சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணா அளவிற்கு உயர்ந்துள்ளதன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பை எப்படி ஈடுகட்டுவது என்பதில் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை ஒராண்டுக் காலத்தில் இரண்டு மடங்காகி பீப்பாய்க்கு 127 முதல் 135 டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதால், மத்திய அரசின் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான இந்திய எண்ணெய் கழகம், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு நாள் ஒன்றிற்கு ரூ.580 கோடி இழப்பு ஏற்பட்டு வருவதாக பெட்ரோலியத் துறை தெரிவிக்கிறது.
இந்த நிலை தொடர்ந்தால் இந்த நிதியாண்டில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.2,25,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்படும் என்றும், இந்த இழப்பை உடனடியாக தடுக்காவிட்டால், ஜூன் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் கழகத்திடம் நிதி இருக்காது என்று அந்நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார்.
எனவே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்படுவது நிச்சயம் என்றாகிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு விலையேற்றத்தை அனுமதிப்பது என்பதிலும், எந்த அளவிற்கு இழப்பை மற்ற விதத்தில் ஈடுகட்டுவது என்பதிலும் மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் சாத்தியக் கூறுகள்!
இன்னும் ஒரு மாத காலத்திற்குத்தான் கச்சா எண்ணெய் வாங்க நிதி உள்ளது என்று அபாய சங்கு ஊதப்பட்டுள்ளதால் விலையேற்றத்தை உடனடியாக முடிவு செய்யும் கட்டாயத்திலுள்ள மத்திய அரசு, கடந்த சில நாட்களாக அமைச்சகங்களுக்கு இடையே நடத்திய ஆலோசனையில் சில சாத்தியக் கூறுகளை ஆராய்துள்ளது.
1. பெட்ரோல் மீதான விலைக் கட்டுப்பாட்டை முழுமையாக நீக்கிவிடுவது. இதனைச் செய்தால் இன்றுள்ள விலை நிலவரப்படி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.16.34 உயர்த்தவேண்டும்.
இதனால் ஒட்டுமொத்த இழப்பில் ரூ.20,000 கோடி குறையும். ஆனால் ஒரே நாளில் இந்த அளவிற்கு விலையேற்றம் பயனீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அரசின் மீது வெறுப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதால் விலைக் கட்டுப்பாட்டு நீக்க ஆலோசனையை அரசு ஏற்கவில்லை.
இத்துடன் டீசல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.5 உயர்த்த அனுமதிக்க வேண்டும் என்று பெட்ரோலியத் துறை கேட்டுக்கொண்டுள்ளது. டீசல் விலையேற்றம் அதிகமானால் போக்குவரத்து செலவு அதிகரித்து அதன் காரணமாக அத்யாவசியப் பொருட்களின் விலைகள் ஏறி, ஏற்கனவே கடுமையாக உயர்ந்துள்ள பணவீக்கத்தை மேலும் உயர்த்திவிடும் என்று மத்திய அரசு அஞ்சுகிறது.
இது மட்டுமின்றி, சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தவும் பெட்ரோலியத் துறை அனுமதி கேட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மேலும் 4 மாநில சட்டப் பேரவைத் தேர்தலையும், இன்னும் ஒராண்டுக் காலத்தில் மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலையில் பெண்களின் கோபத்தை சம்பாதித்து அவர்களின் வாக்கை இழக்க ஆளும் கூட்டணி தயாராக இல்லை.
எனவே பெட்ரோலிய அமைச்சகத்தின் மேற்கண்ட கோரிக்கை ஏற்கப்படவில்லை.
2. இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை நிதியமைச்சர் சிதம்பரத்தை சந்தித்த பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுவரும் இழப்பீட்டைத் தவிர்க்க, கச்சா எண்ணெய் இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வையை (தற்பொழுது 5 விழுக்காடு) முற்றிலுமாக ரத்து செய்யுமாறும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் மீது வசூலிக்கப்படும் உற்பத்தித் தீர்வையை கணிசமாகக் குறைக்குமாறும் கோரிக்கை வைத்தார்.
இதனை நிதியமைச்சர் சிதம்பரம் நிராகரித்துவிட்டார். கச்சா எண்ணெய் இறக்குமதி மீது விதிக்கப்படும் சுங்கத் தீர்வையால் மத்திய அரசிற்கு 2006-07 ஆம் ஆண்டில் ரூ.14,009 கோடியும், பெட்ரோலிய பொருட்களின் மீதான உற்பத்தித் தீர்வையால் ரூ.57,884 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. ஆக ஒட்டுமொத்தமாக ரூ.71,893 கோடி வருவாயை விட்டுத் தர நிதியமைச்சகம் மறுத்துவிட்டது.
2007-08 நிதியாண்டில் இந்தியாவின் கச்சா இறக்குமதி மேலும் அதிகரித்ததால் மத்திய அரசின் வருவாயும் மேலும் கூடியிருக்கும் என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு மேற்கண்ட வருவாய் முழுவதையும் விட்டுத் தந்தால் கூட, எண்ணெய் நிறுவனங்களின் இழப்பு ரூ.1,40,000 கோடிக்கு மேல் இருக்கும்.
3. எனவே இழப்பை ஈடுகட்ட எண்ணெய் நிறுவனங்கள் பத்திரங்களை வெளியிட்டு நிதி திரட்டிக் கொள்ளவும், ஓ.என்.ஜி.சி., ரிலையன்ஸ் போன்ற நமது நாட்டின் எண்ணெய் கண்டுபிடிப்பு மற்றும் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று இழப்பினால் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்கும் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
4. சுங்க, உற்பத்தித் தீர்வைகள் மட்டுமின்றி, பெட்ரோலியப் பொருட்களின் மீது மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரியும் கணிசமானதாகும். விற்பனை வரிகளின் மூலம் மாநில அரசுகள் நிதியாண்டிற்கு ரூ.62,000 கோடி அளவிற்கு வருவாய் பெறுகின்றன. விற்பனை வரிகளை குறைப்பதன் வாயிலாக பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தை மாநில அரசுகளினாலும் ஒரளவிற்கு கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது.
எனவே, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு (மண்ணெண்ணெய் விலையை உயர்த்துவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று கூறப்படுகிறது) ஆகியவற்றின் விலைகளை மக்களுக்கு அதிர்ச்சி அளிக்காத அளவிற்கு உயர்த்த வேண்டுமெனில் மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் அதிகபட்ச அளவிற்கு கையாண்டால் மட்டுமே சாத்தியமாகும்.
கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்க்க வேண்டிய கட்டாயத்திலிருந்தாலும், மக்களின் மீது பெரிய அளவிற்கு, அதுவும் ஒரே நேரத்தில் பெரும் சுமை ஏற்றாமல் தவிர்க்கும் முயற்சிகளில் மத்திய அரசு கவனமாக ஈடுபடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.