கச்சா விலையேற்றமும் - லாபக் கொள்ளையும்!
2003
ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததையடுத்து ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் உயரத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இருமடங்காக அதிகரித்துள்ளது உலக பொருளாதாரத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.2004
ஆம் ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா விலை 35 டாலராக இருந்தது, இந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடு
அதிகரித்திருப்பதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தாறுமாறாக ஏற்றுவதைத் தவிர வேறு வழியின்றி உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விலையேற்றத்திற்கான காரணமும், அதை முன்னரே உலக நாடுகள் கணிக்கத் தவறியது ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய அவசியம் எழுகிறது.முதலில் கடந்த ஒரே ஆண்டில் இந்த அளவிற்கு கச்சா விலையேறியதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.1)
ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலும், வடக்கு கடல் என்றழைக்கப்படும் இங்கிலாந்து - ஐரோப்பா இடையிலான கடற்பகுதியிலுள்ள எண்ணெய் கிணறுகளிலும் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பினால் கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் கச்சா விலை பேரலுக்கு 101 டாலரிலிருந்து 120 டாலராக அதிகரித்தது. இதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் தேவை அதிகரித்தது விலையேற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது. 2)
உலக அளவில் கச்சா உற்பத்தி அதன் முழுத் திறனிற்கு இருந்தாலும், கச்சா உற்பத்தி செய்யும் நாடுகளில்
ஏற்படும் பிரச்சனைகளால் (உதாரணத்திற்கு நைஜீரியா, வெனிசுலா, ஈராக்) உற்பத்தி பாதிக்கப்படும்போது தேவை - உற்பத்திக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க, அதன் விளைவாக விலை உயர்த்தப்படுகிறது. 3)
உலக கச்சா எண்ணெய் தேவை 2008இல் நாள் ஒன்றிற்கு 1.2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், 2007ஆம் ஆண்டில் கச்சா விலை 72 டாலரை எட்டியபோதே, உலக அளவில் அடுத்த ஒராண்டில் கச்சா விலை (தேவை அதிகரிப்பதன் காரணமாக) பீப்பாய்க்கு 110 டாலராக (ஸ்பாட் பிரைஸ்) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பை மீறி மேலும் 10 டாலர் மட்டுமே உயர்ந்துள்ளது. இத்தகவலை வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியேட் என்றழைக்கப்படும் எண்ணெய் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கச்சா விலையேற்றம் திடீரென்று, எதிர்பாராமல் முளைத்து விடவில்லை என்பது தெளிவாகிறது. 4)
எண்ணெய் உற்பத்தி நாடுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று ஓபெக் என்றழைக்கப்படும் கச்சா உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு. இவ்வமைப்பில் செளதி அரேபியா, ஈரான், ஈராக், குவெய்த், வெனிசுலா, அல்ஜீரியா, நைஜீரியா, ஐக்கிய அரபு நாடுகள், கட்டார் உள்ளிட்ட 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மற்றவை எவ்வித சர்வதேச அமைப்பும் இன்றி தனித்த கச்சா உற்பத்தி நாடுகள் - ரஷ்யா, அமெரிக்கா, கனடா போன்றவை. இதில் ஓபெக் நாடுகள் - சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்தாலும் - கச்சா உற்பத்தியை பெருக்கவில்லை. ஓபெக் அல்லாத நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை விட, ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோலியப்
பொருட்களின் தேவை நாள் ஒன்றிற்கு 1 மில்லியன் பீப்பாய் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதாவது ஓபெக் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகப்படுத்தினாலும் தேவை அதிகரிப்பதால், அவைகளின் உற்பத்தியைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக சந்தைப் பொருளாதார நியதியின்படி (Supply - Demand), உற்பத்தியைவிட தேவை அதிகரிப்பதால் விலையேறுகிறது. இந்த விளக்கத்தைத்தான் அனைத்து நாடுகளும் அளித்துக் கொண்டிருக்கின்றன.
கச்சா விலையேற்றத்திற்கு இதுவரை கூறப்படும் காரணங்களில் கேள்விக்குறியது எதுவெனில், சர்வதேச தேவை இந்த அளவிற்கு அதிகரித்துவரும் நிலையில் ஓபெக் நாடுகள் தங்களது உற்பத்தியை பெருக்காத்தது ஏன்? என்பதே.
1973
இல் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் மில்லியன் பீப்பாய் கச்சா உற்பத்தி செய்த ஓபெக், 1977இல் மிக அதிகபட்சமாக 34 ஆயிரம் மில்லியன் பீப்பாய் அளவிற்கு உற்பத்தியைப் பெருக்கியது. அதன்பிறகு சர்வதேச அளவில் தேவை குறையக் குறைய (விலையும் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில்) உற்பத்தியைக் குறைத்தது. நாள் ஒன்றிற்கு 15 ஆயிரத்திற்கும் குறைவாக உற்பத்தி சரிந்தது.
1985
ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேசத் தேவை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க கச்சா உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்த ஓபெக், 2005ஆம் ஆண்டு 33 ஆயிரம் மில்லியன் பீப்பாய் அளவிற்கு உயர்த்தியது. ஆனால் அதற்குப் பிறகு - சர்வதேச அளவில் தேவை நாளுக்கு நாள் (ஆசிய நாடுகளின் தேவை) அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் உற்பத்தியைக் குறைக்கத் துவங்கியது. 2007
ஆம் ஆண்டில் ஓபெக் நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் மில்லியன் பீப்பாய்களுக்கும் குறைந்தது. தனக்குள்ள கூடுதல் உற்பத்தித் திறனையும் ஓபெக் நாடுகள் - குறிப்பாக செளதி அரேபியா - பயன்படுத்தவில்லை. 2005
இல் கச்சா விலை ஒரு பீப்பாய்க்கு 40 முதல் 50 டாலர்களாக இருந்தது. அப்பொழுது செய்த உற்பத்தியையே இப்பொழுதும் தொடர்கின்றன செளதி உள்ளிட்ட ஓபெக் நாடுகள். கடந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடு விலையுயர்ந்துள்ள நிலையில், தங்களுடைய உற்பத்திக்கு நான்கு மடங்கு வருவாய் பெற்றுள்ளன ஓபெக் நாடுகள்!
இதனால்தான் சர்வதேச அளவில் கச்சா விலை பீப்பாய்க்கு 135 டாலர்கள் வரை உயர்ந்துள்ள நிலையிலும் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஓபெக் நாடுகள் வாய் திறக்கவில்லை. வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில்தான் உற்பத்தி குறித்து பேசப்போவதாகவும், அதுவரை தங்களுடைய உற்பத்தியில் எந்த மாற்றமும் இராது என்று ஓபெக் அமைப்பு கூறியுள்ளது.அமெரிக்கா, கனடா உள்ளிட்ட கச்சா உற்பத்தி நாடுகளே இந்த விலையேற்றத்தினால் பெரும் பிரச்சனையை சந்தித்துவரும் நிலையில், உலக நாடுகள், உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்த ஓபெக் நாடுகளின் மீது ஏன் அழுத்தம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது.இதற்கு பதில் அமெரிக்காவிலிருந்துதான் (ஓரளவிற்கு) கிடைத்துள்ளது. பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தினால் அமெரிக்க சந்தித்துவரும் பொருளாதார பின்னடைவுத் தொடர்ந்து, இந்த விலையேற்றத்தினால் பெரும் லாபம் ஈட்டிவரும் அமெரிக்க பெட்ரோலிய நிறுவனங்களின் நிர்வாகிகளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நீதிக் குழு (Judiciary committee) உறுப்பினர்கள் கடந்த வாரம் புதன் கிழமையன்று கேள்வி கேட்டு குடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளீர்களே, உங்களுடைய வணிக நடவடிக்கைகளால் உருவாகிவரும் பொருளாதார பின்னடைவு
எந்த விதத்திலாவது உங்களுடைய மனசாட்சியை பாதிக்கிறதா? என்று செனட்டர் ரிச்சர்ட் டர்பின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பிபி அமெரிக்கா எனும் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் மலோன், “உலக சந்தையை எங்களால் மாற்ற முடியாது. அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தேவை அதிகரிப்பிற்கேற்ப கச்சா மற்றும் மரபு சாரா எரிபொருள் உற்பத்தியை பெருக்கத் தவறியதே இன்றைய விலையேறத்திற்குக் காரணம்” என்று கூறியுள்ளார்.
“அமெரிக்க குடியரசுத் தலைவராக ஜார்ஜ் புஷ் பதவியேற்றதற்குப் பிறகு கச்சா விலை 400 விழுக்காடு அதிகரித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய செனட் நீதிக் குழுவின் தலைவர் பேட்ரிக் லீஹி, ‘தேவை - உற்பத்தி நியதிப்படி பார்த்தாலும் கச்சா எண்ணெய் விலை 55 முதல் 60 டாலர் அளவிற்குத்தானே உயர்ந்திருக்க வேண்டும், சரியாக இயங்கும் போட்டிச் சந்தையில் இந்த அளவிற்கு உயர என்ன காரணம்?” என்று கேட்டுள்ளார்.
இக்குழுவின் மற்றொரு உறுப்பினரான (ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்) ஆர்லென் ஸ்பெக்டர், “எக்ஸான் மொபில் நிறுவனத்தின் லாபம் கடந்த 5 ஆண்டுகளில் 11.5 பில்லியன் டாலர்களில் இருந்து 40.6
பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனம் ஒன்று இந்த அளவிற்கு லாபத்தை அடையும் போது பயனாளர்கள் இந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாவதற்கான காரணம் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சற்றும் பதற்றமடையாமல் பதிலளித்த எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள், எண்ணெய் இருப்பைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் காரணங்களைக் காட்டி தடுப்பதும், அதிகமான வரி விதிப்பும் விலையேற்றத்திற்கு மற்ற காரணங்கள் என்று கூறியுள்ளனர்.எக்ஸான் மொபில், கோனாக்கோ ஃபிலிப்ஸ், ஷெல் ஆயில், ஷேவ்ரான், பிபீ ஆகிய அமெரிக்காவின் 5 முன்னனி எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக இந்த ஆண்டின் முதல் 3 வாரங்களில் மட்டும் 36 பில்லியன் டாலர் (1 பில்லியன் டாலர் = 100 கோடி x 42 ரூபாய் = ரூ.1,51,200 கோடி) லாபம் சம்பாதித்துள்ளன.ஷேவ்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ராபர்ட்சன், “எங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை.
மாறாக, இந்த அளவிற்கு லாபம் ஈட்டியதற்காக பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.ஆக, விஷயம் இதுதான், கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்களும், ஓபெக் உள்ளிட்ட நாடுகளும் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.ஓபெக் நாடான செளதி அரேபியாவிற்கு அடுத்தப்படியாக உலக அளவில் கச்சா உற்பத்தி செய்யும் நாடான ரஷ்யாவும் இந்த விலையேற்றத்தினால் சர்வதேச சந்தையில் ‘நல்ல’ லாபம் ஈட்டுவது மட்டுமின்றி, வரி விதிப்பின் மூலம் உள்நாட்டிலும் வருவாயை அதிகரித்துக் கொள்கிறது.எனவே கச்சா உற்பத்தி நாடுகள் அனைத்தும் இன்றைய நிலையில் ஓரணியில் நின்று லாப கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. அதுதான் இந்த வானளாவிய விலை உயர்விற்குக் காரணம்.
தங்களுடைய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவரும் இப்பிரச்சனையை இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் உலகிலேயே அதிகமாக பெட்ரோலியப் பொருட்கள் தேவை கொண்டுள்ள நாடான அமெரிக்காவில், பொருளாதார பின்னடைவு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றால் அதன் அன்றாடத் தேவை 190,000 பீப்பாய் அளவிற்கு குறைந்துள்ளது. எத்னாலை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் அந்நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு இந்த ஆண்டில் நாள் ஒன்றிற்கு மேலும் 330,000 பீப்பாய்கள் அளவிற்கு குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.