Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!

'ஸ்கார்லெட்' விவகாரம் : அலட்சியத்தால் எழும் அச்சம்!
, வியாழன், 13 மார்ச் 2008 (18:47 IST)
webdunia photoFILE
'ஸ்கார்லெட் தண்ணீரில் மூழ்கி இறந்து போனார்' என்று தொடக்கத்திலேயே விசாரணையை முடித்துக் கொள்ள முனைந்தது கோவா காவல்துறை.

ஆனால், விவகாரம் பூதாகரம் ஆகவே தீவிர விசாரணையில் ஈடுபட்ட கோவா காவல்துறை, 'அதிக அளவில் போதைப் பொருள் எடுத்துக்கொண்டதாலும், தண்ணீரில் மூழ்கியதாலும் ஸ்கார்லெட் இறந்தார்' என்று தற்போது புதிய விளக்கத்தை அளித்துள்ளது.

இந்த வழக்குத் தொடர்பாக பிளாசிடோ கார்வலோ மற்றும் சாம்சன் டி செளஸா ஆகிய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ௦தண்ணீரில் மூழ்கி இறப்பதற்கு முன் அச்சிறுமியை இருவரும் கற்பழித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற தகவலும் கோவா காவல்துறை வாயிலாகவே கிடைத்துள்ளது.

இந்தியா முதல் இங்கிலாந்து வரை கவனத்தைப் பெற்ற இவ்விவகாரத்தின் பின்னணியை முதலில் பார்ப்போம்.

இங்கிலாந்திலிருந்து சுற்றுலாவுக்காக ஃபியானோவின் குடும்பத்தினர் கோவா வந்து, விடுமுறை நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 18-ம் தேதியன்று ஃபியோனாவின் 15 வயது மகள் ஸ்கார்லெட் ஈடன் கீலிங் இறந்த நிலையில் அஞ்சுனா கடற்கரையில் மர்மமான முறையில் கிடந்தார்.

இதை விபத்து என்று வழக்கை முடிக்கவிருந்த காவல்துறைக்கு, ஸ்கார்லெட்டின் குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர். இந்த மரணம் குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் 'ஸ்கார்லெட் கற்பழிக்கப்பட்ட பிறகே இறந்திருப்பது' தெரிய வந்தது. அச்சிறுமியின் உடலில் 58 காயங்கள் ஏற்பட்டிருந்ததற்கான அடையாளமும் இருந்தது.

இதையடுத்து விழித்துக்கொண்ட கோவா காவல்துறை விசாரணையை முடுக்கிவிட்டது. ஆனால், அவர்களது விசாரணையில் நம்பிக்கை இல்லாத ஃபியானோவோ, மத்திய புலனாய்வுக் கழக விசாரணைக்கு கோரினார். அதை, கோவா முதல்வர் நிராகரித்தார். அதைத் தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார் ஸ்கார்லெட்டின் தாயார்.

webdunia
webdunia photoFILE
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் சாம்சன் டி செளஸா மற்றும் பிளாசிடோ கார்வலோ ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து, சில தகவல்களை வெளியிட்டனர். அதில், கார்லவோ என்பவரால் ஸ்கார்லெட்டுக்கு போதைப் பொருள் கொடுக்கப்பட்டு, அதனால் சுயநினைவை முழுவதுமாக இழந்தார் ஸ்கார்லெட். அதன்பின் அப்பெண்ணைக் கற்பழித்துவிட்டு கடற்கரையோரம் போட்டுவிட்டு கார்வலோ சென்றுவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த விசாரணை முடிவுக்கு வராமல் தொடர்ந்து திருப்பங்கள் இருந்துவரும் நிலையில், இதன் முடிவைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கு முன் இந்தச் சம்பவத்தின் எதிரொலியால் சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.

அ) ஸ்கார்லெட் மரணத்திற்குப் பிறகு தீவிரமாக விசாரிக்காமலேயே முதல் முடிவை கோவா காவல்துறை தெரிவித்தது, அதன் அலட்சியப் போக்கு இன்றி வேறென்ன?

ஆ) கண்டிப்பாக அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்று தெரிந்தும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பையே பொருட்படுத்தாத கோவா காவல்துறை, உள்ளூர் மக்களின் பாதிப்பை சிரத்தையுடன் கண்டுகொள்ளுமா?

இ) அதிக அளவில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டதால் ஸ்கார்லெட் இறந்தார் என்று கூறும் கோவா காவல்துறை, கோவா கடற்கரைப் பகுதிகளில் போதைப் பொருள் கிடைப்பது சாதாரணமான ஒன்றே என்ற தொனியில் கூறியிருப்பது, கோவாவில் போதைப் பொருள் சகஜம் என்பதையே காட்டுகிறதல்லவா?

ஈ) 'இன்கிரெடிபிள் இந்தியா' அடைமொழியுடன் உலகம் முழுவதும் விளம்பரம் கொடுத்துவருகிறது மத்திய சுற்றுலாத் துறை. இந்நிலையில் ஸ்கார்லெட் விவகாரம், 'இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை' என்ற அச்சத்தை உலக நாடுகளிடையே உருவாக்காதா?

உ) வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு இந்தியா மீதான நம்பகத்தன்மை குறைந்துவிடாதா?

ஸ்கார்லெட் விவகாரம் தொடர்பான விசாரணையை முழுவதுமாக முடித்துக்கொண்டு, கோவா காவல்துறை மூலம் தெளிவு கிடைத்தாலும்கூட, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு எழுந்துள்ள அச்சம் முழுமையாக அகலுவதற்கு சற்று நாளாக வாய்ப்புண்டு.

Share this Story:

Follow Webdunia tamil