மராட்டியத்திற்கு பிழைக்க வந்தவர்கள் தங்கள் இன, மொழி, பண்பாட்டை கடைபிடிக்கக் கூடாது, மராட்டிய மக்கள் கொண்டாடும் பண்டிகைகளையே கொண்டாட வேண்டும் என்று உத்தரவு போட்டு அதனை நிறைவேற்ற, மும்பைக்குப் பிழைக்க வந்த அப்பாவி மக்கள் மீது தன் கட்சியின் தொ(கு)ண்டர்களை ஏவி வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ராஜ் தாக்ரே.பால் தாக்ரேயின் சிவ் சேனா கட்சியிலிருந்து பிரிந்துவந்து மஹாராஷ்ட்ர நவ நிர்மாண் சேனா என்ற புதிய கட்சியைத் துவக்கி நடத்திவரும் ராஜ் தாக்ரே, மண்ணின் மைந்தர்களான மராட்டிய மக்களின் மேம்பாட்டிற்காகத் தான் குரல் கொடுப்பதாக்க் கூறி, இந்தி பேசும் மக்கள் மீது இந்த வன்முறையை அரங்கேற்றியுள்ளார்.
சிவ் சேனா இயக்கத்தை அறிந்தவர்களுக்கு இது புதிதல்ல. 30 ஆண்டுகளுக்கு முன்னர், இப்படித்தான் பால் தாக்ரே வன்முறையை கட்டவிழ்த்துவிட்டார். யார் மீது தெரியுமா? மும்பையில் பிழைக்கச் சென்று, தாராவியில் பெரும்பாலும் வாழ்ந்துவந்த தமிழர்கள் மீது. ஏன் தெரியுமா? தமிழர்கள் மும்பைக்கு வந்த பிறகு மராட்டியர்களின் வாய்ப்புக்களை அவர்கள் தட்டிப் பறித்துவிட்டனராம். இப்படி கூறி, கூலிக்கு பிழைக்க வந்த தமிழர்கள் மீது பால் தாக்ரே வன்முறையை ஏவி, அரசியல் ரீதியாக தன்னை நிலைபடுத்திக் கொண்டார்.
அப்படி மராட்டியக் கட்சியாக இருந்த சிவ் சேனா இன்று ஆல் இன்டியா கட்சியாகி, அதற்கு தமிழ்நாட்டிலும் கிளை ஏற்பட்டு பெரும் பரிணாம வளர்ச்சி பெற்று இன்று பா.ஜ.க.வுடன் போட்டி போட்டுக் கொண்டு இந்துத்துவ கட்சியாகிவிட்டது. அவ்வப்போது மண்ணின் மைந்தர் கதையை கையிலெடுக்கும். குடியரசு தலைவர் தேர்தலில் அந்த ‘உன்னத’ அடிப்படையில்தான் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரிக்காமல், மராட்டியத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளரான பிரதீபா பாட்டீலை ஆதரித்து வாக்களித்தது.
இப்படிபட்ட சிவ் சேனா கட்சியிலிருந்து பிரிந்துவந்த - அதன் தலைவர் பால் தாக்ரேயின் மருமகனான - ராஜ் தாக்ரே, தனது மாமனாரின் பழைய ஆயுதத்தைக் கையிலெடுத்து ஒரு ரவுண்டு வந்துள்ளார். அதன் விளைவாக நடந்த வன்முறையில் பாதிக்கபட்ட அப்பாவி இந்தி மக்கள், ஏதோ நாட்டுப் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து அடித்துப் பிடித்துக் கொண்டு ரயிலேறி இந்தியாவிற்கு வந்தார்களே, அதேபோல கடந்த 3 நாட்களாக ரயிலேறிக்கொண்டிருக்கின்றனர்.
எப்படிப்பட்ட அவலம் இது? இந்தியாவின் வணிகத் தலைநகர் மும்பையின் பொருளாதாரமே, அண்டை மாநிலமான குஜராத்தைச் சேர்ந்தவர்களின் கையில்தான் உள்ளது என்று கூறுவார்கள். எங்கள் மீது குஜராத்திகள் பொருளாதார ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று ராஜ் தாக்ரே குரல் கொடுத்திருந்தால் கூட அதில் யோசிப்பதற்கு உள்ளது என்று கூறலாம். ஆனால், உ.பி., ம.பி., பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த அப்பாவி மக்கள் மீது வன்முறை என்றால்... ஒன்று இது அடி முட்டாள்தனமாக இருக்கவேண்டும் அல்லது தேர்தலை கருத்தில் கொண்ட சித்து விளையாட்டாக இருக்க வேண்டும்.
ஏனெனில், மராட்டியர்களின் நலனிற்காக கண்ணீர் சிந்துவதாக கூறிடும் சிவ் சேனாக்கள், அம்மாநிலத்தின் ஒரு பகுதியான விதர்பாவில் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள், கடன் சுமை தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக் கொண்டு உயிரை விடுகின்றனரே... அவர்களைக் காக்க மத்திய மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் போராட்டம் நடத்தியிருந்தால் இவர்களின் மராட்டிய பற்றுதலை மெச்சலாம். ஆனால் அப்படியெதையும் செய்யவில்லையே.
நமது நாட்டின் வணிகத் தலைநகரான மும்பையில்தான் அந்நகரத்தின் மொத்த மக்கள் தொகையான 1 கோடியே 60 லட்சம் பேரில் 54 விழுக்காட்டினர் குடிசைகளிலும், சாலையோர நடைபாதைகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும் மிக மோசமான சுற்றச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இருப்பிடம், தூய்மையான சுற்றுச் சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறி இவர்கள் போராடினால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும்.
ஆனால் அப்படியெதையும் செய்யாமல், ஒரு நடிகரை முதலில் ஏசுவது, பிறகு அப்பாவி மக்கள் மீது வன்முறையை ஏவுவது, அவர்களைத் துரத்தி அடிப்பது, இதையெல்லாம் அம்மாநில அரசு வழக்கை மட்டும் போட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பது என்பதெல்லாம் மிகப் பெரிய கேலிக்கூத்தாகும்.
தங்களது அரசியல் நலனிற்காக எப்படி மதவாத சக்திகள் ராமரை பயன்படுத்துகின்றனவோ அதேபோலத்தான், அப்படிப்பட்ட இயக்கங்களின் பாதையில் நடைபோடும் இந்த இயக்கங்களும் சில்லரை விடயங்களைப் பெரிதாக்கி செல்வாக்குப் பெற முயற்சிக்கின்றன.
இந்திய மக்களாகிய நாம்தான் நன்கு சிந்தித்து இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். இல்லையெனில் ஆண்டுகள்தான் மாறும் ஆட்கள் மாறமாட்டார்கள்.