கச்சா விலையேற்றம் : சரித்திரம் திரும்புமா?
, வெள்ளி, 30 மே 2008 (18:54 IST)
ஒரே ஆண்டில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது உலகளாவிய அளவில் மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோலிய பொருட்களுக்கு இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மட்டுமின்றி உலக அளவில் தொடர்ந்து அதிகரித்துவரும் தேவையால், கடந்த ஒரு ஆண்டில் மட்டும் கச்சா விலை பீப்பாய் ஒன்றிற்கு 69 டாலரில் இருந்து அதிகபட்சமாக 135 டாலராக (தற்பொழுது 131 டாலர்) அதிகரித்துள்ளது.ஆசிய நாடுகளில் பெட்ரொல் பொருட்களை அதிகம் பயன்படுத்திவந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளிவிட்டு சீனா முன்னிலைக்கு வந்துள்ளது. இந்தியாவின் பயன்பாடும் ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் உலக கச்சா தேவை இந்த ஆண்டில் நாள் ஒன்றிற்கு 86.8 மில்லியன் பேரல்களாக உள்ளது (கடந்த ஆண்டு நாள் ஒன்றிற்கு 85.8 மில்லியன் பேரல்களாக இருந்தது) 2015 ஆம் ஆண்டில் 99.5 மில்லியன் பேரல்களாக அதிகரிக்கும் என்று ஓ.ஈ.சி.டி. என்றழைக்கப்படும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு ஆலோசனை அளிக்கும் சர்வதேச எரிசக்தி முகமை (ஐ.ஈ.ஏ.) கூறியுள்ளது.இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்த நிலை ஏற்பட்டால், பெட்ரோலியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதென்றும், அந்த நிலையை எதிர்கொள்ள, ஓபெக் சாரா மற்ற கச்சா உற்பத்தி
நாடுகள் எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று இவ்வமைப்பின் செயல் இயக்குனர் கிளாட் மாண்டில் தோஹாவில் நடந்த 10வது சர்வதேச எண்ணெய் மாநாட்டில் எச்சரிக்கை விடுத்தார்.இந்த எச்சரிக்கைக்குப் பின்னர்தான் பெட்ரோலியத் தேவை அதிகரிப்பும், கச்சா எண்ணெய் விலையேற்றமும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியென்றால் அடுத்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்களின் தேவை அதிகரிப்பும், அதற்கு ஈடாக விலையேற்றமும் அதிகரிக்கும் என்று நம்ப இடமுள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.இந்தக் கேள்விக்கு பதில் தேட கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் அதன் விலையேற்றம் குறித்த வரலாற்றை அறிவது அவசியமாகும். 3
டாலருக்கு விற்ற கச்சா எண்ணெய்! கச்சா எண்ணெய் வணிகம் உலகளாவிய சந்தைப் பொருளாகி விலை நிர்ணயிக்கப்பட்ட காலம் முதல் - அதாவது இரண்டாவது உலகப் போருக்கு பிந்தைய காலக் கட்டத்தில் ஒரு பீப்பாய் கச்சா விலை 2.50 டாலர் முதல் 3.00 வரைதான் இருந்தது. 1957வரை இந்த நிலையே நீடித்தது. 2006ஆம் ஆண்டில் டாலருக்கு இருந்த மதிப்புடன் ஒப்பிட்டால் (டாலரின் வாங்கு சக்தியின் அடிப்படையில்) அதன் விலை 14 முதல் 17 டாலராகத்தான் இருந்துள்ளது.1960
ல் செளதி அரேபியா, ஈராக், ஈரான், குவெய்த், வெனிசுலா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து (1971ல்
கட்டார், இந்தோனேஷியா, லிபியா, ஐக்கிய அரபு நாடுகள், அல்ஜீரியா, நைஜீரியா ஆகிய 6 நாடுகள் இணைந்தன) உருவாக்கிய ஓபெக் என்றழைக்கப்படும் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு, கச்சா உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கத் துவங்கியது. ஆனால் இந்தக் காலக் கட்டத்திலும் - அதாவது 1958 முதல் 1970ஆம் ஆண்டுவரை - கச்சா விலை பீப்பாய்க்கு 3.00 டாலராகவே இருந்துள்ளது.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, 1970ஆம் ஆண்டுவரை, கால் நூற்றாண்டுக் காலமாக சர்வதேச அளவில் கச்சாவிற்கான தேவை அதிகரித்தும் (40 விழுக்காடு) கச்சா விலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாறாக, பல கால கட்டங்களில் விலை குறைந்தது.மும்மடங்கு விலையேற்றம்! 1972
ஆன் ஆணடுவரை 3 டாலர்களாகவே இருந்த கச்சா விலை 1973ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் ஏற்பட்ட போரையடுத்து 12 டாலராக உயர்ந்தது! 1973
ஆம் ஆண்டு சிரியாவும், எகிப்தும் இணைந்து இஸ்ரேலை தாக்கியதையடுத்து போர் மூண்டது.
இப்போரில் இஸ்ரேலை ஆதரித்த நாடுகளுக்கு கச்சா விற்பதில்லை என்று ஓபெக் நாடுகள் முடிவெடுத்தது மட்டுமின்றி, தங்களின் அன்றாட உற்பத்தியை 5 மில்லியன் டன்கள் அளவிற்கு குறைத்தன. இதனால் 6 மாத்த்தில் கச்சா விலை 400 மடங்கு அதிகரித்தது. போருக்குப் பின்னரும் இந்த விலையேற்றம் நீடித்தது. 1978ஆம் ஆண்டுவரை கச்சா விலை பீப்பாய்க்கு 13 டாலர் அளவிற்கு இருந்தது.ஈரான் - ஈராக் போர் - விலையேற்றம்!1978
ஆம் ஆண்டு ஈரான் மன்னர் ஷாவை எதிர்த்து அந்நாட்டில் நடந்த புரட்சியும், எண்ணெய்த் தொழிலாளர் வேலை நிறுத்தமும் ஈரான் கச்சா உற்பத்தியை - நாள் ஒன்றிற்கு 2 முதல் 2.5 மில்லியன் டன் அளவிற்கு பாதித்தன. 1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நடந்த இப்புரட்சியில் சில நாட்கள் கச்சா உற்பத்தி முற்றிலும் நின்றுபோனது.
ஈரான் புரட்சி முடிந்ததும் (அயோதுல்லா கொமேனி ஆட்சி ஏற்பட்டதும்) அதன் கச்சா உற்பத்தி நாள் ஒன்றிற்கு 4 மில்லியன் டன்கள் அளவிற்கு அதிகரித்தது. ஆனால் அடுத்த ஓராண்டில் - புரட்சிக்குப் பின் பலவீனமான நிலையிலிருந்த ஈரான் மீது ஈராக் போர் தொடுக்க இரண்டு நாடுகளிலும் கச்சா உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. ஈரான் - ஈராக் போரால் இரு நாடுகளின் கச்சா உற்பத்தி நாள் ஒன்றிற்கு 6.5 மில்லியன் டன்கள் வரை குறைந்தது. இது ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் 10 விழுக்காடு குறைவாகும். இதன் விளைவாக
சர்வதேச அளவில் கச்சாவிற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் பீப்பாய் எண்ணெய் விலை 35 டாலராக அதிகரித்தது!
1977ஆம் ஆண்டில்தான் ஒபெக் கூட்டமைப்பு நாடுகளின் கச்சா உற்பத்தி மிக அதிகபட்சமாக 35 மில்லியன் டன்களை எட்டியது. ஆனால் அதன்பிறகு தொடர்ந்து குறையத் துவங்கி, 30 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட ஓபெக்கின் ஒட்டுமொத்த கச்சா உற்பத்தி (2007ல்) சற்றேறக்குறைய 30 மில்லியன் டன்களாகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விலை ஏறியபோது பயன்பாடு குறைந்தது!
இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை கவனித்தாக வேண்டும். ஓபெக்கின் உற்பத்தி குறைந்தாலும், சர்வதேச அளவில் 2000வது ஆண்டுவரை தேவை அதிகரிக்காத்தால் கச்சா விலை பீப்பாய்க்கு 35 டாலராக இருந்தது 20 முதல் 30 டாலராக குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்குக் காரணம் கச்சா விலை அதிகரித்து அதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரித்த போது, பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு குறையத் தொடங்கியது. இந்த நிலை ஏற்படும் என்று
செளதி அமைச்சர் அகமது யாமினி எச்சரித்தார். ஆனால் ஓபெக் கூட்டமைப்பு காதில் போட்டுக் கொள்ளவில்லை.பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து, அவைகளை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக பலனைப் பெறும் தொழில்நுட்பத் திறன் பரவலாக அதிகரிக்கத் தொடங்கியதாகவும், ஓபெக் நாடுகள் உற்பத்தியைக் குறைத்ததையடுத்து மற்ற நாடுகளில் எண்ணெய் வள ஆய்வு அதிகரிக்கத் தொடங்கி உற்பத்தியும் பரவலாக அதிகரித்தது. ஓபெக் அல்லாத நாடுகளின் கச்சா உற்பத்தி 10 மில்லியன் டன் அளவிற்கு அதிகரித்தது. இதனால் உற்பத்தியைக் குறைத்து விலையை அதிகரிக்க ஓபெக் மேற்கொண்ட முயற்சி பலிக்கவில்லை.கச்சா உற்பத்தி குறைவால் வருவாய் பாதிக்கப்பட்ட செளதி, 1986 முதல் தனது உற்பத்தியை நாள் ஒன்றிற்கு 2 மில்லியன் டன்னிலிருந்து 5 மில்லியன் டன்னாக உயர்த்தியதையடுத்து கச்சா விலை பீப்பாய்க்கு 10 டாலராக குறைந்தது. இதன்மூலம் விலை குறைந்தாலும் அதன் வருவாய் குறையவில்லை.வளைகுடா போரால் மீண்டும் விலையேற்றம்!ஈராக்கின் ஒரு பகுதியே குவெய்த் என்று கூறி அதன் மீது சதாம் ஹூசேன் படையெடுத்ததால் வெடித்த வளைகுடா போரையடுத்து கச்சா உற்பத்தி இவ்விரு நாடுகளிலும் பெருமளவிற்குக் குறைந்தது. கச்சா
விலை பீப்பாய்க்கு 32 டாலர்களாக உயர்ந்தது.ஆனால் போருக்குப் பிறகு உற்பத்தி தேவைக்கேற்ப அதிகரித்ததால் மீண்டும் விலை சரியத் துவங்கியது. 1994ஆம் ஆண்டுவரை இந்த நிலையே நீடித்தது.ஆசிய நாடுகளின் இறக்குமதி அதிகரிப்பு!இந்த காலக் கட்டத்தில்தான் பெட்ரோலியப் பொருட்களின் தேவை மிக்க் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. காரணம்: ஆசிய நாடுகளின் தேவை அதிகரிக்க, உலக கச்சா எண்ணெய் தேவை நாள் ஒன்றிற்கு 6.5 மில்லியன் டன்களாக அதிகரித்தது. இதில் ஜப்பான், சீனா, இந்தியா, கொரியா உள்ளிட்ட கிழக்காசிய நாடுகளின் தேவை நாள் ஒன்றிற்கு 3 மில்லியன் டன்களாக உயர்ந்தது.இதன் விளைவாக கச்சா எண்ணெய் விலையும் அதிகரிக்கத் துவங்கியது. 1990 முதல் 1996 வரை ரஷ்யாவின் கச்சா உற்பத்தி நாள் ஒன்றிற்கு 5 மில்லியன் டன் அளவிற்கு குறைந்த்தால் உற்பத்தியை விட தேவை உயர்ந்து. அதன் காரணமாக கச்சா விலை கணிசமாக (பீப்பாய்க்கு 22 டாலர் ஆக) உயரத் துவங்கியது.
2001, செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்க மீது நடந்த பயங்கரவாத தாக்குதலால் பெட்ரோலியப் பொருட்களுக்கு இருந்த தேவை சரியத் தொடங்கியது. இதனால் விலைச் சரிவு ஏற்பட இருந்த நிலையில் ஓபெக் நாடுகளும், ரஷ்யாவும் உற்பத்தியை நாள் ஒன்றிற்கு 4.5 மில்லியன் பீப்பாய்கள் குறைத்ததனால் விலைச் சரிவு தவிர்க்கப்பட்டது.
அதிகரிக்கத் துவங்கிய கச்சா விலை!
2002ஆம் ஆண்டில் பீப்பாய்க்கு 25 டாலராக இருந்த கச்சா விலை, வெனிசுலா நாட்டில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தினால் உற்பத்தி பாதிக்கப்பட்டதையடுத்து உருவான தட்டுப்பாட்டாலும், அதனைத் தொடர்ந்து 2003ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி ஈராக் மீது அமெரிக்க படையெடுத்தால் அந்நாட்டில் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து கச்சா விலை வேகமாக உயரத் துவங்கியது.
தேவைக்கேற்ற உற்பத்தி இல்லாதததும், அதே நேரத்தில் ஆசிய நாடுகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்ததும் கச்சா விலையை பீப்பாய்க்கு 40 முதல் 50 டாலர்களாக உயர்த்தின.கச்சா எண்ணெய் தேவை - உற்பத்தி சமநிலயை தங்களது வருவாயை உயர்த்திக் கொள்ள ஓபெக் நாடுகள் திட்டமிட்டு உற்பத்தியை அதிகரிக்காமல் தவிர்த்தது இந்த விலையேற்றத்திற்கு முக்கியக் காரணமானது.
இதுமட்டுமின்றி, எண்ணெய் தேவை அதிகரிக்கும்போது அதனால் விலையுயர்வு ஏற்படாமல் தடுக்க எண்ணெய் வள நாடுகள் (உற்பத்தியும் செய்தாலும் தங்களது கூடுதல் தேவைக்காக இறக்குமதியும் செய்யும் அமெரிக்கா போன்ற ஓபெக் சாரா நாடுகள்) வைத்திருக்கும் கச்சா இருப்பு குறைந்ததும், நீண்ட கால பயன்பாட்டினால் பழுதடைந்த எண்ணெய் கிணறுகளால் உற்பத்தி குறைந்ததும் விலையேற்றத்தை தவிர்க்க இயலாமல் போனதற்கான காரணங்களாகும்.இப்படிபட்ட சூழ்நிலையில்தான், இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பெட்ரோலியத் தேவை படு வேகமாக அதிகரிக்க, கச்சா விலை தொடர்ந்து அதிகரித்து கடந்த ஒராண்டில் பீப்பாய்க்கு 100 டாலர்களைக் கடந்து உயர்ந்துவருகிறது.சரித்திரம் திரும்புமா?கச்சா எண்ணெய் விலையேற்றத்தினால் ஏற்பட்ட இழப்பு மற்றும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க உலக நாடுகள் இப்பொழுதுதான் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை கடுமையாக உயர்த்தி வருகின்றன. இந்த விலையேற்றம் பயனாளர்கள் மத்தியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பொறுத்தே கச்சா விலையேற்றம் தொடருமா அல்லது சரியுமா என்பது தெரியும்.
நாம் மேலே குறிப்பிட்டப்படி, 1977க்கும் 2000வது ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அவ்வப்போது கச்சா விலை (உற்பத்தி பாதிக்கப்பட்டதால்) அதிகரித்தபோது, பெட்ரோலியப் பொருட்களின் தேவை குறைந்தது. அதனால் கச்சா விலையேற்றம் தொடர்ந்து நீடிக்கவில்லை. விரைவிலேயே சரிந்து முன்பிருந்த விலையளவிற்குக் குறைந்தது.
அதுபோல, தற்பொழுது பெட்ரோலிப் பொருட்களின் விலையேற்றத்தால் அவைகளின் பயன்பாடு குறைந்தால், தேவை குறையும், அதன் எதிரொலியாக விலைகள் குறையும் சாத்தியம் ஏற்படலாம்.
மற்றொரு சாத்தியமும் உள்ளது. சர்வதேச எரிசக்தி முகமையின் இயக்குனர் கூறியதுபோல, கச்சா எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தியில் முதலீடு அதிகரிக்க வேண்டும். இந்தியா இப்படிப்பட்ட முயற்சிகளில் உள் நாட்டிலும், ரஷ்யா உள்ளிட்ட அயல் நாடுகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஓபெக் நாடுகளுக்கு வெளியே உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கினாலே விலைகள் கட்டுப்படும் சாத்தியம் உருவாகும்.
ஆக, கச்சா தேவை அதிகரித்துக் கொண்டேயிருக்கும், விலைகளும் உயர்ந்துக் கொண்டேயிருக்கும் என்று இன்றைய நிலையில் தீர்மானமாகச் சொல்லிவிட இயலாது.
மீண்டும் சரித்திரம் திரும்பலாம்!