Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விலையேற்றம் : பிரதமரின் திசைதிருப்பல்!

விலையேற்றம் : பிரதமரின் திசைதிருப்பல்!
, சனி, 26 ஏப்ரல் 2008 (19:11 IST)
webdunia photoFILE
விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது, எனவே மக்களை அச்சுறுத்தம் நடவடிக்கைகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட வேண்டாம் என்று பிரதமர் மன்மோகன் சிங் திருவாய் மலர்ந்துள்ளார்.

உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களில் இருந்து அனைத்துப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் ஏறிவரும் நிலையில், மக்கள் படும் துயரைக் குறைக்க விலைவாசியைக் குறைக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு இடதுசாரிகளும், மற்ற எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அரசை கடுமையாக நிர்பந்தித்துவரும் நிலையில், விலைவாசியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்று பிரதமர் அறிக்கை விடுத்திருந்தால் அது அவரது பொறுப்புணர்ச்சியைக் காட்டியிருக்கும்.

ஆனால், அவர் விடுத்துள்ள அறிக்கையில் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகள், அரசின் கையாலாகத்தனத்தை மறைக்க, எதிர்க்கட்சிகளை குற்றம்சாற்றும் சராசரி அரசியல் நடத்தையாகவே தெரிகிறது.

“விலையேற்றத்தினால் அவதியுறும் மக்களின் அவலங்களை அரசிலாக்கினால், அது ஏதோ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது போன்ற ஒரு சூழலை உருவாக்கிவிடும், அது ஊக வணிகர்களையும், பதுக்கல்காரர்களையும்தான் ஊக்குவிக்கும” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

விலையேற்றம் குறித்தும், பொருட்களின் பற்றாக்குறை குறித்தும் எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்வதுதான் அதுகுறித்து ஊக வணிகர்களுக்கும், பதுக்கல்காரர்களுக்கும் தெரியவருமா? பிரதமரின் பேச்சு மிக நகைச்சுவையாகதான் இருக்கிறது.

இதுமட்டுமல்ல, “விலையேற்றத்தை காரணமாக்கி மக்களின் அவலத்தை அரசியலாக்கிடும் தூண்டுதல்களை அரசியல் கட்சிகள் தவிர்த்திட வேண்டும” என்று தததுவத்தையும் உதிர்த்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.

விலையேற்றம் மக்கள் பிரச்சனையல்லவா? அதனைக்கூட அரசியலாக்காமல் வேறு எதைத்தான் அரசியலாக்குவது? அரசியலே தெரியாத பிரதமர் இவர் என்று அத்வானி கூறியதை நிரூபிப்பது போலல்வா உள்ளது மன்மோகன் சிங்கின் அறிக்கை!

விலையேற்றத்தைக் காட்டி அரசியல் கட்சிகளா மக்களை அச்சறுத்த வேண்டும்? சந்தைக்குப் போய் காய்கறி முதல் மளிகை பொருட்கள் வரை வாங்கிப் பார்த்தாலே அவர்களுக்கு தூக்கம் போய்விடுமே.

சென்னைச் சந்தையில் கடந்த 6 மாதங்களாக மட்டும் அத்யாவசியப் பொருட்களின் விலைகள் எந்த அளவிற்கு ஏறியுள்ளது என்பதை நேரில் விசாரணை செய்து தமிழ்.வெப்துனியா.காம் செய்தி வெளியிட்டதே. விலையேற்றத்தை முதலில் உணர்வது மக்கள்தான், அதன் பிறகே - அவர்களின் எண்ணங்களை ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் பிரதிபலிக்கின்றன. எனவே விலையேற்றப் பிரச்சனையில் மக்களை யாரும் பிரச்சாரத்தால் அச்சுறுத்திட முடியாது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, தாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே போகிறது என்று ஒரு மாயையை உருவாக்கி குளிர்காய்ந்துக் கொண்டிருந்தது. விவசாயிகள் தற்கொலையும், விலையேற்றமும் அந்த மாயையை உடைத்துவிட்டன. விவசாயிகளின் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்த பிறகும் விதர்ப்பா பகுதியில் 125 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று வந்துள்ள தகவல்களினால் அதிர்ச்சியுற்று, என்ன செய்வது என்று புரியாமல் கையை பிசைந்துக் கொண்டிருக்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.
புதிய பொருளாதாரக் கொள்கை, சந்தைப் பொருளாதாரம், உலக மயமாக்கல் ஆகியன இந்தியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாக கூறியதெல்லாம் இன்றைக்கு எதிர்மறையான விளைவுகளை அளித்துக் கொண்டிருப்பதைக்கண்டு இந்தப் பொருளாதார மேதைகள் குழம்பிப் போயுள்ளனர்.

விலையேற்றம் உலகளாவியப் பிரச்சனை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் அறிக்கை விடுகிறார். பணவீக்கம் அதிகரிக்கும் போதெல்லாம், அது பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றத்தின் விளைவு என்று கூறிவந்தனர்.

இன்று, உணவுப் பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையேறிவிட்டன. கட்டுமானப் பொருட்கள், மனைகள், வீட்டு வாடகை, தொழிற்சாலை இடுபொருட்கள் என்று அனைத்தும் விலையேறி மக்களை விழி பிதுங்கச் செய்து வருகின்றன.

இந்த நிலையில், பிரச்சனையை நேராக பார்த்து அதற்கு தீர்வு காண்பதற்கான வழிகளை கண்டு நடைமுறைப்படுத்தத்தான் ஒரு அரசு முயற்சிக்க வேண்டுமே தவிர, ஆட்சியில் இருந்துகொண்டு மற்றவர்களைக் குறைகூறக் கூடாது.

Share this Story:

Follow Webdunia tamil