அணு சக்தி ஒப்பந்தம்: அவசியமும் சர்ச்சையும் – 1
, வெள்ளி, 27 ஜூன் 2008 (15:51 IST)
அமெரிக்காவுடன் செய்துகொண்ட அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், ஒப்பந்தமா? அல்லது ஆட்சியா? என்பதை முடிவெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது மன்மோகன் சிங் அரசு.அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைக்குக் கொண்டுவரும் முதல் நடவடிக்கையாக சர்வதேச அணு சக்தி முகமையுடன் இந்தியாவிற்கென்று தனித்த (India Specific) கண்காணிப்பு உடன்படிக்கையை இறுதி
செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஆட்சிக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரிகள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் நேற்று இறுதி முடிவு எடுக்கக் கூடிய ஐ.மு.- இடதுசாரி கூட்டணிகளின் ஒருங்கிணைப்புக் குழு முடிவெடுக்காமல் கலைந்தது.அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற இடதுசாரிகள் அனுமதியளிக்கப்போவதில்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில் ஆட்சியை பணயம் வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை மத்திய அரசிற்கு ஏற்பட்டுவிட்டதென்றும், ஒப்பந்தத்தை துணிந்து நிறைவேற்றிட பிரதமர் மன்மோகன் சிங் முடிவெடுத்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
இதனை நேற்று இரவு செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி உறுதி செய்துள்ளார்.பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசிற்கு இன்னும் ஓராண்டுக் காலம் ஆயுள் உள்ள நிலையில், அணு சக்தி ஒப்பந்தப் பிரச்சனையால் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளதை ஒரு அரசியல் பிரச்சனையாக பார்ப்பதைவிட, இந்த நாட்டின் எதிர்காலம் தொடர்பான ஒரு பிரச்சனையாக அதனை அணுகுவதே சரியாக இருக்கும்.அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியம்தானா?இந்தக் கேள்விக்கு முதலில் பதில் காண வேண்டும். அரசின் நோக்கிலிருந்து அல்ல, மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நமது எரிசக்தித் தேவையை கருத்தில்கொண்டு பதில் காண வேண்டும்.ஆங்காங்கு மின் தடைகள். கோடைக் காலத்தில் அதிகபட்ச மின் தட்டுப்பாடு, அதன் காரணமாக மின்
தடை. இப்படிப்பட்ட சூழல்தான் இந்தியா முழுவதும் நிலவுகிறது. நமது அன்றாடத் தேவைக்கும், தொழில் உற்பத்திக்கும் ஏற்ற அளவிற்கு நமது மின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. எனவே அதிகரிக்க வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.
இந்தியா தற்பொழுது ஆண்டிற்கு 1,30,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது நமது வளர்ந்துவரும் தேவையை ஈடுசெய்யவில்லை. நாளுக்கு நாள் தொழில் வளர்ச்சியும், வீட்டு மின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் நமது தேவை அதிகரித்துக் கொண்டே
சென்றால் 2020ஆம் ஆண்டில் நமது மின் தேவை 2,50,000 மெகா வாட்டாக அதிகரிக்கும். அதாவது நமது மின் உற்பத்தி இந்த அளவிற்கு எட்டினால் மட்டுமே சமாளிக்க முடியும். இதில் மாற்றுப் பேச்சிற்கு இடமில்லை. நமது மின் தேவையை தற்பொழுது நீர் மின் நிலையங்களும், நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையங்களும், எரிவாயுவைக் கொண்டு மின் தயாரிக்கும் நிலையங்களுமே
பெருவாரியாக ஈடுசெய்கின்றன. நமது ஒட்டுமொத்தத் தேவையில் 3 விழுக்காடு அளவிற்கு அணு மின் நிலையங்கள் அளிக்கின்றன. அதாவது சற்றேறக் குறைய 4,800 மெகா வாட் அளவிற்கு அணு மின் நிலையங்கள் மின் உற்பத்தி செய்கின்றன. நமது நாட்டின் நீர் மின் உற்பத்தித் திறன் குறைந்துவரும் நிலையில், நமது நாட்டிலுள்ள நிலக்கரி வளம் சுருங்கிவரும் நிலையில்- இப்பொழுதே பெரும் அளவிற்கு அயல் நாடுகளில் இருந்து நிலக்கரியைப் பெற்றுத்தான் அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அளிக்கின்றோம். இந்த நிலையில் அணு சக்தித் தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாகத் திகழும் நமது நாட்டிற்கு அணு மின் சக்தித் திறனை பன்மடங்கு அதிகரித்துக் கொள்ளும் திறன் உள்ளது. தற்பொழுது நமது நாட்டில் 17 அணு மின் நிலையங்கள் (Pressurized Heavy Water Reactors - PHWR) இயங்கி
வருகின்றன. இவைகள் சில மாதங்களுக்கு முன் வரை அவைகளின் அதிகபட்ச உற்பத்தித் திறனில் 90 விழுக்காடு அளவிற்கு மின் உற்பத்தி செய்து வந்தன. ஆனால், இந்த மின் நிலையங்களுக்குத் தேவையான யுரேனியம் எரிபொருள் தொடர்ச்சியாக்க் கிட்டாததால் தற்பொழுது 50 விழுக்காடு திறனளவிற்கே இவைகள் மின் உற்பத்தி செய்கின்றன. இதுதான் அணு மின் சக்தி தொடர்பாக நமது நாடு எதிர்கொள்ளும் ஒரே பிரச்சனையாகும். அணு மின் உலைகளை வடிவமைத்து உருவாக்கிடும் தொழில் நுட்பத்திறன் நம்மிடம் உள்ளது. நமது அணு மின் உலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் எரிபொருள் கழிவை மறு சுழற்சி செய்து, கழிவிலிருந்து கிட்டும் புளுடோனியத்துடன் யுரேனியத்தைக் கலந்து அதனை Fast Breeder Reactor (FBR) என்றழைக்கப்படும் அதி வேக ஈனுலையில் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் தொழில் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றுள்ளோம். அதன் அத்தாட்சியே கல்பாக்கத்தில் நாம் நிறுவிவரும் மாதிரி அதிவேக ஈனுலையாகும். இது 2010 ஆம் ஆண்டு உற்பத்தியை தொடங்குகிறது.இதற்கு அடுத்த கட்டமாக - நமது நாட்டில் மிக அதிகமாக்க் கிடைக்கும் தோரியம் எனும் அணுப்
பொருளை யுரேனியமாக உருமாற்றி அதனை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திறன் சோதனையில் நமது விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காமினி என்ற பெயரில் கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள சோதனை அணு உலையில் அந்தப் பணி வேகமாக நடந்தேறி வருகிறது.
இப்படி அணு சக்தித் தொழில் நுட்பத்தில் துரித கதியில் முன்னேறிவரும் நமது நாட்டிற்கு பெருங்குறையாக உள்ளது குறைவான யுரேனிய வளம். மேகாலயா, ஜார்க்கண்ட், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் யுரேனிய இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கம் அமைத்து அந்தக் கனிம வள உற்பத்தியைப் பெருக்குவதில் மத்திய அரசின் யுரேனிய கழகம் தீவிரமாக செயலாற்றி வருகிறது.
நமது நாட்டிலுள்ள யுரேனிய வளம் 90,000 டன்கள் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த இந்திய அணு மின் உற்பத்திக் கழகத் தலைவர் எஸ்.கே. ஜெயின், இதை வைத்து 10,000 மெகா வாட் அளவிற்கு நம்மால்
மின் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அதாவது 500 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 20 அணு உலைகளுக்குத் தேவையான யுரேனிய இருப்பு மட்டுமே நம்மிடம் உள்ளது. இதனைப் பயன்படுத்திக் கிடைக்கும் கழிவை மறு சுழற்சி செய்து ஈனுலைகளில் மின் உற்பத்தி செய்யலாம் என்றாலும், நமது நாட்டின் அதிகரித்துவரும் தேவையை ஈடுகட்ட வேண்டுமெனில் நாம் அயல் நாடுகளிலிருந்து யுரேனியத்தை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.ஆனால், வல்லரசுகள் ஆன அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஃபிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளும் நமது நாட்டை ஒரு அணு ஆயுத வல்லரசாக ஏற்காத நிலையிலும், NPT என்றழைக்கப்படும் அணு ஆயுத பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நாடு என்ற காரணத்தினாலும், 1998ஆம் ஆண்டு அணு ஆயுத சோதனை நடத்தியதைத் தொடர்ந்து நம்மீது விதிக்கப்பட்ட தடையினாலும் ஆஸ்ட்ரேலியா உள்ளிட்ட பிற நாடுகளில் இருந்து யுரேனியம் எரிபொருளை பெற இயலாத ஒரு நிலை உள்ளது.இந்த நிலையில் இருந்து - இதைத்தான் ‘தனிமைப்படுத்தப்பட்ட நிலை’ என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார் - நம்மை மீட்டுக்கொள்ளவே இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் அவசியமாகிறது. அதனால்தான், அணுத் தொழில்நுட்பத்தில் நாம் தன்னிறைவு பெற்றிருந்தாலும், நமது நாட்டில் கிடைக்கும்
தோரியத்தைக் கொண்டு மின் உற்பத்தி செய்யும் அணு உலைகளை நாம் உருவாக்கும் வரை - நமக்கு யுரேனியம் எரிபொருள் தேவை. அதற்கு இந்த ஒப்பந்தம் அவசியம் என்று பெங்களுருவில் இன்று நடந்த விழா ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறியுள்ளார். “இந்த ஒப்பந்தம் முழுக்க, முழுக்க நமது சமூக ரீதியிலான அணு மின் சக்தி தேவையை நிறைவு செய்வதற்கான ஒப்பந்தமாகும். தற்பொழுது இந்தியாவின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 130 கிகாவாட் ஆகும். இதனை அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் 250 கிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும். தற்பொழுது அணு மின் சக்தியின் பங்கு ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 விழுக்காடாக உள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் அணு
மின் சக்தி உற்பத்தி 40,000 மெகாவாட்டை எட்டுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அந்தப் பணி நடைபெற்று வருகிறது” என்று நமக்கு அளித்த பேட்டி ஒன்றில் கல்பாக்கத்திலுள்ள இந்திரா காந்தி அணு சக்தி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் பல்தேவ் ராஜ் கூறினார்.
அணு சக்தியின் மூலம் 40,000 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் இலக்கை எட்ட இந்த ஒப்பந்தம் தேவை.
ஆக, நமது நாட்டின் மின் உற்பத்தியைப் பெருக்க, அணு மின் சக்தியை அதிகரித்திட இந்த ஒப்பந்தம் அவசியம். அதில் இரு வேறுபட்ட கருத்திருக்க நியாயமில்லை. இதனை உணர்ந்திருந்திருந்தும் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவளித்துவரும் இடதுசாரிகள் எதிர்க்கக் காரணம்?
நாளை பார்ப்போம்...