சென்னையில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பு நடத்திய கருத்துரிமை மாநாடு சர்ச்சைக்குறியதாக்கப்பட்டு, அது தமிழக சட்டமன்றத்திலும் கடுமையாக எதிரொலித்துள்ளது கருத்துரிமை தொடர்பான முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளது.இலங்கை இனப் பிரச்சனையில் இதற்கு மேல் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை என்ற நிலை ஏற்பட்டு, அங்கு நேரடி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழர்களுக்கு ஆதரவாகவும், சிறிலங்க அரசப் படைகளை எதிர்த்து போர் புரிந்துவரும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாகவும் பேசப்படும் பேச்சுளும், விடப்படும் அறிக்கைகளும், நடத்தப்படும் பொதுக் கூட்டங்களும் சட்டத்தை மீறியதாக சித்தரிக்கப்பட்டு, அதற்கு அரசு அங்கீகாரம் அளிக்கின்றது என்ற குற்றச்சாற்றை முதலில் காங்கிரஸ் கட்சியும், தற்பொழுது முக்கிய எதிர்க்கட்சியான அ.இ.அ.தி.மு.க.வும் கூறிவருகின்றன.ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலரும், பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா, பேசிய பேச்சால் சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டு அதன் காரணமாக அவை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டது ஒருபுறமிருக்க, அவர் அரசை நோக்கி எழுப்பிய ஒரு கேள்வி ஆழ்ந்த விவாதத்திற்குரியதாகியுள்ளது.
“விடுதலைப் புலிகள் அமைப்பு சட்ட விரோத தடுப்புச் சட்டத்தின்படி பயங்கரவாத அமைப்பு. அதனை யார் ஆதரித்து யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். 10 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கலாம்” என்று உள்ள நிலையில், “விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்” என்று ஜெயலலிதா கேட்டுள்ளார்.
ஒரு அமைப்பின் மீதான தடை, கருத்துச் சுதந்திரத்தின் மீதான தடை ஆகுமா? என்பதே கேள்வியாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுவதென்ன?
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே கருத்துச் சுதந்திரத்திற்கான உறுதியளிக்கப்பட்டுள்ளது:
“இந்தியாவின் மக்களாகிய நாங்கள், தனியாற்றல் பெற்ற, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக இந்தியாவை அமைத்து, அதன் மூலம் எமது குடிமக்கள் அனைவருக்கும்;
சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்;
சிந்தனை, கருத்து, நம்பிக்கை, பற்றுறுதி மற்றும் வழிபாட்டுச் சுதந்திரத்தையும்;
நிலையிலும், வாய்ப்பிலும் சமத்துவத்தையும் உறுதிசெய்து
அதன்மூலம் அவர்களுக்கிடையே
தனி மனித கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பையும் உறுதிசெய்யும் சகோதரத்துவத்தை ஏற்படுத்துவோம் என்று எமது அரசமைப்பு பேரவையில் 1949 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் ஏற்று, நிறைவேற்றி, எங்களுக்கு நாங்கள் அளித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தைக் கூறுவதற்கு முன்னர் சிந்தனைச் சுதந்திரத்தையும் குறிப்பிட்டு உறுதியளித்துள்ளது அரசமைப்புச் சட்டம்.
கருத்துச் சுதந்திரம் என்று மட்டும் குறிப்பிடாமல் சிந்தனைச் சுதந்திரம் என்றும் ஏன் இணைத்துக் கூறப்பட்டுள்ளது? சிந்திப்பது என்பது அகச்செயல், அதற்கு வெளிப்படையான அறிகுறி ஏதும் இருக்கப்போவதில்லை. ஆனால் கருத்து என்பது அதன் வெளிப்பாடு, அதாவது புறச்செயல். உண்மையான சுதந்திர நாட்டில் சுந்திரமான புறச்சூழலே, சரியான அகச்சூழலை (மன விலாசத்தையும்) ஏற்படுத்த அவசியமானது என்பதால்தான், எண்ணுவதற்கும் சுதந்திரம், எண்ணியதை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரம் என்று இந்த இரண்டும் இந்திய அரசமைப்பின் முகவுரையிலேயே உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, நமது அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19, உட்பிரிவு (1)-ம் பேச்சுரிமை(speech), எண்ணியதை வெளிப்படுத்தும் உரிமை (expression), ஆயுதமின்றி, அமைதியாக கூடும் உரிமை ஆகியவற்றையும் உறுதி செய்கிறது.
இப்பிரிவின் (19) உட்பிரிவு (2), அரசமைப்பு அளித்துள்ள இந்த உரிமையை மத்திய அல்லது மாநில அரசுகள் பொது நலனை நாட்டு நலனை கருத்தில்கொண்டு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு கட்டுப்படுத்தலாம் என்ற வரையறையையும் அளித்துள்ளது.
“நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை ஆகியவற்றை காக்கவும், நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், அயல் நாடுகளுடன் நட்புறவை பேணவும், பொது ஒழுக்கத்தை காக்கவும், நீதிமன்ற பேராண்மையை பாதுகாக்கவும் ‘காரணத்திற்குறிய அளவிற்கு கட்டுப்படுத்தும்’ சட்டங்களை நீட்டித்துக்கொள்ளலாம் அல்லது புதிதாக சட்டங்களை உருவாக்கலாம்” என்றும் கூறியுள்ளது.
கருத்துரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் தொடர்பான பல வழக்குகளில் தீர்ப்பை வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம், ஒன்றைத் தெள்ளத் தெளிவாக கூறியுள்ளது. “அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் உறுதியளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மத்திய, மாநில அரசுகளின் அதிகாரங்களில் இருந்து காப்பாற்றவே அரசமைப்புப் பிரிவு 19 (1)உருவாக்கப்பட்டுள்ளது” (கவனிக்க: சம்தாசானி - சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வழக்கு, 1952).
அவ்வாறு பொது நலன், நாட்டின் பாதுகாப்பு, அயலுறவு, பொது ஒழுங்கு ஆகியவற்றைக் காப்பாற்ற நிறைவேற்றப்படும் சட்டங்கள் அடிப்படை உரிமைகளை காரணத்திற்குரிய அளவிற்குத்தான் (reasonable restrictions) கட்டுப்படுத்தியுள்ளதா என்பதை இறுதியாக தீர்மானிக்கும் (சட்ட ரீதியான) கடமை நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு என்றும் உச்ச நீதிமன்றம் (ஹினீஃப் குரேஷி முகமது - பீகார் அரசு வழக்கு, 1958) கூறியுள்ளது.
அடிப்படை உரிமைகளை காப்பாற்றும் சட்டப்பிரிவு 19 (1)-ம், அதனை காரணத்திற்குரிய அளவிற்கு கட்டுப்படுத்த அரசுகளுக்கு உரிமை அளித்திடும் சட்டப்பிரிவு 19(2) -க்கும் இடையே ஒரு சமன்பாடு இருக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் (கே.கே. கொச்சுன்னி - சென்னை அரசு வழக்கு,1960) கூறியுள்ளது.
அதனால்தான், விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 6 பேர் மீதான வழக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவதே அந்த இயக்கத்திற்கு உதவியதாக (சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்படி) குற்றமாக கருத முடியாது என்று உச்ச நீதி மன்றம் கூறியது.
எனவே சட்டப்படி தடை செய்யப்பட்ட இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை ஆதரித்து பேசுவதோ அல்லது அந்த போராட்டத்தை ஆதரித்து பேசுவதோ அல்லது அந்த இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசுவதோ முதலில் கருத்துரிமைதான் என்பதும், அந்த உரிமை அரசமைப்பு சட்டம் ஒவ்வொரு இந்தியக் குடி மகனுக்கும் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையே என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை.
ஒரு நாட்டின் அரசு கொண்டிருக்கும் நடைமுறைக் கொள்கை அல்லது அணுகுமுறையை ஒத்ததாகவே குடிமகனின் சிந்தனையும், அவன் வெளிப்படுத்துன் கருத்தும் இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்க்க முடியாது. அதுதான் வெள்ளையர் ஆட்சியில் இருந்தது. நமது நாடு சுதந்திர நாடு என்பதன் பொருள்: எனக்கு, தனிப்பட்ட முறையிலும், ஒன்று சேர்ந்தும் எண்ணவும், பேசவும் சுதந்திர உரிமை உள்ளது என்பதே.