந்தேகத்தின் அடிப்படையில் நமது ராணுவ மற்றும் ஆராய்ச்சி மேம்பாடு தொடர்பான - அதாவது கண்காணிப்பிற்கு அப்பாற்பட்ட - அணு உலைகளையும், மையங்களையும் ஆராயும் உரிமை (Intrusive inspection) கொண்டதாகும்.
இதனைத் தடுக்க, அணு சக்தி முகமையுடன் கூடுதல் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்பதையும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
3. இந்த ஒப்பந்தத்தின் கீழ் நாம் பெறப்போகும் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்தியப்பின் மறு சுழற்சி செய்துகொள்ளும் அனுமதியை 123 ஒப்பந்தம் தெளிவாக உறுதி செய்யவில்லை. மாறாக, அதி நவீன மறு சுழற்சி மையம் நிறுவப்பட்டு அங்கு அதனை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது. இதற்குப் பல ஆண்டுகளும், பெரும் முதலீடும் தேவைப்படும் என்பது மட்டுமின்றி, இதனை செயல்படுத்த அதற்கென்று தனித்த ஒரு ஒப்பந்தத்தையும் அணு சக்தி முகமையுடன் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இது குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதா?
ஆகிய அடிப்படையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கு அரசு தரப்பிலிருந்தோ அல்லது இந்திய அணு சக்தி ஆணையத்திடமிருந்தோ (Atomic Energy Commission) இதுவரை பதில் தரப்படவில்லை.யுரேனியம் வழங்கலை உறுதி செய்யாத ஒப்பந்தம்!இது மட்டுமல்ல, இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக மேலும் சில விவரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
நமது நாட்டின் எரி சக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய இந்த ஒப்பந்தம் அவசியம் என்று அரசும், பிரதமரும் கூறிவருவதை இவர்கள் ‘மாயை’ என்று வர்ணித்துள்ளார்கள்.இந்த ஒப்பந்தத்தின் கீழ் அயல் நாடுகளில் இருந்து நாம் வாங்கும் அணு உலைகள் மிகவும் விலையுயர்ந்தவை என்பதால், அவைகளைப் பயன்படுத்தி தயாரிக்கும் மின்சாரத்தின் விலை அதிகரிக்கும் என்று கூறியுள்ள விஞ்ஞானிகள், அணு தொழில் நுட்பத்தை மற்ற நாடுகளில் இருந்து நாம் பெறுவதை ஹைட் சட்டத்தின் வாயிலாக வாஷிங்டன் கட்டுப்படுத்தும் என்று கூறியுள்ளனர்.அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்றி ஹைட் சட்டம் நம்மை கட்டுப்படுத்தாது என்று மத்திய அரசு கூறுவது அடிப்படையற்றது என்றும், அதனடிப்படையிலேயே 123 ஒப்பந்தம்
உருவாக்கப்பட்டுள்ளது, அதனால்தான், அணு சக்தி தொடர்பான ஒரு இருதரப்பு ஒப்பந்தத்தில் நமது அயலுறவு கொள்கைகள் குறித்த விதிமுறைகள் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ளனர்.இது இரு நாடுகளுக்கும் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பிற்கு அனுமதி அளித்து நிறைவேற்றப்படுவதாக கூறப்படுகிறது, ஆனால் அதில் நமது நாட்டின் அயலுறவு கொள்கை பற்றி குறிப்பிட்டிருப்பது ஏன் என்று இவர்கள் எழுப்பியுள்ள கேள்வி அர்த்தம் பொதிந்ததாகும்.ஒரு நாட்டில் எந்த ஒரு பொருளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டாலும், அதனை நிவர்த்தி செய்ய அப்பொருள் மிகுதியாக உள்ள அயல் நாடு ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும். அதே அடிப்படை கொண்டதுதான் நம்மைப் பொறுத்தவரை இந்த அணு சக்தி ஒப்பந்தமும். நமது யுரேனியம் தேவைக்காக செய்துகொண்ட இந்த ஒப்பந்தத்திற்காக அதோடு தொடர்பற்ற விடயங்களை ஒப்பந்தத்தில் சேர்ப்பதேன்? என்பதற்கு அரசு விளக்கமளித்திட வேண்டும்.எனவே விஞ்ஞானிகள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு முழுமையான விளக்கமளித்து அதன் மூலம் நாட்டு
மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.
(இடதுசாரிகளின் எதிர்ப்பிற்கு என்ன அடிப்படை என்பதை அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு விளக்கி அறிக்கை வெளியிட்டுவிட்டதால் அது குறித்து எதையும் கூற வேண்டிய அவசியம் இல்லை - ஆசிரியர்)