பணப் புழக்கம் அதிகமாகி அதற்கு ஏற்றபடி பொருள்களின் உற்பத்தி வரவில்லை என்றால், விலைவாசி ஏறும்
என்பது பொதுவான பொருளாதாரக் கோட்பாடு. இப்பொழுதுள்ள விலைவாசி உயர்வு திடீரென்று வந்த நெருக்கடி அல்ல. கடந்த நான்கு மாதங்களாகவே விலைவாசிப் புள்ளி விவரங்கள் - அரசாங்கமே கணிக்கிற விவரங்கள் - பணவீக்கத்தின் அதிகரிப்பைக் காட்டி வந்தன. எதையும் சமாளித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசாங்கம் மந்தமாக இருந்தது.
விலைவாசி ஏற்ற இறக்கங்களை நிர்ணயிக்க, மொத்த வியாபார விலைவாசிப் புள்ளி முறையை அரசாங்கம் கையாண்டு வருகிறது. மொத்த வியாபார அளவில் மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் பங்கை நிர்ணயித்துக் கொண்டு, அதன் விலையை வாரந்தோறும் கணக்கெடுத்து, கடைசியாக எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து, மொத்த அளவில் விலைவாசிகளின் ஏற்றத்தாழ்வை அரசாங்கம் நிர்ணயிக்கிறது.
தற்பொழுது உள்ள முறையில் மூன்று வகைகளில் விலைவாசிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அரிசி, கோதுமை, காய்கறி, பால், பழம், இறைச்சி, எண்ணெய், சமையலுக்கான துணைப் பொருள்கள் போன்ற 98 அடிப்படைப் பண்டங்கள் மொத்த விலைவாசிப் பட்டியலில் 22 பங்கு பெறுகின்றன.
இரண்டாவதாக, பெட்ரோல், டீசல், மின்சாரம் போன்ற 19 எரிபொருள்கள் விலைவாசிப் பட்டியலில் 14 பங்கு வகிக்கின்றன.
மூன்றாவதாக, தொழில்துறையில் தயாரிக்கப்படும் 318 பொருள்கள் 64 பங்கு பெறுகின்றன. இவ்வாறு மக்களால் பயன்படுத்தப்படும் 435 பொருள்களின் விலை மாற்றங்களைக் கணக்கெடுத்து மொத்த விலைவாசிப் புள்ளி விவரம் வாரந்தோறும் கணிக்கப்படுகிறது.
1993-94 ஆண்டு மத்தியில் இருந்த விலைவாசி நிலைமையை 100 புள்ளிகள் என அடிப்படையாக வைத்து தற்பொழுது விலைவாசி ஏற்றம் கணக்கிடப்படுகிறது. இவ்வாறு பார்ப்பதில், 1999-2000 ஆண்டில் மொத்த விலைவாசிப் புள்ளி 145 ஆக இருந்தது. 2005-2006இல் 195 ஆகவும், 2006-2007இல் 206 என வளர்ந்தது. விலைவாசி உயர்வு வேகமாக இருந்தால், அந்த அளவு பணவீக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கணக்கிடப்படுகிறது. 2005-2006இல் இருந்ததைவிட 2006-2007 விலைவாசி 5.6 சதவிகிதம் உயர்ந்துவிட்டதை பணவீக்கம் என்று குறிப்பிடுகிறோம்.
ஓர் ஆண்டுக் காலத்தில் ஏற்படும் விலைவாசி ஏற்றத்தை அந்த ஆண்டின் பணவீக்கத்தின் அளவுகோலாக வைக்கிறார்கள். அந்த வகையில் 2008 பிப்ரவரி மாத முதல் வாரத்தில் விலைவாசி ஏற்றம் 3.45%.
இரண்டாவது வாரத்தில் 4.89%. மூன்றாவது வாரத்தில் 5.02% என உயர ஆரம்பித்தது. இத்தகைய வேகமான விலைவாசி ஏற்றம் பணவீக்கம் பலமாக வளர்ந்து வருவதைத்தான் காட்டியது. ஆனால், அவற்றைக் கட்டுப்படுத்த அப்பொழுதே அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
மூன்ற மாதத்தில் பணவீக்கம் கட்டுப்பட்டுவிடும் என்று நிதி அமைச்சர் கூறினார். பணவீக்கம் அரசாங்கத்துக்குக் கட்டுப்படுவதாக இல்லை. பணவீக்கம் வாரத்துக்கு வாரம் வளர்ந்தபடி இருந்தது. கடைசியாக மே மாதம் 3ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 7.83 சதவிகிதமாகவும், மே 31ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 8.75 விழுக்காடாகவும், பெட்ரோல, டீசல் விலைகள் உயர்த்தப்பட்டதற்குப் பிறகு இன்று வெளியிடப்பட்ட அதாவது ஜூன் 4ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 11.05 எட்டிவிட்டது. இது கடந்த 13 ஆண்டுகளில் காணாத அதிகமான பணவீக்கம் ஆகும்.
பணவீக்கம் விலைவாசிகளை உயர்த்தும்பொழுது, உணவுப் பண்டங்களின் விலைகள்தாம் முதலில் வேகமாக உயருகின்றன. கிராமப்புற-நகர்ப்புற ஏழைகள், அன்றாடக் கூலிகள், நிரந்தர மாதச் சம்பளத்தில் உள்ள மத்திய தர பணியாளர்கள் ஆகியவர்களின் வாழ்க்கையில் உணவுப் பண்டங்களின் விலை உயர்வு பெரிய நெருக்கடியை உண்டாக்கும். குறிப்பாக மே மாதத் துவக்கத்திலிருந்து உணவுப் பண்டங்களின் விலைகள் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 40 சதவிகிதம் உயர்ந்துவிட்டன.
உலக அளவில் ஏற்பட்ட விலைவாசி உயர்வுகள் இந்தியாவைப் பாதித்துள்ளது என்று அரசாங்க சார்பில் கூறப்படுகிறது. உலகமயமான பொருளாதாரம் 1991 நிதி அமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில்தான் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு, புதிய பொருளாதார மயம் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான பொருளாதார கொள்கையாக ஆகிவிட்டது. உலகமயமான பொருளாதாரத்தின் கீழ் கடந்த 17 ஆண்டுக் காலத்தில் உலக நாடுகளுடன் பல வகைகளில் இந்தியா போட்டியிடும் அளவுக்கு வளர்ந்துவிட்டதாக, அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் பெருமைப்பட்டதில் குறைவில்லை. 2007-2008 ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் அடைந்த மொத்தமான 10 சதவிகித வளர்ச்சி, கணினித் துறையில் அடைந்த முன்னேற்றம், வெளிநாட்டாரின் மூலதன முதலீடு 850 கோடி டாலரை (34,000 கோடி ரூபாயைத்) தாண்டிய வேகம், உலக பில்லியனர் முதலாளிகளின் பட்டியலில் இந்திய சீமான்களின் எண்ணிக்கை, இப்படிப்பட்ட புள்ளி விவரங்களை அரசாங்கமும் பத்திரிகைகளும் வெளியிட்டன.
இந்த 17 ஆண்டுக் காலத்தில் இந்தியாவின் மொத்த வருமானத்தில் பெரிய வளர்ச்சி அடைந்தபோதிலும், கிடைத்த பலன் உயர்மட்டத்தில் குவிக்கப்பட்டதே தவிர, அடித்தள ஏழைகளுக்குச் செல்லவில்லை. இந்தியாவின் விவசாயத் துறைக்குத் தரப்பட்ட ஆதரவு அரசாங்கத் திட்டங்களில் குறைக்கப்பட்டது. 1991 வரை விவசாயத் துறையின் வளர்ச்சி ஆண்டுக்கு 4 சதவிகிதமாக இருந்தது. அதன்பின் வந்த ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம் (1997-2002), பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் (2002-2007) ஆகியவற்றின் கீழ் விவசாய உற்பத்தியின் வளர்ச்சி 2 சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது.
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி பற்றி திட்டக்குழு 2006 நவம்பர் மாதத்தில் தந்த ஆய்வு அறிக்கையில் ஓர் எச்சரிக்கையைத் தந்தது: "விவசாயத் துறையில் பெரிய நெருக்கடி நீடிப்பதை உடனடியாக கவனிக்க வேண்டும். மொத்த வளர்ச்சி 8, 9 சதவிகித அளவில் வளரும்பொழுது விவசாயத் துறையும் அந்த அளவுக்கு வளர்ச்சி அடைவதற்கான திட்டங்களையும், முதலீடுகளையும், விவசாயத்துக்கு அளிக்க அரசாங்கம் முன்வரவேண்டும்."இந்த ஆய்வுரை வெளிவந்த சமயத்தில் டாக்டர் மன்மோகன் சிங் மந்திரிசபைதான் மத்திய ஆட்சியில் கொலு வீற்றிருந்தது. திட்டக்குழுவின் அறிக்கை உண்மையில் தெரிவித்தது என்னவென்றால், இதுகாறும் விவசாயத்துக்குத் தேவையான திட்டங்கள் - முதலீடுகள் அரசாங்கத்தால் தரப்படவில்லை என்பதுதான்.
காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமைத்த ஐக்கிய முன்னேற்றக் கூட்டணி 2004 மே மாதத்தில் வெளியிட்ட பொதுவான குறைந்தபட்ச திட்டத்தில் "விவசாயத் துறைக்குத் தேவையான முதலீடுகளை விரைவாகச் செய்து கிராமப்புற அடிப்படைத் தேவைகளை மேம்படச் செய்வோம்" என்று உறுதி தரப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறையில் என்ன நடைபெற்றது?
இந்த ஆண்டு மத்திய வரவு-செலவுத் திட்டத்துடன் தரப்பட்ட 2007-2008 பொருளாதார அளவை (எக்கனாமிக் சர்வே) வெளியீட்டில், அரசாங்கத்தின் மொத்த முதலீடுகளில் விவசாயத்துக்கு ஒதுக்கப்பட்டவை வர வர, பின்வருமாறு குறைந்துகொண்டே வருகின்றன என்பது வெளிப்படுகின்றது:
அரசாங்கத்தின் மொத்த முதலீடுகளின் விவசாயத்துக்குத் தரப்பட்ட பங்கு (ரூபாய் கோடிக்கணக்கில்)
2001-2002 (ஆண்டு)
மொத்த முதலீடு - ரூ.4,74,448
விவசாயத்துக்கு - ரூ.48,215
விவசாயத்தின் பங்கு - 10.2%
2003-2004 (ஆண்டு)
மொத்த முதலீடு - ரூ.6,65,625
விவசாயத்துக்கு - ரூ.44,833
விவசாயத்தின் பங்கு - 6.7%
2004-2005 (ஆண்டு)
மொத்த முதலீடு - ரூ.7,95,642
விவசாயத்துக்கு - ரூ.49,108
விவசாயத்தின் பங்கு - 6.2%
2005-2006 (ஆண்டு)
மொத்த முதலீடு - ரூ.9,50,102
விவசாயத்துக்கு - ரூ.54,905
விவசாயத்தின் பங்கு - 5.8%
2006-2007 (ஆண்டு)
மொத்த முதலீடு - ரூ.10,53,323
விவசாயத்துக்கு - ரூ.60,762
விவசாயத்தின் பங்கு - 5.8%
10.2 சதவிகித அளவிலிருந்து விவசாயத்துக்கு என்று ஒதுக்கப்படும் முதலீட்டுத் தொகை கடந்த மூன்றாண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்டு 5.8 சதவிகித அளவுக்கு வந்துவிட்டது. சதவிகித அளவில் குறைவு பெரிதாகத் தெரியாது என்றாலும், மொத்த அளவில் பார்க்கும்பொழுது 10.2 சதவிகித அளவு 2006-2007இல் கடைபிடிக்கப்பட்டு இருந்தால் 1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு விவசாயத்துக்கு முதலீடு வந்திருக்க வேண்டும்.
இந்தியாவின் புள்ளி விவரங்களைப் பார்த்தால், ஆண்டுதோறும் தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடிய உணவுப் பொருட்களின் அளவு குறைந்துகொண்டு வருகிறது என்பது பின்வரும் புள்ளிவிவரங்களால் வெளிப்படும்: தனிப்பட்ட நபருக்கு உள்ள உணவு தானியங்களின் அளவு முறையே, 1991ல் - 510 கிராம், 2000இல் - 463 கிராம், 2006இல் - 405 கிராம் என குறைந்தபடிதான் உள்ளது.
விலைவாசி ஏறி, இந்திய மக்கள் அரை வயிறு பட்டினி கிடக்கும் நிலைமையில், இந்த ஆண்டில் இந்தியாவிலிருந்து 50 லட்சம் டன் (500 கோடி கிலோ) அரிசி ஏற்றுமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை 2008, ஏப்ரல் 14, டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் வெளியிட்டவர் டாக்டர் எஸ். நாராயணன் - இவர் பிரதம மந்திரியின் முன்னாள் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். இப்படிப்பட்ட ஆட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் கொடூரமான விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகுக்கிறது.
உலகப் பொருளாதார மயம் மூலமாக கிடைத்துள்ள பலன், வளர்ச்சியடையாத நாடுகளை வளர்ந்த நாடுகளின் மார்க்கெட் ஆதிக்கத்துக்கு அடிமைப்படுத்தியுள்ளதுதான். நகரங்களை ஒட்டி உலகப் பொருளாதாரம் வளர்ச்சி அடைகிறது. கிராமப்புறம் புறக்கணிக்கப்படுகிறது, விவசாயம் நலிவடைந்து வருகிறது.
1950 சுதந்திர இந்தியாவில் 70 சதவிகித மக்கள் விவசாயத் துறையை நம்பி வாழ்ந்தார்கள். நாட்டின் மொத்த வருமானத்தில் விவசாயத்துக்கு 60 சதவிகிதம் கிடைத்தது. 2007 ஆம் ஆண்டில் 58 சதவிகித மக்களை உடைய விவசாயத் துறைக்கு இந்தியாவின் மொத்த வருமானத்தில் 18 சதவிகிதப் பங்குதான் கிடைக்கிறது. விவசாயத்துக்கு, விவசாய மக்களுக்கு, உரிய வருமானம் கிடைக்காத காரணத்தால், கடன் தொல்லை, பஞ்சம்-பசி-பட்டினி, கடைசியில் தற்கொலை என விவசாயியின் வாழ்க்கை பெரும்பாலும் முடிவடைகிறது.
விவசாயி பட்டக்கடனில் ஒரு பகுதியை நீக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. ஆனால் கடன்படாத நிலைமைக்கு விவசாயத் துறையை வளர்த்துவிட அரசாங்கம் தவறிவிட்டது.
நாளொன்றுக்கு 1 டாலருக்குக் குறைவான வருமானம் உள்ளவர்களைப் பஞ்சக் கோட்டின் கீழ் என்று உலக வங்கி முதலில் கணக்கெடுத்தது. பின்னர் 2 டாலர் கீழ் வருமானம் உள்ளவர்களையும் பஞ்சக்கணக்கில் சேர்த்தது. இந்தியாவில் ஒரு டாலர் வருமானத்தின் கீழ் உள்ள பஞ்சைகளின் எண்ணிக்கை 35 கோடி, இரண்டு டாலர் வருமானத்தின் கீழ் உள்ள பஞ்சைகளின் எண்ணிக்கை 80 கோடி!
உலகளாவிய பொருளாதாரத்தை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்பது பற்றிய தமது நூலில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறினார்: "ஐரோப்பாவில் ஒரு பசு மாடு வைத்திருந்தால், அதற்கு உதவித் தொகையாக நாளொன்றுக்கு 2 டாலர் தருகிறார்கள். அதே சமயம், வளர்ச்சி அடையாத நாடுகளில் 80 சதவிகித மக்கள் தினந்தோறும் 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில், பஞ்சக்கோட்டின் கீழ் அல்லல் படுகின்றனர்."
வளர்ச்சி அடையாத நாட்டில் மனிதனாக இருப்பதைவிட, வளர்ச்சி அடைந்த நாட்டில் மாடாக இருப்பது மேல் என்று நினைக்கத் தோன்றுகிறது!